எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-9
முரண்பாடுகளும் முரணியக்கமும்
கீதையில் இரண்டு வகையான முரண்பாடுகள் இருக்கின்றன. முதல் வகையான முரண்பாடு நேரடியானது. அது கதை சார்ந்தது. ஒரு போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தி எதிரிக்கு முன் நண்பனுடன் நிற்கும் கொந்தளிப்பான சூழல் விவரிக்கப்பட்டு அந்த நாடகத்தருணத்தில் வேதாந்தம் உரைக்கப்படுகிறது. அந்த சந்தர்ப்பமே (Context) பொருத்தமில்லாமல் இருக்கிறது. உள்ளே அகிம்சையை பற்றி, விபூதி யோகத்தை பற்றி, மோட்ச ஸந்யாயத்தை பற்றி இருக்கிறது. அவற்றைச் சொன்னபின்னரும் திரும்பி வந்து ஆசிரியன் குரல் ‘ஆகவே போர்புரிக’ என்கிறது. கீதை முழுக்கவே இந்த முரண்பாடு வந்துகொண்டே இருக்கும். ஒரு பொது வாசகனுக்கு இந்த முரண்பாடு எப்போதும் கண்ணில் உறுத்திக்கொண்டே இருக்கும். அதை நாம் விளக்கியாகவேண்டும். அது தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் பொருந்தவேண்டும். அதை ஏற்கனவே விளக்கினேன். கீதையின் புனைவுத்தருணம் அது. அந்தப் புனைவுத்தருணமே அந்த வேதாந்தக்கொள்கைக்குள் செல்வதற்கான உணர்ச்சிகரமான தூண்டுதலாக அமைகிறது. அந்த புனைவுத்தருணத்தை நாம் ஓர் உருவகமாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது முரண்பாடு என்பது தத்துவ முரண்பாடு. ஒரு பகுதியில் கீதையில் சொல்லப்பட்டது இன்னொரு பகுதியில் மறுக்கப்பட்டு வேறுவகையில் சொல்லப்பட்டிருக்கும். இது ஏன்? இதை புரிந்து கொள்வதற்காகத்தான் யோகமீமாம்சை பற்றிய புரிதல் தேவை. நீங்கள் ஒரு மருத்துவரிடம் போகிறீர்கள். காய்ச்சல் விட்டு விட்டு அடிக்கிறது, சளி இருக்கிறது என்று சொல்கிறீர்கள். ‘சரிங்க, பாரசிட்டமால் சாப்பிடுங்க’ என்று ஒரு மருந்து எழுதி உங்களுக்கு கொடுக்கிறார். மூன்றாவது நாள் நீங்கள் போகிறீர்கள், ‘இல்லைங்க, அப்படியே தான் இருக்கிறது’ என்று சொல்கிறீர்கள். ‘அப்படியா, அப்ப ஒரு டெஸ்ட் பண்ணிடுவோம்” என்று சளியை சோதித்துவிட்டு புதிய மருந்து கொடுக்கிறார். மறுபடியும் மூன்று நாள் கழிந்து போகிறீர்கள், ‘இல்லைங்க, குணம் ஆகலை’ என்கிறீர்கள். உடனே அவர், ‘சரி, ஒரு Biopsy எடுத்துருவோம்’ என்கிறார். நீங்கள் இந்த டாக்டர்க்கு அறிவே கிடையாது, மூன்று நாளைக்கு ஒரு முறை முரண்பட்டு பேசிக்கொண்டே இருக்கிறார் என்று சொல்வீர்களா? இதில் ஒரு படிநிலை இருக்கிறது அல்லவா?.
