இன்று உங்கள் தளத்தில் ’நவீன அடிமை சாசனம்’ என்று தலைப்பிடப்பட்ட கடிதத்தையும் உங்கள் பதிலையும் கண்டேன். மிகவும் துயரமான நிலை. இன்று பேசப்பட்டு, அடுத்த தலைமுறையிலாவது தீர்வு கண்டாக வேண்டிய பிரச்சனை. இதன் தீர்வு இரண்டு நிலைகளில் உள்ளது. உங்கள் தளத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு, வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு கருத்துத்தளங்களில் வெளியாகியிருக்கும் பதிவுகளிலிருந்து இதற்கான பதிலை, இரண்டு நிலைகளிலும் பெற முடியும்.அரசாங்கம் இதற்கு என்ன செய்ய முடியும்? பணி அழுத்தத்தால் ஓரிரு உயர் போலீஸ் அதிரகாரிகள் தற்கொலை செய்து கொண்ட செய்திகள் கடந்த சில வருடங்களில் வந்திருந்தது. பணிச்சுமையால் மருத்துவ உயர்படிப்பு படிக்கும் மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளும் அவ்வப்போது நாம் கேள்விப்படுவதே. உயர் அதிகார நிலைகளில், பணிச்சுமை என்பது திட்டவட்டமாக அளிவிடக்கூடியதா? பணிகளின் அடிமட்டத்தில் இருக்கும் சில நிலைகளை தவிர பிற நிர்வாக நிலையில் இருப்பவர்களுக்கு பணி நேரத்தைக்கொண்டு பணிச்சுமையை அளவிட முடியுமா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் எதிர்மறையாகவே பதிலளிக்க முடியும் என்றுதான் நான் கருதுகிறேன். ஆனால் தொடர் உரையாடல்களின் மூலம் சராசரியான ஒரு விகிதத்தை அடைவதும் சாத்தியம்தான். அதற்கான உரையாடல்களை நிகழ்த்தும் அமைப்புகள் இங்கு தேவை. இப்போது அமைக்கப்பட்டிருக்கும் விசாரணையை அதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
சில வருடங்களுக்கு முன்பு கார்பரேட் நிறுவனங்களின் White Collar பணி நிலைகளில், பணிச்சூழல் குறித்தும், அதற்கான தொழிற்சங்கங்களின் தேவை குறித்தும் ஒரு கட்டுரை உங்கள் தளத்தில் வெளியிட்டிருந்தீர்கள். அதே கட்டுரையில், இன்றைய தொழிற்சங்கங்கள் அரசியல் தேவைகளுக்கான நிறுவனங்களாக மாறியிருக்கும் சூழலில், புதிய தொழிற்சங்கங்களால் என்ன செய்ய முடியும் என கேள்வி எழுப்பியிருந்ததாகவும் நினைவு. இன்னொரு நிலையில் நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளும் பொறிகளைப்பற்றி பல கட்டுரைகளில் பலவிதமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த கடிதத்தை எழுதியிருந்த ‘கே’ என்பவர் தன்னை உயர் நிர்வாகவியல் கல்லூரியில் பயின்றவர் என அறிமுகப்படுத்தியிருக்கிறார். தனது பொருளாதார/ சமூக நிலைகளைப்பற்றி எதுவும் கூறாததால், அவற்றிலும் நல்ல நிலையில் இருந்தவர்/இருப்பவர் என்றே எடுத்துக்கொள்ளலாம். உயர்கல்வி நிறுவனங்களில் போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வுபெற்று படிப்பது என்பதும், அந்த துறைகளில் பணியாற்றுவதற்கான தனித்திறன்களுடன் இருப்பதும் வெவ்வேறானது என்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக் கூடும். தான் பணியாற்றும் சூழல் எவ்வாறானது என்பதும் அது தன் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதையும், தன் கல்லூரி காலத்திலேயே அறிந்திருக்காவிட்டாலும், பணியில் சேர்ந்தஓரிரு வருடங்களில் ’கே’ அறிந்திருக்க முடியும். அவர் தன் வாழ்க்கையை இழந்து பணம் அல்லது அதிகாரத்தை அடைய வேண்டும் என்னும் நிலையில் இருப்பவராகவும் தோன்றவில்லை. எனில் எது அவரை அந்த நிலையில் தொடர்ந்து, உடல் பாதிக்கும்வரை இருக்கத் தூண்டியது என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது. ஏனெனில், அவர் மட்டும் அல்ல, உயர்கல்வி பெற்றவர்களில் பலர், உயர் நிர்வாகப் பணிகளில் சேர்ந்து, ஆனால் அதற்கான தனித்திறன்கள் இல்லாமல், தங்கள் மனநிலையையும் உடல் நிலையையும், குடும்பங்களின் வாழ்க்கையையும் பெரும் அழுத்தத்தில் வைத்திருக்கிறார்கள். இன்று அடிப்படைத் தேவைகளுக்காக அடிமாட்டுத்தனமாக யாரும் உழைக்க வேண்டியதில்லை. எனில் இப்போது நம் தேவைகள் என்ன? யார் அந்த தேவைகளை உருவாக்குவது? எவ்வாறு அவற்றில் சென்று விழுகிறார்கள்?
