தெய்வமும் பெண்ணும்- கடிதம்

 

கன்யாகுமரி வாங்க

கன்யாகுமரி மின்னூல் வாங்க

ஜெ,

கன்னியாகுமரி நாவல் இரண்டு பெரும் விசைகளின் உருவாக்கம். ஒன்று கோழைத்தனத்தால் சுயம் தீண்டப்பட்டு, கீழ்மைகளால் தன்னை நிரப்பிக்கொண்டு, அதனுடன் அவனது முதல் படத்தின் பெரு வெற்றியின் அகங்காரம் சேர்ந்துக் கொள்வது. அதனுடன் தன்னை வேலுத்தம்பியின் ரத்தமாக எண்ணிக்கொண்டு, ஆணின் பார்வையில் உருவாக்கிக் கொண்ட வரையறையில் பெண்ணை நிறுத்தி, இந்த ஆண்மைய சமூகத்திற்குள்ளாக அவளை உடல் மட்டுமாக எண்ணச் செய்து சிறுமை செய்வது. ஆனால் அவன் கலைஞனுமாக இருப்பதால், இந்த வரையறைக்குள் வைத்து வெல்லும் பெண்ணை உதறி தள்ளுபவனாகவும் இருக்கிறான்.

இரண்டாவது விமலா என்னும் விசை. அவள், ஆணின் வன்முறையால் அவமானப்படுத்தப்பட்டு, இந்த சமூக வெளி வரையறைகளின் எல்லைகளை உணர்ந்து, தற்கொலைக்கு முயன்று தோற்று, வழி தெரியாத பாதையில் அப்பாவின் மருத்துவக் கனவை அவளுக்கான மீட்பாகவும், பற்றுக் கோடாகவும் கொண்டு, பின்பு மேற்படிப்பில் ஆராய்சியின் போது அடையும் அறிதலின் இன்பத்திற்காக, இந்த பொது சமூக அமைப்பிலிருந்து முற்றிலும் தன்னை விலக்கிக் கொள்கிறாள்.

ஆனால் இது இருவிசைகளின் மோதலென்று தோன்றவில்லை. இதில் ரவி என்னும் விசை விமலாவுடன் மோத துடிக்கிறதே ஒழிய, விமலாவின் உலகில் அவன் முற்றிலுமாக இல்லாமல் இருக்கிறான். மீண்டும் மீண்டும் அவளை அவனறிந்த உலகத்தில் வைத்து வெல்லுவதை கற்பனை செய்து, அவன் கனவில் அவள் கதறி அவனது காலைப் பிடிக்கும் தருணத்தில், அவளுக்காக மனமிரங்குபவனாக எண்ணிக் கொள்கிறான். ஆனால் அவனது உலகத்தில் அவள் இல்லை என்று தெரிந்து கொள்ளும் தோறும், பதற்றமடைந்து, எந்த ஆயுதங்களும் செல்லாத களத்தில் தனியனாக கைவிடப்படுகிறான்.

சிறுவயதில், கன்னியாகுமரி தேவியிடம் ரவி உணர்கின்ற மாபெரும் துக்கத்தோடு புன்னகை கூடிய தேவியின் தரிசனத்தை ஏகயாய ராஜகுமாரியில், அனைத்தையும் இழந்த பெண்ணிடம் எஞ்சும் தாய்மையை அவன் கலையாக மாற்றி பெரு வெற்றியை அடைகிறான். மீண்டும் அதே மாதிரியான கோடிக்கணக்கான மக்களுடைய ஆத்மாவை தொடுகிற ஒரு கருவிற்காக அவன் காத்துக் கொண்டிருக்கிறான்.

அவனது நுட்பமான உணர்வுகளை வேணு அறிந்து சில உருவங்களாகவும், சிதறிய கதையாகவும் முன் வைக்கும் போது, அதனை ரவி தவிர்க்கிறான். இம்முறை தன்னகங்காரம் அவனை கலையை நோக்கி செல்வதிலிருந்து விலக்குகிறது.

இன்னொரு விசையாக, பிரவீனா, கலைக்காக சாதாரண வாழ்க்கையை மீறுபவளாக இருக்கிறாள். இந்த பயணத்தில் தொடக்க நிலையில் இருக்கும் அவளுக்கு உருவாகும் சந்தேகங்களுக்கு, தன் அறிதலின் உச்சத்திற்காக தன் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளும் விமலாவின் பதில்கள், தற்போதைய சமூகத்தின் மீதான கடும் விமர்சனமாக உருவாகிறது.

வெளிப்பார்வைக்கு  கற்பு என்பது எந்த அளவுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறதோ, தனிப்பட்ட வாழ்க்கையில் அவ்வாறு பார்க்கப்படுவதில்லை, என்ற புரிதல் விமலாவிற்கு அவளது அப்பாவின் வார்த்தைகளில் தெளிவாகிறது.

