இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது. வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு பேரியக்கத்தில் பங்கெடுக்கும் யாருக்கும் ஏதோவொரு தருணத்தில் இது நிகழவே செய்யும் என்று நினைக்கிறேன். பொருளியல் வாழ்வின் எல்லைகளைக் கடந்து தொடர்ந்து இயங்குவதற்கான செயலூக்கத்தை கைக்கொள்ளுதல் அவ்வளவு எளிமையாக இல்லை. ஒரு கட்டத்திற்கு மேல் இலக்கியம், சினிமா மற்றும் இசை என்று எல்லாமே சோர்வாக இருக்கிறது. நவீன தொழில்நுட்ப நுகர்வுக் கலாச்சாரம் கலை மற்றும் அறிவியக்க தளங்களையும் பெரும் நுகர்வுப்பொருளாக மாற்றியிருப்பதன் மூலம் நம்மை செயலூக்கமற்ற நுகர்வோராக்கி, பெரும் மன சோர்வுக்குள் தள்ளியிருக்கிறது.
திரும்பிப்பார்க்கையில் 28 ஆண்டுகள் ஓடிவிட்டன, இன்னும் சொல்லிக்கொள்ளும்படியாக வாழ்வில் ஏதும் செய்யவில்லை. அறிவியக்க செயல்பாட்டில் பங்கெடுக்க நினைக்கும் யாருக்கும் இருக்கும் மன அலைகழிப்புகள் ஒருபுறம் என்றால் நிலையான வேலையில்லாமல் இன்னும் பொருளாதார தன்னிறைவின்றி அடிப்படை செலவுகளுக்கே அல்லல்படும் நிலை மற்றொருபுறம். எந்த வேலையிலும் 5 மாதங்களுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.யதார்த்தத்துடன் உள்ள சித்தாந்த முரண்பாடுகளும் எனக்கிருக்கும் அதீத சமூக பதற்றமும், உளவியல்சார் பிரச்சனைகளும் வெளியுலகை எதிர்கொள்ளுவதை மேலும் கடினமாக்குகிறது. எனக்கு பேச்சில் தடுமாற்றம் இருக்கிறது. நான் அதிகம் யாருடனும் பேசுபவனில்லை.
ஏதோ ஒன்றின் பொருட்டு மேலெழும் மனவெழுச்சி மறுகணம் அதற்கு நேர் எதிர் சிந்தனையுடன் ஒன்றோடொன்று மோதி இல்லாமலாகிறது. என்னுடன் நானே பல இடங்களில் முரண்படுகிறேன். இந்த உள் முரணியக்கத்தின் வழியாக நான் கண்டடைந்தவை ஏராளம். உங்களுடனும் முரண்படுகிறேன், உங்களின் அபுனைவு மற்றும் அரசியல் சார் கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. அது அவ்வாறே இருக்க முடியும். இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொண்டு உங்களை பின்தொடர மாட்டேன். இக்கடிதத்தின் நோக்கம் அது பற்றி பேசுவதல்ல என்பதால் அதை இங்கே விட்டுவிடுகிறேன்.
பிரவீன்