கீதையை அறிதல்-16

டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை

எழுதியவர் Sakthi Prakash

அணிகளின் மெய்ஞானம்

கீதையை அறிதலில் நான்காவதாக வருவது உவமை. பகவத்கீதையில் உவமைகள் பல உள்ளன.  அவை திருஷ்டாந்தங்கள் அல்ல . அவை உவமானங்கள். இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. திருஷ்டாந்தம் என்பது ஒரு கருத்தை சொல்லி, அதை நிறுவும் பொருட்டு ஓர் உதாரணத்தை சொல்வது. ஓர் உண்மை அருவமானது என்றால் அதை உங்களால் உருவகிக்க முடியாது, ஆகவே அதற்குச் சமானமான இந்த உதாரணத்தைப் பாருங்கள் என்று சொல்வது. உவமானம் என்பது அப்படியல்ல. அது ஓர் அணி. கூடவே அது நான்கு பிரமாணங்களில் நான்காவது பிரமாணம். கண்ணால் காண்பது போல, ஊகித்து அறிவது போல, முன்னோர் சொல் போல, முக்கியமாக அடுத்த பிரமாணம் என்பது உவமை. ஆக இந்த உவமையை பல கோணங்களில் கற்பனைசெய்து அறிய வேண்டியிருக்கிறது.

சாங்கிய யோகத்திலேயே நான்கு முக்கியமான உவமைகள் வருகின்றன. ஒன்று;  ஆத்மாக்கள் உடல்களை ஆடைகள் போல அணிந்து வருகின்றன என்பது. இந்த ஆடைகளை இந்த வயதுக்குள் எத்தனை முறை, எப்படியெல்லாம் மாற்றி அணிந்திருக்கிறீர்கள். ஆத்மாவுக்கு உடல் என்பது ஆடை என்பது மட்டும் இதில் இல்லை. அந்த உடை மாறிக்கொண்டே இருக்கிறது என்பதும் உள்ளது. அந்த உடை சூழலுக்கேற்ப அமைகிறது என்பதும் உள்ளது. ஆள்பாதி ஆடைபாதி என்னும் சொல்லும் கூடவே வரவேண்டும். உடை அழகானது, உடை பாதுகாப்பளிப்பது. அப்படி அந்த உவமையை, எல்லாத் தளங்களிலும் வளர்த்துப் பார்க்க வேண்டும். என்னுடைய மகளுக்கு ஐந்தாவது வயது இருக்கையில் ஒரு நிகழ்வு. ஒரு பெட்டியைத் திறந்து பார்த்தபோது உள்ளே அவள் ஆறு மாதமாக இருக்கும்போது போட்டிருந்த ஸ்வெட்டர் இருந்தது. அதை எடுத்துக் கொடுத்து, ‘பாப்பா இதை நீ போட்டிருந்தாய்’ என அவளிடம் சொன்னேன். அவளுக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. “இதையா? இதையா?” என்றாள். அதை தன்மேல் வைத்துப்பார்த்துக்கொண்டே இருந்தாள். அவ்வளவு சிறியதாக இருந்தது அது. நாம் எத்தனை உடைகளில் இருந்திருக்கிறோம். உடை நாமாக இருந்திருக்கிறது.  பழைய புகைப்படங்களை பார்க்கும்போது, நம்முடைய உடைகளின் வழியாக நாம் மாறிவருவதை பார்க்கலாம். உடல் என்பதற்கும் உடை என்பதற்குமான அந்த  அந்த ஒப்புமை என்பது பல கோணங்களில் விசித்திரமாக விளக்கிக்கொண்டே போகக்கூடியது. நண்பர் கவிஞர் மனுஷ்யபுத்திரன், இறந்தவனின் ஆடைகள் என்று ஒரு நல்ல கவிதை எழுதியிருக்கிறார்.

