டிசம்பர் 2015 -ல் கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். மூன்றாம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-8
எப்படி படிக்கலாம்?
அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்றும், முன்தினமும் இங்கு கீதையின் பின்னணி சார்ந்த ஒரு வரைபடத்தை பார்த்தோம். என்னுடைய நண்பர்களிலேயே கூட ஒருவரிடத்தில் ஓர் ஐயம் இருந்தது. கீதையின் சுலோகங்களை சொல்லி விளக்குவதை ஏன் நிகழ்த்தவில்லை என்று. இந்த உரைக்கான விளம்பரத்திலேயே அப்படி அளிக்கப்போவதில்லை என்று சுட்டிக்காட்டி இருந்தோம். ஏனென்றால் இந்த உரை முழுக்க நான் சொன்ன ஒரு விஷயம் ஒன்று உண்டு. நேர்த்தியான பின்னணிப் புரிதல் இன்றி கீதையினுள் செல்வதன் வழியாக அறிந்துகொள்வது எதுவுமில்லை என்பதுதான். ஒன்று, ஒரு நவீன வாசகன் கீதையை வரலாற்று ரீதியாக எந்த இடத்திலே வைத்து, எப்படிப் புரிந்துகொள்வது? இரண்டாவதாக இந்திய சிந்தனை மரபில், இந்து ஞான மரபில் இதன் இடம் என்ன? இதை எங்கு வைத்து புரிந்துகொள்வது? மூன்றாவதாக, மேலும் முக்கியமாக, நாம் எந்த அறிவுமுறைமையில் இதைப் பார்க்கிறோம் என்று புரிந்து கொள்வது. மூன்றும் முக்கியமானவை. அதைத்தான் இங்கே சொல்லவந்தேன்.
நீங்கள் ஒரு பக்தர் என்றால், பக்திமார்க்கத்தின் வழியாக கீதையை அணுகுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு வழி இருக்கிறது. அந்த வழியை சொல்ல பலநூறு கீதை உரையாளர்கள், மதபோதகர்கள் இன்று உள்ளனர். அந்த வழியல்ல இந்த மேடையில் நான் முன்வைப்பது. இந்தத் தெளிவை திரும்பத் திரும்ப மூன்று முறை நான் சொல்லியிருக்கிறேன். நான் குறிப்பிடும் இந்த அறிவார்ந்த புரிதல்களுடன் நீங்கள் கீதைக்குள் போகாவிட்டால் திரும்ப திரும்ப ‘கீதை என்ன சொல்கிறது? கீதாசாரம் என்ன? இந்த சுலோகம் எதைச் சொல்கிறது?’ என்ற சுழற்சிக்குள் சென்று விடுவீர்கள். அது மிகத்தவறான ஒரு வாசிப்பை உருவாக்கும். உரையாசிரியர் ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்வார்கள். எல்லாமே உங்களுக்குச் சரியாகத் தெரியும், சந்தேகமும் இருக்கும், புரிந்ததுபோலவும் இருக்கும், தெளிவும் இருக்காது. உங்களுக்கான அர்த்தம் புரியவே புரியாது. அதைத்தான் இந்த மேடையில் இரண்டு நாட்கள் மிக விரிவாகப் பேசினேன்.
கீதையின் ஒரு பகுதியை எடுத்து சுவரில் உதிரி வரிகளாக எழுதிப்போட்டு, கீதை இதை சொல்கிறது என்று சொல்வது மிகத்தவறான வாசிப்பைக் கொடுக்கும். பைபிளுக்கு அப்படி செய்கிறார்கள் என்பதனால், இப்போது கீதைக்கு அதைச் செய்கிறார்கள். கீதை நல்லுபதேசம் அல்ல, அது தத்துவம். கவிதை வடிவில் சொல்லப்பட்ட மெய்ஞானம். கீதையில் உள்ள ஒரு வரி என்பது ஒரு சொற்ச்சூழலில் (Context) சொல்லப்பட்டது. அதற்கு முன்னும் பின்பும் ஒரு விவாதப் பின்புலம் இருக்கும். அதை அறியாமல் அந்த நான்கு வரிதான் கீதை என்று எடுத்துக்கொள்ளும் போது, கீதையை பற்றிய மிகத் தவறான சித்திரங்கள் உருவாகும். சாதகமாகவும், பாதகமாகவும் இந்த விஷயத்தை தொடர்ந்து நம்மவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். கீதையை எதிர்ப்பவர்களும் அதைத்தான் செய்தார்கள். ஆகவே திரும்ப திரும்ப கீதையை எடுத்துக்கொண்டு, ‘தர்மஷேத்ரே குருஷேத்ரே’ என்று ஆரம்பிக்கும் உரைகளை மீறி நாம் சிந்திக்க வேண்டிய ஒரு காலம் வந்துவிட்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த அரங்கே உண்மையில் உத்தேசிக்கப்பட்டது.ஒரு நண்பர்க் குழுவில் நம்முடைய கீதை விளக்க உரைகள் திரும்ப திரும்ப திரும்ப கீதையின் ஒட்டுமொத்த சாரம் என்ன, Content என்ன, என்ன சொல்கிறார் பகவான் என்ற அளவிலேயே பேசிக்கொண்டிருக்கும்போது ஏற்படும் அரைகுறைப்புரிதல்களும் இடர்பாடுகளும் என்ன என்று நான் பேசப்போக, இதை ஒரு மேடை அமைத்து பேசலாமே என்று நண்பர் டைனமிக் நடராஜன் சொன்னதன் பேரில்தான் இந்த மேடையை நாம் அமைத்தோம்.
