நேற்று ஒரு கலாச்சார அதிர்ச்சியை அடைந்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணம். நீஙகள் எந்த விஷயத்தையும் மேம்போக்காக இல்வாமல், எல்லா கண்ணோட்டத்திலும் அலசுபவர் என்பதாலும், உங்கள் இந்த அணுகுமுறை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்தப் பகிர்வு.
நாங்கள் எங்கள் சொந்த மகளாக எண்ணும் ஒரு பெண், கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்ற வருடம் சென்னையில் ஒரு அரசு கல்லூரியில் பட்டப்படிப்புக்கு சேர்ந்திருப்பவள். புத்திசாலியான அழகிய பெண். கல்லூரி விடுதியில் தங்கிப் படிப்பவள். கலெக்டராகும் கனவுடன் பயிற்சி தொடங்கி இருப்பவள். அவளுக்கு போட்டித் தேர்வுககு வழிகாட்ட என்று வரும் ஒரு இளைஞன் அவளுக்கு காட்டும் பாதை எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
“உன்னைப் பிடித்திருக்கிறது. நாம் உறவு கொள்வோம். எந்தப் பற்றும், கட்டாயமும் இன்றி உறவு கொள்வோம். ஜாதிப் பிரச்சினை வரும், எனவே கல்யாணம் வேண்டாம்” என்று அவளை அழைக்கிறான். இதோடு இல்வை, “swap” என்று கூறுகிறார்கள், அந்த முறையில் துணையை மாற்றிக்கொண்டு பலரோடு இன்பமாக இருப்பது என்ற முறையில் அவளை ஊக்குவித்து அவளை சம்மதிக்க வைக்க முயல்கிறான். இதை நியாயப்படுத்த பெண்ணியம் பேசி அவளை தூண்டுகிறான்.
பதின் வயதுக்கு உரிய ஆர்வம், இயல்பான துணிச்சல், வீட்டுக் கட்டுப்பாடு இல்லாத நிலையில், இவள் இது போன்ற உறவில் ஈடுபட்டுள்ள சிலரிடம் பேசி இது பற்றி விசாரித்து, சரியா, தவறா, அடுத்த அடி எடுத்து வைக்கலாமா, வேண்டாமா என்ற யோசனையில், அம்மா, அப்பா என்று எங்களை கருதுவதால் எங்களிடம் இது பற்றி மிகுந்த தயக்கத்துடன் நேற்று பேசினாள். உடல் அளிக்கும் இன்பங்களை நுகர்வதில் உள்ள ஆர்வம் அவளை உந்துகிறது. சரி, தவறு என்பதைத் தாண்டி இது அவளுக்கு எத்தகைய உளவியல் மற்றும் வாழ்வுச்சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எங்களால் இயன்றவரை எடுத்துக் கூறினோம்.
30 வருடங்கள் முன் ஆணும் பெண்ணும் காதலை வெளிப்படுத்தத் தயங்கிய நிலையிவிருந்து, இப்போதுள்ள இளைஞர்கள் மிகச் சாதாரணமாக உடல் உறவை அணுகுவதை என்ன வகை மாற்றத்தில் சேர்ப்பது? சரி, தவறு, ஒழுக்கம் இவற்றையில்லாம் தாண்டி இதை ஆராய முடியுமா? இந்த அபாயம் இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு உள்ளது. இவர்களுக்கு உங்களின் விளக்கம், வழிகாட்டுதல் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த பிரச்சினைக்கான விளக்கம் பிறருக்கும் தேவை என்று நீங்கள் நினைத்து தளத்தில் வெளியிட நினைத்தால் என் பெயர் போன்ற விவரங்கள் இன்றி வெளியிடுங்கள்.
நன்றியுடன்
ஆர்
அன்புள்ள ஆர்.
இந்த விஷயத்தில் நாம் வாழ்ந்து அறிந்த உண்மைகளை எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் அவை நாம் வாழ்ந்த சூழலில் இருந்து உருவானவை. நாம் வாழ்ந்த காலகட்டத்தின் மனநிலைகளைச் சார்ந்தவை. அவற்றை அப்படியே அடுத்த தலைமுறைக்குச் சொல்லிவிட முடியாது. அவற்றில் சில பகுதிகள் அவர்கள் பரிசீலிக்கத்தக்கவையாக இருக்கக்கூடும். அவற்றை மட்டுமே நம்மால் சொல்ல முடியும்.
