க.நா.சு அரங்கு- பெருந்தேவி பதிவு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தமிழ் ஆளுமைகளுடனான, இணையம் வழியான இலக்கிய கூட்டத்தை அ. முத்துலிங்கம் அவர்களுடன் ஜூலை 25, 2020-ல் ஆரம்பித்து நாஞ்சில் நாடன், தியடோர் பாஸ்கரன், மணி ரத்னம், அ.கா. பெருமாள், கி.ராஜ நாராயணன் என அழியா ஆவணங்களென திகழும் நிகழ்வுகளை நடத்தினோம். ஆகஸ்ட் 2022-ல் க.நா.சு உரையாடல் அரங்கு என முறையே பெயரிட்டு,  யுவன் சந்திரசேகர், தாமஸ் ப்ரூக்ஸ்மா, இரா. முருகன், சுனில் கிருஷ்ணன், தேவ தேவன், பாவண்ணன், சுரேஷ்குமார இந்திரஜித்  எழுத்தாளர்களுடனான  உரையாடலை தொடர்ந்தோம். இந்த நிரையில் நேற்று கவிஞர் பெருந்தேவியுடன் நடத்திய நிகழ்வு இணைந்து கொள்கிறது.

ஒருங்கமைப்பாளர் ஜா. ராஜகோபலன் குறிப்பிட்டதுபோல, கவிஞர் போகனை Quote செய்து, பெருந்தேவி-யைப் பொருத்தவரையில் காக்கைப் பாடினியாரும் அவரது காலத்துக் கவிஞர்தான். கவிதை எழுதுபவர்கள் எனில் சங்ககாலம் தொட்டு இன்று வரை ஒரே காலத்தவர்தான், அதில் பழமை புதுமை என இல்லையென சொல்வார் என இனிமையான அறிமுகம் கொடுக்க, விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார், யாயும் ஞாயும் யாராகியரோ பாடலைப் பாடி காலஇடைவெளிகளை இல்லாமல் செய்தார்..

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், வாசிப்பில் முத்திரை பதித்தவர்களான ஜெயஸ்ரீ, பழனி ஜோதி, தங்களுக்கான சிற்றுரைகளை ஆற்ற தயார் நிலையில் இருக்க, ஜா. ராஜகோபலன், வரவேற்புரை முடித்தவுடன், பெருந்தேவியிடம், தாங்கள் கவிதையில் நுழைந்த பின்னணி என்ன என்ற கேட்டார்.  கேள்வியில் அதிரும் முதல் பெஞ்ச் மாணவனைப் போல பெருந்தேவி சிறிது அதிர்ச்சியுற்றாலும்,   உரையாடலின் சுவாரசியம் கருதி, தொடுக்கப்பட்ட கேள்வி என புரிந்துகொண்டு,    ஒன்பதாம் வகுப்பிலேயே மு. மேத்தா கவிதைகளை வாசித்த அவர், வானம்பாடி கவிஞர்கள்தான் தான் கண்டுவந்த வழி என்று சுய அறிமுகம் கொடுத்தார்.  நல்ல கதை  ஒன்றின் சுவாரஸ்யம்  முதல் பத்தியிலேயே பற்றிக்கொள்வதுபோல, உரையாடலின் வீச்சு இங்கேயே பற்றிக்கொண்டது.

குறுங்கதைகளைப் பற்றிப் பேசிய சுனில் கிருஷ்ணன், ஒரு ஆவணத்தை தயாரித்து வைத்திருப்பதுபோல தகவல்களை அடுக்கினார். தமிழில் பாரதியரின் “ஆனைக்கால் உதை” கதையே தொடக்கம் , வண்ணநிலவனின் மிருகம் கதையும் குறுங்கதையில் அடக்கம் என்றார் . லிடியா டேவிஸின் குறுங்கதைகளில் தனக்கான ஈர்ப்பைச் சொல்லி, ஆங்கிலத்தில் வெளிவரும் வார்த்தைகளை வைத்து வரையரைக்கப்படும் குறுங்கதை வடிவங்களை எடுத்துக் கூறினார், தமிழில் இதுவரை  எழுதப்பட்ட குறுங்கதைகளில் பெருந்தேவி எழுதியவை முதன்மையானது என்றார். அவர் உதாரணங்களாக எடுத்துச்சொன்ன, உறவுகளை விவரணை செய்யும் நல விசாரனை, கொசு, ஜானுவும் ராமுவும்,  வார்த்தைகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் கதைகள் என சொல்லிக்கொண்டே போக உரை கேட்கிறோமா, கதை கேட்கிறோமா என  நேரம் போனது தெரியாமல் வாசகர்கள் உறைந்திருந்தார்கள். சுனில் தானாகவே உணர்ந்து உரையை தக்க நேரத்துக்குள் முடிக்கவேண்டும் என்று முடித்துக்கொண்டார். ஆனால், அவரது உரையின் நீள்வடிவம் நீலி இதழில் வரவிருக்கிறது என்ற செய்தி அறிந்ததால் அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதி.

