அனல்காற்று:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

 

இன்று காலையில் என் நண்பன் சாட்டில் பேச முனைந்தான், நான் வேலை சூழலில் இருந்ததால் பிறகு பேசுகிறேன் என்றேன். அவனிடம் கதைக்க எனக்கு மிகப் பிடிக்கும் என்னுடைய பெரும்பான்மையான நண்பர்கள் சாப்ட்வேர், மற்றும் சினிமாவில் இருப்பவர்கள். இவன் இலக்கியம் பேசும் நண்பன். எங்கள் இருவருக்கும் மிகப் பிடித்த எழுத்தாளர் நீங்கள்தான். அவனுடைய நம்பருக்கு நான் அழைத்ததும் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, அனல்காற்று வாசிக்கிறாயா. என்றான். நான், ‘எந்தக் காத்தையும் வாசிக்கலை, ரொம்ப வேலைடா என்றேன்.  ஜெமோவின் ப்ளாக் வாசிக்கறதில்லையா என்றான் மன்னிக்க முடியாத குற்றத்தை நான் இழைத்தது  போல அவன் குரல் என்னைச் சாடியது. சில நாட்களாக வேலைச் சுமையால் வாசிக்கவில்லை என்றேன். அனல்காற்றைப் படித்துவிட்டு பேசு‘  சொல்லிவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.

 

உடனே உங்கள் வலைத்தளத்திற்குச் சென்று அனல்காற்று எங்கே என்று தேடினேன். பத்து அத்யாயம் வரை இருந்தது. எல்லாவற்றையும் எப்படி வாசிப்பது என்று ஒரு வேர்ட் ஃபைல் ஓபன் செய்து, காப்பி பேஸ்ட் செய்தேன். மொத்தம் 152 பக்கங்கள். வேலைக்கு இடையில் எப்படி இதை வாசிப்பது? விஷ்ணுபுரம், காடு, கொற்றவை எல்லாவற்றையும் அனாயசமாக வாசித்த எனக்கு இச்சிறிய குறுநாவல் போக்கு காட்டியது. சரி லஞ்ச் ப்ரேக்கில் வாசித்துவிடலாம் என்று அவசரம் அவசரமாய் சாப்பிட்டு முடித்தேன். 1.40 க்கு வாசிக்க ஆரம்பித்து 2.52 முடித்தேன். யாரோ என்னை உலுக்கிப் போட்டது போல செயலற்றுப் போனேன். அக்கதை என்னை தன்னுள்ளே இழுத்துக் கொண்டது. என்னையறியாமல் நான் பிதற்றத் தொடங்கிவிடுவேனோ என்று பதற்றமாயும் இருந்தது.

 

சொற்கள், சொற்கள் கூரிய கத்தியைப் போன்ற சொற்களினால் உணர்ச்சிமயமான சித்திரம் ஒன்றினை நீங்கள் இயற்றிவிட்டீர்கள். அது மனதின் அடிஆழம் வரை நீண்டு நான் இருப்பது அலுவலகத்தில் என்பதை மறக்கச் செய்தது. என்னால் வேறு எதையும் செய்ய முடியவில்லை. சுசி, சந்திரா, அருண் மூவரைச் சுற்றியே மனம் சுழன்றுகொண்டிருந்தது. தினமும் தினந்தந்தியில் நாம் படிக்கும் சாதாரண கதை, அங்கும் இங்கும் எங்கும் நடக்கும் இயல்பான வாழ்வின் கதை. அரசாங்க அலுவலகத்தில், மின்சார ரயிலில் இறைபடும் extra marital affair கள்ளக்காதல் அல்லது மரபற்ற அல்லது சமூகம் அங்கீகரிக்காத உறவைப் பற்றிய மற்றொரு கதை. ஆனால் இதை நீங்கள் எழுதிய விதம், மிக மிக நுட்பமாகவும் அதீத அழகியலுடனும் ஆணின் அந்தரங்களை அவிழ்த்துக் காட்டுவதாயும் இருந்தது. முக்கிய கதாபாத்திரமான அருணின் மனவோட்டங்கள் வெகு அற்புதமான வரிகளுனூடே கதையை முன்னகர்த்திச் செல்கிறது. சில வரிகள் மனதை விட்டகல முடியாமல் அங்கேயே சிக்கிக் கிடக்கின்றது. ஏதோ ஒரு மிஸ்டிக் உலகில்  என்னையும் அறியாமல் இறங்கிக் கொண்டிருப்பது போன்ற வாசிப்பானுபவத்தை அள்ளித் தருகின்றது. சந்திராவா சுசியா, சுசியா சந்திராவா – வாசிப்பவன் யார் பக்கம் இருப்பது என்று பெரும் குழப்பத்திலும் ஊசலாட்டத்திலும் இட்டுச் செல்கின்றது. மனதை நிலைகுலைய வைக்கும்படியான எழுத்து…காதல் காமம் போன்ற விதயங்களின் மாயைகள் (மாயமா?) நம்மை எப்படி அலைக்கழிக்குமோ அப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது இக்கைதை. Love and lust ஆணுக்கு திகட்டாத விதயம் காமம், பெண்ணிற்கு தேவையானது காதல், மிகச் சரியான விகிதத்தில் கத்திமேல் நடப்பது போன்று balanced ஆக எழுத எப்படி முடிந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். Excellant writing J. No words to bring my feelings now and praise you. Mindblowing writing, i can say that again and again.

