ஒரு நாட்டின் விரைவுச்சித்திரம்

ஜப்பான் பற்றி நான் படித்த முதல் நூல், நாகசாகியின் மணிகள். ( The Bells of Nagasaki) .டாக்டர் தகாஷி நாகாயி எழுதியது. இன்று வரை அந்நூலை, அதன் அட்டையைக்கூட, நான் மறக்கவில்லை. நாகசாகியில் அணுகுண்டு விழுந்தபோது கதிர்வீச்சில் பாதிக்கப்பட்ட தகாஷி நாகாயி நோயுற்று அணுவணுவாகச் சாவதன் தன்விவரிப்பு அது. ஜப்பானை அப்படித்தான் அறிமுகம் செய்துகொண்டேன். சூறையாடப்பட்ட ஒரு நாடாக. பின்னர் எங்கள் பள்ளி நூலகத்தில் இருந்த கலைக்களஞ்சியத்தில் ஜப்பான் என்னும் நாட்டைப்பற்றி வாசித்து தெரிந்துகொண்டேன்.

தகாஷி நாகாயி எழுதிய இந்நூல் ஜப்பானை ஆக்ரமித்திருந்த அமெரிக்க ராணுவ நிர்வாகத்தால் பிரசுரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஜப்பான் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் பற்றிய அதே அளவான ஒரு பின்னுரை எழுதிச் சேர்க்கப்பட்டபின்னரே அது அச்சுக்கு அனுமதிக்கப்பட்டது. அந்நிலையில் இருந்து ஜப்பான் மெல்ல மெல்ல மீண்டு எழுந்து வந்தது. உலகின் பொருளியல் சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. அந்த எழுச்சிக்கு ஒரு காரணம் குற்றவுணர்வுகொண்ட பிற்கால அமெரிக்க ஆட்சியாளர்கள் அளித்த தாராளமான நிதியுதவி.

பின்னர் ஜப்பான் பற்றி நான் பலநூல்களை வாசித்தேன். அதில் முக்கியமானது தி.ஜானகிராமனின் ஜப்பானியப் பயணக்கட்டுரையான ‘உதயசூரியனின் நாட்டில்’. அது ஜப்பான் பற்றிய ஒரு நம்பகமான, அழகிய சித்திரத்தை அளித்தது. அதன்பின் பல திரைப்படங்கள், பல நூல்கள். ஜப்பானிய நாவலாசிரியர்களில் என்னைக் கவர்ந்த பலருண்டு. யஸுநாரி கவபத்தா முதல் கோபோ ஆப் வரை. பலரைப்பற்றி நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

புகழ்பெற்ற ஜப்பானியத் திரைப்படங்களை நான் பிந்தித்தான் பார்த்தேன், காஸர்கோட்டில் திரைப்பட கழகத்தின் உறுப்பினராக ஆனபின்னர். அங்கே பார்த்த படங்களில் ஒன்று என்னை கொந்தளிக்கச் செய்தது. தகாஷி நாகாயி பற்றிய நினைவையும் கிளர்த்தியது. Hiroshima mon amour. நாகசாகியில் தொடங்கிய பயணம் ஹிரோஷிமா வரை வந்து ஒரு வட்டத்தை நிறைவு செய்துவிட்டது.

ஜப்பானின் அடையாளங்களான ஜென் தமிழகத்தில் புகழ்பெற்றது அவற்றைப் பற்றி ஓஷோ பேசத்தொடங்கிய பிறகுதான். ஹைகூ கவிதைகளை பாரதியாரே மொழியாக்கம் செய்திருந்தபோதிலும் எழுபதுகளில் ஓஷோ உருவாக்கிய ஜென் அலைக்குப்பின்னர்தான் அவை ஒரு மோஸ்தராக ஆயின. தமிழில் அப்துல் ரகுமான் முதல் ஆனந்த் வரை அதை எழுதினர். எனக்கு தொடக்கம் முதலே ஹைகூ போன்றவற்றின்மேல் பெரிய ஈடுபாடு இல்லை.

