மெய்யியலின் பகுத்தறிவு

நான் தீவிர இலக்கியத்துக்குள் நுழைந்தபோதே ஆன்மிகம் – இந்தியத்தத்துவத்துக்குள்ளும் நுழைந்துவிட்டேன். என் பெரியப்பாவின் மகன் முகுந்தன் அண்ணா நீர்ப்பாசனத்துறை ஊழியர். ஆனால் துறவியாக, இல்லத்துடன் இணையாமல், தனியாக ஒரு சிறு வீடு கட்டிக்கொண்டு, யோகப்பயிற்சிகளும் தியானப்பயிற்சிகளும் செய்துகொண்டு வாழ்ந்தார். மாணவனாகிய நான் அவரைச் சென்று சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பேன். அவர்தான் என் முதல் ஆன்மிக ஆசிரியர் என்று சொல்லவேண்டும். கீதையை எனக்கு அறிமுகம் செய்தார்- அதை உடனே படிக்கலாகாது என்று.

அதன்பின் தொடர்ச்சியாக ஆன்மிக – தத்துவநூல்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அகத்தேடலால் இல்லம் விட்டு கிளம்பி துறவியானேன். ஏராளமான ஆன்மிகப்பயணிகளை, துறவிகளை, மெய்ஞானிகளைச் சந்தித்தேன். நித்ய சைதன்ய யதியின் மாணவனாக ஆனேன். ஆயினும் நான் ஆன்மிகம் – தத்துவம் பற்றி எதுவும் எழுதத் துணியவில்லை. அதற்கான என் தகுதி குறித்த ஐயம் எனக்கிருந்தது. 1998ல் வெளிவந்த என் நாவலாகிய விஷ்ணுபுரம் என் ஆன்மிகத் தேடல்கள் – தத்தளிப்புகளின் ஆவணம். அரிய சில மெய்யுணர்வுத்தருணங்களும் அதிலுள்ளன.

நான் ஆன்மிகம் – தத்துவம் பற்றிய வகுப்புகள் எடுக்கத் தொடங்கியது 2014 முதல் ஏழாண்டுகள் தொடர்ச்சியாக வெண்முரசு எழுதி முடித்தபிறகுதான். கற்பிக்கும் தகுதி எனக்குண்டு என அந்த ஏழாண்டுகளே எனக்கு உணர்த்தின. அதற்கு முன் 2008 வாக்கில் கீதைக்கும் பதஞ்சலி யோகசூத்திரத்திற்கும் உரைகள் எழுதத் தொடங்கினேன். அவற்றை என்னால் முடிக்க முடியவில்லை. ஏனென்று யோசித்தபோது நான் நன்கு உறுதிப்படாத சிந்தனைகளைச் சொல்லக்கூடாதென்ற என் தயக்கமே காரணம் என்று தெரிந்தது. அந்த தன்னுணர்வே வெண்முரசு எழுதக் காரணம்.

வெண்முரசு நான் இயற்றிய ஒருவகை தவம். என் ஆழத்துக்குள் நான் சென்ற பயணம். அது இந்திய வரலாற்றில், இந்திய மெய்யியலில், இந்திய காவிய இயலில், இந்திய நிலத்தில், இந்திய சமகால வாழ்க்கையில் நான் செய்த  பயணமும்கூட. அதனூடாக நான் என்னை கலைத்து அடுக்கிக்கொண்டேன். அதன் தீவிரமான அனுபவங்கள் வழியாக நான் கற்றவற்றை பரிசீலித்தேன். நான் எனக்கான உண்மையறியும் முறையை கண்டடைந்தேன். அதன்பிறகான நான் வேறொருவன். அதன்பின்னரே ஓர் தத்துவ – மெய்யியல் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் எண்ணத்தை அடைந்தேன்.

ஆனால் அதற்கு முன்னரே நான் மெய்யியல் – தத்துவக் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தேன். அவையெல்லாம் வெவ்வேறு தருணங்களுக்காக நான் எழுதியவை. ஒரு கட்டுரை தஞ்சைப் பல்கலையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு நான் நடத்திய தத்துவ வகுப்பு இன்னொன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஆற்றிய உரை. அவ்வாறு பல கட்டுரைகள்.

