வணக்கம் திரு ஜெயமோகன்
நான் சிவா. நலமா? மிக சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் விக்கி தூரன் விருது விழாவில் கலந்து கொண்டு பயன் பெற்றேன். நல்ல நாதஸ்வர தவிலிசையை 22 ஆண்டுகளுக்கு பின் நேரில் அனுபவித்தேன் தமிழிசை அறிவு இல்லை என்றாலும் என் கீழத்தஞ்சை மரபணு அதை ரசித்தது என்று நினைக்கின்றேன். கிட்டத்தட்ட ஒரு நிறைவான திருமணத்திற்கு சென்று வந்த அனுபவம். என் சிறு வயதில் மன்னார்குடி எங்கும் கோவில்களில் இருந்து இனிய நாதஸ்வர, தவிலிசை மாலை நேரங்களில் கேட்கும். தற்போது மின்சாரத்தில் இயங்கும் ஓசை கருவி ஆபாசம்!
விழாவில் உங்களையும் நேர் அறிமுகம் செய்து கொண்டு ஏதோ உளறினேன். நாஞ்சில் நாடன் ஐயாவையும், இளங்கோவன் ஐயாவையும் கண்டது கூடுதல் மகிழ்ச்சி. மழைக்கு ஒதுங்கியதில், நண்பர் கிருஷ்ணனை கண்டு கதைத்தேன். பல வயதில் இளைய வாசக நண்பர்களை கண்டு கதைத்து அவர்களுடைய மன முதிர்ச்சியை கண்டு நிறைவும், சிறிது பொறாமையும் கொண்டேன்.15ம் திகதி கிளம்பி பர்குர் காட்டு வழியில் மைசூரு சென்று சென்னை திரும்பும் வழியில் சிறிய விபத்தில் சிக்கி குணமடைந்து வருகின்றேன்.
தொடர்ச்சியாக இப்படியான அறிவு செயல்பாடுகளை முன்னெடுக்கும் உங்களுக்கு என்றும் என் தலை வணங்கும்., நிற்க.
இதற்கு மேல் நான் உங்களிடம் பகிர விரும்பும் சில விடயங்கள் தேவையற்ற எதிர் மனநிலையையும், கோபமும் ஏன் வெறுப்பையும் கூட என் மீது உங்களுக்கு உருவாக்கலாம்.. எதுவாகினும் நன்றே.
இன்று காலை தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி அவர்களுடைய கடிதம் ஒன்றினை வாசித்தேன். நமது கட்சியரசியல்,நமது அறம் – கடிதம்
எப்போதும் போல் தற்போதைய தமிழ் குடியில் பிறந்ததற்கான மிகுந்த தாழ்வுணர்ச்சியும் விளைவாக சுய வெறுப்பும் மண்டிய எதிர் மனநிலையுடன் இக்கடிதம்.
பொதுவாகவே தமிழர்களுக்கு பசுமையின் மேலும் மிருங்களின் மேலும் ஏன் இத்தனை ஒவ்வாமை? நல்ல விடயங்கள் எல்லாமே வெறுத்து ஒடுக்கப்பட்டு கழிவுகள் கொண்டாடப்படுவது ஏன்? “ரசனையே அனைத்திற்கும் அடிப்படை” என்பது என் புரிதல்.. அப்படியென்றால் 1000 வருடங்களுக்கு முன்பே உயர் ரசனை கொண்டிருந்ததாக சொல்லப்படும் ஒரு குடி இவ்வளவு கீழ்நிலை கொண்டது ஏன்? வெறும் மக்கள் தொகை பெருக்கமே காரணமா? என்னால் 99% தமிழர்களின் எந்த பழக்க வழக்கங்களுடனும் ஒன்ற முடியவில்லை. மாறாக, கழிவில் திளைக்கும் பன்றியை கண்ட அருவருப்பும் விலக்கமுமே மிஞ்சுகிறது.