இறந்தவனின் ஆடைகளை

எப்படி பராமரிப்பதென்றே

தெரியவில்லை

 

இறந்தவனின் ஆடைகளை

அத்தனை சுலபமாய்

அணிந்து கொண்டுவிட முடியாது

அதற்காகவே

காத்திருந்தது போலாகிவிடும்

 

அவை

இறந்தவனின் இடத்தில்

இருந்துவிட்டுப் போகட்டும்

என்றிருக்க இயலாது

இறந்தவர்களோடு

அவ்வளவு இயல்பாய்

உறவுகள் சாத்தியமில்லை

 

தானமெனக் கொடுக்கலாமெனில்

இறந்தவனின் சாயல்கள்

எதிர்பாரா இடங்களில்

எதிர்பார உடல்களிலிருந்து

நம்மை நோக்கி வரும்

 

இறந்தவனின் ஆடைகளை

அழித்து விடலாம்தான்

இறந்தவனைத்

திரும்ப திரும்ப அழிக்க

கைகள் நடுங்குகின்றன

 

இறந்தவனின் ஆடைகள்

ஆடைகள் போலில்லை

இறந்தவனின் தோலாக இருக்கிறது.

இறந்தவனின் ஆடைகள் அவனாகவே இருக்கின்றன.  இந்த வரிகள் ஒரு இருபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை. இந்த உவமை இன்றைக்கும் ஓர் அதிர்ச்சியைக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது என்பதைப் பாருங்கள்.  உடைகள் மனிதனுக்கு எப்படியோ, அதுபோல உடல் ஆத்மாவுக்கு. அதை அணிகிறது, மாற்றிக் கொள்கிறது, வளர்த்துக் கொள்கிறது, அழுக்கடைய வைக்கிறது, தூக்கிப் போடுகிறது. இந்த உடை அடைகின்ற அத்தனை அழுக்கும், ஆத்மாவின் செயல்பாடுகளால் வரும் அழுக்குதான். ஆனால் ஆத்மா அழுக்குப்படாது.

இன்னொரு உவமை, ‘ஆமை தன் கால்களை உள்ளிழுத்துக் கொள்வது போல, புலன்களை அடக்கிக் கொள்ள வேண்டும்’. ஒருமையுள் ஆமைபோல் என்ற திருக்குறள் நினைவுக்கு வரலாம். இந்த உவமைகளில் ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த உவமைகளை மாற்ற மாட்டார்கள் என்பதுதான். கயிற்றரவு என்பது ஓர் நிரந்தர உவமைதான். கயிறா பாம்பா?. கயிறா, பாம்பா என்றுதான் இரண்டாயிரம் வருடமாக விவாதித்துக் கொண்டிருப்பார்களே ஒழிய, ஒருபோதும் அதை மாற்றி இன்னொரு உவமையை சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் அது ஒரு திருஷ்டாந்தம் அல்ல, அது ஒரு உவமை. ஆமையின் கால்களை அது உள்ளே இழுத்துக் கொள்கிறது. உள்ளே இழுத்துக்கொண்ட உடனேயே அது ஒரு பொருளாக மாறிவிடுகிறது, அதன்பின் அது ஓர் உயிராக இல்லை. ஜடம். கல்போல மரக்கட்டைபோல. எந்த வேறுபாடும் இல்லை. நாய் அதைப் புரட்டிப் புரட்டி பார்த்து விட்டு உயிரா, பொருளா என்ன்ம் குழம்பும். கொஞ்சநேரம் முன்னால் உயிரோடு இருந்ததே ! சரி போகிறது என்று விட்டுவிட்டுப் போய் விடும். ஆனால் அந்தக் கால்களை வெளியே எடுக்காமல் ஆமையால் நகர முடியாது, வாழ முடியாது. ஆமையின் அந்தக் கால்களை நீங்கள் கற்பனையில் விரிவாக்கிக் கொண்டே போகலாம்.

மூன்றாவதாக ஓர் உவமை, ‘நிலம்மூடிப் பெருவெள்ளம் வரும்போது இங்கு தனிக் கிணறுகளுக்கு என்ன பொருள்?’ புகழ்பெற்ற உவமை அது. ‘ஆற்றுத் தண்ணீர் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டு போகுமா?’ என்றுகூட அந்த வரி நம் மொழியில் இருக்கிறது.