இவற்றைக் குறித்தும் நீங்கள் தொடர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.அவர் பெண் என்பதால் சமூகம் அவருக்கு குடும்பப் பணி என்னும் மேலதிக சுமையையும் அளித்திருக்கக் கூடும். இன்று நானறிந்தவரையில் பல நடுத்தர/ உயர் நடுத்தர குடும்பங்களில், இந்த சுமை பல்வேறு விதங்களில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ‘கே’ கடிதமும் அத்தகைய மட்டுப்படுத்தல் உள்ள குடும்ப சூழலில் இருப்பதாகவே யூகிக்க முடிகிறது. அவர் பெண் என்பதால் பணிச்சூழல் சலுகைகள் கேட்கிறாரா? இதற்கான பதிலும் உங்கள் கட்டுரைகள் பலவற்றில், முக்கியமாக இலக்கியத்தில் சலுகை கோரும் பெண்களை பற்றி உள்ளது. அது இதற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். என் உறவினர் பெண் ஒருவருக்கு, அவர் பிரசவகால விடுப்பாக ஒன்பது மாதங்கள் அவர் பணியாற்றும் கார்ப்பரேட் நிறுவனம் விடுப்பு வழங்குகிறது. இது தவிர வீட்டிலிருந்தபடி பணி என்னும் வாய்ப்பையும் மேலும் சில மாதங்களுக்கு அளிக்கிறது. உண்மையில் நிறுவனங்கள் பெண்களுக்குத் தேவையான அடிப்படைச்சலுகைகளை (இதைச் சலுகை என்று கூறலாமா எனத்தெரியவில்லை) வழங்கத்தொடங்கியிருக்கின்றன.
இந்தப் பிரச்சனைக்கான மூல காரணங்களைக் குறித்தும் நீங்கள் பல கட்டுரைகளில் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இந்தக் கடிதம் முன்வைக்கும் உணர்ச்சிக்கரம், பொது வாசகர்கள் அவற்றை நினைவில் எடுப்பதற்கு தடையாக இருக்கலாம். ஏனெனில் தற்போதைய நிகழ்வுக்கான எதிர்வினைகள், பெரும்பாலும் அந்த உணர்ச்சிக்கரத்தை மேலும் உயர்த்துவதாகவம், அரசியல் சரிநிலையை பேணுவதாகவும் மட்டுமே உள்ளது.
பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்களில், பணியாளர்களுக்கான Target, அவர்களின் ஒப்புதலுடன் மட்டும்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவேளை, அந்த Target, தன் தகுதிக்கு அதிகமானதாக தோன்றினால், அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு. அது நடுநிலைகளில் உள்ள பதவி என்றால் சம்பள உயர்வு பதவி உயர்வு மறுக்கப்படும். உயர் நிர்வாகப்பதவி என்றால், வேலையிலிருந்து விலக அறிவுறுத்தப்படலாம். ஆனால் நிர்வாகம் எதிர்பார்க்கும் தகுதி தன்னிடம் இல்லை என்றால், அந்த வேலையில் தொடர்ந்து இருந்து, அவர்கள் அளிக்கும் பெரும் சம்பளத்தையும் அதிகாரத்தையும் அனுபவிப்பவதற்கு ஒருவருக்கு என்ன உரிமை உள்ளது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்விதானே? ஒருவர் தன் வாழ்வில் இருபது வருடங்களுக்கும் மேலாகவும் பெரும் பணத்தையும் செலவிட்டு அடைந்த கல்வி மட்டும் அந்த அதிகாரத்தை அடைவதற்கு போதும் என நினைப்பதும் சரியானது இல்லை அல்லவா? ஒருவேளை அரசாங்க சட்டங்கள், ஒருவரை வேலையிலிருந்து நீக்காமல் இருப்பதற்கு இங்கு உதவலாம்.