ஒருவனுக்கு ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லி, அந்தப் பதில் போதாமலாகும் போது அதில் இருந்து அடுத்த பதிலுக்கு போகிறார் ஆசிரியர். இதில் ஒரு நிராகரிப்பு இருக்கிறது. முந்தையதை நிராகரித்தே அடுத்தது. அப்படிப் பார்த்தால், சாங்கிய யோகத்திற்கு நேர் எதிரான அடுத்த கட்டம்தான் கர்ம யோகம். கர்ம யோகத்திலிருந்து முரண் கொண்டுதான் ஞான யோகத்திற்கு போகிறது கீதை. ஒன்றையொன்று மறுத்து முன்னால் போகும் படிநிலைகளாகவே அது அமைந்துள்ளது. கீதை ஒட்டுமொத்தமும் சேர்ந்து ஒரே உபதேசம் அல்ல என்பதைத்தான் நான் சொல்ல வருகிறேன். மொத்தமும் சேர்ந்து ஒரு தத்துவம், ஒரு வழிகாட்டுதல் அல்ல. பதினெட்டு யோகங்களும், ஒன்றிலிருந்து ஒன்றை முரண்பட்டும், அதேசமயம் முரணியக்கம் வழியாக ஒன்றையொன்று தொடர்ந்தும் சொல்பவை. அதுதான் முரணியக்கம் அல்லது யோகமீமாம்சம்
நீங்களே பார்க்கலாம். கர்ம யோகத்திற்கு பிறகு வருவது ஞானகர்ம யோகம். ஆனால் ஞானத்தை முன்வைப்பது அது. கர்மத்தை நிராகரிக்கக்கூடிய ஒரு பகுதிக்கு பிறகு, கர்மத்தை ஏற்கக்கூடிய பகுதி வரும். இப்படிச் சொல்லலாம். ஒரு பாட்டி வீட்டிற்கு வருகிறார்கள். அவர்களுடைய பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்தால், ஒரு ஸ்வீட் இருக்கும், கொஞ்சம் முல்லைப்பூ இருக்கும், ஒரு காற்றாடி இருக்கலாம். காற்றாடியை ஒரு பையனுக்கு கொடுக்கிறார்கள். முல்லைப்பூவை ஒரு பொண்ணுக்கு கொடுக்கிறார்கள். இனிப்பை இன்னொருவருக்குக் கொடுக்கிறார்கள். ஒரு பொட்டலத்துக்குள் வெவ்வேறு வகையான மனிதர்களுக்கான தத்துவார்த்தமான பாடத்திட்டங்கள் அமைந்திருப்பதானால் தான் இதற்கு இந்த தொகுப்பு வடிவம் இருக்கிறது, இதுதான் கீதையின் அமைப்பு. கீதையின் யோகாத்ம முறை என்பது இதுதான். யோக மீமாம்சம் என்பது இதன் பெயர்.
ஒன்றையொன்று மறுத்து, மறுத்து, மறுத்து மேலே செல்லக்கூடிய ஒரு கட்டமைப்பு இது. ஆனால் மறுப்பும் அல்ல, நீட்சிதான். இன்றியமையாத தொடர்ச்சிதான். ஒன்று இன்னொன்றை உருவாக்குகிறது. ஒன்று இன்னொன்றை நிறைவாக்குகிறது. ஆனால் பிற்காலத்தில் கீதை ஒட்டுமொத்தமும் பகவானின் சொல், ஒட்டுமொத்தமும் ஒரே உபதேசம் என்று விளக்க வரும்போது, இந்த முரண்பாடுகளை பலவாறாகப் பேசிப் பேசி மழுங்கவைக்க வேண்டியிருக்கிறது. நேற்றைக்கு என்னுடைய உரையை கேட்டுவிட்டு போனவர்களுக்குள் சிக்கல் எழுந்திருக்கும். ‘அனைத்து தர்மங்களையும் கைவிட்டு என்னை சரணடையுங்கள்’ என்று சொல்பவனே ‘நான் சொல்கிறேன் என்று யோசிக்காதே, நீயே யோசித்துப்பார்’ என்று கடைசியில் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்வி வந்திருக்க வேண்டும். அது வேறு யோகம் என்பதே அதற்கான பதில். முதல் கூற்று சாங்கிய யோகத்தில். இரண்டாவது கூற்று விபூதி யோகத்தில். இதுதான் கீதையின் யோகாத்ம அமைப்பு என்பது.
