அன்புள்ள ஜெ
குன்றக்குடி யானை பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். குன்றக்குடி யானை, கடிதம்
சில கேள்விகள்.
- நீங்கள் யானைகளை captivity யில் வளர்க்கக்கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் நீங்களே வீட்டில் நாய்களை வளர்ப்பதைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். வீட்டுமிருகங்களும் சிறையிடப்பட்டவை அல்லவா?
- யானைகள் நம் கலாச்சாரத்திலே பல ஆயிரமாண்டுகளாக உள்ளன. நம் கலாச்சாரத்தை அவை உருவாக்கின. நம் கோயில்களில் யானைகள் எல்லா வகையிலும் சிற்பங்களாக உள்ளன. நம் கலைகளில் யானைகள் உள்ளன. யானை வளர்ப்பை கைவிட்டால் யானைகளே இல்லாமல் நம் கலாச்சாரம் அழிந்துவிடும் அல்லவா?
- நீங்கள் எழுதிய யானைக்கதைகளில் ஏராளமான யானைகள் உள்ளன. எல்லாமே வளர்ப்பு யானைகள். அவை மனிதனிடம் பிரியமாகத்தானே இருக்கின்றன?
- நீங்கள் மாமிச உணவு சாப்பிடுபவர். மாமிசம் சாப்பிடுபவரின் விலங்குப்பிரியம் எப்படி புரிந்துகொள்ளப்படவேண்டும்?
சந்தானகிருஷ்ணன்
அன்புள்ள சந்தானகிருஷ்ணன்,
இவை எல்லாமே ஒரு குறிப்பிட்ட தரப்பின் வழக்கமான கேள்விகள். இக்கேள்விகளுக்குப் பின் உங்கள் சாதிமனநிலை, மதவாத மனநிலை, பழமைவாத மனநிலை உள்ளதா என்று மட்டும் நீங்களே ஒருமுறை யோசியுங்கள். நான் பலமுறை பதிலும் சொல்லிவிட்டேன். ஆனாலும் மீண்டும் பதில்.
அ. நாய்கள் மட்டுமல்ல பசுக்களையும் எருமைகளையும் ஆடுகளையும்கூட வீட்டில் வளர்க்கலாம். (நாய் வளர்க்காத நீங்கள் பசும்பால் குடிக்காமலிருப்பதில்லை, பசு வளர்ப்பதிலும் தடை இல்லை அல்லவா?) அவை மானுட நாகரீகம் தொடங்கிய காலத்தில் விலங்குலகில் இருந்து எடுத்து, தொடர்ச்சியாக மானுட இனத்தால் உருமாற்றம் செய்யப்பட்ட விலங்குகள்.
அவை காட்டுவிலங்குகள் அல்ல. காட்டில் அவை வாழமுடியாது. அவை மானுடன் இல்லாமல் வாழமுடியாதவை. அவை மானுடருடன் இருக்கையிலேயே மகிழ்ச்சியாக உள்ளன. சில வகைகள் காட்டுக்குச் சென்றால் படிப்படியாக காட்டுவிலங்காக மாறக்கூடும். (கூட்ட மனநிலைகொண்ட இந்திய நாடுநாய்கள்) ஆனால் பல இனங்கள் உளச்சோர்வடைந்து அழியும். (தனித்துவாழும் கன்னி போன்ற இந்திய இனங்கள். அயல்நாட்டு நாயினங்கள்)
நாயின் உடலமைப்பே நம்மால் மாற்றப்பட்டுவிட்டது.உதாரணமாக நாயின் குடல் காட்டுவிலங்குக்குரியதல்ல. அது மாவுச்சத்து உண்பதற்காக மரபணு மாற்றம் அடைந்தது. நாயை கைவிட்டால் நாயினம் அழியும். நாய் நம் பண்பாட்டுக்குப் பெரும்பங்காற்றியது. அதை அழியவிடலாகாது.
ஆனால் யானை அப்படி அல்ல. அது இன்றும் காட்டுவிலங்கே. அதன் உடலமைப்பில், உள அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு நகரில் பிறந்து வளர்ந்தாலும்கூட யானையின் காட்டியல்பு மாறுவதில்லை. அது மானுடரை ஏற்று உடன் வாழ்ந்தாலும்கூட அது காட்டுவிலங்குதான்.
ஆ. யானை நம் பண்பாட்டை உருவாக்கியது, நம் பண்பாட்டின் பிரிக்கமுடியாத அம்சம். ஆகவே அது நம்மிடம் அடிமையாகவே இருக்கவேண்டும் என்பதில்லை. சென்ற காலம் வரை இயந்திரங்கள் இல்லாத இடங்களில் யானையின் தேவை இருந்தது, இன்று இல்லை. இன்று வெறும் ஆணவத்துக்காக, அலங்காரத்துக்காக அவற்றை வளர்க்கிறோம். அது பிழையானது. யானை காட்டிலேயே இருக்கட்டும். நம்மால் இன்று பாதுகாப்பாகக் காட்டுக்குள் செல்லமுடியும். யானையை இயற்கையிலேயே பார்த்து ரசிக்க முடியும். நம் குழந்தைகள் சுதந்திரமான யானையைப் பார்க்கட்டுமே.
அடிமைமுறையால்தான் நம் நாகரீகம் உருவானது. சாதியும் அடிமைமுறைதான். அதனால் இன்றும் அடிமைகள் தேவை என்று சொல்லமுடியுமா என்ன?
இ. யானை மிக உணர்வுபூர்வமானது, அறிவார்ந்தது. ஆகவே அது மானுடருடன் பழகும், அன்பாக இருக்கும், மானுடருக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளவும் கூடும். (புலிகள், சிங்கங்கள் கூட பழகினால் அப்படி இருக்கின்றன) யானையின் பொறுமை, அறிவு, பெருந்தன்மை, கனிவு ஆகியவற்றையே நான் எழுதுகிறேன். அத்தகைய உயிரை நாம் அடிமையாக்ககூடாது என்பதே நான் சொல்வது. நம்மிடம் அடிமையாக இருப்பவர் அன்பும் அறிவும் கொண்டவர் என்பதனால் நம்மிடம் அவர் அடிமையாக இருக்கத்தக்கவர் என்று பொருளா என்ன?
ஈ. நீங்கள் கொசுக்களை கொல்கிறீர்கள். ஈக்களை பூச்சிமருந்து வீசி அழிக்கிறீர்கள். கரப்பான்பூச்சிகளை கொல்கிறீர்கள். எறும்புப்பொடி போட்டு லட்சக்கணக்கில் கொல்கிறீர்கள். நீங்கள் உண்ணும் உணவு பூச்சிநஞ்சால் பலகோடி உயிர்களை கொன்று தயாரிக்கப்பட்டது. நீங்கள் கட்டும் பட்டுப்புடவைக்காக புழுக்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் நீங்கள் உயிர்க்கருணை பேசுகிறீர்கள், பிறரை கண்டிக்கிறீர்கள். அதை எண்ணிக்கொள்ளுங்கள்.
ஜெ