இன்னொரு உவமை.’நெருப்பு புகையாலும், கண்ணாடி தூசியாலும், கரு கருப்பையாலும் மூடப்பட்டிருப்பது போல, உயிர் பல்வேறு வகையான காமத்தால் மூடப்பட்டிருக்கிறது.’ இந்த வரியில் ஒரு வகையான நுண்பயணம் இருக்கிறது. அந்தப் பயணத்தை நீங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக அந்த வரியை சுட்டிக்காட்டுகிறேன். நெருப்பை புகை மூடுவது என்பது எதைக் குறிக்கிறது? புகை நெருப்பில் இருந்தே வருவது. அதைப்போல  உயிரில் இருந்தே வரும் காமம் இந்த உவமையில் சொல்லப்படுகிறது. தன்னிலிருந்து பிறந்து தன்னை மூடும் காமம். அடுத்தது கண்ணாடியை மூடும் அழுக்கு, அது வெளியில் இருந்து வரும் காமம். மூன்றாவது, கருவை மூடும் கருப்பை, தன்னைத் தாங்கி உள் அணைத்து வைத்திருக்கும் காமம். மூன்றும் காமம் தான். மூன்று காமமும் காமம்தான். ஆனால் வேறுவேறு. மூன்றாவது காமம் எவ்வளவு Patronizing ஆன காமம்!, எவ்வளவு இனிய, மகத்தான காமம்!. காமம் என்றல் பாலியல் விழைவு அல்ல. உலகப்பற்றுதான். முதல்காமம் நம் குழந்தைபோல. இரண்டாம் காமம் நம் மனைவிபோல. மூன்றாம் காமம் நம் அன்னைபோல. கருப்பை கருவை எவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறது. என்னுடைய அம்மா என்னை கருவுற்றிருக்கும் போது, பனிரெண்டு அடியில் இருந்து கீழே விழுந்திருக்கிறார்கள். ஆனால் அடிபடவில்லை. அவ்வளவு பத்திரமாக, பல்வேறு உறைகளுக்குள், தண்ணீருக்குள், உயிரைப் பொத்தி வைத்திருக்கும் காமம் அது. இன்னும் பார்த்தால், புகை நெருப்பை அழிக்கும். உயிரையே அழிக்கும் காமம். கண்ணாடியின் நோக்கத்தையே அழுக்கு மறைக்கும்.  ஆனால் கருப்பை கருவை வளர்க்கும். மூன்று வகையான காமம். இந்த வைப்பு முறையை பார்க்க வேண்டும் என்று நான் முன்பு சொன்னேன். எந்த வரிசையில் அது வைக்கப்பட்டிருக்கிறது? ஏன் கடைசியாக கருப்பை வருகிறது? இந்த வரிகளில் இருந்து நீங்கள் போகக்கூடிய தூரத்தைத் தான் நான் சுட்டிக் காட்டுகிறேன்.அந்த தூரத்தை நீங்களே செல்லவேண்டும். அதுவே கீதை சார்ந்த கல்வி.

‘இந்த சூரியன் உலகம் அனைத்தையும் ஒளி பெறச் செய்கிறான். அதைப் போல, இந்த உடலை உடலாக இருப்பவன் ஒளிபெறச் செய்கிறான்’. இன்னொரு வரி. சூரியன் இந்த உலகத்தை உருவாக்குகிறான் என்பது வைசேஷிக தரிசனத்தில் முக்கியமாக சொல்லப்படுவது. ஏனென்றால் சூரியன் பொருட்களுக்கு வண்ணங்களையும், வடிவங்களையும், இருப்பையும் அளிக்கிறான் என்பதுதான் வைசேஷிக தரிசனம். முந்தைய நாள் நீங்கள் பார்த்ததனால்தான்  விடியும்போது இந்தப் பொருள் திரும்பி வந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரிகிறது.  காலையில் முதல்முறையாகப் பார்த்தீர்களானால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? சூரியன் தொட்டு வரைந்து எடுத்ததாகத் தானே நினைப்பீர்கள்?. சூரியனுடைய ஒளியால் இங்கு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. சூரியன் மறையும் போது, தாங்களும் மறைந்து போகின்றன. அதைப் போல, இவ்வுடலானவன் இவ்வுடலை ஆக்கி இதனுள் வாழ்கிறான். தான் மறைகையில் திரும்பக் கொண்டு சென்றுவிடுகிறான். தன் சுடரால் தான் சுடரவேண்டிய உலகை தானே உருவாக்கிக்கொள்கிறான்.

