அரப்பட்ட கெட்டிய கிராமத்தில் (போர்க்கச்சை கட்டிய கிராமத்தில்) இந்த விந்தையான படத்தை எண்பதுகளில் அது வெளிவந்தபோது காசர்கோடு திரையரங்கம் சென்று பார்த்தோம். மம்மூட்டி ஒரு நாயகனாக உருவாகி வந்த காலகட்டம். ஆகவே நல்ல கூட்டம். (மலபாரில் முஸ்லீம் ரசிகர்களின் நட்சத்திரம் அவர் அன்று) படம் ஆரம்பித்த சற்றுநேரத்திலேயே கூச்சல், குழப்பம். ‘டேய் என்னாடா படம் எடுத்திருக்கே?” என்ற குரல்கள்.
நானும் நண்பர்களும் மட்டுமே முழுப்படத்தையும் பார்த்தோம். எங்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால் ஏன் பிடித்திருந்தது என்று சொல்லத்தெரியவில்லை. அண்மையில் கருணாகரன் பேசும்போது இந்தப்படம் பற்றிச் சொன்னார். மீண்டும் பார்த்தேன். பிடித்திருந்தது. ஏன் என்று இப்போது சொல்லமுடியும்.
ஒரு பாலியல்விடுதி, அங்கே செல்லும் வாடிக்கையாளர்கள், சிக்கிக்கொண்ட பெண் – வழக்கமான கதைபோல தோன்றும். ஆனால் கதைச்சூழல், கதைமாந்தர் எல்லாமே மிக விசித்திரமானவை. ஆனால் மிகமிகமிக அசலானவை. பி.பத்மராஜனின் இதே பேரிலான சிறுகதையின் நீட்சி இந்தப்படம்.
ஒரு முன்னாள் அரசகுடும்பத்துப் பெண்மணி, அதே அரண்மனையில், சிற்றூரில் விடுதியை நடத்துகிறாள். அவளுடைய கணவர் அங்கேயே இருக்கிறார். இருபத்துநான்கு மணிநேரமும் ஒரே இடத்தில் ராமஜெயம் எழுதிக்கொண்டும் தூங்கிக்கொண்டும். அந்த ஆன்மவீழ்ச்சி ஒரு பெரும் சோகக்கதை என சினிமாவுக்கு வெளியே என்னுள் வளர்ந்தது. அவளுடைய மகனும் அங்கேயே இருக்கிறான். அவன் கள்ளமற்றவன், அசடு, ஆனால் தீமை அவனுள் இயல்பாக வாழ்கிறது. சின்னக்குழந்தைகள் விளையாடுகின்றன.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஓர் அற்புதமான சிறுகதையின் மையம்போல் துலங்கும் இந்தப்படம் அப்போது ஒரு மாபெரும் வணிகத்தோல்வி. ஆனால் இன்று விமர்சகர்களால் ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ என கருதப்படுகிறது.