கீதையின் கட்டமைப்பில் ஐந்து வகையான உபதேச முறைகள் இருக்கின்றன என்பது நம்முடைய மரபிலேயே இருக்கிறது. ஒன்று, தெய்வயானம் என்று சொல்வார்கள், தெய்வத்தால் உரைக்கப்பட்டது. இன்னொன்று பித்ருயானம், ஒரு மூதாதையின் இடத்திலிருந்து அவர் சொல்வது. மூன்றாவதாக, யக்ஞ யானம், ஒரு வேள்வித்தலைவன் இடத்தில் இருந்து அவர் கூறுவது. நான்காவதாக சாங்கிய யானம், ஒரு லௌகீகனாக, உன்னுடைய நண்பனாக இருந்து சொல்வது. ஐந்தாவதாக சந்நியாச யானம், அனைத்தையும் துறந்து, வெளியே நின்றுகொண்டு ஒரு துறவியாக, ஒரு அவதூதனாக நின்று அவர் ஆற்றுப்படுத்துவது. இந்த ஐந்து பார்வைகளும் ஒரு நூலில் வரும்போது வரக்கூடிய முரண்பாடுகளைத்தான் இன்று கீதையினுடைய முரண்பாடுகள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆத்திகர் மழுப்புகிறார்கள், நாத்திகர்கள் குழப்புகிறார்கள்.
உலகியலிலும் அப்பாலும்
நான் ஏற்கெனவே அந்த சித்திரத்தை அளித்தேன். ரிக் வேதத்தின் பத்தாவது காண்டத்திலிருந்து பிரம்மம் என்ற தரிசனம் உருவாகி, உபநிஷதங்கள் வழியாக வளர்ந்து, முழுமையடைந்து பிரம்ம சூத்திரத்தில் அதனுடைய நிறைவை அடைந்தாயிற்று. அதன்பிறகு இந்த கீதை என்னும் நூல் ஏன் வருகிறதென்றால், ஒரு பசு தன்னுடைய உடலைத் திரும்பி பார்ப்பது போல, என்று மத்வர் சொல்கிறார். அதுவரைக்கும் வந்த வளர்ச்சியை நோக்கி திரும்புகிறது அது. அதுவரைக்கும் வந்தது ஒரு வளர்ச்சி என்றால், அது திரும்பி அவ்வளவையும் நோக்கித் தொகுக்க முயற்சி செய்கிறது. இந்த பிரம்ம தரிசனத்தை அன்றாட வாழ்விலிருந்து, உச்சகட்டத்தில் இருக்கும் அவதூதன் வரைக்கும் அனைவருக்கும் சொல்ல முடியுமா? பிரம்மம் என்ற இந்த தரிசனத்தை இங்கு அமர்ந்திருக்கக்கூடிய ஒரு தொழிலதிபரில் இருந்து, முற்றும் துறந்து இமயமலையில் தவம் செய்யும் ஒரு ஞானி வரைக்கும் அத்தனை பேருக்கும் பொருந்தும்படி சொல்லமுடியுமா? அந்தக் கேள்விக்கான விடைதான் கீதை.
கீதையின் கட்டமைப்பே இந்த தேவையில் இருந்து உருவானதுதான். மிகவிரிவாக இந்தக் கோணத்தில் நடராஜகுரு கீதை உரையை எழுதியிருக்கிறார். கீதையின் அந்த தொகுப்பு முறையை நீங்கள் கூர்ந்து பார்க்க வேண்டும்.அது அனைவருக்குமானது. ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான பதில்கள் கொண்டது. அதன் முரண்பாடுகள் அவ்வாறானவை. அத்துடன் ஒன்று உண்டு. முரணியக்கம் அதாவது யோகமீமாம்சை, அதில் இன்னொரு கோணத்திலும் உள்ளது. அதையும் நடராஜகுரு விளக்கியிருக்கிறார். உலகியல் ஒரு நேர்கோடு. உலகியலுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகம் ஒரு எதிர்கோடு. நடராஜகுரு அவற்றை செங்குத்துக்கோடு, கிடைக்கோடு என வரைந்து காட்டி விளக்குவார். அவை இரண்டும் வெட்டிக்கொள்ளும் பல நுண்ணிய தருணங்கள் கீதையிலுள்ளன. உலகியலைத் துறந்து துறந்து அடையவேண்டிய ஆன்மிகம் உலகியலில் எப்படிச் செயல்படுகிறது என கீதை சொல்கிறது. கீதையின் முரணியக்கம் அவ்வாறு தத்துவார்த்தமாக விளக்கப்படவேண்டியது. உலகியலில் ஆன்மிகம், ஆன்மிகத்தில் உலகியல் நடைமுறை. யோகமீமாம்சை சார்ந்த கீதையின் அமைப்பை அவ்வாறு நாம் விரிவாகப் புரிந்துகொள்ளலாம்
