இணையக்குப்பை

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ.,

‘Focus’ ஃபோக்கஸ்இன்று என் போன்ற பலருக்கும் சவாலாக இருப்பது, கொட்டிக்கிடக்கும் தகவல்கள், கேளிக்கை, செய்தி ஊடகங்கள், புத்தகங்கள், தளங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து தப்பிப்பதும் அவற்றை நமது தேவைக்கான அளவில் பயன்படுத்தும்படி மேலாண்மை செய்வதும்தான். அதிலும் என் தொழிலே ஊடகம்சமூக ஊடகம் சார்ந்து அமைந்திருக்கும்போது இன்னும் கடினமாகிறது. நண்பர்கள் பலருக்கும் அப்படித்தான். சின்னச் சின்ன வீடியோ துணுக்குகள், வீடியோ ஐடியாக்கள் நேரத்தை திருடிக்கொள்கின்றன. தினசரி அலுவலக வேலை நடந்துவிடுகிறது. ஆனால், சில மாதங்கள் கழித்து, சில வருடங்கள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது வெறுமை, வெற்றிடம் தெரிகிறது. ஒரு பெரிய விஷயத்தை செய்து முடித்த திருப்தி இல்லை.

பணியாக மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் என் உள்ள வளர்ச்சி, பக்குவம், வாசிப்பு சார்ந்து எதையும் பெரிதாக, குறிப்பிடத்தக்க அளவில் செய்ய முடியவில்லை என்ற எண்ணமும் ஏமாற்றமும் கனமாக இருக்கிறது. என் ஆர்வம் பல தளங்களில் சிதறி இருக்கிறது. ஒன்றை செய்கிறேன்பாராட்டப்படுகிறதுதிருப்தி அடைந்து மற்றொன்றுக்கு நகர்கிறேன். ஒன்றில் கவனம் செலுத்தினால்தான் உயரம் அடைய முடியுமென்பதும் தெரிகிறது. ஆனால் மீண்டும் ஆர்வம் இன்னொன்றை நோக்கிப் போகிறது. என் லட்சியம் எது, எது என்னை வளர்க்கும் என்று எப்படி கண்டறிவது?  

ஒரு பக்கம் இது எனது தனிப்பட்ட அனுபவம் என்றால், மறுபக்கம் நண்பர்கள், அலுவலகத்தில் எனது அணியில், குழுவில் வேலை செய்பவர்கள், என எல்லோரும் ஒரு நிஜமற்ற உலகத்தில் அதிக நேரம் உலாத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. என் குழுவில் பணியாற்றும் ஒரு தம்பியை எடுத்துக்கொண்டால், சில வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படியே இன்றும் இருக்கிறார். தினசரி வேலை முடித்துவிடுகிறார். ஆனால் படிப்பாக, பக்குவமாக, திறனாக வளரவில்லை. இது அலுவலகத்துக்கும் சிரமம்தான். முக்கிய காரணமென்று நான் நினைப்பது Focus  (ஃபோக்கஸ்) செய்ய முடியவில்லை, நேரம் எங்கெங்கோ போகிறது என்பதுதான்.  

இது குறித்து யூட்யூபில் ஆயிரம் வீடியோக்கள் இருக்கின்றன. ஆனால், பெரும்பாலானவை அதை செயல்படுத்திப் பார்க்காத வெறும் பேச்சுக்காரர்களால் வெளியிடப்பட்டவையூட்யூபில் எந்த தலைப்பு குறித்தும், துறை குறித்தும் யாரும் பேசலாம் என்று ஆயிரமாயிரம் வெற்றுப் பேச்சுகள், பொய்கள், திரிப்புகள், பொறுப்பற்ற வீடியோக்கள்  இருக்கின்றன. அவற்றை அணுகுவது வீண் என்று நினைக்கிறேன்.

