செப்டெம்பர் 27- 28 தேதிகளில் வடக்கு கேரேலினாவில் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் சிறு வடிவம் ஒன்றை நடத்தினார்கள். University of North Carolina-Chapel Hill ) ஓர் அமெரிக்க – இந்திய இலக்கிய விழா எப்படி நிகழ்கிறது என்று பார்க்க ஆர்வம் எழுந்தது. நாங்கள் ஒன்றை நிகழ்த்தவிருக்கிறோம்.
27 ஆம் தேதிதான் நானும் அருண்மொழியும், நண்பர் விசுவும் அவர் மனைவி பிரமோதினியும் ராலேயில் ராஜன் சோமசுந்தரம் இல்லத்திற்கு வந்து சேர்ந்தோம். ஆஸ்டினில் இருந்து விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமெரிக்கா நிறுவனர் சௌந்தரராஜன் மனைவி ராதாவுடன் வந்தார். மறுநாள், நண்பர்கள் அனைவரும் ஜெய்ப்பூர் விழாவுக்குச் சென்றோம்.
சிறிய நிகழ்வுதான். சசி தரூர் வந்திருந்தார். அவருடைய அமர்வு சிறப்பாக இருந்தது. நீண்டகால மேடையனுபவம், ஆங்கில உச்சரிப்பின் துல்லியம் என அவருக்கு சாதகமான அம்சங்கள் பல உண்டு. அவருடைய ‘இந்தியாவின் இருண்டகாலம்‘ என்னும் அவருடைய முக்கியமான வரலாற்றாய்வுநூல் பற்றிய கலந்துரையாடல். தரவுகள் (இந்திய ரயில்வழி அமைக்க அமெரிக்காவில் அதே காலகட்டத்தில் ரயில்வழி அமைக்க செலவானதை விட நான்கு மடங்கு செலவானது. இந்திய வரிப்பணம் கொள்ளையடிக்கப்பட்டதில் அதுவும் ஒரு உத்தி) நையாண்டி (பிரிட்டிஷ் மியூசியம் என்பது ஒரு சோர் மார்க்கெட்) என முழு அரங்கும் சுவாரசியமாக இருந்தது.
இன்னொரு அரங்கு ஷோபா டே. அபத்தமான பெண்மணி. அபத்தமான அரங்கு. இந்தியாவின் நோய்க்கட்டி ஒன்றை அமெரிக்காவில் மீண்டும் கண்ட ஒவ்வாமையை அளித்தார். இந்திய உயர்மட்டத்து உயர்குடியினர் வாழும் வம்பு, ஆடம்பரம் என்னும் இரண்டு கலைகளையே வாழ்வெனக்கொண்டவர் அவர்.
அமெரிக்காவில் ஓர் இந்திய விழா. இந்தியாவின் தீவிரமும் அபத்தமும் ஒரே சமயம் சுவைத்த நிகழ்வு. யோசித்துப்பார்த்தபோது அது இயல்பான நிகழ்வென்றே தோன்றியது.
விழா முடிந்து திரும்பும்போது சேப்பல் ஹில் பகுதியில் இருந்த லைம் அண்ட் லெமன் என்னும் உணவகத்தில் சாப்பிட்டோம். திருச்சியைச் சேர்ந்தவரால் நடத்தப்படும் உணவகம். தமிழகத்துக்கு வெளியே தமிழ்ச்சுவை என்று வழக்கமாகச் சொல்வதுண்டு. உண்மையில் தமிழ் உணவுகளின் சுவையை அறிய சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குத்தான் வரவேண்டும். இந்தியாவில் எல்லா மளிகைப்பொருட்களும் கலப்படம். முதலமைச்சரின் வீட்டுக்கே மளிகை வாங்குவதென்றாலும் கலப்படம் முற்றிலும் இல்லாத உணவு கிடைக்காது. இங்கே தூய மளிகைப்பொருட்கள். ஆகவே நினைவில் நின்றிருக்கும் அரிய சுவையுடன் இருந்தது உணவு.