நேற்றும் அதற்கு முன்தினமும் நான் சொன்ன அந்த விஷயங்களை உங்களில் சிலர் கோவையாக நினைவில் வைத்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து இந்தக்காலம் வரைக்கும் உலக அளவில் உருவாகிவந்த நவீனச் சிந்தனைகள் அனைத்தும் தெரிந்தோ தெரியாமலோ நவீனக்கல்வி வழியாக உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் வந்த ஒரு காலகட்டத்தில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். நவீன ஐரோப்பியச் சிந்தனைதான் நம் கல்விமுறையின் அடிப்படை. அதன் ஒரு துளியையேனும் அறியாத எவரும் இங்கில்லை. நீங்கள் கேட்கும் எந்தவொரு கருத்தும், இந்த மேற்கத்திய சிந்தனைப் பின்புலத்தில் வைத்துத்தான் உங்களால் புரிந்துகொள்ளப்படும். அதை தவிர்த்துவிட்டு வேறொரு வகையில் நீங்கள் ஒரு கருத்தை சொன்னீர்களென்றால் இன்று அது கேலிக்குரியதாக ஆகும். ஆகவே நீங்கள் பேசிக்கொண்டிருகும் காலகட்டத்தை பற்றிய ஒரு தெளிவுடன் கீதையைப்பற்றி பேசவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து என முன்வைத்தேன்.அப்படியொரு தெளிவுடன் நாம் பேசும்போதுதான், நமது குழந்தைகளுக்கு முன்னால் நாம் பழையவர்களாகவோ, பொருளற்றவர்களாகவோ ஆகாமல் இருப்போம். இன்றைக்கு கீதை என்ற நூலை அணுகுவதற்கான ஒரு முக்கியமான வழிமுறையைப் பற்றி சொல்லலாம் என்று இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் கீதையை சிறப்பாகவும், எளிமையாகவும், படிக்கும்படியாக எழுதிய ஆசிரியர்களில் ஒருவர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள். தமிழகத்தில் மிக அதிகமாக விற்கப்பட்ட, மிக அதிகமாக வாசிக்கப்பட்ட கீதை உரை சித்பவானந்தர் எழுதியதுதான். என்னிடம் தொடர்ந்து வாசகர்கள் கேட்பார்கள். நான் கீதையை வாசிக்க ஆரம்பிக்கப்போகிறேன், எந்தப் புத்தகத்தை படிக்கலாம்?. நான் தமிழில் சித்பவானந்தரின் உரைதான் என்று சொல்வேன். அது முக்கியமான உரை, படிக்க வேண்டிய உரை என்பது என்னுடைய எண்ணம். ஆங்கிலத்தில் பல உரைகள் இருக்கின்றன. நடராஜகுருவின் கீதை உரைதான் என் வரையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த உரை. தமிழில் கூடவே படிக்கக்கூடாத ஒரு உரை இருக்கிறது. அதை இந்த மேடையில் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அது கோரக்பூர் கீதா பிரஸ் போட்ட உரை. கீதையை, ஒரு இருநூறு வருடங்களுக்கு முன்பு இருந்த, சாதிமத குறுகிய கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் ஓர் இழிவான உரை அது. ஆன்மிக இருளுக்குள் நம்மை ஒரு நூல் கொண்டு சென்று சேர்க்கும் என்றால் அது அந்நூல்தான். கீதை போன்ற ஒரு மகத்தான ஆன்மிகநூலில் இருந்து சாதிமத இருட்டை மட்டுமே ஓர் உள்ளம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான நிரூபணம் அந்த நூல்.
அதேபோல அறிதலின் வழியை நாடுபவர்கள் கூடுமானவரைக்கும் தவிர்த்து விடலாம் என்று நான் சொல்லும் உரை ஒன்று உண்டு. ISKCON போட்ட உரை. அதாவது International Society for Krishna Consciousness, ஹரே கிருஷ்ணா இயக்கம் போட்ட உரை. ‘பகவத்கீதை உண்மையுருவில்’ என்னும் நூல். அந்த உரையின் சிக்கல் என்னவென்றால், அவர்களுக்கு தீவிரமான கிருஷ்ண பக்தி, அர்ப்பண பக்தி என்ற ஒரு கருதுகோள் இருக்கிறது. அதை நோக்கி மொத்த கீதையையும் திரித்தும் வளைத்தும் கொண்டு செல்லும் உரை அது. அதை பிழை என்று நான் சொல்லமாட்டேன். அந்தப் பார்வை அவர்களுக்குச் சரியானதுதான், ஆனால் அது அப்படியே கீதையை சுருக்கிவிடும். கீதை என்பது பகவான் தன்னை வணங்கு என்று போட்ட ஆணை மட்டுமே என்று ஆக்கிவிடும். ஆரம்பகட்டத்தில் அந்த உரைக்குள் செல்வது என்பது, பின்னால் அதை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டிய ஒரு கட்டாயத்தை உங்களுக்குள் உருவாக்கும். அது மிகக் கடினம். ஆகவே அதை ஒத்தி வைக்கலாம் என்பதுதான் என்னுடைய எண்ணம். ஏதேனும் ஒருகட்டத்தில் பக்தியே ஒரே மீட்புவழி என உங்களுக்குத் தோன்றுமென்றால் அங்கே செல்லுங்கள்.
