திரு ஜெயமோகன் அவர்களுக்கு ,
க .ராஜாமணி எழுதிக்கொள்வது. அறம் எனும் அறைகூவல், பதிவு கண்டேன்.
திரு ரமணன் அவர்களுக்கு அறம் புத்தகத்தை படிக்க வலியுறுத்தியதையும் ,மேலும் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் படி கூறியதும் நான் என்பதில் என்றும் பெருமை கொள்வேன்.காரணம் யாதெனில் இன்று நாம் பார்க்கும் கேட்கும் சமூகமாகத்தான் இருக்கிறோமே தவிர வாசிப்பிற்கும் ,வாசிப்பின் வழியே உள்ளத்துள் நடக்கும் மாற்றத்தை கவனத்தில் கொள்ளாது கருத்தில் கொள்ளாது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
வாசிப்பிற்கு முன் வாசிப்பிற்கு பின் என்ன நடந்தது என்பதை ஆராயும் பழக்கம் கொண்டவன் நான் .அதிலும் தங்களின் படைப்புகளின் தீராக் காதல் எப்போதும்.பொதுவாக நாம் பார்த்த திரைப்படங்களை மட்டுமே பேசிக்கொள்ளும் ஒரு சமூகத்தில் புத்தக வாசிப்பை பற்றி பேசி கொள்ள தகுந்த நபர் அமைவதில்லை அல்லது நாம் கண்டறிவதில்லை. நீங்கள் கூறுவது போல ரயில் பயணங்களில் யாரிடம் என்ன பேச ,பேசினாலும் சினிமாவை தாண்டி அரசியலைத் தாண்டி ஒரு பத்து நிமிட பேச்சிற்குப்பின் ஒன்றும் இல்லை. வாசிப்பு இன்று காலாவதியாகி கொண்டிருக்கிறது
இருப்பினும் உங்களது அறம், ரப்பர் , காடு ,விஷ்ணுபுரம் என உங்கள் படைப்புகள் மீண்டும் ஒரு எழுச்சியை வாசிப்பில் உண்டாகியிருக்கிறது என்பதே நிதர்சன உண்மை . அப்படி எனக்கு நான் படித்தவற்றை , அதில் பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு புத்தக நண்பர் திரு.ரமணன் அவர்கள்.இலக்கிய வட்டம் , வாசிப்பு வட்டம் என ஆங்காங்கே நடைபெறும் காலத்தில் எல்லாம் எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும். என்னால் கலந்து கொள்ள முடியவில்லையே… என்று அந்த குறையை போக்கியது உங்கள் எழுதினால் கிடைத்த நண்பர் திரு ரமணன். அறம் புத்தகத்தினால் எனக்கு ஒரு நண்பர் கிடைத்தார் அதிலும் வாசிப்பனுபவத்தை பகிர ஒரு நண்பர் கிடைத்தார். அதற்கு மிக்க நன்றி.
ராஜாமணி