1988 ல் அஜந்தா பயணத்தில் ஒரு ஜெர்மானியப் பெண்ணை அறிமுகம் செய்துகொண்டேன். அவள் விரும்பியதனால் ஓர் இந்து ஆலயத்தைக் காட்டும்பொருட்டு விதிஷா அழைத்துச்சென்றேன். அவள் என்னிடம் அருகே எங்காவது தங்கி சில நாட்கள் உடலுறவு கொண்டுவிட்டுச் செல்லலாம் என்றாள். நான் திகைத்துப்போனேன். அன்று நான் மணமாகாத இளைஞன்.
என் மறுப்பை தெரிவித்தபோது அவள் சீண்டப்பட்டாள். அவள் அழகாக இல்லை என நான் சொல்வதாக எடுத்துக் கொண்டாள். அவள் அழகை, புத்திசாலித்தனத்தைப் புகழ்ந்து சொல்லி மெல்ல என் மறுப்பு என்பது என் நாட்டின், என் தனிவாழ்வின் ஒழுக்கநெறிகளின் பாற்பட்டது என்று விளக்கினேன். உணர்வுரீதியாக ஒரு தொடர்பு உருவாகாமல் அப்படி ஓர் உறவை என்னால் நிகழ்த்தமுடியாது என்றேன்.
அதுவரை நான் பாலுறவை அறிந்ததில்லை என்பதே அவளுக்கு அதிர்ச்சி. அவளுக்கு அப்போது 26 வயது. 14 வயது முதல் தொடர்ச்சியாகப் பாலுறவில் ஈடுபட்டு வந்திருந்தாள். எல்லா வயதையும் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களுடன். ஜாவா தீவில் சந்தித்த அந்நாட்டவன் கடைசியாக அவள் உறவுகொண்ட காதலன். ’being safe’ மட்டுமே அவள் கருத்தில்கொண்ட விஷயம்.
அவள் என் மேல் பரிதாபம் கொண்டாள். நான் வாழ்க்கையை இழக்கிறேன் என்று என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னாள். பாலுறவின் இன்பம் என்பது பிழையானது அல்ல, எல்லா உயிர்களுக்கும் உரியது, இனியது என்றாள். அதை உணர்ச்சிகளுடன் கலந்துகொள்ளக்கூடாது. அதற்கு உலகியல் நிபந்தனைகள் கூடாது. காலம் கடந்தபின் அது அமையாது என்றாள்.
அவள் இன்னொன்றும் சொன்னாள். அவள் ஓர் ஆய்வுமாணவி. கீழைச் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற முயல்பவள். அவள் அதைப் பெற 30 வயது தாண்டலாம். அதன் பின்னரே அவளுக்கு உகந்த வேலை அமையும். அதற்கு முன் திருமணம் செய்துகொண்டால் ஆய்வும் வேலையும் பாதிக்கப்படும். அதுவரை பாலுறவில்லாமல் இருந்தால் வாழ்க்கை வீணாகும். ஆகவே உகந்த வழியை தேர்வுசெய்தாள் என்றாள்.
அவளும் நானும் விதிஷாவில் அமர்ந்து இதை விவாதித்தோம். நான் என்னுடைய உணர்வுநிலைகளைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்றேன். காமத்தில் இருந்து உணர்வுநிலைகளை அகற்றிவிட்டால் உறவுகள் நிலையற்றவை ஆகிவிடும். நிலையான உறவுகள் இல்லாதவர்கள் தனிமை கொண்டவர்கள் ஆகிவிடுவார்கள். நான் ஏற்கனவே கடுமையான தனிமையில் இருப்பவன், எனக்கு நல்ல உறவுகள் அமையவேண்டும் என விரும்புகிறேன் என்றேன்.
