ஏழாம் உலகம் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை சுசித்ரா ராமச்சந்திரன் செய்திருந்தார். சென்ற ஆண்டு அந்நூல் ஜக்கர்நாட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. மிகச்சிறந்த மதிப்புரைகள் பெற்று முதன்மையான விற்பனையில் உள்ளது. அந்நூல் அமெரிக்க இலக்கிய மொழிபெயர்ப்பு விருது ( ALTA- American )க்கு இறுதிப்பட்டியலில் ஆறுநூல்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் இருந்து ஒரு நூல் அந்த விருதுக்கான பரிசீலனைக்குச் செல்வதே ஓர் அரிய நிகழ்வு. தமிழில் இருந்து செல்வது மேலும் அரிய நிகழ்வு. சென்ற முறை பிரியம்வதா ராம்குமார் மொழியாக்கம் செய்த அறம் கதைகளின் ஆங்கில வடிவமான இறுதிப்பட்டியலுக்குச் சென்றது. பிரியம்வதா அமெரிக்கா சென்று விருதுவிழாவில் கலந்துகொண்டார். ஒரு வியட்நாமிய நாவலுக்கு அவ்விருது அளிக்கப்பட்டது.
இவ்வாண்டு அக்டோபர் இறுதியில் விருது அறிவிக்கப்படும் என தெரிகிறது. என் நாவலுக்கு விருது அறிவிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் இது ஒரு பெரிய ஏற்புதான்.
இம்முறை விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட பிற ஐந்து நூல்களை கண்டேன்.
- இந்தோனேசியாவில் இருந்து சப்தா அர்மண்டியோ (Sabda Armandio) வின் Hours with Gaspar.
- ரஷ்யமொழியில் இருந்து நிகலாய் ஸபோலோட்ஸ்கி (Nikolai Zabolotsky) எழுதிய Columns.
- ஸ்பானிஷ் மொழியில் அகுஸ்தா ஹிகா ஓஷிரோ (Augusto Higa Oshiro) எழுதிய The Enlightenment of Katzuo Nakamatsu
- போர்ச்சுக்கல் மொழியில் விக்டர் ஹெரிங்கர் (Victor Heringer ) எழுதிய The Love of Singular Men
- போலிஷ் மொழியில் சூசன்னா ஜின்ஸெங்கா (Zuzanna Ginczanka ) எழுதிய On Centaurs & Other Poems
நான்கு நூல்களும் ஐரோப்பாவில் இருந்து. ஆசியாவில் இருந்து இரண்டு, நானும் இந்தோனேசிய எழுத்தாளரும். இந்த விகிதாச்சாரமே ஆசிய நூல்கள் அமெரிக்காவில் கவனிக்கப்படும் விதத்தைக் காட்டுகிறது. தமிழ் நூல் உள்ளே நுழைந்தது என்பது ஓர் ஆச்சரியம்தான்.
நண்பர்கள் அமர்ந்து படித்து அந்தப்பெயர்களை உச்சரிக்க முயன்று கொண்டிருந்தோம். போலந்து பெயரை என்னால் சொல்லவே முடியவில்லை. பலவகையில் உச்சரித்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது ஒரு நண்பர் சொன்னார், எங்கோ போர்ச்சுக்கலிலோ இந்தோனேசியாவிலோ ஜெயமோகன் என்னும் பெயரை உச்சரிக்க எவரோ இப்போது மூச்சுத்திணறிக்கொண்டிருப்பார்கள் என்று.
ஒரு பெயரை உச்சரிக்க முயன்று சீற்றம் அடைந்த ஈரோடு கிருஷ்ணன் இனிமேல் என் பெயரை ஆங்கில நூல்களுக்கு பாகுலேயன்பிள்ளை ஜெயமோகன் என முழுமையான பாஸ்போர்ட் பெயர் வடிவில் வைக்கவேண்டும் என ஆலோசனை சொன்னார். ”நாம மட்டும்தான் கஷ்டப்படணுமா என்ன?”
இவ்வாண்டுக்கான நடுவர்கள் எஸ்தெர் ஆலன் (Esther Allen) அலெக்ஸா ஃப்ராங்க் (Alexa Frank) மற்றும் யுராயோன் நோயல் (Urayoán Noel ) நாவல் பற்றி நடுவர்களின் குறிப்பும் ஊக்கமூட்டுவதாக அமைந்தது.
அபிஸ் இன்னும் அமெரிக்காவில் வெளியாகவில்லை. ஒப்பந்தங்கள் முடிவுற்றன. அனேகமாக 2026 வாக்கில் அமெரிக்கப் பதிப்பக வெளியீடாக வரலாம். தமிழிலிருந்து அமெரிக்காவில் இலக்கியப்படைப்புகள் நேரடியாக வெளியாவதென்பது ஒரு பெரிய தொடக்கம். தமிழில் எழுதும் அத்தனை நல்ல படைப்பாளிகளையும் முன்வைப்பதற்கான ஒரு வாய்ப்பெனவே அதை நான் கொள்கிறேன்.
There is nothing called international Jeyamohan interview