யோகம் போலவே பல வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொண்டு உரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்று சாங்கியம் என்ற வார்த்தை. பிற்கால அறிஞர்கள் பலபேர், சாங்கிய தரிசனத்தை கிருஷ்ணன் கீதையில் தவறாகவும் திரித்தும் பயன்படுத்தியிருக்கிறார் என்று எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக, டி.டி.கோஸாம்பி அப்படி எழுதியிருக்கிறார். கபில முனிவர் முதலாசிரியராக அமைந்து உருவாக்கிய ஆறுதரிசனங்களில் முதன்மையானதாகிய சாங்கிய தரிசனத்தை வேதாந்தம் உள்ளிழுக்கும் முயற்சி அது என்றும், சாங்கியத்தை பிழையாக விளக்கிக்கொண்டு அந்த உள்ளிழுத்தலை கீதாசாரியன் செய்துள்ளான் என்றும் சொல்கிறார். இதெல்லாம் இன்றைக்கு தமிழில் கிடைக்கக்கூடிய நூல்களில் இருக்கிறது. உங்களுடைய மகன் விக்கிபீடியாவில் கீதை என்று அடித்துத் தேடினால் இதுதான் முதலில் வரும். அதைத்தான் அவன் கேட்பான். இன்றைய தலைமுறை கேட்கும். உங்களுக்குப் பதில் தெரிந்திருக்கவேண்டும்.
ஆனால் எவ்வளவு பெரிய அபத்தத்தின் மேல் அந்த விமர்சனம் எழுதப்பட்டிருக்கிறது என்று நீங்கள் அறிந்திருக்கவேண்டும். சாங்கியம் என்ற வார்த்தை ’சங்கியா’ என்ற சொல்லுக்கு அணுக்கமானது. சங்க் என்னும் வேர். எண்ணிக்கை என்று பொருள். இங்கே பேசப்படுவது கபிலரின் சாங்கிய தரிசனம் அல்ல. நடைமுறை தரிசனம் என்ற அர்த்தத்தில் தான் இங்கே சாங்கியம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அல்லது தர்க்கபூர்வமானது, அன்றாடத்தன்மை கொண்டது என்ற பொருளில். இன்றைக்கு கோவை வட்டாரத்தில் கூட சடங்கு – சாங்கியம் என்று நீங்கள் சொல்வீர்கள் இல்லையா, அந்த அர்த்தத்தில்தான் இதில் சாங்கியம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சடங்குத்தன்மை, புழக்கத்தன்மை என்றெல்லாம் கொள்ளலாம். அந்த அத்தியாயமே உலகியல் சார்ந்த விளக்கத்தை அளிப்பது என்பதைக் காணலாம்.
தன் வில்லை கீழே போட்டுவிட்டு அமர்ந்திருக்கும், ‘வில்தாழ்த்திய விஜயனி’டம், அவன் செயலுக்கு நடைமுறை வாழ்க்கையில், அன்றாட வாழ்க்கையில், கணக்கு வழக்குகளின் வாழ்க்கையில் என்ன பொருள் என்று அவன் நண்பனான கிருஷ்ணன் சொல்லும் பகுதிதான் சாங்கிய யோகம். அதற்கும் சாங்கிய தரிசனத்திற்கும் சம்பந்தம் கிடையாது. சாங்கிய தரிசனமும் இதே போன்று நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஆரம்பிப்பதால் ஒரு பொதுத்தன்மை அதற்கு இருக்கிறது என்று வேண்டுமென்றால் சொல்லலாம். சாங்கிய தரிசனம் பிரத்யட்சம் (நேர்க்காட்சி) அனுமானம் (ஊகம்) சுருதி (முன்னறிவு) ஆகிய மூன்று பிரமாணங்களில் பிரத்யட்சத்துக்கு முதன்மை இடம் கொடுப்பது. இந்த பொருள்வயப் பிரபஞ்சம் மெய்யே என்பது. ஆகவே பொருள்முதல்வாதத் தன்மை கொண்டது. ஆகவே அதையும் சாங்கியம் என்றனர். இந்த இடதுசாரி ஆய்வாளர்கள் இவர்களுக்குக் கிடைத்த குறைவான அறிவுடன் கீதையை அணுகி, கிருஷ்ணனுக்கே சாங்கிய தரிசனம் தெரியவில்லை என்று சொல்லும் இடத்திற்கு போயிருக்கிறார்கள். அதாவது இவர்களுடைய அறிதல் எப்படியென்றால், பானையை முதலில் கவிழ்த்துப் பிடித்துக்கொண்டு “உள்ளே போடுவதற்கு வழியே இல்லையே! சரி, போட்டாலும் உள்ளே நிற்காது. இவ்வளவு பெரிய ஓட்டை அடியில் இருக்கிறது!” என்று சொல்வது மாதிரி.