அவள் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் புரிந்துகொண்டாள். விதிஷாவில் இருந்து சாஞ்சி வரை சேர்ந்து வந்தோம். அதன் பின்னர் பிரிந்தோம். இந்த அனுபவத்தை மாத்ருபூமியில் எழுதியிருக்கிறேன், தமிழிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ஒருமுறை இந்த நிகழ்வை சிங்கப்பூர் நண்பர் சித்ராவிடம் சொன்னேன். அவர் ‘அது ஒரு வாழ்க்கைமுறை. இங்கே சிங்கையிலும் பல நவீனப்பெண்களுக்கு இந்த மனநிலை உண்டு. அது தப்போ சரியோ இல்லை. அது அவர்களுக்குச் சரியாக இருந்தால் சரிதான்’ என்று சொன்னார். இன்று என் மனநிலையும் அதுதான்.
ஆனால் மின்னஞ்சல்கள் உருவான காலகட்டத்தில் ஒருமுறை அந்த ஜெர்மன் பெண் என்னை இணையத்தில் கண்டுபிடித்து மின்னஞ்சல் செய்தாள் (இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழில் அப்போது ஆங்கிலத்தில் ஒரு வாராந்தரத் தொடர் எழுதிக்கொண்டிருந்தேன்) ’நீ பொறுப்பான இந்திய குடும்பத்தலைவர் என நினைக்கிறேன்’ என்றாள். ‘ஆம், உலகியலை அலைகளில்லாமல், இயல்பானதாக, இனியதாக வைத்திருக்கிறேன். ஆகவே உலகியலுக்கு அப்பாற்பட்ட பயணங்களை நிகழ்த்துகிறேன். என் கனவுகளை நோக்கிச் செல்கிறேன்’ என்றேன்.
அவள் எப்படி இருக்கிறாள் என விசாரித்தேன். ‘தனியே’ என்றாள். அவளுக்குப் பல திருமணங்கள். எல்லாமே முறிந்தன. ஒரே மகன் தற்போது தொடர்பில் இல்லை. ஆய்வுநிறுவனம் ஒன்றில் வேலை செய்து அதை விட்டுவிட்டு சேமிப்புகளுடன் ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறாள். ‘with the unavoidable bitterness of relationships’ என்பது அவள் சொன்ன வரி. அப்போதே பார்வைக்கும் மனநிலையிலும் கிழவியாக இருந்தாள். நான் ஒன்றும் சொல்லவில்லை. என்னிடம் அந்த கசப்பேதும் அன்றும் இன்றும் இல்லை. அந்த உரையாடலுக்குப் பின் தொடர்புமில்லை. ஆனால் சிலநாட்கள் கழித்து ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதைக்கும் இந்த உரையாடலுக்கும் நேரடித் தொடர்பேதுமில்லை. ஆனால் அகத்தொடர்பு ஏதோ உண்டு. முடிவின்மையின் விளிம்பில் என்ற அக்கதையின் கதைக்களம் அவளுடன் நான் விதிஷாவில் விவாதித்தது.
நானும் அவளும் இருவேறுலகங்களில் வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள். இருவரின் பாதைகளில் எது சரி எது பிழை என சொல்லத் தெரியவில்லை. அவளுடைய வாழ்க்கையில் இருந்த காமம், சாகசம் என் வாழ்க்கையில் இல்லை. என் வாழ்க்கையிலிருக்கும் நிலைத்த உறவுகளின் அமைதி அவளிடமில்லை. இன்று அவளுடைய வாழ்க்கைமுறை உலகமெங்கும் பரவி வருகிறது. இன்றைய பெண்கள், குறிப்பாக திரையுலகம் போன்ற துறைகளில் சாதனைபுரிய விழைபவர்கள் அவளுடைய அதே வரிகளைச் சொல்லக் கேட்கிறேன். நான் எதையும் தவறு – சரி என தீர்ப்பு சொல்லும் இடத்தில் இல்லை. வாழ்க்கையின் வடிவங்கள் அளவிறந்தவை என்று மட்டும் எண்ணிக்கொள்கிறேன்.