“YOU ARE WHAT YOU EAT” என்றொரு வாக்கியம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. ஒருவேளை கழிவையே அமுது என உண்ணும் சமூகத்தின் அனைத்து ரசனையும் அவ்வாறே ஆகுமா? நம் மக்கள் உண்ணும் உணவு என்பது முழுமையாகவே வெறும் மாச்சத்தும், குழம்பு என்ற பெயரிலான உப்பும் காரமும், மசாலாவும் மிகுந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரே. விளைவாக, விரும்பினாலும் நல் உணவு எங்கும் கிடைக்காது (என் அன்னையின் இல்லம் உட்பட!). அடுத்து, நம் மக்களின் சுகாதாரம். சுய சுகாதாரம் என்ற ஒன்றே நம் மக்களுக்கு இன்னும் அறிமுகமாகவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. நம் உணவு இயற்கையாகவே உடல் துர்நாற்றத்தினை மிகுதியாக தூண்டும் உணவு.. அதனை மறைக்கும் வழிமுறைகளையும் நம் மக்கள் நம்புவதில்லை.
அடுத்து உறைவிட தூய்மை.. சுருங்க சொன்னால், நம் இல்ல சமையல் அறைகளை கண்டால் மற்ற நாட்டினர் நம் வீடுகளில் தண்ணீரும் அருந்த மாட்டினர். இந்த விடயத்தில் இந்தியாவில் வசிக்கும் இந்தியருக்கும் வெளிநாட்டில் பல மில்லியன் பெறுமதியுள்ள வீட்டில் வசிக்கும் இந்தியருக்கும் எந்த வேற்றுமையும் இருக்காது! இவ்வாறு கழிவை விழுங்கி, குப்பையில் வாழ்ந்து நம் மக்களில் பெரும்பாலோர் உடல்களும் சினை பன்றிகளை போன்றே பெருத்து வீங்கி, சீழ் பிடித்து வாழ்கின்றனர். நம் பெண்களில் பெரும்பானோரை ஆடையின்றி ஒருமுறை கற்பனை செய்தால் போதும் பெண்ணாசையை விட்டு விடலாம் (பெண்கள் ஆணாசையையும்தான்!)
நம் மக்களுக்கு திருத்தமான, அழகான, இயற்கையான அனைத்தின் மேலும் ஒவ்வாமையும், விலக்கமும் இருப்பதை நாள்தோறும் காண்கிறேன். உதாரணம், திருத்தமான உடையணிந்து நறுமணம் பூசி ஒரு பெண் சென்றாலே அவரை சக பெண்கள் “தேவடியா மாறி போறா பாரு” என்று கூறுவது.
அடுத்து, தமிழர்களின் குறுகிய மனம்.. நம் குழந்தைகள் எப்படி ஏமாறாமல் இருப்பது என்றும் முடிந்தால் மற்றவரை எப்படி ஏமாற்றுவது என்பது மட்டுமே திறமை என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். நானும் அப்படி “திறமையாக” வளர்ந்தவன்தான். பின்னாளில் பிற நாட்டினரின் மன விரிவையும், உண்மையையும் கண்டு கண்டு கூசி குறுகியவன். நல் வாய்ப்பாக தமிழரை/இந்தியர்களை முயன்று தவிர்த்து பிற நாட்டு பெண் நண்பர்களுடன் வாழ்ந்து ஓரளவு மீண்டவன் (ஓரளவே). இன்றும் நான் நம் நாட்டு “சான்றோரை” காட்டிலும் வேறு ஒரு நாட்டு திருடரை அதிகம் நம்புவேன். நம் நாட்டிலுள்ள குடும்ப குத்துவிளக்குகளை காட்டிலும் மற்ற நாட்டு விலை மகளிர் எல்லா விதங்களிலும் உயர்வானவரே.
