அடிமைசாசனம் – கடிதம்

நவீன அடிமைசாசனம்

அன்புள்ள ஜெ,

உங்களுக்கு வந்த அந்தக் கடிதம் சற்றும் மிகைப்படுத்தப்படாத உண்மை. கிட்டத்தட்ட அதே 37 எனக்கும். உடல்/மன ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்பட்டு, காலையில் கண் விழிக்கும் போதெல்லாம், “ஐயோ, இன்றும் உயிரோடு தான் இருக்கிறோமா? அப்படியானால் வேலைக்கு போக வேண்டுமா?” என்று அழுது அதே போன்ற கையறு நிலையில் வேலையை விட்டு வெளியேறிய அனுபவத்தால் சொல்கிறேன். இது குறித்து நேரில் கூட ஒரு முறை உங்களிடம் பேசியிருக்கிறேன்.

கார்ப்பரேட் கலாச்சாரம் இன்று கல்வித் துறையிலும் இதேபோல் பரவி, நீங்கள் பிஸியாக எதையாவது செய்து கொண்டே இருப்பது தான் உங்கள் மேலதிகாரிகளின்மேய்க்கும்திறனுக்கு சான்றிதழ் என்று உங்களை ஓயாமல் விரட்டும் நிலையில் தான் உள்ளது. என்னுடன் என் பழைய வேலையிடத்தில் பணியில் இருந்த பலரும் (சுமார் பாதி பேர்) ஆண்டுக்கொருவர் ஏதேனும் major அறுவை சிகிச்சைக்கு உள்ளாகும் நிலையில் தான் உடல்நலம் இருந்தது. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் என்னை விட ஓரிரு வயது இளையவர்கள், பெண்கள்

சாதாரணமாக அவர்கள் பலர் சொல்ல நான் கேட்டிருக்கும் வாசகம்: “இங்கே வேலை செய்யும் போது குழந்தையா? நோ சான்ஸ்என்பது. கருவுற்ற பெண்கள் அதற்காகவே வேலையை விட்டு விரட்டப் பட்டதும் உண்டு. கடும் மன அழுத்தம் காரணமாக infertility treatment கூட பலனளிக்காமல் போனவர்கள் சிலர்.

கடிதம் எழுதியவரைப் போலவே ஒவ்வொரு இடத்திலும் வேலையை உதறி விட்டு மாறி மாறிப் போனாலும் இதே toxic work culture சூழலில் சிக்கி உழல்பவர்கள் உண்டு. இந்த ஆட்களிடம் வரிவசூல் செய்யும் போது மட்டும் தான் அரசுக்கு இவர்கள் இருப்பதே தெரியும். பொருளாதார வளர்ச்சி என்று கூட இல்லை, ஓரளவு economic stability என்ற நிலையை அடையவே இன்று பலர் கொடுக்கும் விலை மிகப் பெரியது.

இந்த உரையாடல் அவர் சொன்னது போலவே முக்கியம் தான். அந்தக் கடிதத்தை வெளியிட்டதற்கு நன்றி!

ஐஸ்வர்யா 

முந்தைய கட்டுரைபிளிறல்: சிறுகதை: சரவணன் சந்திரன்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்: கயல்