ஜே ஜே சில குறிப்புகள் உள்ளிட்டு எத்தனையோ நாவல்கள் வெளியான காலத்தில் புதுமையான வசீகர வடிவ வெளிப்பாடு கொண்டிருந்தாலும் பழகியதும் காலாவதி ஆகும் வடிவப் புதுமையே அவை. விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து கால் நூற்றாண்டு கடந்த பின்னரும், அதன் வடிவம் முற்றிலும் பழகிய பின்னும், அதன் ‘புதுமை‘ குன்றாமல் அவ்விதமாகவே தொடர காரணம் என்ன என்று நோக்கினால், அதன் வடிவ கலைப்பு என்பது, இடமும் காலமும் அடையும் செறிவான வளர் சிதை மாற்றம் ஒன்றின் புனைவு சித்தரிப்பாக இருப்பதே. காலமும் இடமும் என்ற என்றுமுள்ள தத்துவார்த்த அலகு படிந்தே விஷ்ணுபுரம் நாவலின் வடிவ புதுமையில் உள்ள என்றுமுள்ள அம்சம் அவ்வாறு திகழ்கிறது.
அந்த வகையில் விஷ்ணுபுரம் நாவல் கொண்ட இந்த வடிவ போதத்தை தொட்டுப் பார்க்க முயன்ற நாவல் என்று, மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலுக்கு அடுத்து இப்போது kv ஜெயஸ்ரீ அவர்கள் மொழியாக்கத்தில் வம்சி பதிப்பகம் வழியே வெளியாகி இருக்கும் அவரது முறிநாவு நாவலை சொல்வேன்.
வாலை ஊன்றி ஒன்றை ஒன்று பின்னி எழுந்து நின்று, பத்தி விரித்து ஒன்றை ஒன்று முகம் பார்த்து உறைந்து நிற்கும் இரட்டை நாகத்தின் வடிவில் அமைந்த நாவலின் ஒரு நாகம் எட்டாம் நூற்றாண்டு, மற்றொரு நாகம் பன்னிரண்டாம் நூற்றாண்டு. நாகம் கொண்ட பிளந்த நாவு போல அந்தந்த நூற்றாண்டு வரை கண்ட கலாச்சார, வரலாற்று,ஆத்மீக பிளவுகள். 12 ஆம் நூற்றாண்டு வரை மையத்தில் நிற்கும் நெடிய நாவின் கதை. அந்த நாவால் விளிம்புகளுக்கு தள்ளப்பட்ட துண்டிக்கப்பட்ட நாவுகளின் கதை.
இந்த முறிநாவு நாவலுக்குள் விஷ்ணுபுரம் நாவலை நினைவூட்டும் மற்றொரு அலகு கேரளத்தில் எங்கோ அமைந்திருப்பதாக சித்தரிக்கப்படும் அவளூர் எனும் நிலம். 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த அலங்காரனுக்கு புரிந்தும் புரியாத லிபியும் மொழியும் கொண்ட சுவடிகள் சில கிடைக்க, அந்த பித்து முற்றி, அதில் உள்ள அவளூர் எனும் நிலத்தை தேடி, சில ஆளுமை கொண்ட சரிவுகள் சில வரலாற்று கலாச்சார சரிவுகள் இவற்றை கண்ட படி பயணித்து, அவளூர் நிலத்தை கண்டடைந்து அங்கே ஒரு வரலாற்று ஆளுமை வழியே அந்த சுவடியில் என்ன இருக்கிறது என்பதை அறிகிறான். அந்த சுவடியில் பூலோக வரலாற்றால் பாதாள லோகத்துக்கு தள்ளப்பட்ட கதியற்ற ஆத்மாக்கள் கொண்ட வேதனைக் கதைகளும், அவர்களுக்குள் உருவாகி பிறர் அறியாது அவர்களுக்குள் மட்டுமே புழங்கிய தனி மொழியில் அமைந்த அவளூரின் வரலாறு அந்த நிலத்து மொழியின் அகராதி இவற்றுடன் கிடைத்து வாசிக்கப்பட்டு, அது உரியவர் கைக்கு போய் சேருகிறது. (அந்த உரியவர் வாசகர் ஆகிய நாம் என்பது நாவல் அளிக்கும் மற்றொரு கற்பனை சாத்தியம்).