பெருந்தேவி எழுதி , “தேசம்-சாதி-சமயம்: அதிகாரத்தைப் புரிந்துகொள்ளல்” , “உடல்-பால்- பொருள்: பாலியல் வன்முறை எனும் சமூகச் செயற்பாடு” , “கவிதை பொருள்கொள்ளும் கலை”  என மூன்று கட்டுரை நூல்கள் வந்துள்ளன. ஜெயஸ்ரீ அவர்கள், உடல்-பால்-பொருள் மற்றும் கவிதை பொருள் கொள்ளும் கலை  நூல்கள் குறித்த தனது புரிதலையும் அவற்றை மற்றவர்கள் ஏன் வாசிக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார். கல்லூரியில் படிக்கும் தன் இரு மகன்களை கூப்பிட்டு அமரவைத்து, உடல்-பால்-பொருள் நூலை வாசிப்பதன் மூலம் பாலியல் வன்முறை பற்றிய புரிதல் மேம்படும் என்று அறிவிறுத்தியுள்ளார்.  இலக்கியப் பிரதிகளிலிருந்து இந்த நூல் அலசும் கதைகளையும் அதில் பெண்ணின் சம்மதம் பற்றி பெருந்தேவி கொடுக்கும் ஒரு விழிப்புணர்வையும், வல்லுறவுக்கான முழுப்பொறுப்பை யார் சுமக்கவேண்டும் என்ற கேள்வியையும் அடிக்கோடிட்டுப் பேசினார். உரையை கேட்ட நண்பர்கள் இந்த நூலை வாசிப்பதுடன் ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம், சில நேரங்களில் சில மனிதர்கள், புதுமைப்பித்தனின்  விபரீத ஆசை கதைகளை மீள்வாசிப்பு செய்வார்கள் என நினைக்கிறேன்.

“கவிதை பொருள்கொள்ளும் கலை” நூலின் வழியாக ஆத்மாநாம், நகுலன், ஞானக்கூத்தன், சேரன், பாரதியார் கவிதைககளை  புரிந்துகொள்ள புதிய நுணக்கங்களை கண்டறிந்ததாக சொன்னார். சுரேஷ் ப்ரதீப், தனது யூட்யூப் சேனலில், அறிமுகம் செய்யும் நூல்களில் , இந்த நூலை ஒருமுறை அறிமுகப்படுத்தி இதே பார்வையில் சொல்லியிருப்பதை நான் இங்கே நினைவு கூறுகிறேன். பெருந்தேவியின் நூல்கள் கிடைப்பதில் ஒரு சிக்கல். குறிப்பாக இந்தப் புத்தகம். இதை பதிப்பகத்தார் வாசித்தால், கிண்டிலிலாவது கிடைக்கும்படி ஆவண செய்யவும்.

கவிதைகள் வாசித்த அனுபவத்தை தன் அகத்துள் மட்டும் வைத்து உரையாடும் பழனிஜோதி, இம்முறை புறத்தில் உரையாட தயாராகிவந்துள்ளதாக முத்தாய்ப்பு வைத்தார். அது ஒரு Disclaimer போலத் தோன்றினாலும், அவரது உரையில், பெருந்தேவியின் கவிதைகள் அவருக்குள் ஏற்படுத்திய சலனத்தை  உணரமுடிந்தது. தனது கோஸ்ட்ரிகா பயணத்தில் தான் பார்க்கப்போன பறவைகள் வேறு, ஆனால் அங்கு பார்த்து அதிசயித்த பிட் வைபர் எனும் பாம்பும் வியக்கத்தக்கதாக இருந்தது. அதுபோல், கவித்துவ உச்சங்கள், படிமங்கள் நிறைந்த கவிதைகள் மட்டுமல்ல தமிழ் இலக்கியத்தில் , பெருந்தேவியின் எதிர்கவிதைகளும் முக்கியம் என்பதற்காக தனது பயண அனுபவத்தை பகிர்ந்தார் என நான் புரிந்துகொள்கிறேன். நேரடியாக தன்னைப் பாதித்த, மாற்றுக்கோணத்தை பதிவு செய்யும் கவிதைகள் என “எழுத்து”, “அன்றாடத்தின் மௌனத்தை கலைத்தவர்கள்”, “குட்டி ஸ்டூல்” போன்றவற்றை உதாரணங்களாக காட்டினார்.

