வணக்கம்.
வெண்முரசின் நான்காம் நாவலான ‘நீலம்‘ மீதான எனது முதல் வாசிப்பு இன்றுடன் நிறைவுற்றது.
உங்களுக்கு வந்த கடிதங்களில் சிலருக்கு வேகத்தடையாக அமைகிறது நீலம் என்று வாசித்ததே அதை தினமும் வாசிக்க தூண்டுதலாய் அமைந்ததெனக்கு. அதாவது அதற்கு நேர்மாறாக நான் இருக்கவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
பர்சானபுரி, ராதையின் கனவு, உணர்வெழுச்சி, கோகுலத்தில் கண்ணனின் பெயர்சூட்டுவிழா எனத் தொடங்கும் இந்நாவல். வெறும் கதையை சொல்லாமல் எனக்கு தினமும் அளித்துக்கொண்டிருந்தது மொழியின் சுவையை. ஒவ்வொரு அத்தியாயமும் தினமும் இரண்டு முறை வாசித்தேன். முதல்முறை கதைக்காக இரண்டாம் முறை வாய்விட்டு அதன் சுவைக்காக. சொல்லடுக்குகள், சந்தம் அது போன்று இலக்கணப்படி என்னவென்று சொல்லத் தெரியவில்லை . ஆனால் சொல்லெண்ணிப் படித்து அதன் சுவையெண்ணி மகிழ்ந்தது பிறருக்கு விவரித்து சொல்லமுடியாவிடினும் நிறைவெண்ணி திகழ்ந்தது இந்த நாவலில்தான்.
சில இடங்களில் நின்று நிதானமாக மறுபடி மறுபடி வாசித்து யோசித்து அமர்ந்திருந்த தருணங்கள் பல .
உதாரணமாக ‘பொருளாகா பெருஞ்சொல்‘, ‘சொல்தேடி அலையும் புதுப்பொருள்‘, ‘விதைசெய்யும் தவம் அல்லவா வண்ணமலர்‘, ‘மலையுச்சி மலரின் மணம் செல்லா திசையில்லை‘ போன்ற சொற்றொடர்களில் .
கம்சனின் தீமைக்கு துணைசெல்லும் திருணவிரதனும் சொல்கிறான் கவிதையை அதன்மூலம் ஒரு காவியக் கற்றல் முறையை. ‘அம்பைத் தவம்செய்து பறவையை அறிந்தேன். பறவையைத் தவம்செய்து இறகுகளை அறிந்தேன். இறகுகளைத் தவம் செய்து பறத்தலை அறிந்தேன். பறத்தலைத் தவம் செய்து காற்றை அறிந்தேன். காற்றைத் தவம்செய்து அசைவின்மையை அறிந்துகொண்டேன்‘.
‘கண்ணனை அணிந்தன கானகத்துச் செடிகள். வெண்முறுவல் பூத்தது முல்லை. கண்சிவந்தது அரளி. செம்முத்துகொண்டது தெச்சி. பால்துளித்தது தும்பை. பொன்கொண்டது கொன்றை. பூத்து பட்டணிந்தது வேங்கை.. நாணிக் கண்புதைத்தது செண்பகம். நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை. அஞ்சி விழிதூக்கியது அனிச்சம். குறுநகை எழுந்தது பாதிரி. வழியெங்கும் விழிகொண்டது ஆவாரம். நானும் அவனே என்றது குவளை. நானுமல்லவா என்றது நீலத்தாமரை. கானகனே உனக்காக முகம் எங்கும் மலர்பூத்தது மதகளிற்றுக்கூட்டம்‘
‘விண் நோக்கி விரிந்த விழிகளென நீலக்குளங்களாகி நீண்டு கிடந்தது யமுனை. அதன் சேற்று அலையெழுந்த சதுப்பில் பாசிப்படலங்கள் படிந்தன. ஏட்டுப்பரப்பில் மூவிரல் எழுதி நடந்த பறவைகளும் சிறகடித்தெழுந்து மறைந்தன. வெண்கொக்குகள், விரிசிறை நாரைகள். நீர்க்காகங்கள், நீலமணி மீன்கொத்திகள். இறுதிப்பறவை எழுந்து சென்ற சிறகடிப்பை நெடுநேரம் தன்னில் நெடுமூச்செறிந்து வைத்திருந்தது நதி.’
இந்நாவலில் வரும் மலர்களை, மரங்களை, பறவைகளை மட்டும் குறிப்பெடுத்து அவைகளை அறியத் தொடங்கினால் அது நீளும் ஒரு மாமாங்கம் வரை. இதுவரை நான் கேட்டறியாத நிறைய வார்த்தைகளுக்கு பொருள் அறிய முயற்சித்தேன். உச்சாடனம் போல உச்சரித்துக்கொண்டிருதேன் ‘ மொட்டலர்ந்த வல்லியை, முழுக்குருடர் தொட்டறியும் எல்லியை‘ என்ற ஒரு வரியை முழு நாளும். ‘பெருந்துயர்கொண்ட உள்ளம்போல் அழகியதொன்றும் இல்லை‘ இந்த வரியெல்லாம் வாசகனை வேறு என்ன செய்யும் துயர் கொள்ளும் நேரமெல்லாம் அதில் உள்ளுறையும் ஒருதுளி இனிமையை தேடச் சொல்லாமல்.
அக்ரூரர் கண்ணனைத் தேடி செல்லும் அத்தியாயம் முழுக்க கவிதைதான். மனிதமனம் பொதுவாக தீமைகளை காமக் க்ரோத மோகங்களை வாசிப்பதில் அதைப்பற்றி அறிவதில் ஆர்வம் கொள்ளும்.ஆனால் அது மட்டும் உண்மையல்ல என சொல்லியது நீலம் வாசிப்பு. அது கம்சனின் துர்குணங்கள் வெளிப்படும் அத்தியாயங்கள் ஆனாலும் அவையும் பாடல்களாய் கவிதைகளாய் வெளிப்பட்டுள்ளது. வெண்முரசுக் கவிதைகள் என தனிநூல் வரும் நாட்களில் பதிப்பிக்கும் எண்ணம் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு இருந்தால் அதன் பெரும்பகுதி நீலத்தில் இருந்தும் செல்லும் என்பதெனெண்ணம். சமீபத்தில் மொழிபெயர்ப்பாளர் சுசித்ரா ராமச்சந்திரன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஆசானை பேட்டி காணும்போது ஒன்றை குறிப்பிட்டார் வெண்முரசு நீலம் இசை கலந்த கவிதை நூலென . அது சற்றும் மிகையல்ல என இன்று உணர்கிறேன்.
‘பொன்னுருகி வழியும் காலை. என் புலனுருகி ஓடும் காலை. எண்ணங்கள் சிறகடையும் காலை. என்னை இறைவியாக்கும் இளங்காலை‘ இந்த ஒருவரி போதும் ஒருவர் உச்சரித்துவிட்டு தனது ஒவ்வொரூ நாளிலும் சொல்லிக் கொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்த.
வாசிப்பை நேசிப்போம் நண்பர்களுக்கு என் அன்பு. பேராசான் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கமும் நன்றியும்.
அன்புடன்
கே.எம்.ஆர். விக்னேஸ்