இவை எல்லாம் என் கல்வியின் வெளிப்பாடுகள். இவற்றில் இந்திய தத்துவம் – இந்திய மெய்யியல் சார்ந்த கருத்துக்களை வெவ்வேறு நூல்களில் இருந்து தொகுத்துச் சொல்லியிருக்கிறேன். என் மொழிநடையே இவற்றின் சிறப்பியல்பு – இவை ஒரு முதன்மையான புனைவாசிரியரால் சொல்லப்பட்டவை.ஆகவே ஒரு முதன்மையான தத்துவசிந்தனையாளனை விட மேம்பட்ட மொழியமைப்பும் தெளிவும் கொண்டவை.

அத்துடன், நான் இவற்றை நித்ய சைதன்ய யதியின் பார்வைக்கோணத்தை ஒட்டியே அமைத்துள்ளேன். அவரை திருப்பிச் சொல்லவில்லை, அவர் அமைத்த பாதையில் முன்னகர்ந்துள்ளேன். ஆகவே இவை தனித்தன்மைகொண்டவையும்கூட. நித்யாவின் மரபு நாராயண குருவில் இருந்து தொடங்குவது. இந்தியாவின் மிக முதன்மையான ஆசார எதிர்ப்புத் தத்துவ மரபுகள் நான்குதான். ஆரியசமாஜம், பிரம்ம சமாஜம், ராமகிருஷ்ண மடம் மற்றும் நாராயணகுருவின் இயக்கம். அவற்றில் நாராயணகுருவின் அறிவுமரபு என்பது இன்றும் உயிர்த்துடிப்புடன் வாழ்வது. நித்யா அதன் முதன்மைக்குரல்களில் ஒன்று.

இந்திய மெய்ஞானம் பொன் மண்ணில் என ஆசாரத்துடன் கலந்தே கிடைக்கிறது. இந்தியா போன்ற தொன்மையான பழங்குடிமரபும் மதப்பாரம்பரியமும் கொண்ட நாட்டில் பழமையான ஆசாரங்கள் பெருகியிருப்பது இயல்பானதே. அந்த கசடைத் தவிர்த்து பொன்னை எடுக்க ஞானிகளின் வழிகாட்டல் இன்றியமையாது. கசடின்பொருட்டு பொன்னையும் வீசும் அறிவின்மை இங்குண்டு. பொன் என்று கசடையும் தலையில் தூக்குவோரும் பலர்.

உண்மையான பகுத்தறிவு என்பது மெய்யை பொய்யில் இருந்து பிரித்தறிவது அல்ல. மெய்யை பயனற்ற மெய்யில் இருந்து, பழைய மெய்யில் இருந்து பிரித்தறிவது. விசேஷ மெய்யை சாமானிய மெய்யில் இருந்து பிரித்தறிவது. அதற்குத்தான் ஞானிகள், சிந்தனையமைப்புகளின் வழிகாட்டல் தேவை. அவ்வழிகாட்டல் என் ஆசிரியரிடமிருந்து அமைந்தபின்  என் சிந்தனை திரண்டது. இக்கட்டுரைகள் அதன் விளைகனிகள்.

இக்கட்டுரைகள் இந்திய மெய்யியலை பகுத்தறிவுநோக்கில் ஆய்வு செய்பவர்களுக்குரியவை. ஆய்வுநோக்கும் தொகுப்புப் பார்வையும் கொண்டவை. அடிப்படையில் நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்த அணுகுமுறை கொண்டவையும்கூட.

இந்நூலை முதலில் வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்துக்கும் இப்போது வெளிப்படும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் நன்றி.

ஜெயமோகன்

(விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக மறுபதிப்பு வெளிவந்துள்ள இந்திய ஞானம் நூலின் முன்னுரை) 

முந்தைய கட்டுரைகுமரன்
அடுத்த கட்டுரைBlooming In Sorrow