 

பாலுமகேந்திரா எனக்கு மிகவும் பிடித்த திரைக்கலைஞர். ஆனால் நான் சொல்கிறேன் ஜெ யாராலும் இக்கதையை திரைப்படுத்த முடியாது. மிகையாகச் சொல்லவில்லை. இப்படைப்பு தன் வரையில் மிக முழுமையானது. வாசிக்க வாசிக்க வாசிப்பவன் அகவுலகை விரிவடையச் செய்கிறது. வாசிப்பவன் இரு வேறு கூராக ஆகிப் போகிறான். இதில் 20% கூட திரையில் சாத்தியமில்லை. இதை அப்படியே உள்வாங்கி இயக்குனர் தன் சினிமா மொழியில் சொல்ல நினைத்தாலும் விரிவாக காட்சிப்படுத்த முடியாது, ஏனெனில் மனம் புத்தி என உள்ளார்ந்த விதயங்களைப் பற்றிப் பேசும் போது கதை காவியமாகிறது. ஆனால் திரையில் வேறு சில விதயங்கள் வேண்டியுள்ளது. அது இக்கதையை dilute செய்துவிடக்கூடும்.

 

வெகு நாள் கழித்து மனதை ஆழமாக பாதித்த கதையை வாசித்த நிறைவோடு வீடு திரும்புகிறேன். மின்சார ரயிலில் ஒரு மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இக்கதை என்னுடன் இன்று நிச்சயம் தொடர்ந்து வரும். நாளை அடுத்த அத்யாயத்தை வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

 

ப்ரியமுடன்

உமா

 

பிகு – நண்பனுக்கு நன்றி சொன்னேன். இக்கதையைப் பற்றி பேசினோம், பேசுகிறோம், பேசிக் கொண்டிருப்போம்…..

 

 

 

 

 

n      
ப்ரியமுடன்
உமா ஷக்தி
http://umashakthi.blogspot.com

 

அன்புள்ள உமா சக்தி

 

தங்கள் கடிதத்துக்கு நன்றி.

 

வைக்கம் முகமது பஷீர் தகழி சிவசங்கரப்பிள்ளையிடம் சொன்னார் என்று ஒரு நிகழ்ச்சி உண்டு. தகழி கருத்தியல் நாவல்களாக எழுதிக் கொண்டிருந்த காலம். நாற்பத்தைந்துக்குப் பின் நீ காதலையும் காமத்தையும் எழுதுவாய். அதுதான் பிராயம்என்றாராம் பஷீர். அதைப்போல 47 வயதில்தான் தகழி உலகப்புகழ்பெற்ற செம்மீன் நாவலைஎழுதினார்.

 

 

எழுத்தின் வழியாக வளாரும் ஆளுமையின் ஒரு கடத்தில் கருத்துக்கள் சமூகம் அரசியல் ஆகியவற்றை தாண்டி மனித உறவுகளை மட்டும் எடுத்துப்பார்க்க தோன்றுகிறது. அதிலும் காமத்தை. காமத்தைஎ ழுத அதை விலகி நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு மனநிலை– ஒரு வயது- உருவாகவேண்டும். இப்போது எனக்கு கூர்ந்து பார்க்கவும் சொல்லவும் சில விஷயங்கள் உள்ளன .அதுவே இந்தக்கதையில் உள்ளது

 

ஜெஅன்புள்ள ஜெயமோகன் சார்,

 

அனல் காற்றின் வெம்மையில்  நின்று எழுதுகிறேன்.  நான்கு நாட்களாக பித்து பிடித்தது போல் இருக்கிறது. அலுவலகத்தில் பணி ஓடவில்லை. அடி வயிற்றை கவ்வும் பதற்றத்துடனேயே ஒவ்வொரு வரியையும் படிக்க வேண்டியிருக்கிறது. இத்தனை நுட்பமான உளவியல் சித்தரிப்பு தாங்கமுடியாததாக இருக்கிறது. காமம் எரியும் பெண் விழிகள். காட்டை எரிக்கும் கனல் துண்டுகள் போலஎத்தனை உக்கிரமான வரி… மொழியின், எழுத்தின் சாத்தியஙகளை தாண்டி நீங்கள் செல்லும் வேகம் என் போன்ற சாமன்யர்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது. வாழ்வின் மர்மமானதொரு இடுக்குக்குள் அகப்பட்டுக்கொண்டது போன்ற உணர்வு.அருண், சந்திராவுடன் இருக்கும் தருண்ங்களில் சந்திராவே முக்கியம் என்றும் சுசீயுடனான தருண்ங்களில் சுசீயே முக்கியம் என்றும் ஏன் படுகிறது?