இரண்டு வழிகள். ஒருவர் இரண்டிலும் உள்ள பலன்களை அறுவடை செய்யமுடியாது. ஒவ்வொன்றிலும் அதற்கான இழப்பும் இருக்கலாம். இன்றைய இளைஞர்கள் வாழ்கையில் எதையாவது சாதித்து, ஏதேனும் ஓர் அடையாளத்தை ஈட்டியபின்னரே மணம் புரிய முடிகிறது. இல்லையென்றால் அந்த சாதனை நிகழ்வதில்லை, அடையாளம் அமைவதில்லை. அது வரை அவர்கள் பாலியல்துறவில் இருக்கவேண்டும் என நாம் சொல்லவும் முடியாது. இன்றைய உலகமோ பாலியலை பெருக்கி உச்சத்தில் வைத்துள்ளது. எல்லா ஊடகங்களிலும் கட்டற்ற பாலியல் நிறைந்துள்ளது. பாலுறவுக்கான வாய்ப்புகளும் பெருகியுள்ளன.
ஆனால் அப்படி கட்டற்ற, நிபந்தனையற்ற தூய பாலுறவை துய்க்க சில நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, நாம் பாலுறவுடன் உணர்வுகளைக் கலந்துகொள்ளக் கூடாது. உறவும் பிரிவும் இயல்பாக, எந்த தீவிரமான உணர்ச்சிகளும் அற்றதாக அமையவேண்டும். உரிமைகொண்டாடல், பொறாமை போன்றவை இருக்கலாகாது. எல்லா உறவுகளையும் மிகமேலோட்டமானதாக வைத்துக் கொள்ளவேண்டும். உறவுகள் நம் ஆழத்தை தொடவே கூடாது. நமக்குப் பாலுறவு மட்டுமே முக்கியம் என நாம் தெளிவாக இருக்கவேண்டும்.
நேர் மாறாக பாலுறவு நாட்டத்தால் அந்த வாழ்க்கைமுறையை தேர்வுசெய்துவிட்டு, சுதந்திரமாக நிபந்தனையற்ற பாலுறவும் கொண்டுவிட்டு, அதை உணர்ச்சிகரமாக எடுத்துக்கொள்வது பெரும் பிழை. அந்த உறவுக்கு வந்தவரை பிடித்துக்கொள்ளக் கூடாது. அவர்மேல் நம்மை நேசிக்கவேண்டும் என்னும் நிபந்தனையை, நம்மை மட்டுமே விரும்பவேண்டும் என்ற ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடாது. அப்படி முழுமையான விலக்கத்துடன் நம்மால் இருக்க முடியுமா என்று நாமேதான் முடிவுசெய்யவேண்டும்.
நாம் அப்படி இருந்தால்கூட நம் எதிர்த்தரப்பும் அப்படி இருக்கவேண்டும் என்னும் கட்டாயமும் உள்ளது. ஆணுக்கு பெண் மேல் ஓர் உடைமையுணர்ச்சி உண்டு. அது விலங்குகளில் இருந்தே உருவாகி வந்த ஒன்று. அதை எளிதில் மானுடன் கடக்க முடியாது. ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் உறவுகொண்டான் என்றால் அவளை தன் உடைமை, பாலுறவு தன் உரிமை என எண்ணாமலிருக்கவே மாட்டான். அந்த உடைமையுணர்வால் அவன் அவள் மேல் ஆதிக்கம் செலுத்துவான், அவளை வதைப்பான். ஆண்கள் பெண்கள் மேல் வன்முறையைச் செலுத்துவது இதன்பொருட்டே.
ஆனால் அந்த ஆணின் உள்ளம் இன்னொரு பெண்மேல் சென்றால் மிக எளிதாக அந்த முதற்பெண்ணை அவன் உதறவும் செய்வான். உடைமைகளை எப்போதுமே அப்படித்தான் கையாள்கிறோம். புதிய ஆடை வாங்கியதுமே பழைய ஆடைமேல் விருப்பம் இல்லாமலாகிறது. அப்படி ஓர் ஆணால் எளிதாகத் துறக்கப்படுவது தனக்கு எந்தவகையிலும் உணர்வுச்சீண்டலை உருவாக்காது, எந்த துயரையும் அளிக்காது என கட்டற்ற, நிபந்தனையற்ற பாலுறவை தேர்வுசெய்யும் பெண் தெளிவு செய்து கொள்ளவேண்டும். தன்னால் கையாள முடியாத உறவுகளில் சென்று சிக்கிவிட்டு, அதன் துயர்களை அள்ளிச்சுமப்பது வீண்.
