கி.ரா.கோபாலன் கவிதைகளும், தமிழிசைப் பாடல்களும் எழுதியிருக்கிறார். சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி. அவர் ‘ நித்திரையில் வந்து என் உளம் கவர்ந்தவன் யாரோடி, கண்ணன் என்றால் அவன் கையில் குழலில்லை, முருகன் என்றால் அவன் கையில் வேலில்லை’ என்ற ஒரு பாட்டு எழுதி , அக்காலத்தில் பிரபலமாக இருந்த என்.சி. வசந்தகோகிலத்திடம் காண்பித்தார். அவர் அதை இசைத்தட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார். முன் பணமாக முப்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.
ஆனால் இசைத்தட்டு வெளி வந்த போது, சாகித்ய கர்த்தா சுத்தானந்த பாரதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது கி.ரா. கோபாலன் கோபமடந்து வசந்தகோகிலத்தின் கணவர் ‘சாச்சி’ என்று அழைக்கப்பட்ட சதாசிவத்திடம் முறையிட்டார். சாச்சி அதற்குப் பதில் கூறியதாக சொல்லப்படுவது: “இதோ பார், கி.ரா.கோபாலன் என்றால் யாருக்குத் தெரியும்? சுத்தானந்த பாரதி என்றால் எல்லாருக்கும் தெரியும். கூட ஒரு முப்பது ரூபாய் வாங்கிக் கொண்டு, பேசாமலிரு.கோர்ட்டுக்குப் போனால் ஆயிரக் கணக்கில் செலவாகும்”.
அந்த இசைத்தட்டு ஆயிரக் கணக்கில் விற்றது. கோபாலனுக்குக் கிடைத்தது முப்பது ரூபாய்தான். சாச்சி கொடுக்கத் தயாராக இருந்த முப்பது ரூபாயை அவர் வாங்கிக் கொள்ளவில்லை- இந்திரா பார்த்தசாரதி குறிப்பு