மணிமேகலைக்கு இன்னும் உரை தேவையா?

திரு ஜெயமோகன் அவர்களுக்கு

வணக்கம். தமிழ் எழுத்தின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் அயராமல் ஈடுபட்டுவரும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

1985 இல் அமுதசுரபி இதழில் வெளிவந்த குறுநாவல் (தலைப்பு “மணிகர்ணிகா” என்று நினைக்கிறேன்) வாரணாசியின் காட்சிகளை என் இளமனதில் விதைத்து, அங்கு செல்லவேண்டும் என்ற நீங்காத ஆசையையும் என்னுள் ஏற்படுத்தியது. கடந்த வருடம், என் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு போகக்கூடிய சந்தர்ப்பம் கிட்டியது. கங்கையின் கரைகளைக் காணும் பொழுது “மணிகர்ணிகா” வே எனது ஞாபகத்தில் நின்றது.

1989 க்குப் பிறகு வேலைக்காகத் தமிழ்நாட்டை விட்டு விலகியே இருக்க வேண்டியதாகப் போய்விட்டது. தமிழ் எழுத்தை வாசிக்கும் சந்தர்ப்பம் குறைந்து கொண்டே வந்தது. இருபது வருட எலி ஓட்டப்பந்தயத்தில் பங்கு பெற்று, பழைய விருப்பங்களை மறந்து போய், எனது அடையாளத்தையே இழந்தேன். ஓராண்டு முன்பு, மனம் தளர்ந்து, என்னை நானே வசை பாடிக்கொண்டிருந்த சமயத்தில், ஓர் உதயம். எனது பழைய விருப்பங்களைக் கொஞ்சம் தூசி தட்டி இப்போதைய விருப்பங்களுடன் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம். உடனே பேய் பிடித்தவன் போல், இருபது புத்தகங்களை (எல்லாம் நான் படித்திராத ஆசிரியர்கள்) இணையம் மூலம் ஆணையிட்டு வரவழைத்தேன். அதில் உங்களுடைய “கன்னியாகுமரி”யும் ஒன்று. இருபத்தி நாலு வருட இடைவெளி. உங்களுடைய எழுத்தும் தீர்க்கமும் வளர்ந்திருந்தது. புதுமையான நோக்கு, வீரநதி போன்ற நடை. முடிவை ஒத்துக்கொள்ள மனம் ஒப்பாவிடினும், படைப்பின் தரம் மலையுயரம். அதற்குப் பிறகு, உங்களுடைய தத்துவ நூலான “இந்து மரபின் ஆறு தரிசனங்கள்”. ஆங்கிலத்தில் இதே போன்ற தத்துவவியல் புத்தகங்களைப் படித்திருந்தாலும், தமிழில் ஒரு கை தேர்ந்த எழுத்தாளர், எளிதில் புரிபடாத இந்து தத்துவவியலைப் பற்றி எளிமையான நடையில் எழுதுவது இதுதான் முதல் முறை என நினைக்கிறேன் (நான் அறிந்தவரையில்).

புத்தவியல் ரீதியான புத்தகங்களைப் பல வருடங்களாகப் படித்து வருகிறேன். இந்தியாவின்  சமூகம் மற்றும் பண்பாட்டிற்கு பௌத்தம் அளித்த பங்கு மகத்தானது என்ற நிலைப்பாட்டைப் பல வருடங்களாக என் மனதில் தாங்கி வருகிறேன். இப்போதைய இந்து சமூகம், பௌத்தத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கவில்லை என்ற ஏக்கமும் கூட. இதனை அடிப்படையாக வைத்து ஒரு வரலாற்று நாவலையோ, அல்லது ஓர் ஆய்வு நூலோ எழுதவேண்டும் என்ற ஆசை.

மணிமேகலை கடைசி இரு காதைகளில் சொல்லப்படும் மிக ஆழமான புத்த சிந்தனையை வைத்து ஒரு நீள் கட்டுரை எழுதும் எண்ணத்தில், இப்போது ஆய்வில் ஈடுபட்டிருக்கிறேன். Anne E மோனிஸ், கமில் சுவலபில் போன்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களின்  படைப்புகளைப் படித்து வருகிறேன். உங்களுடைய ஆய்வுகளுக்கு மிகவும் உதவி புரிந்த, உங்களைப் பொறுத்தவரையில் சிறந்த மணிமேகலை உரை நூலை எனக்கு சிபாரிசு செய்வீர்களா?