ஏனென்றால் ஹைகூ, ஜென் போன்றவற்றை ஒரு வகையான ஊடக மிகையாகவே நான் கருதினேன். ஆன்மிகமென்றால் என்னவென்றே தெரியாதவர்கள்கூட ஜென் நிலை என்றெல்லாம் பேசியதே காரணம். வெள்ளையர்களுக்கு ஜென் மரபிலிருந்த சில அழகியல் நடவடிக்கைகள் ஒருவகை விந்தையான ஈர்ப்பை அளித்தன. நவீன ஜப்பான் அதை தன் சுற்றுலாக்கவற்சியாக ஆக்கிக்கொண்டது.

ஜப்பான் அமெரிக்கர்களின் சுற்றுலாமையமாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் மாறியது. அமெரிக்கர்களுக்கு ஜப்பான் மீது பெரும் கவற்சியும் உருவானது. அமெரிக்காவில் பிரபலமாகும் ஒன்று உலகமெங்கும் புகழ்பெறுகிறது. ஜென், ஹைகூ, கடானா, நிஞ்சா, சமுராய் எல்லாம் உலகறிந்த சொற்களாக ஆனது அவ்வாறுதான். ஜப்பானிய திரைமேதைகள் உலகமறிந்தவர்களாக ஆனதும் அவ்வாறே.

ஜப்பானுக்கு ஒரு பயணம் நிகழ்ந்தபோது இத்தனை முன்முடிவுகளுக்கும் அப்பாற்பட்டு அதை புதியதாக ‘பார்க்க’ முடியுமா என்னும் ஐயம் எனக்கிருந்தது. ஆகவே ஒரு நிபந்தனை எனக்கே விதித்துக் கொண்டேன். ஜப்பான் பற்றிய எந்த மேலதிகச் செய்தியையும் செல்வதற்கு முன் தெரிந்துகொள்ளவில்லை. சென்று பார்த்த இடங்களைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யவுமில்லை. வெறுமே கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக்கொண்டு அந்நிலத்தில் சுற்றிவந்தேன். எது எனக்குள் இயல்பாக வந்து பதிகிறதோ அதுவே முக்கியமானது என எண்ணினேன்.

அவ்வாறு உருவான அகப்பதிவுகளின் தொகுப்பு இந்நூல். ஜப்பானியக் கீற்றோவியம் புகழ்பெற்றது. மிக விரைவாக வரையப்படுவது. மங்கலான, தெளிவற்ற தூரிகைத்தீற்றல்களாலானது. பார்வையாளர்களால் நிரப்பிக்கொள்ளப்பட வேண்டியது. இந்நூலும் அத்தகையதே. இந்நூலின் தனித்தன்மையும் சிறப்பும் இது ஒரு தன்னியல்பான அகப்பதிவின் மொழிச்சித்திரம் என்பதுதான். ஜப்பானைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் இதில் இல்லை. மிகச்சில நாட்கள் தான் என் பயணம் நிகழ்ந்தது. ஆனால் ஜப்பான் பற்றி அறிவதற்கான ஒரு நல்ல தொடக்கமாக இந்நூல் அமையும்.

இந்நூலை முன்பு வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் மறுபதிப்பை வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் நன்றி. இப்பயணத்தை இயல்வதாக்கிய நண்பர் டோக்கியோ செந்தில் (ரா.செந்தில்குமார்) அவர்களுக்கும் நன்றி

ஜெயமோகன்

(விஷ்ணுபுரம் வெளியீடாக மறுபதிப்பு வரும் ஜப்பான் ஒரு கீற்றோவியம் நூலுக்கான முன்னுரை)

முந்தைய கட்டுரைபி.எஸ்.சுப்ரமணிய சாஸ்திரி
அடுத்த கட்டுரைஇயற்கையில் பொலியும் இறை