கொலைநூலா?
மிக எளிமையாக உள்ளே செல்வதற்கான அரிய நூல் என்பது சுவாமி சித்பவானந்தர் அவர்களுடைய உரை என்றேன். அவர் அந்த உரையை ‘அந்தர் யோகம்’ என்ற பெயரில் சித்பவானந்த அடிகள் நடத்தும்போது நான் மூன்றுமுறை கலந்து கொண்டிருக்கிறேன். சுவாமி அவர்களை ஐந்து முறைகளுக்கு மேல் நான் சந்தித்தும் இருக்கிறேன். இந்த மேடையிலே அந்தப் மாபெரும் ஆசிரியரை, ஞானகுருவை மனம் கனிந்து வணங்குகிறேன். அந்த நூலில் முன்னுரையில், ‘கொலை நூலா?’ என்றொரு தலைப்பில் மிக விரிவான பதிலை அவர் எழுதியிருப்பார். இது கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக மேடைகளில் திரும்ப திரும்ப வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டுக்கான பதில். பகவத்கீதை என்பது ‘ஆகவே கொலை புரிக!’ என்று திரும்பத் திரும்ப சொல்லும் ஒரு நூல், கொலை செய்வதை வலியுறுத்தக்கூடிய நூல், ஆகவே அது ஒரு கொலைநூல் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதற்கு அக்கட்டுரையில் சித்பவானந்தர் பதில் சொல்கிறார். அதற்கப்பால் ஒரு பதிலை இந்த மேடையில் நான் சொல்ல முடியாது. அவ்வளவு தெளிவான, விரிவான பதில்.
‘கொலை’ என்பது கீதையில் உருவகமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சொன்னேன், உலகசிந்தனையிலேயே அகிம்சையை ஒரு மையக்கருத்தாக முன்வைத்த காந்தியின் நூல் கீதைதான். உருவகமாகப் பார்த்தால் இப்பிரபஞ்சம் என்பது ஒரு மாபெரும் கொலைவெளி என்று சொல்லலாம். ஆக்கம் இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதனாலேயே அழிவும் நிகழந்தாக வேண்டிய ஒரு கட்டமைப்பு இந்த பிரபஞ்சத்திற்கு இருக்கிறது. ஆக்கமும் அழிவும் நடக்கும் இந்த பிரபஞ்சத்தில், செயல்கள் அனைத்தும் ஏதோவொரு வகையில் அழிவைக் கொண்டிருப்பதானால், கொலை என்பது செயல் என்றே பொருள்படும். ஆகவே செயல் புரிக என்பதுதான் கொலைபுரிக என்ற அர்த்ததிலே கீதையில் இருக்கிறது என்று சித்பவானந்தர் விளக்குகிறார். கீதையின் அந்த நாடகீயமான கதைச்சூழலில் செயல்புரிக என்பது போர்புரிக என்று சொல்லப்பட்டுள்ளது, அவ்வளவுதான்.
நெடுநாட்களுக்கு முன்பு ஒரு கிறிஸ்தவ நண்பர் பேச்சுவாக்கில் என்னிடம் சொன்னார், ‘கீதை ஒரு படைநூல்; என்று. ஆங்கிலத்தில், ‘A Text with Sword’ – வாளேந்திய நூல், நவீனச் சொல்லாட்சி என்றால் வாளேந்திய பிரதி. அப்போது நான் கேட்டேன், கீதைக்கு மாற்றுப்பிரதி என்று, வேறுவகையான பிரதி என்று எதைச் சொல்வீர்கள்?. அவர் பைபிள் என்று சொன்னார். ‘ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு’ என்று சொல்லும் நூல் அது. ‘ஆகவே போர்புரிக’ என்று சொல்லும் நூல் இது – ஆகவே இப்படிச் சொல்கிறேன் என்று சொன்னார். ஒரு விவாதத்தில் நாம் எப்போதுமே இருப்பதிலேயே பெரிய ஆயுதத்தைத்தானே எடுப்போம். ஆகவே நான் கேட்டேன், உலக வரலாற்றில் இன்றுவரை கீதையை கையிலேந்தி அருங்கொலைகள் புரிந்த ஆட்சியாளர்கள், மதத்தலைவர்கள், தனிமனிதர்கள் யார் யாரென்று ஒரு பட்டியலை சொல்லுங்கள். ஓர் அரசரின் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம். கீதையை மேற்கோள் காட்டி பிறரைக் கொல்லும்படி அறைகூவிய சிந்தனையாளர் எவர்? சங்கரரா? ராமானுஜரா? மத்வரா? நிம்பார்க்கரா? வல்லபரா? காந்தியா? வினோபாவா? இவர்களா கீதையை கையிலேந்தி கொலைகள் புரிந்திருக்கிறார்கள்?