 

உண்மையை சொல்லவேண்டுமென்றால் முதல் இரண்டு அத்தியாயங்களில் ஒரு வழக்கமான தமிழ் படத்திற்குண்டான காட்சிகளைத்தான் படிக்கிறோமென்கிற உணர்வு மட்டுமே இருந்தது. பின் அது கொஞ்சம் கொஞ்சமாக கண்முன் உள்ளிழுதுக்கொண்டதை திகைப்புடன் பார்த்து நிற்கிறேன்.இத்தனை காமம் தகிக்கும் கதையை கொஞ்சம் கூட கொச்சையாக இல்லாமல் இத்தனை உக்கிரமாக எழுத உங்களால் மட்டுமே முடியுமென தோன்றுகிறது. இந்த கொந்தளிப்பை பாலுமகேந்திராவால் கூட படமாக்க முடியுமா என்பது சந்தேகமே 

 

அன்புடன்

பாண்டியராஜ்

 

அன்புள்ள பாண்டியராஜ்

 

இந்த நாவல் படமாக்கப்படுவதற்காக எழுதபப்ட்டதல்ல. படமாக்க இருந்தது. சினிமா வேறு ஓர் ஊடகம். தேர்ந்த கலைஞன் அதை தன் ஊடகத்தில் அதை வேரு ஓருவகையில் அள்ளிவிடமுடியும். அதற்கான வாய்ப்பை அவ்ழங்குவதுடன் எழுத்தாளனின் வேலைமுடிந்துவிடுகிறது அல்லவா?

 

எல்லா கலைப்படைப்புகளும் மனித மனத்தின் அச்சமூட்டும் ஆழத்தையே காட்டுகின்றன. மனித மனத்தை பற்றி எடுத்துக் காட்டும் கலை. முழுக்க காட்டிவிட முடியாதென உணரும்போது அக்கலை முழுமை பெறுகிறது

 

ஜெ

 


 

அன்புள்ள ஜெயமோகன்,

 

உங்கள் இணையதள எழுத்துக்களை பெரும்பாலும் படித்திருக்கிறேன். அவற்றை விரும்பியிருக்கிறேன். இப்போது அனல்காற்று படிக்கிறேன். உங்கள் வழக்கமான எழுத்துக்களில் இருந்து விலகிச்செல்கிறீர்கள் என்றும் எதுவோ குறைகிறது என்றும் எனக்குப் படுகிறது. உங்கள் சித்தரிப்புமுறையும் சொல்தேர்வுகளும் சென்னைமொழியால் மறைக்கபப்டுகின்றன. இது நான்கடவுளுக்குப் பின்னால் வந்த மாற்றமாக இருக்கலாம்.

 

இது தவறான கூற்று என்றால் மன்னிக்கவும். இல்லை என்றால் உங்கள் வழக்கமான உள்ளூர் நடைக்கு திரும்பிச்செல்லவும்

 

முருகன்

 

அன்புள்ள முருகன் அவர்களுக்கு,

 

நன்றி. நீங்கள் என் கதைகள் நாவல்கள் ஆகியவற்றை படித்திருந்தால் இந்த வினா எழுந்திருக்காது. நான் ஒரு குறிப்பிட்ட மொழிநடை அல்லது கூறுமுறையில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கவில்லை. இந்த 20 வருடங்களில் என் நாவல்களில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மொழியும் சூழலும் கூறுமுறையும்தான் வந்திருக்கிறது. பொதுவான பேச்சுமொழி, சம்ஸ்கிருதம் கலந்த மொழி, அதிதூஉய தமிழ் நடை, மொழியாக்கச்சாயல் அடிக்கும் நடை என….

 

ஒருமுறை எழுதிய சூழலை மீண்டும் எழுதுவது இல்லை. அதற்கேற்ப மொழியும் மாறுபடும். சிறுகதைகளிலும் எல்லாவகையான கதைகள் நடைகளுக்குள்ளும் சென்று வந்திருக்கிறேன். நான் அடுத்து என்ன எழுதுவேன் என்பதை நானே கூறிவிடமுடியாதபடித்தான் இதுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன். எனக்கு என்று ஒரு தேடல் உள்ளது. அதுதான் என் எழுத்துக்கள் வழியாக நகரக்கூடிய பொதுச்சரடு. வாசகர்களை சுவாரசியபப்டுத்துவதோ அல்லது அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்வதோ என் வேலை அல்ல. என்னை நான் கூட எல்லை வகுத்துவிட அனுமதிப்பதில்லை. அடுத்து நான் எழுதுவது எனக்கே ஆச்சரியமூட்டவேண்டும் என்றே எதிர்பார்ப்பேன். அதுவே என் வழி

 

தங்கள் கடிதத்துக்கு நன்றி

 

ஜெயமோகன்

 

 

 

 

முந்தைய கட்டுரைஅனல் காற்று (குறுநாவல்) : 12
அடுத்த கட்டுரைசேரன்:விமரிசன அரங்கு