ஒரு மாதம் முன்பு நானும் நண்பர் நரேனும் கார்ப்பயணத்தில் நாடகம் பற்றிப் பேசிக்கொண்டோம். மொழிபெயர்ப்பாளரும் நடிகருமான நரேனுக்கு நாடக ஈடுபாடு அதிகம். நான் இன்றைய நாடகமுயற்சிகள் பற்றிச் சொன்னேன்.
இன்றைய நாடகங்கள் இரண்டு வகைதான். ஒன்று, சபாநாடகங்கள். பெரும்பாலும் சென்னை சார்ந்தவை. பொழுதுபோக்குத் தன்மை கொண்டவை. துணுக்குத் தோரணங்கள், சிரிக்கவைப்பவை, அரிதாக குடும்பக்கதைகளைச் சொல்பவை. இரண்டாவது, சோதனை நாடகங்கள். சிறு நாடகக்குழுக்களால் நடத்தப்படுபவை.அல்லது நாடகப் பயிற்சி நிலையங்களால் நடத்தப்படுபவை.
இரண்டாவது வகை நாடகங்கள் பார்வையாளர்களை உத்தேசிப்பதே இல்லை. அவை பல்வேறு நிதியுதவிகளுடன் நடத்தப்படுகின்றன. அந்த நிதி தேசிய, சர்வதேசிய அமைப்புகளில் இருந்து வருகிறது. ஆகவே அவர்களுக்கு உகந்தவகையில் அந்த நாடகங்கள் அமைகின்றன. பெரும்பாலும் வசனங்களோ, வாழ்க்கைநிகழ்வுகளோ இல்லாமல் வெறும் காட்சிப்படிமங்களாகவே அவை இருக்கின்றன. ஏனென்றால் அவை தமிழறியாத ‘புரவலர் அமைப்பு’களுக்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. இந்த புரவலர் அமைப்புகள் அவ்வப்போது உருவாக்கும் கொள்கைகளுக்கு ஏற்ப அவை உருவாக்கப்படுகின்றன.
இரண்டு நிலைகளிலும் இன்றைய நாடகத்துக்கு நவீன இலக்கியத்துடன் தொடர்பே இல்லை என்பதுதான் உண்மை. முதல்வகை நாடகம் வணிக இலக்கியச் சாயல்கொண்டது. இரண்டாவது வகையினர் தங்கள் பிரதிகளை தாங்களே எழுதிக்கொள்கின்றனர். நான் பார்த்தவரை அர்த்தமற்ற வெற்று உடற்பயிற்சிகளும், பொம்மலாட்டம் போன்ற அசைவுகளும், ஒளிவித்தைகளும் மட்டுமே கொண்டவை அவை. பொருளுடைய நாடகப்பிரதி அவற்றில் இல்லை. இலக்கியத்தின் எந்தச் சாயலும் அவற்றில் இருப்பதில்லை. அவற்றில் செயல்படுபவர்களுக்கு இலக்கிய அறிமுகமும் இருப்பதில்லை.
இன்னொரு வகை நாடகம் உருவாகவேண்டியிருக்கிறது. நவீன இலக்கியத்துக்கு அணுக்கமானது அது. அத்தகைய நாடகங்கள் கேரளத்தில் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. என்னுடைய நூறுநாற்காலிகள், மாடன்மோட்சம் போன்றவைகூட வெற்றிகரமான நாடகங்களாக அங்கே நடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையான நாடகங்களின் சில இயல்புகள் உண்டு
அ. அவற்றில் நாடகப்பிரதி முக்கியம். அதாவது கதை முக்கியம்.
ஆ. கதாபாத்திரங்களும், அக்கதாபாத்திரங்களை கண்ணெதிரே கொண்டுவரும் நடிப்பும் முக்கியமானது.
இ. ஆகவே அவை வெறும் காட்சிப்படிமங்கள் அல்ல. அவற்றில் வசனம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அன்றாடவாழ்க்கையுடன் இணைந்த இயல்பான வசனங்கள். வசனமாக வெறும் உருவகச்சொற்றொடர்கள் அவற்றில் இருப்பதில்லை.
ஈ. அவை அருவமான படிமங்களையும் உருவகங்களையும் முன்வைப்பவை அல்ல. வலுவான கருக்களை, கதைமாந்தரை, உணர்ச்சிகளை முன்வைப்பவை.
ஈ. ஆகவே அவை கலாச்சாரத்தில் வேரூன்றியவை. எங்கு நிகழ்கிறதென்று தெரியாத அந்தரநிலை கொண்டவை அல்ல.
இத்தகைய நாடகங்கள் ‘நாடகத்தை வளர்க்கும் நோக்கம்’ கொண்டவை அல்ல. அதை நாடகப்பள்ளிகள் செய்துகொள்ளட்டும். அந்தவகையான நாடகநிபுணர்களுக்கும் இவற்றில் ரசிக்க ஒன்றுமில்லை. இவை முதன்மையாக வாழ்க்கையை நடித்துப்பார்க்கும் கலைவடிவங்கள். நவீன இலக்கியத்தின் ஒரு பகுதியாக நிலைகொள்பவை.
அத்தகைய நாடகங்களை நடிக்க இன்றுள்ள பெரிய தடை என்னவென்றால் செலவுதான்.பொதுப் பார்வையாளர்களும் புரவலர்களும் இல்லாத சூழலில் செலவை ஈடுகட்டுவது கடினம்.