ஜெயஸ்ரீ எழுதும் பதிவுகளில் திருத்தம் எதுவும் தேவையில்லை, பழனி ஜோதி , சுக்ரி குழுவின் வழியாக இலக்கிய உரையாடல் நடத்துபவர், ஜமீலா, நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாடல்களை பாடுபவர் என ஜா. ராஜகோபலன் செய்த அறிமுகங்களினால்,  பெயரல்லாத ஒரு அடையாளத்தை கவனித்துக்கொண்டிருந்த வாசகர்களுக்கு கொடுத்திருக்கும்.

வயலட் பூக்கள் அவரிடம் கேட்கும் தன்னிலிருந்து வெளியேறுவது எப்படி என்ற கேள்வி,  தான் கண்ட சில அமானுஷ்யங்களை மதத்தை சம்மந்தப்படுத்தாமல் எப்படி விளக்குவது போன்றவற்றை தத்துவ விசாரணையாக பார்ப்பதாக வேணுவின் கேள்விக்கு விருந்தினர் பதில் சொன்னார். அவர் எழுதும் எல்லாக் கவிதைகளையும் எதிர்கவிதைகள் என்று சொல்லமுடியாது, புரட்சிகரமாக எழுதுவது, ஒரு நிறுவனத்திற்கு எதிராக எழுதுவது என்பதெல்லாம் எதிர்கவிதைகள் ஆகாது, கொள்கைகளுக்கு எதிரான கவிதைகள்தான் எதிர்கவிதைகள் என்று அனைவரும் புரித்துகொள்ளும் விளக்கங்களும் கேள்வி பதில் நேரத்தில் கிடைத்தது. அறையில் எதிர் எதிராக அமர்ந்து பேசுவதுபோல் நடந்த உரையாடலில், ஐங்குறு நூறில் அவர் கண்டுணர்ந்த எதிர்கவிதை பேசுபொருளையும், நாச்சியார் மானமில்லா பன்றி என்று ஒரு பாடலில் குறிப்பிடுவதையும் சுட்டிக்காட்டியமை இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்களுக்கு எதிர்கவிதை பற்றிய அறிமுகம் கிடைத்த நல்வாய்ப்பு.

“மொழிபெயர்ப்பாளர்கள் துரோகிகள்” என்கிறார் அசோகமித்திரன்.  அந்தக் கூற்றை ஒட்டி குறைந்தபட்சம் துரோகத்தோடு மொழியாக்கம் செய்வதே சவால் என தான் அக்கமகாதேவி கவிதைகளை மொழியாக்கம் செய்த அனுபவத்தை, “மூச்சே நறுமணமானால்” நூல் குறித்த கேள்விக்குப் பதிலாக பகிர்ந்துகொண்டார். மொழியாக்கத்தில் ஈடுபட்டுள்ள  நண்பர்கள் இந்த உரையைக் கேட்டால் தான் செய்யும் துரோகம் குறைந்தபட்சமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள்.

தமிழை உயிரென  நேசிக்கும் பெருந்தேவி அவர்களுடன் உரையாடியதை என்னைப்போன்றே ஒவ்வொரு வாசகரும் பெருமையாகவும் நிறைவாகவுமே உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். குறுங்கதையாகட்டும், கவிதைகளாகட்டும் அவர் ஒவ்வொரு வார்த்தையையும் கணக்குப் பார்த்துத்தான் செலவழிக்கிறார், சங்க இலக்கியத்தில் இருந்த  “Word Economy” என்பதை நாம் எப்போழுது இழந்தோம் என்று ஒரு கேள்வியை முன் வைத்தார். அதை மீட்போம் என்பது இந்த நிகழ்வின் வழியாக நாம் எடுக்கும் உறுதிமொழியாக ஆகட்டும்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

முந்தைய கட்டுரைசைவத்தை மூன்றுநாளில் கற்பதா?
அடுத்த கட்டுரைவெண்முரசு வருகை