கீதையை அணுகுவதற்கான ஒரு மரபார்ந்த குருமரபு இங்கே இருந்திருக்கிறது என்று சொன்னேன். இந்த குருமுறைகளின் வழியாக கற்றுக்கொண்டவர்களுக்கு இந்த இடர்பாடுகள் பெரும்பாலும் இருக்காது. இந்த நூலை எடுத்துக்கொண்டு, எனக்கு தமிழ் தெரியும், அல்லது ஆங்கிலம் தெரியும், ஆகவே நான் இதைப் படித்து புரிந்துகொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் எழுதப்படும் உரைகளுக்கும், அதற்கு சொல்லப்படும் விளக்கங்களுக்கும்தான் இந்த பெரிய இடர்பாடுகள் உருவாகின்றன.
கீதா முகூர்த்தம்
இவற்றுக்கெல்லாம் அப்பால் ஒன்றுண்டு, அது ரொம்ப முக்கியமானது. நான் பத்தாவது வகுப்பு படிக்கும் காலகட்டத்தில், என்னுடைய பெரியப்பாவின் மகன் வீட்டில் பகவத்கீதை நூலை கண்டேன். அப்போது எது கிடைத்தாலும் உடனே நான் படித்து விடுவேன். அவர் தன் வீட்டருகே ஆசிரமம் கட்டி துறவியாக இருந்தார், முகுந்தன் என்று பெயர். அவரிடம் நிறைய நூல்களை எடுத்து படித்துவந்தேன். நான் கீதையைக் கையில் எடுத்தேன். அவர் சொன்னார், ‘இல்லை இப்போது படிக்க வேண்டாம், அதை படிக்கக் கூடாது’ என்றார். ‘ஏன்?’ என்று கேட்டேன். ‘நீ அதைக் கீழே வைத்துவிடு’ என்றார். நான் கீழே வைத்துவிட்டபின் என்னிடம் அவர் சொன்னார், ‘நோய் இல்லாதவன் மருந்து சாப்பிடுவது நோயை உண்டாக்கும், இதை படிப்பதற்கான கேள்வி உன்னிடம் இல்லாதபோது இதை நீ படிக்கக்கூடாது’. நான் அவரிடம் ‘அப்படியென்றால் எப்போது படிப்பது?’ என்று கேட்டேன். ‘அதற்கு நாமறியாத ஒரு திட்டம் இருக்கும். அது உன்னை தேடிவரும். அது ஒரு ராஜாளி, நீ எந்தப் பொந்தில் உன்னைக் கொண்டுசென்று வைத்தாலும் தேடிவந்து தலையைக் கவ்வி எடுத்துக்கொண்டு போகும்’ என்று சொன்னார். நான் அப்போது கீதையைப் படிக்கவில்லை.