ஆனால் பைபிளைக் கையில் ஏந்தி கொலைபுரிந்தவர்களின் மாபெரும் பட்டியலை நான் வரலாற்றில் இருந்து சொல்வேன். ஸ்டாலின் கத்தோலிக்கர்தான், முஸோலினி கத்தோலிக்கர்தான், ஹிட்லர் கத்தோலிக்கதான், ஃப்ராங்கோ கத்தோலிக்கர்தான், சார்ல்ஸ் டிகால் கத்தோலிக்கர்தான். பைபிள் பெயரைச் சொல்லியே அவர்கள் படுகொலைகள் செய்து குவித்தனர். ஐரோப்பாவின் மத்திய காலகட்டத்தில் மதவிசாரணைகள் என்ற பேரில் கத்தோலிக்கத் திருச்சபையே உலகம் கண்ட மாபெரும் மானுடவேட்டையை ஆடியிருக்கிறது. இன்றுவரை இன்னொரு மதம் உலகவரலாற்றில் இத்தனை பெரிய மனிதக்கொலையைச் செய்ததில்லை. சிலுவைப்போர்களை நான் சொல்லவில்லை. சாமானியமக்களின் சாவைச் சொல்கிறேன். அன்று லட்சக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கின்றனர். உயிரோடு எரிக்கப்பட்டவர்களே சில லட்சம் இருக்கும். ஐரோப்பாவின் இருண்டகாலம் என அது அவர்களாலேயே அழைக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியுமா?
உலகம் முழுக்க கிறிஸ்தவத்தின் பெயராலேயெ மாபெரும் மானுட அழிவு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஓர் உதாரணம், கோர்டஸ் (Hernan Cortes) என்ற ஸ்பானிஷ் படையெடுப்பாளன் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவிற்கு சென்று இறங்குகிறான். அந்த மக்கள் அந்நியர் எவரையுமே பார்க்காத செவ்விந்தியர்கள். அந்நியர்கள் அத்தனை பேரும் நண்பர்கள் என்று நினைக்கும் மனநிலை கொண்டவர்கள். அவர்கள் திரண்டு கோர்ட்டஸை வரவேற்க வருகிறார்கள். அவர்கள் தலைவன் நான்கு பேரால் சுமந்து கொண்டுவரப்படுகிறான். ஏனென்றால் அன்றைக்கு தென்அமெரிக்காவில் பழக்கப்பட்ட மிருகங்களே கிடையாது. இவர்கள் அவனிடம் ஒரு பைபிளை கொடுக்கிறார்கள். அவர்கள் புத்தகத்தையே பார்த்தது கிடையாது. ஏனென்றால் எழுத்து என்கிற வடிவமே அங்கு கிடையாது. அதை என்ன என்று தெரியாமல் பார்த்துவிட்டு தூரப்போட்டு விடுகிறான். பைபிளை தூரப் போடுகிறான் என்று சொல்லி அவனை வெட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அந்த கூட்டத்தையே கொன்று ஒழித்தார்கள். முப்பது ஆண்டுகாலத்தில் அஸ்டெக் மக்களின் மொத்த தொகையில் தொண்ணூறு சதவீதத்தைக் கொன்று அழித்து அங்கே கிறிஸ்தவத்தை நிலைநாட்டினார்கள். வைசூரி நோயை பரப்பும் கம்பளிகளை கொண்டுவந்து, அதன் வழியாக நோயை பரப்பி அந்த மக்களைக் கொன்றார்கள். இந்த உலகம் இதுவரை கண்டதிலேயே மிகப்பெரிய மானுட அழிவென்பது தென்னமேரிக்கக் கண்டத்தில் அங்கு வாழ்ந்த பழங்குடிகள் கூண்டோடு அழிக்கப்பட்டதுதான். அமெரிக்கா முழுக்க ஒவ்வொரு இடத்திலும் அதை வரலாறாகவே பதிவுசெய்து வைத்திருக்கிறார்கள். அதைச் செய்தவர்கள் கிறிஸ்தவ மதப்பரப்புநர்கள். அவர்கள் சொன்ன நோக்கம் பைபிளை பரப்புவது. அதற்கு ஆதரவளித்தது கத்தோலிக்க திருச்சபை. ஆர்வமுள்ளவர்கள் The Mission என்ற சினிமாவைப் பார்க்கலாம். அமெரிக்கா முழுக்க அந்தப் படுகொலைகளை செய்த மதப்பரப்புநர் பெயரையே வரலாற்றில் பதிவுசெய்து வைத்துள்ளனர். இன்றைய நவீன அமெரிக்காவின் ஜனநாயக உணர்வுக்கு அந்தப் படுகொலைகளை நினைத்தாலே கூசுகிறது. குற்றவுணர்ச்சி கொள்கிறார்கள்.