பாலுறவுக்கு அப்பால் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான உறவின் அடித்தளம் பரஸ்பர மதிப்பு. இதை இளம்வயதில் உணரவே முடியாது. எந்த உறவிலும் நாம் நம் தன்மதிப்பை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது. நம்மை ஒருவர் இளக்காரமாக நடத்த, அவமதிக்க, அலட்சியமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதித்தால் அந்த உறவில் இருந்து கசப்பை மட்டுமே பெறமுடியும். அதிலும் இன்றைய பெண் ‘கற்பை’ அல்ல, தன்மதிப்பைத்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இழக்கவே கூடாத பெரும் செல்வம் அது. இழந்தால் பிறகு ஈட்டவே இயலாததும்கூட.
கட்டற்ற, நிபந்தனையற்ற பாலுறவுக்கு இணங்கிவரும் ஒரு பெண் மீது அந்த ஆணுக்கு மதிப்பு இருக்குமா என்ற கேள்வி முக்கியமானது. பாலுறவை அடைவதற்காக ஆண் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். ஆனால் அவன் உண்மையாகவே அப்படி இணங்கும் ஒரு பெண்ணை மதிப்பானா? அப்படிப்பட்ட ஒரு பெண்ணை அவன் திருமணம் செய்துகொண்டு அவளை வாழ்நாள் துணையாக ஏற்பானா? இந்திய ஆண் பெரும்பாலும் அப்படி ஒரு மனநிலை கொண்டவன் அல்ல. அதை நான் அறிந்த சூழல்களில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறேன். கொண்டாடி, கொஞ்சி பெண்களுடன் உறவுகொண்ட பின் நண்பர்களுடன் பேசுகையில் இழிவாக, நையாண்டியாக அதே பெண்களைப் பற்றிப் பேசும் ஆண்களை நான் புழங்கும் துறையில் வாரந்தோறும் சந்திக்கிறேன். “Who said I am not respecting you? You are the best slut around here” என்று அமெரிக்க ’வெஸ்டர்ன்’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் இங்குள்ள ஆண்களின் மனநிலையாக உள்ளது.
நான் சினிமா உலகில் பல பெண்பித்தர்களை, தீராக்காதலர்களைக் கண்டிருக்கிறேன். அவர்கள் அனைவரிலும் இருக்கும் பொதுவான அம்சம் ஒன்றே, கடுமையான பெண் வெறுப்பு. பெண்களைப் பற்றி அவர்கள் இழிவாகவே பேசுவார்கள். பெண்கள் வெறும் உடல்கள்தான் அவர்களுக்கு. உடலுறவுக்குப் பின் அப்பெண்கள் அவர்களுக்கு அருவருப்பூட்டுகிறார்கள். ஒரு மூத்த திரையுலகப் பெண்பித்தர் சொன்னார். ’உடலுறவுக்கு முன் ஒரு பெண்ணின் உடலில் இருந்து கழற்றும்போது அவள் உள்ளாடைக்கு முத்தம் கொடுப்போம். உடலுறவுக்குப் பின் அதைப் பார்த்தாலே அருவருப்பாக இருக்கும். அதுவே பெண்ணைப் பற்றியும் என் எண்ணம்’.
பரஸ்பர மதிப்பு இல்லாத நிலையில்தான் நீடித்த உறவுகள் அமைவதில்லை. ஏனென்றால் ‘இந்த உறவு அவளுக்கு முக்கியமில்லை, எனவே எனக்கும் முக்கியமில்லை’ என்னும் எண்ணத்துடன்தான் அந்த உறவே தொடங்குகிறது. அப்படித் தொடங்கும் எந்த உறவும் உடையவே வாய்ப்பு. ‘பிடிக்கவில்லை என்றால் பிரிந்துவிடுவோம்’ என்னும் எண்ணம் ஓர் உறவில் இருந்தாலே அந்த உறவு உடைவதை தடுக்க முடியாது. ’இந்த உறவு என்றென்றைக்குமானது’ என்னும் எண்ணம் இருந்தால்தான் அந்த உறவு நீடிக்கும். அதற்குமப்பால் அந்த உறவு உடைய பல காரணங்கள், சூழல்கள் அமையலாம். அவை நமக்கு அப்பாற்பட்டவையாக இருக்கவேண்டும்.