ஆங்காங்கே பல்வேறு முறைகளில் உதிரி உதிரியாக கீதையை கேட்டிருக்கிறேன். ஆனால் ஒரு நூலாக கீதையை நான் அனுகியது கிடையாது. நம்மில் இங்கிருக்கும் பெரும்பாலானவர்கள் ஒட்டுமொத்த கீதையையும் படித்திருக்கமாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன். நானும் அப்படித்தான் இருந்தேன். எனக்குப் பத்தொன்பது வயதாக இருக்கும்போது என் உயிர் நண்பனாகிய ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனான். என் இளமைப்பருவத்தில் அது ஒரு பெரிய அதிர்ச்சி. ஒருநாள் இரவில் வந்து, ஊரார்ச் சிலர் வந்து என் வீட்டுக் கதவைத் தட்டுகிறார்கள். அவன் ஏதோ குடித்துவிட்டு படுத்திருக்கிறான் என்றார்கள். நான் ஏதோ மது குடித்துவிட்டுத்தான் படுத்திருக்கிறான் என்று சாதாரணமாகத்தான் போனேன். அவன் வீட்டருகே போனால், அவன் வாயிலிருந்து குடல் துண்டுதுண்டாக தெறித்துக்கொண்டு இருப்பதைக் கண்டேன். எங்களூர்ப்பக்கம் ரப்பரை உறையச்செய்ய பயன்படுத்தும் நைட்ரிக் ஆசிட்டை குடித்திருக்கிறான். அவனைத் தூக்கி மடியில் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகும்போது, என்னுடைய மடியிலேயே அவன் உயிர் துறந்தான். நெருப்பில் எரியும் டயர் துண்டு நெளிவது மாதிரி நெளிந்து நெளிந்து உயிர் விட்டான்.
கிட்டத்தட்ட மூன்றுமாதம் எனக்கு என்னுடைய வாழ்க்கையிலிருந்தே இல்லாமலாகிவிட்டது. என் உள்ளத்தில் ஒரு பகுதியே blockout ஆகிவிட்டது. என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியாது. பின்னால் தெரிந்து கொண்டேன், நான் அந்தக் காலம் முழுக்க ஒரே அறைக்குள்ளேயே இருந்து கொண்டிருந்திருக்கிறேன். அறையிலேயே சுற்றிக்கொண்டிருந்தேன். திரும்பத் திரும்ப ஒன்றையே செய்துகொண்டிருந்தேன். அந்தப் பதற்ற நிலைக்குப் பிறகு, துறவியாகும் நோக்கத்தோடு நான் வீட்டை விட்டு கிளம்பி போனேன். திருவண்ணாமலையில் இருந்திருக்கிறேன். திருவண்ணாமலையில் அன்றைக்கு என்னுடைய சகபிச்சைக்காரராக யோகி ராம் சரத்குமார் அவர்கள் இருந்தார்கள். மலையாளத்து சாமி என்று என்னை அன்றைக்கு சொல்வார்கள். காசியில் இருந்திருக்கிறேன். ஹரித்வாரிலும் இருந்திருக்கிறேன். கொஞ்சநாள் பழனியில் இருந்தேன்.
பின்னர் திரும்பி வந்தேன். தொடர்ந்து அலைக்கழிப்புகள். என்னால் துறவியாக முடியாது என்று எனக்குத் தெரிந்தது. ஏனென்றால் என் இயல்பு அது அல்ல. ஆகவே திரும்பி வந்தேறேன். பின்னர் காசர்கோட்டுக்கு போனேன். தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. தன்னந்தனியாக ஒரு கடலோர வீட்டில் இருந்தேன். வெறிபிடித்த மாதிரி படித்துக்கொண்டிருந்தேன். என் படிப்பு பெருமிதமாக இன்று சொல்லத்தக்கது. ஆனால் அன்று தொடர்ந்து என் நம்பிக்கைகள், என்னுடைய பிடிமானங்கள் அறுந்து விழுந்துகொண்டே இருந்தன. என் குடும்பத்தில் என்னுடைய அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பல பிரச்சினைகள். 1986-ல் என் அம்மா தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள். அடுத்த 54-ஆவது நாளில் என் அப்பாவும் தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனார்கள்.