கீதை சாதியமைப்பை நியாயப்படுத்துகிறது என்பார்கள். கீதையில் அப்படி எந்த வரி உள்ளது? கீதை எங்கே அதைச் சொல்கிறது? நாம் அப்படிக் கேட்டால் உடனே அவர்கள் கீதை நேரடியாக அதைச் சொல்லவில்லை என்றாலும் கீதையைப் பயன்படுத்தி சாதிமுறையை நிலைநாட்டினர் என்பார்கள். அது உண்மை அல்ல, கீதை எப்போதுமே அப்படி ஒரு நெறிநூலாக கருதப்பட்டதில்லை, சாதியவாதிகள் அதை அறிந்ததே இல்லை, நான் ஏற்கனவே சொன்னதுபோல அது தத்துவநூல், தத்துவம் பயில்பவர்களிடம் மட்டுமே அது இருந்தது, பதினெட்டாம்நூற்றாண்டில்தான் அது ஐரோப்பியர்களின் கவனத்தின்வழியாகப் பொதுநூலாக ஆகியது. உடனே, பதினெட்டாம் நூற்றாண்டுக்குப்பின் அதை சாதியவாதத்துக்குப் பயன்படுத்தினார்களே என்பார்கள். சரி, அவ்வாறு பயன்படுத்தப்படாத நூல் எது என்பது அதற்கான மறு கேள்வி. பைபிளா? செயிண்ட் தாமஸ் அக்வினாஸ் தீண்டத்தகாத இழிசினர் என ஒரு மக்கள் திரளை வரையறுத்தது பைபிளை மேற்கோளாக்கியபடித்தான். அவர்கள் பலநூறாண்டுகள் அடிமைகளாக வாழ்ந்தது அவர் வகுத்த நெறிகளின்படித்தான். சரி, நவீன காலகட்டத்திலேயே மார்ட்டின் லூதர் உக்கிரமான யூதவெறுப்பை உருவாக்கியது பைபிளை மேற்கோள் காட்டித்தான். அதுதான் ஹிட்லரின் மாபெரும் யூதப்படுகொலையில் முடிந்தது.
எந்த நூலையும் அதிகாரம் தனக்காகப் பயன்படுத்திக்கொள்ளும். ஒரு விதிவிலக்கு கூட கிடையாது. ரஷ்யாவில் ஸ்டாலின் அல்லது கம்போடியாவின் போல்பாட் நடத்திய மாபெரும் மானுடப் படுகொலைகள் கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூலை மேற்கோள்காட்டி நிகழ்த்தப்பட்டவை. ஆகவே மூலதனம் கொலைநூல் என்றால் மார்க்ஸியர் ஏற்பார்களா? இல்லை, அதெல்லாம் அக்கொள்கையைச் செயல்படுத்தியவர்களின் பிழைகள் என்றுதானே வாதிடுகிறார்கள்? இலட்சியங்கள் எல்லாமே அதிகாரத்தால் தனக்கான கருவிகளாக ஆக்கப்படும். ஏனென்றால் இலட்சியவாதம் மானுடத்தை உருவாக்கிய ஒரு விசை என்றால் அதிகாரம் அதற்கு எதிராகச் செயல்பட்ட இன்னொரு விசை. ஆகவே இலட்சியவாதம் தேவை இல்லை என்றால் மொத்த மானுடத்தையும் அதிகாரத்திடம் ஒப்படைப்பதாகவே அது முடியும். அதிகாரத்தால் பயன்படுத்தப்பட்டது என்பதனால் இலட்சியவாதம் பிழையாக ஆவதில்லை. அதிகாரம் செய்யும் கொடுமைகளுக்கு அந்த இலட்சியவாதம் பொறுப்பேற்கவேண்டியதுமில்லை. அதிகாரத்தில் இருந்து இலட்சியவாதத்தை தொடர்ச்சியாக மீட்டு எடுத்தாகவேண்டும். மீண்டும் மீண்டும் நிலைநிறுத்தியாகவேண்டும். அதைத்தான் ஞானிகளும் சிந்தனையாளர்களும் திரும்பத் திரும்ப வரலாறு முழுக்கச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
நான் கேட்டேன், “யோசித்துப் பாருங்கள். ஆகவே கொலைபுரிக என்று சொல்லக்கூடிய ஒரு நூல் உலகத்திற்கு அகிம்சையை போதித்த மகானுடைய கையில் இருக்கும்போது, மறுகன்னத்தை காட்டச் சொன்ன நூல் கோர்ட்டெஸின் கையில் எப்படிப் போனது?”. அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அதன்பின் நான் சொன்னேன், “நீங்கள் எங்களை இந்த மாதிரி Label பண்ணலாம், இழிவுசெய்யலாம், உங்கள் மத அமைப்பு உங்களுக்கு அதைக் கற்பிக்கலாம், உங்கள் மனநிலை அப்படி இருக்கலாம். ஆனால் நான் உங்களை அப்படிச் சொல்ல மாட்டேன். பைபிளை வைத்துக்கொண்டு உலக மக்கள் தொகையில் கணிசமான பகுதியை உங்கள் மதம் அழித்தது என்ற காரணத்தினால், கிறிஸ்து ஒரு ஞானகுரு அல்ல என்று நான் சொல்லமாட்டேன். என் மேஜையில் கீதைக்கு அருகிலேதான் நான் பைபிளை வைத்திருக்கிறேன். ஒரு தருணத்திலும் பைபிளை நிராகரித்து நான் பேசியது கிடையாது, பேசவும் மாட்டேன். கண்ணீரின் தூய்மையை உணர்த்திய ஒரு ஞானகுருவாகத்தான் கிறிஸ்துவை நான் வைத்திருப்பேன். நான் வைத்திருகும் பைபிள் ஹிட்லர் வைத்திருந்த பைபிள் அல்ல, கோர்டஸ் வைத்திருந்த பைபிள் அல்ல, சேவையை கனிவோடு உலகம் முழுக்க கொண்டுபோன பாதிரியார்கள் வைத்திருந்த பைபிள், அன்னை தெரெஸா வைத்திருந்த பைபிள். அந்த வேறுபாடு எனக்குத்தெரியும்”