உங்களிடம் இருந்து இது குறித்து ஒரு வழிகாட்டுதல் வேண்டும்

வசந்த் 

*

அன்புள்ள வசந்த்,

நாம் இணையத்தை தீவிரமாக உணர்வது அதன் உக்கிரத்தால்தான். ஆனால் இந்த நிலை நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் சூழ்ந்துள்ளது என்பதைக் காணலாம். மிகை என்பது இன்றைய நாகரீகத்தின் ஒரு பகுதி. முதலாளித்துவம் அதை நோக்கிச் செல்கிறது என்பதை மார்க்ஸ் ஒரு கோணத்திலும் காந்தி இன்னொரு கோணத்திலும் எச்சரித்துவிட்டனர். பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் விரிவாக விளக்கிவிட்டனர்.

இன்றைய பொருளியலின் அடிப்படையே இதுதான். மிகையான லாபவெறி. ஆகவே மிகையான உற்பத்தி. மிகையான உற்பத்தி இருப்பதனால் மிகையான விற்பனை தேவை. மிகையாக விற்பனையாகவேண்டும் என்றால் மிகையான நுகர்வு தேவை. மிகையான நுகர்வுக்கு மிகையான செல்வம் தேவை. மிகையான செல்வத்திற்கு மிகையான உழைப்பு தேவை. மிகையான உழைப்பு நம்மை மிகையான உற்பத்தியை நோக்கி தள்ளுகிறது. நாம் இரவுபகலாக உழைத்து இரவுபகலாக நுகர்பவர்கள் ஆகிவிட்டோம்.

இன்று எந்தப் பொருள் என்றாலும் நம்முடைய பிரச்சினை நம் முன் அவை அளவில்லாமல்  குவிந்துகிடக்கின்றன என்பதுதான். துணி, செருப்பு, சாப்பாடு எதுவாக இருந்தாலும் நம் தேவையை விட பலமடங்கு நம் முன் கிடக்கிறது. நாம் தெரிவுசெய்தாகவேண்டும். இன்று நாம் என்ன பேசுகிறோம் என்று பாருங்கள். பெரும்பாலும் தேர்வுசெய்வதைப் பற்றித்தான். இந்த ஓட்டலை விட அந்த ஓட்டல் மேல். இந்த சினிமாவை விட அந்த சினிமா மேல்ஆனால் இந்த எந்தக்கருத்துக்கும் நடைமுறை மதிப்பு இல்லை. எவ்வளவு பெரிய வீண்பேச்சு. இதுவே ஒரு மூளைச்சுமையாக மாறி நம்மை அழுத்தி வைத்துள்ளது.

நாம் எப்படி தெரிவு செய்கிறோம்? நம் தேவைக்கு ஏற்பவா? அல்ல. பெரும்பாலும் நம் சூழலே நாம் எதை, எவ்வளவு தெரிவுசெய்கிறோம் என்பதை தீர்மானிக்கிறது. நம்மைப் போன்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து அதை நாமும் செய்கிறோம். அதாவது நம் அண்டைவீட்டாரை நாம் பொருட்களை வாங்கச் செய்கிறோம். அவர்கள் நம்மை பொருட்களை வாங்கச்செய்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக நம் சமூகத்தை பொருட்களை வாங்கச்செய்வது விளம்பரம். விளம்பரம் என்பது நம் உளவியலை நன்கு புரிந்துகொண்ட நிபுணர்களால் ஒரு பேரியக்கமாகத் திரண்டு உருவாக்கப்படுகிறது. நம் பலவீனங்கள், நம் ரசனைகள் இரண்டும் பயன்படுத்தப்படுகின்றன. நாம் நுகர்வுக்கு அடிமையாக்கப்படுகிறோம்.

இந்நூற்றாண்டின் மைய இயங்குவிசை என்பது நுகர்வு. நுகர்வை செலுத்துவது விளம்பரம். விளம்பரத்துக்காகவே ஊடகங்கள் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்றன. சமூக ஊடகங்கள் உட்பட அனைத்துமே விளம்பரத்துக்கான வாகனங்கள் மட்டுமேஅதன்பொருட்டே அவை இவ்வளவு பூதாகரமாக வளர்க்கப்படுகின்றன.