விஷ்ணுபுரம் நாவலுடன் இந்நாவல் கொண்டிருக்கும் மற்றொரு தொடர்பு என்பது இது நீலியின் கதை என்பது. விஷ்ணுபுரம் நாவலில் பேராலயம் உள்ளிட்ட எல்லாமும் (கால) வெள்ளத்தால் அடித்து செல்லப்படுவதை முகடு முனை ஒன்றில் நின்றபடி நீலி பார்திருப்பாள். இந்த நாவலில் அவளூர் நிலம் சார்ந்த வளர் சிதை மாற்றத்தை தாண்டி நின்று அதை பார்த்து கொண்டிருப்பவளாக நீலி வருகிறாள்.
நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவல் போலவே இந்த நாவலின் ஒரு இழை வஞ்சிக்கப்படும் பெண்களை தொடர்ந்து, நாவலின் முதன்மை பாத்திரமான அலங்காரனின் குல தெய்வம், நரபலி கொடுக்கப்பட்ட நீலி துவங்கி, சமனத்தின் அம்பிகா யக்ஷி தொட்டு, இலங்கை தொன்மத்தின் விஜயன் மனைவியான குவண்ணா வரை பலப் பல பெண்களை அவர்களின் துயர் கதைகளை ஒரு வரிசையில் நிறுத்தி அவளூர் காவுகள் தோறும் சிலைகள் என அவற்றை பதிட்டை செய்கிறது.
வேலன் வெறியாட்டு, மது மைதுனம் உள்ளிட்டு நடக்கும் வாமச்சார தாந்த்ரீக சடங்குகள், மதுரை விட்டு கேரளம் வந்து பகவதி என்று அமர்ந்த மீனாட்சி என அன்றைய கேரளத்தின் பல்வேறு கலாச்சார துடிப்புகளை தொட்டு செல்லும் இந்த நாவல் முதன்மையாக தேடி செல்வது, வரலாற்றில் இந்த வர்ண சாதி படி நிலைகள் இவை இவ்வாறு நீடிக்க நிகழ்ந்த அறமற்ற ஈனத் தருணங்களை. நாவலின் முதன்மை கதா பாத்திரமான 12 ஆம் நூற்றாண்டு அலங்காரன், அவனது முன்னோரான 8 ஆம் நூற்றாண்டு குமரன் இருவருமே வேட்டையாடி சமூகத்தை சேர்ந்தவர்கள். மதப் பண்பாட்டில் கோயிலுக்குள் கண்ணப்ப நாயனார் என்றான திண்ணனுக்கு இடம் உண்டு. இவர்களுக்கு? விவசாயம் செய்ய முயலும் குமரன் இந்த மத பண்பாடு கட்டி எழுப்பிய நில உடைமை அரசின் கீழ் அதிகாரத்தால் வேட்டையாட படுகிறான். யார் யார் எதை செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்த படுகிறான்.புறக்கணிக்கப்பட்ட சாதி ஒன்றில் தோன்றி ஆழ்வார் ஆனவரின் கொடி வழி ஒருவர், எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் வெளியே நின்றுதான் வணங்கும் நிலையில் இருக்கிறார்.
சைவ வைணவ மோதல், வைணவதுக்கு உள்ளேயே தென்கலை வடகலை மோதல், ஆசீவகர் பௌத்தர் மோதல், பௌத்ததுக்கு உள்ளேயே மகா யானம் ஈன யானம் துவங்கி பல்வேறு பிரிவின் மோதல், தென் நிலம் இலங்கை நிலம் இவற்றின் இடையே உள்ள மோதல், சிங்கள தமிழ் மோதல், புத்தன் பல் வேண்டி இலங்கை நிலத்தில் நிகழும் ரத்த களரி, என 12 ஆம் நூற்றாண்டு வரை தென் நிலத்தின் பக்தி காலத்தின் மத பண்பாட்டு வரலாற்றின் இருண்ட பகுதிகளின் குறிப்பிட்ட தருணங்களை நெருங்கி உசாவுகிறது இந்த நாவல்.
