கவிதை என்னும் கலைத்துக்கொள்ளுதல்

சார்,

ந.பிச்சமூர்த்தியின் கொக்கு, சாகுருவி கவிதைகளை இன்று அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்தபோது, உங்களது கவிதைகள் –விமரிசகனின் சிபாரிசு கட்டுரையை மீண்டும் படித்தேன். மிகவும் நிறைவாக இருந்தது. அதில் கீழ்வருமாறு சொல்லியிருக்கிறீர்கள். எவ்வளவு உண்மை அது!

வருடத்தில் நூறு தொகுப்புக்குமேல் தமிழில் வருகின்றன. பெரும்பாலான தொகைகளில் ஒருசில நல்ல கவிதைகளாவது உள்ளன. ஆனால் கவிஞன் என்பவன் அப்படி கவிதை எழுதும் ஒருவனல்ல. கவிஞன் தனகே உரிய மொழி கொண்டவன். தனக்கான வாழ்க்கை நோக்கு கொண்டவன். வாழ்க்கையை கவிதைமூலமே அறிய முயல்பவன். அதன் மூலம் மறுக்கமுடியாத ஆளுமை கொண்டவன்.

கவிதையை ரசிக்கவே ஒரு தனிப்பட்ட மனநிலை தேவைப்படும்போது, எழுதுவதற்கு அது எவ்வளவு ஆழமானதாக, நிலையானதாக இருக்கவேண்டும். ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் பார்ப்பதுபோல, எப்போதாவதுதான் கவிதா-தருணம் சிக்குகிறது. அதை வார்த்தைகளுக்குள் இழைப்பதைப்போல, அழகான அவஸ்தை வேறெதுவும் கிடையாது.

உங்களைத் தொடர்பு கொள்ளத் தொடங்கியதுமே, என்னுடைய கவிதைகள் சிலவற்றை அனுப்பி உங்களை இம்சித்திருக்கிறேன். உங்களிடமிருந்து பதில் வராதபோதே அவற்றின் தரம் எனக்குப் புரிந்தது. இருந்தாலும், என்னளவில் நான் மிகவும் ரசிக்கும் என்னுடைய சில கவிதைகளைப் பற்றி உங்கள் பார்வையை மீண்டும் வேண்டுகிறேன். (இந்தக் கவிதைகளை உங்களுக்கு இதற்குமுன் அனுப்பவில்லை)

தேவதேவனிடம், ‘எப்படி இவ்வளவு கவிதைகள் எழுதுகிறீர்கள்?’ என்று கேட்டபோது, ‘என்ன செய்வது, வருதே?’ என்றார். அவரைப் பார்த்துப் பொறாமைப்படத்தான் முடிகிறது. ஒரு சில கவிதைகளையாவது சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தால் அந்தப் பொறாமையின் வீச்சு கொஞ்சமாவது குறையும் என்று நினைக்கிறேன்.

ஆனந்த் உன்னத்

அன்புள்ள ஆனந்த்

கவிதைகளை வாசித்தேன். கவிதை என அரசியலையோ அன்றாட வாழ்க்கையையோ எழுத முயலாதது முக்கியமான விஷயம். கவிதை என்பது சாதாரணமாகச் சொல்லிவிட முடியாத ஒன்றை உணர்த்துதல் மூலம் சொல்லிவிடுவதற்கான ஒரு முயற்சி. இக்கவிதைகளில்

எங்கேயோ
இருக்கிறது என் வீடு.
கண்மூடினால்
தெரிகிறது பாதை

கவிதையின் கணத்தைத் தொட்டிருக்கிறது. ஆனால் கவிதை என்னும் சமகால இயக்கத்தில் அதன் இடம் மிக பழையது, பலமுறை சொல்லப்பட்டது

சாலையோரக் குளத்தில்
மீன்பிடிக்கும் பறவை,
எதையோ
விட்டுச் செல்கிறது,
எனக்காக.

என்ற கவிதையின் சிக்கல் அந்த ‘எதையோ’ தான்.  ஒரு காட்சி தன்னளவில் பூர்ணமானது.அதில் தத்துவார்த்தமாக எதையோ சேர்க்கக்கூடாது. அந்தக் காட்சியே படிமமாகி வாசகனிடம் ஒன்றை உணர்த்தவேண்டும். அதுவே நவீன கவிதை

மெல்ல இலையுதிர்த்து
தன்னைக் கலைத்துக்கொள்கிறது
குளக்கரை மரம்

ஒரு பழைய ஜென் கவிதை. இதில் கவிஞன் எதையோ சொல்லவரவில்லை. ஒரு காட்சி மட்டுமே உள்ளது. அதுவே கவிதை

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் மேற்கும் -குகா
அடுத்த கட்டுரைபுதிய பிரபஞ்சம்