அடுத்ததாக, இந்த மாதிரியான பயங்கரமான நிகழ்விலிருந்து பெரும்பாலான பெண்கள் வெளியேறி, தனக்கான குடும்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள் என்கிறாள் விமலா. இந்த சாதாரண குடும்பத்தை உருவாக்கும் பெண்கள், ரவி போன்ற ஆட்களிடம் அவனது பகற்கனவுகளில் எண்ணுவது போல கதறி அழ நேரிடுமோ என்ற எண்ணமும் உருவாகிறது. விமலா போன்ற பெண்களுக்கு மட்டுமே ரவியின் இருப்பை துரும்பாக எண்ணச் செய்யும் வலிமை இருக்கிறது.

ரவியிடம் பிரவீனா, கனவு கொண்ட பெண்களை ஆண்களுக்கு பிடிப்பதில்லை என்கிறாள். அவனை மிக நெருக்கமாக பின் தொடரும் அவள், அவன் கீழ்மையை விமர்சனம் செய்ய தயங்குவதில்லை. அவளின் அசாதாரன ஆளுமையை புரிந்து கொள்ளும் ரவி, கன்னியாகுமரி தேவியின் கோயிலில் அவளை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தை அடைந்து, அவளின் முன்னால் அனைத்து பாவனைகளையும் கழற்றி வீசிவிட்டு, அவளிடம் சரணடைந்து விட வேண்டும் என்று நினைக்கிறான். உண்மையிலேயே அவனுக்கான மீட்பின் ஒரு வழி அது என்று தான் தோன்றுகிறது. ஆனால் உடனே அவனுக்கு தோன்றும் பிம்பம், அவளின் யோனி, அந்த எண்ணத்தை நொறுக்கி அவனது கீழ்மையை உச்சத்திற்கு கொண்டு செல்வதாக அல்லது ஆணாதிக்கத்தின் உச்சியில் இருப்பதாக எண்ணுகிறேன். கலைகாக பல முறை தானாக சென்று மன்னிப்பு கேட்கும் அவள், விமலாவை வன்புணர்வு செய்தவனும் இவனும் ஒன்று தான் என்று சொல்லியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. அவனுடைய சிறுமையை அவன் முகத்தில் தூக்கி வீசிய கணம் அது.  

என்று கலையை அவன் நெருங்க முடியாது என்று பிரவீனா உணர்கிறாளோ உடனடியாக அவனை விட்டு விலக அவளுக்கு தயக்கம் ஏற்படவில்லை. விமலா போன்று, தன்னுடைய கலையை நோக்கி அவள் பயணிக்கிறாள்.

விமலா இந்த உணர்ச்சி வசப்படுதலுக்கெல்லாம் அப்பால் வேறு தளத்தில் இருந்து இவற்றைப் அணுகிக் கொண்டிருக்கிறாள் என்று தோன்றுகிறது.

இந்த கதையின் உச்சமாக பெத்தேல்புரம் ஸ்டீஃபனை, விமலா சந்திக்கும் இடத்தினை உணர்கிறேன். ஒரு கணம் கூட அவளுக்கு பழைய நினைவுகள் துயரத்தை உருவாக்கி, விமலாவை சோர்வடைய, நிலைதடுமாற செய்யவில்லை. அவனை நிமிர்ந்து எதிர்கொள்கிறாள். அவனது ஆணவமானநான் பெத்தேல்புரம் ஸ்டீஃபன், ஞாபகமிருக்கில்லஎன்று கேட்கும் போது அவனைப்பார்த்து, “உட்காருங்க ப்ளீஸ்என்று சொல்ல முடிகிறது. “உங்க உடம்புக்கு என்னஎன்று கருணை கொள்ள முடிகிறது. அவளது நிமிர்விற்கு முன் தன்னை முழுவதுமாக திறந்து தன் கீழ்மையை எண்ணி நானி அவளிடம் தன் நிலையை சொல்லி இரந்து அவள் காலில் விழுந்து விமலாவை மாதாவாக காணும் அவனுக்கு மீட்பு சாத்தியம் என்று தோன்றுகிறது.

இத்தனைக்கும் பின்பும் கடைசி அம்பை எடுத்து செலுத்தத் திட்டமிடும் அவன் கீழ்மை அவனை யாருமில்லாது கைவிட்டு விடுகிறது. அவனது பனித்துளியின் தூய்மையை கலங்கப்படுத்திக்கொண்டு, அதில் பிரதிபலிக்கும் பிரபஞ்சத்தை முற்றிலுமாக இழந்து விட்டான்.

மூன்று கடல்களும் வெறி கொண்டு மோதி உருவாகும் உச்ச மௌனத்தை விமலா வழியாக தரிசிக்கும் மெய்மையை உணர்ந்து கொள்ள ரவியால் இயலாது போவது, கலைஞனாக அவன் அடைந்த இறப்பு என்று கொள்வது பொருத்தமாக தோன்றுகிறது.

க சரத்குமார்

செங்கல்பட்டு

முந்தைய கட்டுரைஏ வி மணிகண்டன்- காட்சிக் கலை வகுப்பு- ஜெயராம்
அடுத்த கட்டுரைஎன்.எம்.ஆர்.சுப்பராமன்