அதன்பிறகு ஒரு பெரிய வெறுமை. அது வேறொரு நிலை. அது உளப்பிளவுக்கும் நனவுக்குமான ஒருவகையான ஊடாட்ட நிலை. என் அம்மாவின் குரலை அடிக்கடி நான் கேட்பேன். ஒரு மேஜையை நகர்த்தி வைத்தால், என் அம்மாவின் குரல் கேட்கும். சில சமயங்களில் சேற்றிலேயோ, ஈரத்திலேயோ என் அம்மாவின் காலடிகளைப் பார்க்க முடியும். அந்த அளவுக்கு உக்கிரமான பிரமை நிலை. ஒரு வகையில் மனப்பிளவின், Schizophrenia வின் தொடக்க நிலை. ஒரு கட்டத்தில் தற்கொலை பண்ணும் முடிவை நான் எடுத்தேன். ஏனென்றால் அந்த அவஸ்தையை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு ஒரு நாள் காலையில் கிளம்பி போனேன். காசர்கோட்டில் இருந்து பக்கத்தில் இருக்கும் கும்பளா என்ற ஒரு ரயில் நிலையத்துக்கு .அந்த தண்டவாளத்தில் படுத்து செத்துப்போகலாம் என்பதுதான் என் திட்டம். ஆனால் இந்த மாதிரியான தருணங்களில் உங்களுடைய ஆழ்மனத்திற்கு வேறு திட்டங்கள் இருக்கும். அது உங்களை ஏதோ ஒன்று பண்ணும். அன்றைக்கு நான் இன்னும் கொஞ்சம் விடியற்காலையில் போயிருக்கலாம். ஆனால் அந்த தாமதத்தை உருவாக்கியது என் மனதிற்குள் இருந்த ஏதோவொரு இச்சைதான் என்று நான் இப்போது நினைக்கிறேன். நான் போகும்போது கொஞ்சம் வெளிச்சம் வர ஆரம்பித்தது. நடக்க நடக்க கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. அப்போது ஓர் இலைநுனியில், ஒரு பச்சைப்புழுவை பார்த்தேன். ஒரு படிகக்கல் மாதிரி அது ஒளிவிட்டுக்கொண்டிருந்தது. முற்றிலும் ஒளி ஊடுருவும் உடல். Transparent.
அந்தத் தருணத்தில் அந்தத் தரிசனம் ஒரு பெரிய மயிர்க்கூச்சரிப்பை உண்டாக்கியது. கை, கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. கண்ணீர் கொட்டியது. எவ்வளவு இருட்டில், எவ்வளவு ஒரு கீழ்மையில், எவ்வளவு ஒரு மனச்சுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதோ இதற்குள் ஒளி ஊடுருவும் இந்த ஒரு கணம் மாதிரி எனக்கு ஒரு தருணம் அமையாதா? ஒரு கணம் அப்படி வாழ்ந்தால் போதும்தானே! இதற்கப்பால் எதற்காக இவ்வளவு துயரையும் சுமந்து கொண்டிருக்க வேண்டும்? அந்த எண்ணம் என்னை அங்கே நிற்கச்செய்தது. திரும்பி வந்தேன். வரும்போது ஒரு முடிவு எடுத்தேன். சரி, போனது போகட்டும். இனி எத்தனை வருடம் வாழ்ந்தாலும் சரி, இனி என் வாழ்க்கையில் துயர் என்ற ஒன்று இருக்கக்கூடாது. துயர் அடைய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு பண்ணவேண்டியவன் நான்தான். துயர் என்று ஒன்று இனி கிடையாது. ஒருபோதும் இந்த காண்டீபம் கீழே வைக்கப்படக்கூடாது.
அன்றைக்குதான் கீதையை கையில் எடுத்தேன். இந்த மேடையில் கீதையைப் பற்றி நான் சொல்வதற்கான தகுதி என்னவென்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் என்னுடைய எழுத்தைப் படித்தவர்களுக்கு தெரியும், ஒரு தருணத்தில் கூட என் காண்டீபம் கீழே வைக்கப்பட்டது கிடையாது. ஒரு நாள் கூட எழுதப்படாததாக, வீணாக்கப்பட்டதாக கிடையாது. ஒருமுறைகூட துயருற்றிருந்த, சோர்வுற்றிருந்த, பின்னடைந்த தருணம் அமைந்தது கிடையாது. எடுத்த பணி எதுவென்றாலும் அதை நான் முடிப்பேன். எதைச் செய்கிறேனோ அதில் முழுமையாக இருப்பேன். நாளை இல்லை, நேற்றும் இல்லை, இன்றில் ஆழ்ந்திருப்பேன். என்றும் குறையாத உவகையில் ஒவ்வொரு நாளையும் செலவிடுவேன். என் நண்பர்களுக்கு அது தெரியும். அந்த உளநிலையை நான் கீதையில் இருந்து பெற்றிருக்கிறேன். எங்கோ யாரோ கற்பித்துக் கொடுத்த ஒரு பாடத்தை கொண்டுவந்து சொல்வதற்காக இந்த மேடையில் நான் தோன்றவில்லை. நான் அடைந்ததைச் சொல்லவே வந்துள்ளேன். எனக்கு சொல்லப்பட்டதை அல்ல, நான் உணர்ந்ததை சொல்வதற்காக மட்டுமே இங்கு வந்திருக்கிறேன்.