நேரம் கிடைக்கும்போது இம்மடலுக்கு விடை அளித்தீர்கள் என்றால் மகிழ்வேன்.

உங்கள் பயணத்தில் மேலும் பல இலக்குகளை அடைய வாழ்த்துக்கள்

நன்றி.
கணேஷ்
நியூ டெல்லி

அன்புள்ள கணேஷ் அவர்களுக்கு,

ஒரு குறிப்பிட்ட வயதுவரை லௌகீகமாக இருப்பதற்கான உரிமை எல்லாருக்குமே உள்ளது. கடைசிவரை அப்படி இருப்பது பிழை. நீங்கள் இதுவரை விட்ட வருடங்கள் இழப்புதான், நீங்கள் கலையிலக்கியத் துறையில் ஆர்வம் கொண்டவர் என்றால் மீண்டு வரவே முடியாது. ஆனால் ஆராய்ச்சி என்றால் தவறில்லை. நல்ல ஆய்வுகளை முதுமை நோக்கிச் செல்லும் வருடங்களில் நிதானமாகவும் பொறுமையாகவும் செய்யமுடியும். வாழ்த்துக்கள்

நான் எழுதிய சில நூல்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். 1.ஆழ்நதியைத்தேடி 2. இந்திய ஞானம். இவை இரண்டிலும் பழந்தமிழிலக்கியத்தை இந்திய சிந்தனை மரபின் பின்னணியில் வைத்து ஆராய்வதற்கான சில முயற்சிகளைச் செய்திருக்கிறேன்

சமீபத்தில் இணையத்தில் வெளியான அயோத்திதாசர் -ஒரு முதற்சிந்தனையாளர் என்ற நீண்ட கட்டுரையையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். குறிப்பாக மணிமேகலை பற்றிய ஆராய்ச்சிக்கு.

மணிமேகலை பற்றிய ஆய்வுகளுக்கு உ.வே.சாமிநாதய்யரின் மணிமேகலை உரை முக்கியமானது. அவரது முன்னுரையும் அவர் எழுதிய பௌத்தம் பற்றிய அறிமுக நூலும் இன்றளவுக்கும் முக்கியமானவை.திருவிக எழுதிய ’தமிழ் நூல்களில் பௌத்தம் ‘ மயிலை சீனி வெங்கடசாமியின் ‘பௌத்தமும் தமிழும்’ சோ.ந.கந்தசாமியின் ’பௌத்தம்’ சு.மாதவன் எழுதிய ‘தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த  சமண அறங்களும்’  ஆகிய நூல்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஔவை துரைசாமிப்பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோர் மணிமேகலை பற்றிக் குறிப்பிடத்தக்க ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

உண்மையில் தமிழிலக்கியமரபின் பின்னணியில் மணிமேகலையை நிறுத்தி ஆராயும் முயற்சிகள் எல்லாமே முடிந்தவரை செய்யப்பட்டுவிட்டன என்றே சொல்லவேண்டும். கடந்த முப்பதாண்டுகளில் இலக்கணத்தைக்கொண்டும் சொற்பிரிப்பு சாத்தியக்கூறுகளைக்கொண்டும் நம் தமிழாசிரியர்கள் நிறையவே பொருள்கொண்டுவிட்டார்கள்- அனேகமாக பிழையாக.

காரணம், நம் தமிழாய்வாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமிழன்றி வேறேதும் தெரியாது. வரலாற்றையும் தத்துவத்தையும் ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு அத்துறைகளின் அடிப்படைகள் தெரியாது. அத்துறைகளின் புதிய வளர்ச்சிகள் அறிமுகமில்லை. பழைய நூல்களை இன்றைய சூழலில் வைத்து வாசிக்குமளவுக்கு நவீனக் கோட்பாடுகள் பழக்கமில்லை. ஆகவே குண்டுச்சட்டிக்குதிரைப்பயணங்களாகவே அவை உள்ளன.

தமிழிலக்கியத்தை பொதுவாகவும், பௌத்த சமணநூல்களை வாசித்துப் பொருள்கொள்ளும் பெரும் பணி இன்று அப்படியே எஞ்சி நிற்கிறது. அதை உண்மையிலேயே உருப்படியாகச் செய்யவேண்டுமென்றால் செய்தாகவேண்டியவை என கீழ்க்கண்டவற்றைச் சொல்வேன்

1. பாலி, திபெத் , சம்ஸ்கிருத மொழிகளிலும் பிற இந்திய மொழிகளிலும் உள்ள பௌத்த, சமண நூல்களை வாசித்து அவற்றின் பின்னணியில் மணிமேகலை பேசும் பௌத்தமரபைப் பொருள் கொள்ளமுயல்தல்.

