நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு
ஊட்டி இலக்கியச் சந்திப்பு பற்றிய தகவல்களைத் தொடர்ந்து படித்து வருகின்றேன். அருமையாகவுள்ளது. கொஞ்சம் எரிச்சலாகவும் எனக்கு உள்ளது. கனடாவில் சில வார இறுதி நாட்களில் கட்டிடக் காட்டிற்குள் மிக சொற்ப நேரத்தில் எமது இலக்கியச் சந்திப்புக்கள் முடிந்து விடுகின்றன.
சந்திப்பு பற்றி அறிவிப்பை முதலில் படித்த போது இந்த வருடம் இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது ஒரு வருடம் இந்தியா சென்று இப்படியான ஒரு இலக்கியச் சந்திப்பில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைக்கலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு உங்கள் அனுபவங்களைத் தொடரந்து வாசித்துக் கொண்டிருந்தேன். நேற்று சில நண்பர்களுடன் இதுபற்றி உரையாடி எனது ஆதங்கத்தைத் தெரிவித்த போது ஒரு பெண் நண்பர் கூறினார்’அது ஆண்களுக்கான சந்திப்பு என்று நினைக்கின்றேன், நீங்கள் விரும்பினாலும் இணைந்திருக்க முடியாது’என்று.அப்போதுதான் எனக்கு அது உறைத்தது. முதல் வேலையாக வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் தளத்திற்குச் சென்று மீண்டும் மேலோட்டமாக எங்காவது ஆண்களுக்கு மட்டுமானது என்று குறிப்பிட்டிருக்கின்றீர்களா என்று பார்வையிட்டேன். என் கண்ணில் தட்டுப் படவில்லை, இருந்தும் உங்கள் நிபந்தனைகளைப் பார்வையிடும் போது மறைமுகமாகவே ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளமுடியும் என்று தாங்கள் குறிப்பிட்டிருப்பதாய் நான் உணர்ந்து கொண்டேன் காரணம். ஒன்றாக அனைவரும் தங்க வேண்டும் என்பது அதைக் குறிப்பிடுவதாய் நான் உணர்ந்தேன். ஆண்கள் பெண்கள் ஒன்றாகத் தங்குவது ஜரோப்பிய இலக்கியச்சந்திப்பில் அசூசை எதுவுமின்றி இயல்பாக நடப்பது .ஆனால் உங்கள் சந்திப்பில் அது சாத்தியமா? காரணம் படங்களில் பெண்ணின் ஒரு முகமாவது தட்டுப் படுமா என்று தேடினேன் கிடைக்கவில்லை.
நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில் இது ஆண்களுக்கு மட்டுமான இலக்கியச் சந்திப்பா? பெண்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று விண்ணப்பிக்கவில்லையா? நான் கலந்து கொள்ளவேண்டும் என்று அறிவித்திருந்தால் தவிர்த்திருப்பீர்களா?
சுமதி (கறுப்பி) கனடாவிலிருந்து
***
அன்புள்ள சுமதி
இந்த இலக்கியச்சந்திப்புகளில் எல்லாமே பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் விகிதாச்சாரம் குறைவு. சாதாரணமாக ஒரு கூட்டத்தில் இரண்டுமூன்றுபேர். பெரும்பாலான கூட்டங்களில் அருண்மொழி, சைதன்யா கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சேர்க்காமல் சொல்கிறேன்.
பெண்கள் பங்கெடுப்பது வரவேற்கப்படுகிறது என்பது மட்டும் அல்ல, அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் செய்துகொடுக்கப்படுகிறது. சேர்ந்து தங்குதல் என்றால் ஒரே அறையில் அல்ல, ஒரே வளாகத்தில்தான். பெண்களுக்குத் தனி அறைகள் உண்டு.
பெண்கள் கணவர்களில்லாமல் வருவது இந்தியாவில் சாத்தியமில்லை. ஆகவே அவர்கள் கணவர்களுடன் வந்தால் அவர்களுக்கும் தங்குமிடம் ஏற்பாடு செய்கிறோம். தனியாகப் பெண்கள் வரவிருந்தால் அவர்கள் விரும்பினால் இன்னொரு பெண்ணுடன் வரவும் ஏற்பாடு செய்கிறோம்.
இவ்வளவுக்கும் அப்பால் பங்கெடுப்பாளர்களில் பெண்கள் மிகக் குறைவு என்பதற்கான சமூகக் காரணங்களை ஆராயவேண்டும். பொதுவாக எந்த இலக்கியக்கூட்டங்களிலும் , தத்துவ அரசியல் கூட்டங்களிலும் பெண்கள் மிகக் குறைவாகவே காணப்படுகிறார்கள்
ஆச்சரியமென்னவென்றால் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும்கூட தமிழ் இலக்கியக்கூட்டங்கள் அப்படித்தான் இருக்கின்றன
ஜெ
***
அன்புள்ள ஜெ,
மாணவர்கள் என்னை நாடித் தடையின்றி வரவேண்டும்!
மாணவர்கள் எல்லா திசைகளிலிருந்தும் வரவேண்டும்!
புலன்களை வெல்லும் திண்மை உடைய மாணவர்கள் வரவேண்டும்!
சாந்தமான மனதுடைய மாணவர்கள் வரவேண்டும்!
எவ்வாறு ஆழமான இடத்தை நோக்கி ஓடைகள் ஓடுகின்றனவோ,
எவ்வாறு மாதங்கள் சேர்ந்து வருடத்தை நிரப்புகின்றனவோ
அவ்வாறே திசையெங்கும் இருந்து தேடல் உள்ள மாணவர்கள் வரவேண்டும்!
அவர்களால் என் வாழ்வு முழுமையடைய வேண்டும்!
என்னை ஒளிபொருந்தியவனாக்கி உன்மயமாக்கிக் கொள்வாய்!
-தைத்திரீய உபநிஷத், சீக்ஷாவல்லீ
நமது ரிஷிகள் மேற்கண்ட மந்திரம் சொல்லி ‘ஆவஹந்தீ’ ஹோமம் செய்து தேடலும், தீராத அறிவுத்தாகமும், ஒழுக்கமும் உடைய மாணவர்களை வேண்டிக் காத்திருந்தனர்.
நான் நிச்சயமாக உங்களையோ தேவதேவனையோ பாராட்டுவதற்காக இதைக் கேட்கவில்லை . உங்களைச் சந்தித்த போது எனக்குள் எழுந்த வினாக்களுக்கான விடைகளை நாடியே இதனைக் கேட்கிறேன்.
அன்புடன்
தர்மராஜன்