நண்பர்களே இது நான் எடுத்துக்கொண்ட கீதை. நான் கற்றுக் கொண்ட கீதை. அது எனக்கு சொல்கிறது, எதன் பொருட்டோ நாண் ஏற்றப்பட்ட ஒரு வில் மனித ஆத்மா என்பது. இலக்கு அவன் கையில் இல்லை. யார் கையில் நீ ஆயுதமாக இருக்கிறாய் என்று உனக்குத் தெரியாது. உன்னுடைய வேலை என்பது செயலாற்றுவதே. நீ நாணேற்றப்பட்டிருப்பதனாலேயே செயல்படுவது மட்டும்தான் உன் கடமை. ஆகவே கொலைபுரிக. அன்றைக்குத் தொடங்கியது என் மறுவாழ்க்கை. அதன்பிறகு மறுபடியும் எட்டு வருடங்கள் கழிந்துதான் என் ஆசிரியரைக் கண்டடைந்தேன். அவர் எனக்குக் கீதையைக் கற்றுத்தரவில்லை, கீதையை நான் பிழையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பிருந்த வழிகளை அடைத்து என்னை ஆற்றுப்படுத்தினார். அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். வேறொருவருக்கு அவர் கீதையை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் நான் கேட்டேன், ‘குரு, எனக்கு கீதையை சொல்லிக்கொடுங்கள்’. அவர் சிரித்தபடி ‘கீதையை கிருஷ்ணன் தான் சொல்லிக்கொடுப்பான்’ என்றார். நான் அவர் எனக்கு கீதையை மறுக்கிறார் என எண்ணிக்கொண்டேன். அவர் ‘நீயே, ஏற்கெனவே கிருஷ்ணனிடம் கீதையை கேட்டுத் தெரிந்துகொண்டாய். மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்குரிய கலைச்சொற்களை மட்டும் நான் சொல்லித்தருகிறேன்” என்று சொன்னார்.
எது கீதையின் சாராம்சமான உணர்வோ, அந்த உணர்வை கீதையின் அனுபவத்திலிருந்துதான் எடுக்க முடியும். கீதை அர்த்தமாக அன்றி அனுபவமாகத் திறந்துகொள்ள வேண்டும். கீதை நமது நூலாக ஆகவேண்டும். நாமே கண்டடைந்ததாக தோன்றவேண்டும். அது நம்மில் திறந்துகொள்ளவேண்டும். அதற்கொரு தருணம் நம் வாழ்க்கையில் அமையும். அதற்குப் பெயர் ‘கீதாமுகூர்த்தம்’ என்று சொல்வார்கள். கீதாமுகூர்த்தம் ஒருவன் வாழ்வில் நடக்கும்போது எழுந்துவரும் கீதைதான் மெய்யானது. அதுவே கீதையை அறிதலின் கணம். முத்துச்சிப்பியில் ஒரு சிறிய உடைவு விழாமல் உள்ளே நீர்த்துளி போகாது, மணல்துளி போகாது. அதுதான் முத்தாகும். முழுக்க மூடிய சிப்பிக்குள் எத்தனை பெரிய அடைமழை பெய்தாலும் முத்து உருவாக முடியாது. கீதை தொடங்குவது, கீதையின் முதல் அத்தியாயம் அத்தகைய ஒரு கீதாமுகூர்த்தத்தின் தருணம்தான். மகத்தான தர்மசங்கடங்களின் தருணம் அது.
(மேலும்)