ஊடகம்என்பது மிகப்பிரம்மாண்டமான ஓர் அமைப்புThe Matrix படத்தில் வரும் அந்த பிரம்மாண்டமான வலைப்பின்னல் இன்று ஊடகமே. அந்த வலையில் அமர்ந்திருக்கும் சிலந்திதான் விளம்பரம். அதை எதிர்கொள்வது எப்படி என்பதே கேள்வி

அதற்கு ஒரே வழி அந்தப் படத்தில் காட்டப்படுவதுபோலபுதைகுழிவாழ்க்கைதான். திட்டமிட்டு, மூர்க்கமாக, தீவிரமாக ஊடகங்களை தவிர்ப்பது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு. ஊடகங்களில் இருந்து விலகி வாழ்வது. அதை ஒரு பெருமையாக நண்பர்களிடம் சொல்லுங்கள். நான் டிவி பார்ப்பதில்லை, நான் யூடியூப் பார்ப்பதில்லை, நான் இன்ஸ்டாவில் இல்லை என்று சொல்லுங்கள். இல்லையேல் அவர்கள் நம்மை விசித்திரமான கிறுக்கன் என்று மட்டம்தட்டி அவர்களின் நுகர்வுலகுக்கு இழுப்பார்கள். முன்னரே அவர்கள் சராசரிகள், மடையர்கள் என அவர்களிடமே சொல்லுங்கள். மேட்றிக்ஸின் மாயத்தில் இருப்பவர்கள் என்று சொல்லுங்கள்.

ஊடகத்தை எதன்பொருட்டேனும் நியாயப்படுத்த ஆரம்பித்தால் அதன் வலைக்குள் இருக்கிறோம் என்றே பொருள். ஊடகம் அளிக்கும்வசதிகள்‘ ‘சொகுசுகள்எல்லாமே மாயை என்று உணர்ந்தேயாகவேண்டும். “Say No”அதுதான் ஒரே வழி. ஒட்டுமொத்தமாக, திட்டவட்டமாக.

ஆனால் முற்றாக ஊடகத்தை தவிர்க்கமுடியாது. ஏனென்றால் ஊடகத்தை தவிர்ப்பவர்கள் தங்களுக்கான ஒரு முழு உலகை, ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டால்தான் அது சாத்தியம். நாம் நம்மை தொகுத்துக்கொள்ள, நமக்குள் தொடர்புகொள்ள மட்டும் குறைவான அளவில் நவீன ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஊடக அடிமைத்தனத்தை படிப்படியாகக் குறைப்பது சாத்தியம் அல்ல. ஊடகம் வடிவமைக்கப்பட்டிருப்பதே ஒரு துளியை தொட்டால்கூட முழுமையாக பற்றி உள்ளிழுத்துக் கொள்ளும்படியாகத்தான்.

யூடியூப் வீடியோக்கள் சொல்லும் வழி அல்ல நான் சொல்வது. நான் எதைச் செய்கிறேனோ அதைச் சொல்கிறேன். ஊடகங்கள் ஒவ்வொருவரையும் சிதறடிக்கும் காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய நாவலை எழுதியவன் என்னும் தகுதியே போதும் என்று நினைக்கிறேன். அத்துடன் நான் கண்ட வழிகளை முறையாகக் கற்பிக்க ஓர் அமைப்பையும் உருவாக்கியவன்.

சில அடிப்படைகளை நான் சொல்லமுடியும்

. ஊடகம் என்பது நமக்கு அறிவூட்டுவது அல்ல, நமக்கு கேளிக்கை அளிப்பது அல்ல, நம் செயற்களமும் அது அல்ல. இந்த தெளிவை நாம் முதலில் அடையவேண்டும். அது நம்மை அடிமைப்படுத்துவது, அது நம்மை வாங்கவைக்கும் விளம்பரத்துக்கான கருவி, அதற்கப்பால் ஒன்றும் அல்ல.