ஸ்வயதர்மம்/சுதர்மம் பற்றி நீங்கள் எழுதியுருக்கும் கட்டுரைகள் நிச்சயமாக உயர் நிர்வாகத்துறைகளில் இருப்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை. ஒரு உயர்நிர்வாகக் கல்லூரியில் கடுமையான போட்டித்தேர்வில் வென்று படித்து, உயர்நிர்வாகத்தில் வேலைக்கு சேரும் ஒருவருக்கு சுய நிர்வாகம் குறித்த புரிதல் இல்லை என்றால் பிரச்சனை எங்கிருக்கிறது? கல்வி நிறுவனங்களின் பொறுப்பு பொருளாதார எஞ்சினுக்கான உதிரிப்பாகங்களை தயாரித்து வழங்குவது என்பதையும், அவ்வாறான நிறுவனங்களின் தேவையையும் பல இடங்களில் கூறியிருக்கிறீர்கள். எனில் சரியாக பராமரிக்கப்படாத, சரியாக பொருந்தாத உதிரிப்பாகங்கள், தேய்ந்து பயனற்று போவது இயல்புதானே? உதிரிப்பாகங்களை பராமரிப்பது யாரின் பொறுப்பு? உதிர்ப்பாகங்களின் பராமரிப்புச்செலவை விட புதிய உதிரிப்பாகங்கள் மலிவு என்றால், புதியவற்றை நாடுவதுதானே இயல்பு? அப்படியானால் அறிவுள்ள, அந்த எஞ்சினிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கான உரிமையையும், பெற்றிருக்கும் அந்த தேயும் உதிரிப்பாகங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? இந்த பிரச்சனைக்கான (ஒரு) மூல காரணம் சமூகத்தின் பொது மனநிலையில் இருக்கிறது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறீர்கள்.
இன்று உண்மையில் கல்வி தேவைப்படுவது, வளரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத்தான். சில விதிவிலக்குகள் தவிர, குழந்தைகளுக்கு என்ன மனநிலையை ஊட்டி வளர்க்கிறார்கள் என்பதுதான் அந்த குழந்தைகள் பிற்காலத்தில் எவ்வாறு சமூகத்தில் தங்களை பொருத்திக்கொள்கிறார்கள் என்பதை தீர்மானிக்கிறது என்று நான் கருதுகிறேன். இன்று சமூக அந்தஸ்து, அதற்கு காரணமான பணம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றை எப்படியாவது அடைய வேண்டும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மீண்டும் மீண்டும் ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதில்லை. அவர்கள் சமூக அந்தஸ்துதான் மகிழ்ச்சி என்னும் மாயையினுள் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் இன்று, கல்வி தேவையாக இருக்கிறது. கல்வி தேவை என அவர்கள் அறிவதற்கான பிரச்சாரமும்தான். அதற்கு எவ்வளவு பொருளும் சக்தியும் செலவானாலும்! ஆனால் அவற்றை செலவிடவும் செலவிடுபவர்களை செவிகூரவும் இங்கு யார் இருக்கிறார்கள்?
—அகிலன்
பின்குறிப்பு; நான் உயர் நிர்வாகத்தில் இருப்பவன் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்புகளுடன் இருந்தவன். வேலையில் சேர்ந்த சில வருடங்களுக்குள்ளாகவே என் தகுதியை உணர்ந்து, அந்த நிலைக்குள் என்னை நிறுத்திக்கொண்டு, எனக்கான தேவைகளை நானே நிர்ணியித்துக் கொண்டு, அவை நிறைவேறிய உடன் பணிச்சூழில் இருந்து விலகியிருக்கிறேன். ஆனால் எனக்கேயான பணியை தொடர்ந்து ஊக்கத்துடன் செய்துகொண்டிருக்கிறேன். ஆகவே இதில் நான் எழுதியிருப்பது, எனது நிலையை தற்காத்துக்கொள்தற்காக இல்லை.