தமிழ்விக்கி, கிறிஸ்தவம் – கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

2022ல் தமிழ் விக்கி உருவான காலகட்டத்தில் உங்கள் மேல் கடும் காழ்ப்புகளை முகநூலில் எழுதியவர்களில் நானும் ஒருவன். அதற்கு சரியான காரணம் ஒன்றும் இல்லை. அன்று இருந்த பொதுவான காழ்ப்புகளுடன் என்னுடைய மதம் சார்ந்த முன்முடிவுகளும் இருந்திருக்கலாம். இது எவ்வளவு பெரிய பணி என்றும், எவ்வளவு பெரிய தமிழ்க்கொடை என்றும் எனக்கு தெரியவில்லை. அன்றைக்கு வசைபாடிய எவருக்குமே தெரிந்திருக்காது. நீங்கள் மிகத்தொலைதூரத்தை நோக்கி கனவுடன் சென்றுகொண்டிருந்தீர்கள். எங்களால் அவ்வளவு தொலைவு பார்க்கமுடியவில்லை (ஆகவேதான் இப்படி இருக்கிறோம். அவரவர்  உயரம்தான் அவரவர் பார்வை)

அண்மையில் தமிழ் விக்கியில் கிறிஸ்தவ அருட்பணியாளர்கள் பற்றிய பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முழுமையான தகவல்கள். எவ்வளவு நேர்த்தியாக அவை ஒழுங்குபடுத்தி அளிக்கப்பட்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று அவை மிகச்சரியாக தொடுக்கவும் பட்டுள்ளன. இத்தனைபெரிய பணியை இங்கே கிறிஸ்தவ அமைப்புகள்கூட முன்னெடுக்கவில்லை. நான் முதலில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதன்பிறகு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சாங்கோபாங்க சுவாமிகள் என்று என் வகுப்புகளில் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய தெரியாது. எம்லின் தெருவில்தான் நான் பிறந்தேன். அவர் எவர் என்று தெரியாது. ஞானப்பிரகாசர், ஹக்கர் என எத்தனை அருட்பணியாளர்களின் வரலாறு தமிழ்விக்கியிலே உள்ளது. உங்களுக்கு என் வணக்கம்.

சி. கிறிஸ்டோபர் செல்வராஜ்

முந்தைய கட்டுரையூடியூப் சேனல் அமைப்பது…
அடுத்த கட்டுரைகலாநிலையம்