2. மணிமேகலையின் காலகட்டம் கிபி நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு என வகுத்துக்கொண்டால் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பிற இந்திய தத்துவ விவாத நூல்களை வாசித்து அவற்றின் விவாதப்பரப்பில் மணிமேகலையை வைத்து ஆராய்தல்.

3.மணிமேகலை பல கடல்தீவுகளைப்பற்றிப் பேசுகிறது. இக்காலகட்டத்தில் இந்தத் தீவு மக்களுடன் தமிழகம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தது எனத் தெரிகிறது. தீவுகளில் புத்தமதம் இருந்ததும் தெரியவருகிறது. பர்மா, இலங்கை, இந்தோனேசியா தீவுகளில் உள்ள பௌத்த மரபின் வரலாற்றையும் சமயக்குறியீடுகளையும் மணிமேகலையுடன் பொருத்தி ஆராய்தல்.

இவற்றின் அடிப்படையில் புதியதாக ஏதேனும் நகர்வுகள் நிகழ்ந்தால் மட்டுமே பயனுள்ளது. அஃதல்லாமல் மீண்டும் மணிமேகலையைப் பழைய தமிழ் உரைகளையே வைத்துக்கொண்டு உரை எழுதுவதனால் எந்தப் பயனும் இல்லை

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு
உங்களின் பதில் கிடைத்தது. நேரம் ஒதுக்கி பதில் அளித்தமைக்கு எனது நன்றிகள். உங்களின் கருத்துக்கள் மிகத் தெளிவாய் இருக்கின்றன. சிந்தனை த் தெளிவே சொற்களின் தெளிவை அளிக்கின்றன என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவு கூர்கிறேன்.
(௧) நீங்கள் கோடிட்ட நூல்களை வாங்கிப் படிப்பேன்.
(௨) அயோத்திதாசர் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்த பிறகுதான், நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிவு செய்தேன். மிகப் பயனுள்ள கட்டுரை.
(௩) நீங்கள் சொன்னது போல தமிழிலக்கியப் பின்னணியில் பல ஆராய்ச்சி நூல்கள் வந்துவிட்டன. எனது ஆய்வு தமிழிலக்கியப் பின்னணியை ஆராயும் முயற்சியாக இருக்காது. புத்த தத்துவங்களைப் பற்றி ஆராயும் முயற்சியாகவே இருக்கும்.
(௪) நீங்கள் சொன்ன மூன்று அணுகுமுறையில், முதல் இரண்டையொட்டியே எனது இப்போதைய சிந்தனைகள் நகர்கின்றன. Anne E Monius அவர்கள் எழுதிய மணிமேகலை கால புத்த சமூகம் பற்றிய ஆய்வுரையில் மணிமேகலையின் 29ஆவது காதையில் விவரிக்கப்படும் “அளவை” Dignagar எழுதிய Nyayapravesa என்ற சம்ஸ்க்ருத நூலில் சொல்லப்படும் Buddhist Logic -உடன் ஒத்துபோவதாகக் கூறியுள்ளார். திக்நாகர் காஞ்சிபுரத்தில் பிறந்துவளர்ந்தவர் என்று வரலாறு கூறுகிறது. மணிமேகலை கதையும் காஞ்சிபுரத்தில் முடிவடைவதாகவே படைக்கப்பட்டிருக்கிறது. இப்போது திக்நாகர்-இன் Nyayapravesa வின் மொழிபெயர்ப்பை ஆங்கிலத்தில் வாசித்து வருகிறேன். நீண்ட ஆனால் சுவாரஸ்யமான பயணத்தின் ஆரம்பத்தில் இருக்கிறேன். முயற்சியைக் கைவிடாமல் இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கை, உங்களின் கடிதம் கண்டவுடன் வந்துவிட்டது. வைட்டமின்-என்ற சொல்லுக்குத் தமிழ் சொல் இருக்கிறதா? – உங்களுக்கு அடைமொழி வைக்கத்தான்!
நன்றிகளும் வாழ்த்துக்களும்
கணேஷ்

முந்தைய கட்டுரைமண்டேலா-பேட்டி
அடுத்த கட்டுரைவாழும் கணங்கள்-கடிதங்கள்