அதற்காக மேலைநாடுகளில் கண்டடைந்த வழிமுறை என்பது அரங்கமைப்பும், ஒப்பனையும் இல்லாத நாடகம். வெறும் அரங்கு. தேவையான சூழலை ரசிகர்கள் கற்பனைசெய்துகொண்டால்போது. சாதாரண உடை. கதைமாந்தர்களை பார்வையாளர்கள் கற்பனையில் உருவாக்கிக்கொண்டால்போதும்.
அரங்க அமைப்பு, ஒப்பனை ஆகியவை ஒரு சூழலையும், கதைமாந்தர்களையும் ‘நம்பவைப்பதற்காக’ உருவாக்கப்பட்டவை. ஆனால் இன்று ஒப்பனை, மேடை ஆகியவை எவ்வளவு அற்புதமாக இருந்தாலும் நாம் அவற்றை கற்பனையில்தான் விரிவாக்கிக்கொள்ளவேண்டும். ஒட்டுத்தாடியும், ஆடைகளும், திரைச்சீலை ஓவியங்களும்தான் அவை என நமக்குத் தெரியும். எனில் அவை எதற்கு ? அவற்றை நாம் வெறுமே கற்பனைசெய்தாலே போதுமே?
நாடகம் என்பதே நடிப்புதான். ஒரு கதையில் இல்லாதது நாடகத்தில் உள்ளது. நம் முன் கதைமாந்தர் உயிருடன் வந்து நிற்கிறார்கள். நம் முன் வாழ்கிறார்கள். அந்த அனுபவத்தை நமக்கு அளிப்பதற்கான கலை என்றுதான் நான் நாடகத்தைப் பார்க்கிறேன். காட்சிப்படிமங்களை நாடகம் அளிக்கவேண்டியதில்லை – அதை திரைப்படங்களும் ஓவியங்களும் மேலும் சிறப்பாக அளிக்கமுடியும்.
ஒப்பனை – அரங்கம் இல்லாத நாடகம் செலவு குறைவானது. அதை குறைவானவர்கள் பார்க்கும் நாடகங்களாக நடத்தமுடியும். இலக்கியமறிந்த, ரசனைகொண்ட பார்வையாளர்களுக்காக அமைக்கலாம். நடிப்பை கூர்ந்துபார்க்கவேண்டும் என்றாலும் சிறிய அரங்கம் அவசியம்.
(நான் பாதல் சர்க்காரின் தெருநாடகம் அல்லது அதற்கு மூலமான பெர்டோல் பிரெஹ்டின் செவ்வியலரங்கு ஆகியவற்றைப் பற்றிச் சொல்லவில்லை. அவற்றில் உள்ள அழகியல் என்பது மேடைநாடகத்துக்கு எதிரான அழகியல். நாடகத்தை ஓர் உரையாடலாக நிகழ்த்தும்தன்மை கொண்டது அது. நாடகத்தை உடைக்கும் நாடகம் எனலாம். நான் சொல்வது எளிய மேடைநாடகம்)
இன்னொரு வகை நாடகமும் உண்டு. ஒரு கதையை ஒருவர் அல்லது பலர் மேடையில் படிப்பது. அதுவே ஓர் உணர்ச்சிகரமான குரல்நடிப்பாக ஆகமுடியும். கதையின் உணர்ச்சிகரம் பலமடங்கு மேம்படும். (கேரளத்தில் சினிமாக்களின் திரைக்கதைகளை அவ்வாறு இயக்குநர் உதவியாளர்களுடன் அமர்ந்து வாசிப்பார். ஒழிமுறி திரைக்கதையை அவ்வாறு வாசித்தோம்)
இந்த வகையை இன்னும் விரிவாக்கலாம். ஒரு கதையின் புனைவுச்சித்தரிப்புப் பகுதிகளை வாசிக்கலாம். நாடகீயபகுதிகளை மட்டும் நாடகமாக போடலாம்.
நரேன் நான் சொல்லச்சொல்ல ஊக்கமடைந்தார். அப்படி ஒரு முயற்சியை செய்துபார்த்தால் என்ன என்றார். நம் நண்பர்களுடன் இணைந்து ஒரு சிறு குழுவை உருவாக்கி இரண்டு வகைகளிலும் இரண்டு சிறு நாடகங்களை உருவாக்கலாமா என்னும் எண்ணத்தைச் சொல்ல அது பேசப்பேச வளர்ந்தது.
நண்பர்களில் நாடகம், நடிப்பு, ஒளியமைப்பு. ஒலியமைப்பு என ஆர்வமுள்ளவர்கள் நரேனுக்கு எழுதலாம். சந்தித்து ஒரு குழுவாக ஆகலாம். எப்படியென்றாலும் ஏதேனும் ஒரு கலையுடன் தொடர்புகொண்டிருப்பதைப்போல நாட்களை அழகுறச்செய்வது வேறில்லை. எக்கலையும் நாம் நமக்காகச் செய்துகொள்வதே
கோவையை மையமாக்கியே அந்த செயல்பாடு. ஆனால் கோவைக்கு தேவையென்றால் வந்து செல்லும் வசதியுடன் இருப்பவர்களும் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புக்கு [email protected]