. நமக்கான ஒரு செயற்களத்தைக் கண்டடையவேண்டும். அது வெறும் சொற்களால், சிந்தனைகளால் ஆனதாக இருக்கலாகாது. புறவயமான செயலாக இருக்கவேண்டும். அது எதுவானாலும் சரி. சமூகப்பணி, அறிவுப்பணி, கலைப்பணி, வேளாண்மை, கைத்தொழில். அதில் மட்டுமே முழுமையாக ஈடுபடவேண்டும்.

. அந்தச் செயற்களத்திற்கு தேவையான அளவுக்கு மட்டும் ஊடகத்தைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஊடகத்தை பயன்படுத்துவதற்கு நாமே நமக்கு ஓர் எல்லையை வகுத்துக்கொண்டு அதை கறாராக பின்பற்றவேண்டும்.

. நம் செயல்பாடுகள் தனித்தவையாக இருக்கலாகாது. அவை நீடிக்காது. நம்மைப்போன்றவர்களுடன் தொடர்புகொள்ளவேண்டும். ஒரு சிறுதுணைச்சமூகமாகநாம் நம்மை திரட்டிக்கொள்ளவேண்டும். நம்முடைய சோம்பல், அகங்காரம், சில்லறைப்பூசல்களால் ஒருபோதும் அந்த சமூகத்தில் இருந்து பிரியக்கூடாது. அச்சமூகம் உடைய வழிவகுக்கலாகாது. அது இருந்தால்தான் நாம் இருப்போம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

கவனச்சிதைவு என்பது மிகையின் இன்னொரு வடிவம். ஒன்று செய்யவேண்டிய இடத்தில் நூறு செய்யவேண்டியிருந்தால் கவனம் சிதறுகிறது. ஒன்று தேவையான இடத்தில் ஆயிரம் அளிக்கப்பட்டால் கவனம் சிதறுகிறது. ஒரு டம்ளர் நீரை ஓர் அறைமுழுக்க பரப்பினால் ஒரே நிமிடத்தில் அது ஆவியாகும். நமக்கு இருக்கும் நேரம், கவனம், நினைவு மூன்றும் ஒரு டம்ளர் நீர் போல எல்லைக்குட்பட்டவை. அவற்றை மிகக்கவனமாக செலவிட்டாகவேண்டும்.

அதற்கான வழிமுறைகள்

. நம் செயற்களம் வரையறுக்கப்படவேண்டும். அதற்கு வெளியே நாம் எதையும் கவனிக்கவேண்டியதில்லை. எந்த மனிதனும் உலகை முழுக்க கவனிக்க முடியாது. எல்லா துறைகளையும் கவனிக்க முடியாது. எல்லாருடனும் விவாதிக்கமுடியாது.

. செயல் இல்லாத நிலையிலேயே கவனம் சிதறுகிறது. ‘ஓய்வு நேரம்என ஒன்று தேவையில்லை. நம் வேலை ஒரு களம் என்றால் இன்னொன்றாக நமக்கான தனிப்பட்ட ரசனைக்கான களத்தை வைத்துக் கொள்வோம். அங்கே செயலாற்றுவோம். செயலாற்றும்போது கவனம் குவிந்தே ஆகவேண்டும். ‘சும்மாஇருக்கையில்தான் கவனம் சிதறுகிறது.

. எதையாவது உருவாக்காத, எதையாவது கற்காத எல்லா கேளிக்கைகளையும் முழுமையாகத் தவிர்த்துவிடுவோம். வெற்றுக்கேளிக்கைதான் நம்மை சிதறடிக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைமோனியர் வில்லியம்ஸ்
அடுத்த கட்டுரைநமக்கான கோபுரங்கள்