அதன்பிறகு அவரிடம் சொன்னேன், இந்த மாதிரியான ஒற்றைப்படையான முத்திரைகள் குத்துவது, ஒற்றைவரிக் கருத்துகளை சுமந்து அலைவது, இது ஒரு அறிவுச் செயல்பாடு என்று நம்பக்கூடிய மடமை நம்மில் ஆழ்ந்திருக்கிறது . ஒரு அறிஞனின் அடிப்படைத் தகுதி என்பது முரண்பாடுகளைப் பார்ப்பதல்ல, முரணியக்கத்தை பார்ப்பது. எதிர் எதிர் சக்திகள் இணைந்து இயங்குவது Dialectics, முரணியக்கம் என்று அதை சொல்வார்கள். ஒரு மலைமேல் சாத்தான் கிறிஸ்துவிடம் இந்த உலகத்தில் அனைத்தையும் உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்கிறார். இந்த உலகத்தை முழுக்க வென்ற பிறகும், என்னுடைய ஆத்மாவை தொலைத்து விட்டேன் என்றால் எனக்கு என்ன மிஞ்சும் என்று கேட்கிறார் அவர். அதே மலையின் மேல் ஏறிநின்று மலைப்பிரசங்கம் நடத்துகிறார். அந்த பைபிளை ஆயுதமாகக் கொண்டுதான் போப்பாண்டவரும் கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் இந்த உலகையே கைப்பற்ற முயன்றார்கள். செல்வத்தை அள்ளிக்குவித்தனர். இந்த இரு பார்வைகளின் முரணியக்கத்தை பார்க்கக்கூடியவர்கள் தான் சிந்தனையாளர்களாக இருக்க முடியும்.
முரணியக்க அணுகுமுறை
ஒரு நூலின் உள்ளடக்கம், அதன் அமைப்பு சார்ந்து எப்போதுமே ஒரு முரணியக்கம் இருக்கிறது. முரணியக்கம் என்றால் என்ன? முரணியக்கம் என்றால் மூன்று விசைகளின் இயக்கம். நேர்க்கருத்து (Thesis) எதிர்க்கருத்து (Anti-Thesis) ஆகியவை மோதி உருவாகும் அதன் விளைவான இணைவுக்கருத்து (Synthesis) பிறந்து கருத்துநிலை முன்னகர்வது முரணியக்கம். இந்த உலகத்தில் உள்ள அத்தனை கருத்துகளுமே அதற்கு இணையான மாற்றுக்கருத்துகளுடன் முரண்பட்டு, மோதி, இணைந்துதான் வளர்ந்து முன்னால்போகும். இந்த இயங்கியல் என்பது மேலைச் சிந்தனைகளின் அடிப்படைகளில் ஒன்று. மேலைச் சிந்தனையில் இன்றைக்கு வரைக்கும் இதுதான் அடிப்படையாக இருக்கிறது. இந்த முரணியக்கப் பார்வைதான் ஒரு நவீனச் சிந்தனையாளனை உருவாக்கும். இங்கே சிந்தனையில் எளிமையான கருப்பு -வெள்ளை சித்திரங்களை தீட்டுபவர்களுக்கு சிந்திப்பதற்கான அடிப்படைப் பயிற்சி கிடையாது. நம்மிடம் பேசும் யாரிடமும் நீங்கள் இந்த விதியை போட்டுப்பார்க்கலாம். அவர்களுக்கு Dialectics தெரியுமா? தெரியவில்லை என்றல் முதலில் முரணியக்கமாகச் சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லலாம். உலகம் முழுக்க மார்க்ஸியம் சிந்திக்க கற்றுக்கொடுத்தது முரணியக்கத்தைத்தான். தமிழ்நாட்டில் மட்டும்தான் மார்க்ஸியர்கள் முரணியக்க இயங்கியல் என்றால் என்னவென்று தெரியாமல் திராவிடர்கழகத்தினரின் வம்பு மொழியில் பேசுவார்கள்.
இந்த முரணியக்க அணுகுமுறை இந்திய மரபில் உண்டா? உண்டு. ஏனென்றால் அது சிந்தனையின் ஓர் அடிப்படை. அது எந்த மரபிலேயும் இருக்கும். இரவு-பகல், ஆண்-பெண் என்று பிரபஞ்சம் இயங்கும் விதிகளிலேயே அந்த முரணியக்கம் இருக்கிறதே! ஆணும் பெண்ணும் இரு விசைகள். குழந்தை என்பது அதன் விளைவான மூன்றாவது விசை. இந்திய சிந்தனை முறையில் அதற்கு யோக மீமாம்சை என்று பெயர். யோகாத்ம அணுகுமுறை என்று அதை சொல்வார்கள். இது குறைந்தது இரண்டாயிரத்து ஐநூறு – மூவாயிரம் வருடங்களாக நம் மரபில் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கும் ஒன்று.