நேர்மாறாக, 50 கிலோமீட்டர் கடந்து கேரளாவை அடைந்தாள் அனைத்தும் மாறுகின்றது. (சுகாதாரம் தவிர்த்து.. அந்த விடயத்தில் மொத்த இந்தியாவும் ஒன்றுதான்). ஏன் இப்படி? வெறும் கல்வி என்று நம்ப முடியவில்லை. பசுமையும், நீரும், வளமும் கொண்ட மக்கள் இயற்கையாகவே நல் ரசனையும் கொண்டுள்ளனரா? அதையும் என் அனுபவம் ஏற்க மறுக்கின்றது.. பிலிப்பைன்சின் மணிலா நகரம் இந்தியாவில் உள்ள எந்த நகரத்தையும் விட வறுமையும், மக்கள்தொகை நெருக்கமும் அதிகம் (உண்மையாகவே குப்பைமேட்டிலும், கல்லறை மேட்டிலும் வீடமைத்து வாழும் மக்கள் அநேகம்). ஆனால் மக்களின் நட்பும், உண்மைத்தன்மையும், மன விசாலமும் மிக மிக பெரிது. ஒரு புதியவனின் மேல் அவர்கள் காட்டும் கனிவும், நட்பும், விருந்தோம்பலும் ஏன் ரத்த சொந்தங்கள் வீட்டிலோ, நண்பர்கள் வீட்டிலோ கண்டதில்லை.
என்னுடைய இந்த சுய குடி வெறுப்பு மிக எதிர்மறையானது என்பதையும் உணர்கின்றேன்.. மீள வழி உண்டா? அல்லது என் அடையாளம் துறந்து குறைந்தபட்ச அடிப்படை மனித பண்புகள் பேணும் ஒரு கூட்டத்தில் சென்று வாழ்வை தொடர்வது நல்லதா? பேராசிரியர் லோகமாதேவி எதிர்கொண்ட அனுபவங்களை நான் அடைந்தாள் என் எதிர்செயல்பாடு விபரீதமாகவும் நானே பின்னர் வருந்துவதாகவும் இருக்கும். இழிபிறவிகளை பொறுமையாக எதிர்கொள்ளும் தன்மை என்றும் இருந்ததில்லை.. உயிருக்கு பயப்படாத இழிபிறவிகளை கண்டதும் இல்லை.
உங்கள் நேரத்திற்கு நன்றி
சிவா
அன்புள்ள சிவா,
இன்று அடிப்படை நுண்ணுணர்வுள்ள ஓர் இந்தியர் இந்தியாவை விட்டு வெளியே சென்று, ஐரோப்பியரை அல்லது அமெரிக்கரைச் சந்தித்துப் பழக ஆரம்பித்தால் மூன்று விஷயங்கள் அவரை வந்து அறையும். ஒரு தற்புரிதல் உருவாகும். நீங்கள் எழுதியிருப்பவை அந்த மூன்றின் வெளிப்பாடுகளே.
அ. தூய்மை. பொதுவெளியை, இல்லத்தை தூய்மையாக வைத்திருத்தல் என்பது நம்மிடம் பெரும்பாலும் இல்லை. இன்றுவரை நான் சென்ற நாடுகளில் மிகமிக தூய்மை அற்ற நாடு இந்தியாதான். இந்தியாவுடன் ஒப்பிடும் அளவுக்கு எந்த நாடும் இல்லை – நம்மைவிட வறுமையான ஆப்ரிக்க நாடுகள்கூட. இந்தியாவிலேயே வடகிழக்கு மக்கள் தூய்மையுணர்வு கொண்டவர்கள். ஆனால் வறுமை நிறைந்த பிகார், உத்தரப்பிரதேச மக்களைவிட வறுமை ஓரளவு நீங்கிய தென்னக மக்கள் மோசமான தூய்மையுணர்வு கொண்டவர்கள். வறுமை நீங்கியதால் நுகர்வு பெருகியுள்ளது. அது குப்பைகளை உருவாக்குகிறது. தமிழகத்தில் எங்கும் குப்பை அள்ளும் வழக்கமே இல்லை. கிராமங்கள் எல்லாமே மாபெரும் குப்பைக்குவியல்கள் நடுவேதான் உள்ளன. நீர்நிலைகள் எல்லாமே குப்பைக்குழிகள். எவருக்கும் எந்தச் சுரணையும் அதைப்பற்றி இல்லை.
