நாராயணகுருவின் சாதி

நாராயணகுரு – தமிழ் விக்கி

ஜெமோ

நாராயணகுரு இந்து சமூகத்தின் மறுமலர்ச்சிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்புக்காகவும் போராடியவர். அவரை உயர்சாதியினர் இன்று சொந்தம் கொண்டாடலாமா? அவர் தன்னை உயர்சாதிக்கும் உரியவர் என்று சொல்லிக்கொண்டாரா?

கே.ஆர்

(தமிழாக்கம்)

அத்வைதாசிரமம், ஆலுவா

1091 இடவம் 15

(ஆங்கில ஆண்டு 1915 )

நாம் ஜாதிமதபேதத்தை கைவிட்டு இப்போது பல ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கிறது. எனினும் சில குறிப்பிட இனத்தவர் நம்மை அவர்களின் இனத்தைச் சேர்ந்தவர்களாக எண்ணியும் செயல்பட்டும் வருவதாகவும் அதன் காரணத்தால் பலருக்கும் நம்மைப்பற்றி உண்மைக்குப் புறம்பான புரிதல் உருவாகியிருக்கிறது என்றும் அறிகிறோம். நாம் ஒரு குறிப்பிட்ட சாதியையோ மதத்தையோ சார்ர்ந்திருக்கவில்லை. குறிப்பாக நமது சீடர் நிரையில் இருந்து அத்தகையோரை மட்டுமே நமது வாரிசுகளாக வரும்பொருட்டு ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்திருக்கிறோம், மேற்கொண்டும் அவ்வாறே சேர்க்கும்படி விதியமைத்திருக்கிறோம். இந்த செய்தியை பொதுமக்களின் அறிதலுக்காக முறையாக அறிவித்துக் கொள்கிறோம்.

இவ்வண்ணம்

நாராயணகுரு

கையொப்பம்

*

நாராயணகுரு தன்னை எந்தச் சாதியையும் சேராதவர், எந்த மதத்தையும் சேராதவர் என்றே அறிவித்துக் கொண்டார். அவர் வாழ்ந்த காலகட்டத்திலேயே சாமானியர்கள் அவரை தங்கள் சாதியினரென்றும் மதத்தவர் என்றும் எண்ணிக்கொண்டதை கண்டித்து பொதுவிளம்பரம் கொடுத்திருக்கிறார். ஆயினும் அவரை அவ்வாறு எண்ணுவதில் இருந்து சாமானியர்களால் விலக முடியவில்லை. சாமானியர் எப்போதும் அப்படித்தான், அவர்கள் எதைநோக்கியும் எழுவதில்லை. ஏனென்றால் அவர்களின் ஆற்றலே அவ்வளவுதான்.  அவர்களின் அறிவாற்றல், உள ஆற்றல், ஆன்மிக ஆற்றல் மூன்றுமே எல்லைக்குட்பட்டவை. எனவே எல்லாவற்றையும் தங்களை நோக்கியே அவர்கள் இழுத்துக்கொள்வார்கள்.

அவ்வாறு நாராயணகுருவை தங்களை நோக்கி இழுப்பவர்கள் பலதரப்பு. தங்கள் சாதியினர் அவர் என எண்ணும் ஈழவர்கள். தங்கள் மதத்தவர் அவர் என எண்ணும் இந்துக்கள் மற்றும்இந்த்துவர்கள். தங்களைப்போன்ற ஒருவர் என அவரை மதிப்பிடும் அரசியல்வாதிகள். அரசியல்வாதிகளால்தான் அவர் ஒரு ‘சமூகசீர்திருத்தவாதி’ என்று மதிப்பிடப்படுகிறார். நாராயணகுரு சமூகத்தைச் சீர்திருத்த ‘பாடுபட்டவர்’ அல்ல. அவர் உண்மையில் தானாக முன்வந்து எதையுமே செய்யவில்லை. எங்கும் களப்பணியாற்றவில்லை. அவரை சமூகசீர்திருத்தவாதி என்று சொல்வதும், இந்தியாவின் பிற சமூகசீர்திருத்தவாதிகளுடன் அவரை ஒப்பிடுவதும் அவரைச் சிறுமைசெய்வதாகும். அவரை எவருடனும் ஒப்பிட முடியாது. காந்தியுடன் ஒப்பிடுவதேகூட அவரை குறைத்துப் புரிந்துகொள்வதுதான்.

அவர் ஒரு மெய்ஞானி. ஒரு மெய்ஞானியாக தான் நின்றிருந்த உயரத்தில் இருந்து சமூகம், அரசியல் சார்ந்து சில வழிகாட்டுதல்களை மக்களுக்கு அளித்தார். தன் சாதியினருக்கோ, தன் மதத்தினருக்கோ அந்த வழிகாட்டுதல்களை அவர் அளிக்கவில்லை. மானுடகுலத்துக்காகவே அளித்தார். அவருடைய மாணவர் நிரை மிகப்பெரியது. அவர்கள் இலக்கியத்தில் குமாரன் ஆசான், சமூகவியலில் சகோதரன் ஐயப்பன், தத்துவத்தில் நடராஜகுரு, அரசியலில் டி.கே.மாதவன், இதழியலில் சி.வி.குஞ்ஞிராமன், ஆன்மிகத்தில் சத்யவிரதர் என முன்னோடியான முதன்மை ஆளுமைகள் அவரிடமிருந்து உருவானவர்கள். அவர்கள் அவருடைய சொற்களில் இருந்து சமூகமாற்றத்தை, அரசியல் சீர்திருத்தத்தை, ஆன்மிக மறுமலர்ச்சியை உருவாக்கினார்கள்.

அவருக்கு எந்த குறிப்பிட்ட இலக்கும் இருக்கவில்லை. அவர் மெய்யறிந்து, மெய்யென அமர்ந்திருந்தார். நாடிவந்தோருக்கு அவர்கள் நாடுவதை அளித்தார். நாராயணகுருவின் நூல்கள் எல்லாமே ஆன்மிகம், மெய்யியல் சார்ந்தவை மட்டுமே. சமூக மாற்றம்  சார்ந்து அவர் எதையுமே எழுதவில்லை. அவருடைய முதன்மையான வழிகாட்டுதலான ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒருதெய்வம்’ என்னும் அறிக்கைகூட சகோதரன் ஐயப்பனின் கோரிக்கையை ஏற்று வெளியிடப்பட்டதே. ஆனால் அனைத்தையும் அவர்தான் ஆற்றினார். சுடர் எங்கும் செல்வதில்லை, எதையும் செய்வதில்லை, சுடர்வதொன்றே அதன் பணி. மூலைமுடுக்கெல்லாம் சென்று இருளகற்றுவது அதன் அவ்வியல்பின் விளைவு.

நாராயணகுருவை சாதியுடன், மதத்துடன், தேசத்துடன் இணைத்துப் பேசுவதே பெரும்பிழை. அதைச்செய்பவர்கள் சூரியன் என்பது வீட்டிலிருக்கும் விளக்குபோன்ற ஒன்று என்னும் பிழையையே செய்கிறார்கள். சற்றேனும் தங்கள் எல்லைகளைக் கடந்து அவர் இருந்த பெருநிலை நோக்கி அகத்தை நகர்த்திக்கொள்ள முயல்பவர்களால் மட்டுமே அவருடைய தோற்றம் கிடைக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைகுணங்குடி மஸ்தான் சாகிபு
அடுத்த கட்டுரைமுழுமையறிவு எதுவரை?