இங்கு ஒரு பெரிய இடர்பாடு வருகிறது. இத்தகைய இடர்பாடுகளை களைவதற்காகத்தான் இந்த உரை என்பதை நான் மறுபடியும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். யோகம் என்ற வார்த்தை இன்றைக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறதோ அதே அர்த்தத்தில் அப்படியே கீதைக்குள் போட்டுப்பார்க்கும் ஒரு பழக்கம் நம்மிடம் பரவலாக பேருக்கும் இருக்கிறது. பெரும்பாலான உரைகளில் அது நடந்துகொண்டிருக்கிறது. யோகம் என்ற வார்த்தைக்கு மூன்று பொருள் உண்டு நண்பர்களே. ஒன்று, நாம் அனைவரும் அறிந்ததுபோல, யோகப்பயிற்சி – யோகத்தில் அமர்தல். ‘யோக சித்த விருத்தி நிரோதஹ’ என்று பதஞ்சலி சொல்கிறார். சித்தம் என்னும் செயலை கட்டுப்படுத்தி, மெய்மையை நோக்கிச் செல்லும் பயிற்சியின் பெயர் யோகம். அதற்கு பல படிகள் இருக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுக்க யோகம் என்பது ஒரு பெரிய வாழ்க்கைப்பயிற்சியாக கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. வேறுவகையான யோக முறைகளும் இந்திய மரபிலுள்ளன. உதாரணம் ஹடயோகம், வாசியோகம்.
யோகத்தில் இரண்டாவது அர்த்தம் ஒன்று இருக்கிறது. ஆறு தரிசனங்களில் முதலாவதான சாங்கிய தரிசனத்தின் துணைத்தரிசனமாக இருப்பது யோகம். அங்கு யோகம் என்பது ஒரு தரிசனம். அந்த தரிசனத்திற்கு சில உலகப்பார்வைகள் இருக்கின்றன. இந்த பிரபஞ்சம் என்பது ஒரு பருப்பொருளாக, ஒற்றைப் பருப்பொருளாக என்றோ ஒரு காலத்தில் இருந்தது. சத்வ, ராஜோ, தமோ குணங்கள் முற்றிலும் சமநிலையில் இருந்தன. ஏதோ ஒரு மாயக்கணத்தில் அந்த சமநிலை குலைந்தது. மீண்டும் சமநிலையை அடையும்பொருட்டு அந்த மூன்று குணங்களும் ஒன்றையொன்று நிரப்ப ஆரம்பித்தன. அந்த செயல் தொடர்ந்து நடந்துதான் இந்த பிரபஞ்சம் உருவாயிற்று. ஆதிப்பிரகிருதி என்னும் தொல்லியற்கை முழுமையாக இருந்தபோது புருஷன் என்பவன் பரமபுருஷனாக, முழுமையானவனாக இருந்தான். பிரபஞ்சம் பலவகை பொருட்களாலானதாக உருவானபோது புருஷனும் பலவாறாக பிரிந்துவிட்டான். அந்த ஒற்றை புருஷன் இன்று நாம் அனைவருமாக மாறி நீங்கள்ம் நான் என இதோ இப்படியெல்லாம் இருக்கிறோம். நம் பார்வையில் இயற்கை தன்னை நடித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையின் ஒரு பகுதியாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். புருஷன் மற்றும் பிரகிருதி, அதாவது நாம் மற்றும் இயற்கை என்னும் வேறுபாடைக் களைவதுதான் யோகம் என்று சொல்லப்படும்ம் ஒரு தரிசன முறை. .
மூன்றாவது ஒரு அர்த்தம் உண்டு. அந்த அர்த்தம்தான் யோகம் என்ற சொல்லால் பகவத்கீதையில் பயன்படுத்தப்படுகிறது.யோகம் என்னும் சொல் யுஜ் என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. ஒருங்கிணைதல் என்று பொருள். முரண்பாடுகள் ஒருங்கிணைந்து மூன்றாவது ஒன்று உருவாகும் முரணியக்கம் (Dialectics) தான் அது. இன்றைக்கு கூட மலையாளத்தில் பொதுக்கூட்டத்தை யோகம் என்றுதான் சொல்வார்கள். கரயோகம் என்ற வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்க்கள். கோயம்புத்தூரில் கூட இருக்கிறது. நாயர் கரயோகம் என்று சொல்வார்கள். கூட்டம், கூடுதல், ஒன்றாதல், இணைதலுக்கான வார்த்தைதான் கீதையிலுள்ளது. ஆயுள் காப்பீட்டுக்கழகத்தின் முதல்வரிகூட இப்படி இருக்கும் யோகக்ஷேமம் வஹாம்யகம். அதன் நேர்ப்பொருள் ‘கூட்டுநலனுக்கு நான் பொறுப்பேற்கிறேன்’ . கூட்டு, இணைவு, முரணியக்கம் என்னும் பொருளில் தான் கீதையில் பயன்படுத்தப்படுகிறது. அப்படியல்ல, தியானம் என்ற பொருளிலோ, தரிசனம் என்ற பொருளிலோ பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால், அர்ஜுன விஷாத யோகத்தை எப்படி யோகம் என்று சொல்லமுடியும்? அதிலென்ன யோகம் இருக்கிறது? நான் வில்லை கீழே வைக்கிறேன், எப்படிப் போர் புரிவேன், என் கை நடுங்குகிறது, உடல் சோர்வு கொள்கிறது என்று சொல்வதை எப்படி யோகமென்று சொல்ல முடியும்? ஆதலால் அந்த அர்த்தத்தில் அதில் யோகம் என்று சொல்லப்படவில்லை. அதிலிருக்கக்கூடிய முரணியக்கத்தை சுட்டும் பொருட்டுதான் அது யோகம் என்று சொல்லப்படுகிறது.
