குரு- ஆளுமையும் தொன்மமும்
ஜெ,
ஹெ.எஸ்.சிவபிரஹாசம் கன்னடத்தில் எழுதி ஆனந்த் ஶ்ரீனிவாஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் ‘குரு’ புத்தகத்தை படித்து முடித்தேன். எதேச்சையாகவே புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை வாங்கினேன். சில
மாதங்களாக ‘குரு’ என்பது குறித்து பலவாறு யோசனை செய்து கொண்டு இருந்தேன். அதனால் குரு என்ற தலைப்பை கண்டவுடன் உடனே வாங்கிவிட்டேன். நூலே உங்கள் தூண்டுதலால் தான் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்பது, நூலை உடனே படிக்க தூண்டியது. மிக முக்கியமான மொழிபெயர்ப்பு. ஆழமான, கவித்துமான நூலை எந்த அழுத்தமும் இல்லாமல், இலகுவாக படிக்க முடிந்தது.
இந்த புத்தகம் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர், நாடக ஆசிரியரால் எழுதப்பட்டுள்ளது. இது ‘வாயில்’ என்று குறியீட்டு ரீதியாக தலைப்பிடப்பட்ட பத்து கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. அந்த பத்து கட்டுரைகளுமே இந்திய ஆன்மீக, மெய்யியல் தளங்களில் அவரது பயிற்சி மற்றும் நேரடி அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது. குரு என்பதே முதல் வாயில், இந்திய ஆன்மீகத்தில் தனக்கான குருவை அடைவது என்பதே முதல் படிநிலை. அவ்வாறு அடைந்த குரு ஒருவராக இருக்க வேண்டியதும் இல்லை. பல குருக்கள் இருக்கலாம். ஆனால் இறுதியில் நம்மை முழுவதுமாக உடைத்து வார்க்கும் ஒருவரின் கையிலிருந்தே நாம் யார் என்று நம்மால் உணர முடியும். அங்கிருந்தே நாம் ஆன்மீகம் எனும் வாயிலுக்குள் நுழைய முடியும். ஆனால் இறுதியில் குரு என்பவர் மனிதன் எனும் இருப்பிலிருந்து கோட்பாடாக தனது சீடனில் எஞ்சும் பேதே ஆன்மீகமான பரிமாற்றம் நிகழ்கிறது என்கிறார். அதை விடுத்து அவர்களை போற்றி, புகழ்ந்து, சிலையாக வழிபடுவதால் எந்த பயனும் இல்லை என்றே சொல்கிறார். நீங்கள் ஒரு முறை கேரளத்தில் வசித்த ஒரு மெய்ஞானியை பற்றி சொன்னீர்கள். அவர் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போது அவரது அம்மா இறந்து விட்டதாக கூறியதற்கு, அவர் எந்த சலனமுமே இல்லாமல் மீண்டும் வகுப்பெடுக்க ஆரம்பித்தார். அதேபோல அவருடைய குரு சமாதி ஆகிவிட்டார் என்று கூறியதற்கு, துளிகூட சலனமின்றி “நான் அவரை உண்டு செறித்து விட்டேன்” என்று கூறினார் என்றீர்கள். குரு சீடனாக(கோட்பாடாக) ஆகிவிடுவது என்பது இதுதானே.
உங்களுக்கும், நித்யாவுக்கும் இருக்கும் உறவு என்பதும் இதுதான். அவரது கனவின், கோட்பாட்டின் நீட்சியாக மட்டுமே இன்று செயலாற்றுகிறீர்கள் என்றே தோன்றுகிறது.
குரு–வில் தொடங்கி மந்திரம், தெய்வம், உடல், பிராணன், மனம், காமம், கர்மமும் காயகமும், பிரதிபா, அனுத்தரம் என்ற பத்து வாயில்கள் வழியாக நூல் நம்முடன் உரையாடுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் இந்திய ஆன்மீக மரபின் மீது ஆழமான புரிதலுடன், தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் ஆன்மீக தேடல் கொண்டவர் என்பதால் அவரது சுய அனுபவம் வழியாகவும், கவிஞர் என்பதால் அவர் கன்னட பக்தி இலக்கியத்தில் உள்ள ஆன்மீக தரிசன கவிதைகள் வழியாகவும் அனைத்தையும் விளக்கியிருப்பது வாசிப்பை ஆழமான அனுபவமாக ஆக்குகிறது.
இந்திய ஆன்மீக மரபுகளான தாந்த்ரீகம், யோகம், பக்தி, பௌத்தம், சமணம், சைனம், வீரசைவம், அத்வைதம் ஆகியவற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றத்தை அளிக்கிறது. உபநிடத மந்திரமான ‘நேதி நேதி நேதி’ ‘இதுவல்ல இதுவல்ல இதுவல்ல’ என்ற அடிப்படையில் வாசகன் ஒவ்வொரு வாயிலுக்குள்ளும் சென்று ஆராய்ந்து தனக்கேயான வாயிலை திறந்து கொள்ளலாம். நிராகரித்து அல்ல, கற்று தெளிந்து விடுத்து அடுத்தவைக்கு முன்னேறிச் செல்ல சொல்கிறது. உதாரணமாக நூலின் ஆசிரியர் சில காலம் பௌத்த தத்துவ, தியான மரபில் ஈடுபட்டதால் அவரது கவிதை படைக்கும் மனம் வற்றியதையும், உடனே சுதாரித்து கொண்டு இது தனக்கான பாதையல்ல என்று வேறு பாதையில் பயணித்ததை சொல்லும் இடம் முக்கியமானது. இப்படி நூல் முழுக்க நேரடி அனுபவங்கள் மற்றும் கவிதைகள் வழியே சொல்லுவது வாசகனுக்கு பெரிய இலக்கிய அனுபவமாக ஆகிறது.
ஆன்மீக பாதையில் பயணிப்பவர்கள், இந்திய தத்துவ மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல். உதாரணமாக யோகம் சாதகம் செய்து கொண்டிருக்கும் நான், எனது மூச்சை தவறாக கையாள்கிறேன் என்பதை இந்த நூலை படிக்கும் போதே உணர்ந்து கொண்டேன் (நூல் ஆசிரியரது யோக குரு சத்யானந்த சரஸ்வதி என்பதால், நித்யவனத்தில் குருஜி சௌந்தரிடம் யோக பயிற்சி செய்பவர்கள் யோகம் குறித்த பகுதிகளை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள முடிகிறது). இந்திய தத்துவத்துவத்தில் ஆர்வம் கொண்ட எனக்கு, இந்த நூலில் இந்தியாவின் பல்வேறு தத்துவ மரபுகள் இணையும், விலகும் இடங்களை துல்லியமாகவும், சுருக்கமாகவும் விளக்கியுள்ளது பெரும் திறப்பாக இருந்தது. ஒரு இலக்கிய வாசகனாக இதில் விரவியிருக்கும் பல கவிதைகள் மற்றும் ஒட்டுமொத்த இந்திய ஆன்மீக மரபுகள் குறித்து ஏற்படுத்தும் அடிப்படையான வரலாற்று புரிதல் என அனைத்தும் இனிமேல் படிக்க இருக்கும் இந்தியா இலக்கிய, ஆன்மீக, தத்துவ நூல்களை ஆழமாக புரிந்து கொள்ள உதவும்.
பணிவன்புடன்,
வேலாயுதம் பெரியசாமி