நாவலின் தலைப்பே இந்த நாவலின் மைய்யப் படிமம். கோபில பட்டர் காலம் துவங்கி வாதத்தில் தோற்று நாக்கு துண்டிக்கப்பட்ட பல நூறு பௌத்தர்கள் நாடு கடத்தப்பட்டு அவளூர் வந்து சேருகிறார்கள். இப்படி வரலாறு நெடுக குரல் இழந்தவர்கள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கும் ஒடுக்கப்பட்டவர்கள். அந்த அவளூரின் ஆழத்தில் நாகர்களும் இரட்டை நாவுகள் சொடுக்கி அமர்ந்திருக்கும் கால ஜூவ்வாஹ் வும். இவற்றை எல்லாம் இவ்விதம் அமைய முன் நின்ற அடிப்படை வாத வைதீக பிராணீயத்தின் நெடு நீள் நாவு.
12 ஆம் நூற்றாண்டு வரை அவைதீகத்தின் அனைத்து கூறுகளையும் இருள் பாதாளத்துக்குள் அமிழ்த்திய அடிப்படை வாத ப்ராமணீயத்தின் அறமின்மையை கேள்வி கேட்கும், சார்பு நிலை நாவல் என்ற தோற்றம் கொள்கிறது எனினும் இது வேறு விதமான சமநிலையையும் பேணுகிறது. குறிப்பாக ஹுஸைனி பிராமணர்கள் களின் மூதாதை ரஹாப் தத்தன் ஹுஸைனி தலைக்கு ஈடாக தனது ஏழு மகன்களின் தலைகளை வெட்டி அளிக்கும் கதை. அதிகாரத்தின் பொருட்டு தலை இழந்த இதிகாச அரவானின் கதையும் வரலாற்றில் விசுவாசத்தின் பொருட்டு தலை கொடுத்த ஹுஸைனி பிராமணர்களின் கதையும் அருகருகே வைக்கப் படுகையில் நாவல் வேறு வகையான சம நிலை ஒன்றை பேச முயலுகிறது.
தமிழ் நிலமா மலையாள நிலமா எதன் கதை இது என்று பிரித்து பார்க்க இயலா வண்ணம் அமைந்தது சங்க காலம் மீது குரூர் எழுதிய நிலம் பூத்து மலர்ந்த நாள் என்றால், கேரளம் எல்லா வகையிலும் தென்னிந்தியா வின் பகுதியாக நின்ற 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பக்தி கால கட்டத்தை பேசுபொருளாக கொண்டது இந்த முறிநாவு நாவல். இந்த நாவலில் மொழியால் உள்ளடக்கத்தால் அதற்க்கே உரிய பலவீனங்களாக நான் முதலில் காண்பது இதன் பலவீனமான சித்தரிப்பு மொழி. அவளூரின் பருவம் என்ன? வெயிலா மழையா குளிரா எதுவும் தெரியாது, செடிகள் மரங்கள் என்ன பறவைகள் விலங்குகள் என்ன எதுவும் தெரியாது. இத்தகு நாவல் கொண்டிருக்க வேண்டிய பலமான படிம மொழி எனும் சவாலை நாவலாசிரியர் கணக்கிலேயே கொள்ளவில்லை.
இரண்டாவதாக இதன் சமூக வரலாறு இயங்கும் வெளியின் சித்தரிப்பு குறுகல். இதில் பேசப்படும் அனைத்துமே அனைத்தும் என்றால் அனைத்துமே எதுவுமே நின்று நிகழாமல் குட்டிக் குட்டி கதைகள் என்றே கடந்து செல்கிறது.
மூன்றாவதாக இதன் கற்பனையில் உள்ள எதிரீடு அம்சம். கல்யாண் நகரில் பசவண்ணர், அக்கமகாதேவி, உள்ளிட்டோர் எழுப்பும் வர்ண பேதம் அற்ற சமுதாயம் ஒரு முனை என்றால், வரலாற்றால் ஒடுக்கப்பட்ட குரலற்றோர் கூடி உருவாக்கும் அவளூர் மற்றொரு முனை. இந்த இரண்டுமே எவ்விதம் தோன்றி நிலைபெற்று அழிகிறது என்பதை அதன் அனைத்து விரிவோடும் ஆழத்தோடும் அணுகி சித்தரித்திருக்க வேண்டிய பெரு நாவலாக உருவாகி இருக்க வேண்டிய இந்த நாவல் வெறும் 600 பக்கத்தில் சுருங்கி விட்டது.