யோகம் என்னும் சொல் வழியாக முரணியக்கமே கீதையில் பேசப்படுகிறது என்று தெரிந்து கொள்ளாத அறிஞர்கள் இரண்டு தரப்பிலும் பிழை செய்கிறார்கள். கீதை யோகப்பயிற்சிக்கான நூல் என்று ஆன்மிகத் தரப்பில் பொருள்கொள்கிறார்கள். மறுபக்கம் மரபு எதிர்ப்பாளர்கள் கீதை யோகம் என்ற வார்த்தையை எடுத்து தவறாகப் பயன்படுத்துகிறது, அதில் யோகம் சொல்லப்படவில்லை என்று சொல்கிறார்கள். அப்படி முக்கியமான அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் ஆங்கிலம் வழியாக இந்திய சிந்தனையை கற்று உள்ளே வந்தவர்கள். பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு மரபான குருகுலத்தில், ஓர் ஆசிரியரிடத்தில் சென்று சேர்ந்திருந்தால் அவர்கள் அதைத் தெளிவுபடுத்தி இருப்பார்கள். ஆனால் எந்தப் பேராசிரியரும், மரபான ஞானமுறையில் போய் இந்திய தத்துவத்தை கற்றுக்கொண்டதாக வரலாறே கிடையாது. இந்திய தத்துவத்தை கற்பதற்கு இந்திய குருமார்களிடம் சென்றவர்கள் வெள்ளைக்காரர்கள் மட்டும்தான். வில்கின்ஸ் காசியில் போய் கற்றுக்கொண்டார். டி.டி.கோசாம்பி அப்படிப் போய் கற்றுக் கொள்ளவில்லை. கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் ஆங்கிலம் படித்தவர்கள் அல்லவா? காற்சட்டை போட்டிருக்கிறார்கள் அல்லவா? ஆங்கிலநூல்களை, ஆங்கில ஆசிரியர்களையே அவர்கள் நாடுவார்கள். அப்படி இந்தியக்குருகுலம் வழியாகக் கற்றுக்கொண்டிருந்தால் தெரியும், இந்த யோகம் வேறு, இது யோகப்பயிற்சி அல்ல,யோகமீமாம்சை.
மிகத்தெளிவாகவும், விரிவாகவும் யோக மீமாம்சையை பற்றி அரவிந்தர் எழுதியிருக்கிறார். அதன்பிறகு நடராஜகுரு யோக மீமாம்சை பற்றி எழுதியிருக்கிறார். யோக மீமாம்சை என்பது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். பத்தாவது அதிகாரமாகிய விபூதி யோகத்தில் வருவது இந்தப்பாடல், ‘புத்தியும், ஞானமும், மயக்கங்களின்மையும், பொறுமையும், உண்மையும், புலனடக்கமும், அமைதியும், இன்ப துன்பங்களின் ஊசலும், இருத்தல் இன்மையின் இருமையும், அச்சமும், அச்சமின்மையும், அகிம்சையும், சமநோக்கும், தன்னிறைவும், தவமும், கொடையும், புகழும், இகழ்ச்சியும், இன்னமும் பிறப்பு என்னிலிருந்தே’. இதில் அகிம்சை என்று ஒரு வார்த்தை வருகிறது பாருங்கள். அடுத்த வரி, ‘ஆகவே போர்புரிவாயாக!’. இந்த முரண்பாடு முக்கியமானது. கீதை முழுக்க இருப்பது இந்த முரண்பாடுதான். இது முரண்பாடு அல்ல, முரணியக்கம். கீதையை உபதேசமாக, வழிகாட்டலாக எடுத்துக் கொண்டால் இது முரண்பாடாகத் தெரியும். கீதை முரணியக்கத் தத்துவநூல் என எடுத்துக்கொண்டால்தான் இது புரியும்.
முதல் அத்தியாயத்தில் நீங்கள் ஒன்றை கவனிக்கலாம், அதிகபட்சம் ஐந்து சுலோகங்களுக்குள் ஒரு முரண்பட்ட கருத்து வரும். இந்த முரண்பாடுகளைத்தான் திரும்ப திரும்ப, கீதையை பற்றி விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கீதை ஒரு தவறான நூல், அது அறிவுக்கு பொருந்தாத நூல் என்று சொல்பவர்கள் இதையே எடுத்துக்காட்டுகிறார்கள். கீதையை ஒரு உபதேசநூல், மதநூல் என நம்பும் ஆத்திகர்களும் சரி நாத்திகர்களும் சரி கீதைக்கு உரையளித்தால் இந்த முரண்பாடுகள்தான் முதலில் கண்ணில் படும். ஆகவேதான் ஆரம்பத்தில் இருந்து, கீதையை தத்துவார்த்தமாக விளங்கிக்கொள்ளாமல் படிக்கக்கூடாது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். ‘அகிம்சை என்னிலிருந்து வருகிறது’ என்று சொல்பவன், ‘ஆகவே போர்புரிவாய்’ என்று எப்படிச் சொல்லலாம் என்று கேட்டால், அதற்கு பகவான் அப்படித்தான் சொல்கிறார், பகவானிடம் நீங்கள் விவாதிக்கக்கூடாது என்று சொல்லும் ஒரு மரபுதான் இங்கே இருக்கிறது. ஆனால் பகவான் நூலின் இறுதியில் அவரே விவாதிக்கும்படித்தான் சொல்கிறார் இல்லையா?
(மேலும்)