ஆ. நேர்மை பொதுவெளியிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை என்பதை நாம் வெள்ளையரிடம் கண்டு திகைப்போம். நமக்கு அது பழக்கமே இல்லை. பொய் சொல்வோம். சமாளிப்போம். பொய் வெளிப்பட்டால் கூச்சமே படமாட்டோம். அவதூறுகள் செய்வோம். ஒருவர் பொய் சொன்னார் என எண்ணுவதே மேலைநாடுகளில் அவருக்கு இழைக்கப்படும் பெரிய அவமதிப்பு. ஆனால் நாம் எவர் என்ன சொன்னாலும் உடனே அவர் பொய் சொல்கிறார் என வாதிட ஆரம்பிப்போம். நம் அரசியல்வாதிகள் பொய்யர்கள். ஆனால் அதுவல்ல பிரச்சினை. நம் அடித்தளம் வரை அதேபொய்தான். ஏதாவது தொழில்செய்பவராக இருந்தால் உங்களுக்கே தெரிந்திருக்கும். இங்கே பணவிஷயத்தில் எவரையும் எதன்பொருட்டும் நம்பமுடியாது.
(அண்மையில் ஒரு கட்டுமானத்தின்போது பொருட்களை வெளியே போட்டு வைத்திருந்தார்கள். பொறியாளரிடம் ஒரு வாட்ச்மேன் வைக்கலாமே என்றேன். வாட்ச்மேன் குறைந்தது 5 சதம் திருடுவார். அப்படியே விட்டுவிட்டால் பக்கத்துவீட்டுக்காரர்கள் 5 சதம் திருடுவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பதனால் அதற்குமேல் திருடினால் நமக்கு தெரிந்துவிடும். வாட்ச்மேன் நியமிக்காவிட்டால் வாட்ச்மேனின் ஊதியம் மிச்சம் என்றார். திருடாத வாட்ச்மேன் இல்லையா என்றேன். அப்படி ஒருவரை முப்பதாண்டுகளில் கண்டடைந்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை என்று சிரித்தார். உடனிருந்த அனைவருமே இயல்பாக அதைத்தான் சொன்னார்கள். எந்த காவலரும் கொஞ்சம் திருடியே தீர்வார் என்றனர். அந்த உண்மையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே நம்மால் இங்கே தொழில்புரிய முடியும்)
இ. தொழில்நேர்த்தி. மேலைநாட்டவரிடமிருக்கும் தொழில்நேர்த்தி பற்றிய அக்கறை நமக்கு வியப்பூட்டுவது. சிறு விஷயங்கள்கூட அங்கே கச்சிதமாகச் செய்யப்படுகின்றன. நாம் அப்படியில்லை. சமாளிப்பதுதான் நம் வழக்கம். படிப்பு, வேலை, அன்றாடச்செயல் அனைத்திலும். தொடர்கண்காணிப்பு இல்லையென்றால் இங்கே எந்தவேலையும் சரியாக நடக்காது. இதுவும் எல்லா தொழில்செய்பவர்களும் அறிந்ததுதான்.
ஆனால் அதே அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல ஆண்டுகளாக வாழ்ந்தும் எந்த வகையிலும் அந்நிலத்தவரின் பண்புகளை உணராமல், எவ்வகையிலும் எதையும் கற்றுக்கொள்ளாமல், இந்தியாவிலேயே மானசீகமாக வாழ்பவர்களே நம்மில் பல்லாயிரவர். இங்குள்ள சிறுமைகளே அவர்களை கவர்கின்றன.
இங்கே நாம் இடைவெளியே இல்லாமல் சில்லறை வம்புகளில் திளைக்கிறோம். அமர்த்யா சென் அதைச் சுட்டிக்காட்டி நூலே எழுதியிருக்கிறார். மத வம்பு. அரசியல் வம்பு. சினிமா வம்பு. சில்லறை பாலியல் வம்புகள். நமக்கு எதையுமே கவனிக்கப் பொழுதிருப்பதில்லை. நடுவே இப்படி ஓர் ஒவ்வாமையை ஒருவர் அடைவதுகூட ஓர் உயர்ந்த விஷயம்தான். இது ஒரு தொடக்கம்தான். நம்மைப் பற்றிய ஓர் உண்மைப் புரிதலை நாம் அடைவோம். போலிப்பெருமிதங்களில் இருந்து வெளியே வருவோம். எதிர்காலத்திலாவது நாம் மேம்பட வழி பிறக்கலாம்.
ஜெ