உறவுகளை மிகக்கவனமாக, மிகத்தெளிவான புரிதலுடன், மிகத்தெளிந்த உள்ளத்துடன் தெரிவுசெய்வதே சிறந்தது என்பது என் எண்ணம். சிக்கலான, பிழையான உறவுகளை விட தனிமையே மேலானது. அது நம் ஆன்மாவை மலினமாக்குவதில்லை. நம் உணர்வுகளை சிதறடித்து நம் வாழ்க்கையை அர்த்தமற்ற அலைச்சலாக ஆக்குவதில்லை. நாம் நம் ஆளுமை (personality)யை இழப்பதில்லை. பெண் இழக்கவே கூடாதது ஆளுமைதான். சென்ற காலங்களில் பெண்ணுக்கு ஆளுமை அனுமதிக்கப்படவில்லை. இன்று பல கலாச்சாரப் போராட்டங்களுக்குப் பின்னர் அடையப்பெற்ற ஒன்று அது. இன்னமும்கூட பல தளங்களில் அது ஏற்கப்படுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சமரசமே இல்லாமல் போராடித்தான் தன் ஆளுமையை பெண் பேணிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று எளிமையான பாலுறவுக்காகவெல்லாம் அதை இழந்துவிடலாகாது. இழந்தவர் நிரந்தரமான தன்னிரக்கத்திலும் கசப்பிலும்தான் எஞ்சிய வாழ்க்கையை கழிக்கவேண்டும்.
உறவுகளில் ஒரு நடைமுறைப்பார்வை இருக்கவேண்டும்தான், ஆனால் கூடவே ஒரு இலட்சியப்பார்வை (idealism) இருந்தே ஆகவேண்டும். அந்த உறவின் உணர்ச்சிகரம், இனிமை எல்லாமே அந்த இலட்சியவாத அம்சத்தில்தான் உள்ளன. காமம் மிக தட்டையானது. மிக எளிதில் சலிப்பூட்டுவது. ஆகவே தற்காலிகமானது. அதில் இலட்சியவாத அம்சம் இணையும்போதே அது இனிதாகிறது. அதன் உணர்வுநிலைகள் அழகாக ஆகின்றன. அதைத்தான் காதல் என்கிறோம். அந்த இலட்சியவாத அம்சம் கொஞ்சம் மிகையானதுதான், ஆனால் அது இன்றியமையாதது.
இதை காமத்திற்கு மட்டுமல்ல, எல்லா உறவுகளுக்கும் சொல்வேன். நட்பும்கூட அப்படித்தான். என் நண்பர்களைப் பற்றி அதையே சொல்வேன். அவர்கள் என்னை உதறிச்செல்லலாம், நான் இந்த வாழ்நாளில் எதன்பொருட்டும் அவர்களை விட்டு விலகுவதாக இல்லை. அவர்கள் கொலையே செய்திருந்தால்கூட அவர்களின் தரப்பிலேயே நான் நிற்பேன். ஏனென்றால் என்னைப் பொறுத்த வரை எல்லா உறவுகளும் பிறவிப்பெருந்தொடரில் வருபவைதான்.
இதெல்லாம் என் வாழ்க்கைக் கோணத்தில் இருந்து நான் அறிந்தவை. இவற்றை அடுத்த தலைமுறையின் பரிசீலனைக்காக வைக்கிறேன். ஏற்பதும் மறுப்பதும் அவர்களின் விருப்பம். என்னைப் பொறுத்தவரை தன்மதிப்பை விட்டுக்கொடுக்காத உறவுகளே முக்கியமானவை. சற்றேனும் கற்பனாவாதம் (romanticism) இல்லாத எந்த உறவும் சலிப்பூட்டுவது. ஒரு மனிதன் பேணிக்கொண்டே ஆகவேண்டியது தன் ஆளுமையைத்தான்.
ஜெ