இந்த பலவீனங்களை தாண்டி இந்த நாவலை வாசிக்க வைக்கும் முக்கிய அம்சம் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இதன் உரையாடல் மொழி.
உதாரணத்துக்கு, அலங்காரனின் குல தெய்வமான நீலி, பலி கொடுக்க படும் கதை இப்படி சொல்ல படுகிறது.
°°°
“குஞ்ஞிக்காளி, கடிஞ்ஞீலும் கடசீலுமாயி பிறந்தோளல்லே நம்ம நீலி?
நாலு தரேலும் நேர்ச்ச கழிச்சு உண்டாயதல்லே அவளு?
அவள்க்கு பெல தீண்டியென்னு நாலு தரேல தம்புராம்மாரு பறயுந்து. நாளே காவில் கூட்டம் கூடும்போது, பத்தரை நாழிகைக்கு நீலினேயும்கொண்டு அவிடெ செல்லணமென்னல்லோ கல்லே பிளர்க்குன்ன கல்ப்பன. காவிலெ கல்தர மேலே தலவச்சு ஏனென்டே நீலியே கொல்லணும்னு! பெல தீண்டியோளெ காவிலெ தேவர்க்கு குருதி கழிக்கணோன்னு!”
சாத்தனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கவே குஞ்ஞிக்காளி நெஞ்சிலடித்து அலறி அழுதாள். தலை சுற்ற மயங்கி விழுந்தாள்.
°°°
புரிந்தும் புரியாத, தமிழா மலையாளமா என்று புரியாத இந்த எட்டாம் நூற்றாண்டு மொழி நாவலுக்குள் ஒரு சிறந்த அழகியல் உத்தியாக பயன்படுத்த பட்டிருக்கிறது. இந்த மொழி வாசகனை ஒரே சமயம் மயக்கி இழுக்கவும் தள்ளி விலக்கவும் செய்கிறது. இந்த நாவலுக்குள் வரும் சுவடி சொல்லும் கதை எது என்று அறிய, நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் முயலும்போது, அந்த சுவடி கொண்ட மொழி அந்த பாத்திரங்களை அதை வைத்திருக்கவும் முடியாமல் தூக்கி வீசவும் முடியாமல் எப்படி செய்கிறது என்பதை, இந்த எட்டாம் நூற்றாண்டு மொழி வழியே வாசகனை நாவல் உணர வைக்கிறது. (பின்னர் kv ஜெயஸ்ரீ அவர்கள் வசம் பேசும்போது இந்த மொழி இவ்விதமே தமிழுக்கும் செல்ல வேண்டும் என்பதில் குரூர் குறிப்பாக இருந்தார் என்பதை அறிந்தேன்).
எனவே முதல் முறை இந்த நாவலை வாசிக்கும் ஒரு தீவிர இலக்கிய வாசகன் இந்த மொழி புரியவில்லை என்று சொல்வான் எனில், நாவலின் உணர்வு கட்டுமானத்தின் மையமான ஒரு அம்சத்தை இழக்கிறான் என்றே பொருள். சுந்தர ராமசாமி சொல்வதுதான், பத்தாம் வகுப்பு கணக்குகளையே இரண்டு மூன்று முறை போட்டு பார்க்கிறோம் இல்லையா, அதில் கொஞ்சத்தை இலக்கியத்துக்கும் கொடுக்கலாம். மற்றபடி மேற்சொன்ன பலவீனங்கள் தாண்டி தமிழ் இலக்கிய வாசகர் எவரும் வாசித்திருக்க வேண்டிய நாவல் இது என்றே சொல்வேன். அக்கமகாதேவி தேவியை அல்லம்ம பிரபுவை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்ட தமிழ் நாவல் வேறு உண்டா என்ன.
Kv ஜெயஸ்ரீ சிறப்பான பணி செய்திருக்கிறார். பேசும்போது 16 ஆம் நூற்றாண்டு துவங்கி 20 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கோட்டுக்குள் வைத்து கேரள நிலத்தின் வரலாறை தொட்டு பேசும் அடுத்த நாவலை குரூர் எழுத துவங்கி விட்டதாக அதையும் தான் மொழியாக்கம் செய்ய போவதாக அவர் சொன்னார். வரட்டும் அதையும் வாசித்து உங்களை அழைத்து பேசுவேன் என்று உறுதி சொன்னேன்.