‘எங்கும் நிறைந்திருப்பதாக இருந்தாலும் வானம் எதனுடனும் சம்பந்தப்படாது இருப்பது போல், இவ்வுடலுக்குள் இருக்கும் ஆத்மா உடலுடன் சம்பந்தமில்லாமல் இருக்கிறது’. இது இன்னொரு உவமை. இந்த வரிகளை எல்லாம் மரபில் மிக விரிவாக விவாதித்திருக்கிறார்கள். வானம் ஒரு பொருளுக்கு எதை அளிக்கிறது என்று கேட்டால்; ஒன்று, வடிவத்தை அளிக்கிறது என்று சொல்வார்கள். ஒரு பொருளின் வடிவம் ஜியோமிதிப்படி, Geometrical -ஆக, என்ன ? அந்த பொருளுக்கும் வானத்துக்குமான எல்லைக்கோடுதானே அது? Outline தான் வடிவம் என்று சொல்கிறார்கள். இரண்டாவதாக, வானம் அந்தப் பொருளை தன்னிடத்தில் வைத்திருக்கிறது. ஒரு பொருள் எங்கு அமர்ந்திருக்கிறது என்று பார்த்தால், அது வானத்தில் அமர்ந்திருக்கிறது. மூன்றாவதாக, அந்தப் பொருளின் அனைத்து இடைவெளிகளையும் வானம் நிரப்பியிருக்கிறது. எண்ணிப்பாருங்கள். என்  உடலின் Outline வானம் உருவாக்கியது. நான் நின்று கொண்டிருக்ககும் Space, வானத்தில் தான் இருக்கிறது. என் உடலுக்குள்ளே எல்லா இடைவெளிகளிலும் வானம் தான் இருக்கிறது. இப்படி, ஒரு உடலுக்குள் தன்னை முழுமையாக வைத்து அதை முழுமையாக உருவாலக்கியிருந்தாலும் கூட, அதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கும் வானம் போல ஆத்மா இருக்கிறது.

இதுதான் கீதையின் உவமைகளில் இருக்கும் அழகு. கீதை  ஒரு தத்துவ நூலாக, ஒரு ஆன்மிக நூலாக, அனைத்துக்கும் இணையாக ஒரு இலக்கிய நூலாக முக்கியமானது. இலக்கியவாதி என்று தன்னை சொல்லிக்கொண்டிருப்பவன், இந்த அளவிற்கு தரமான உயர் கவித்துவம் ஒன்று நிகழும் நூலை அறியாமல் இருக்கும்போது , மெய்யாகவே மிகப்பெரிய இழப்பிற்கு ஆளாகிறான்.  எங்கும் நிறைந்திருப்பதாக இருந்தாலும் வானம் தன் நுண்மையால் எதிலும் கலக்காமல் இருப்பது போல், ஆத்மா உடலில் கலக்காமல் இருக்கிறது. இந்த வரியை இங்கே சொல்லும்போது என்னுடைய மகளை, அவள் கைக்குழந்தையாக இருக்கும்போது ஒரு வாணவேடிக்கையை பார்க்க கூட்டிக்கொண்டு போனது நினைவுக்கு வருகிறது. திருவிழாவில் வாணவேடிக்கை  செய்கிறார்கள். மேலே போய் விதவிதமான வண்ணங்கள் வண்ணங்களாக வெடித்து அழிகிறது. அவ்வளவையும் பாப்பா பார்க்கிறாள். எல்லாம் முடிந்து ‘போகலாம் பாப்பா’ என்று சொன்னதும், வானம் நோக்கி இரண்டு கைகளையும் விரித்து “வானம் மட்டும்தான் இருக்கு” என்றாள். எவ்வளவு பெரிய ஒரு வரி! உங்கள் இடுப்பில் இருக்ககும் குழந்தை சொல்வது அது. ஒரு ஞானாசிரியனின் வரியாகவும் வந்துள்ளது.  இவ்வளவு நிகழ்ந்தும் எஞ்சுவது அந்த வானம், இவ்வளவு நாடகத்தையும் இந்த உடலில் நடித்து எஞ்சுவது அது.

ஒரு மகத்தான உவமையில் இருந்து இன்னொரு உவமைக்குப் போக வேண்டும்.   குடாகாசம், மடாகாசம் என்று ஓர் உவமையைச் சங்கரர் சொல்கிறார். ஒரு குடத்திற்குள் இருப்பது என்ன? வானம். அந்த வானம் உருண்டையாக இருக்கிறது. உங்கள் கைகளில் வைத்திருகும் வானம் அதுதான். குடம் உடைந்து போனால் அந்த வானம் எங்கே போகிறது? எங்கேயும் போகவில்லை. அது அப்படியே வானத்தில் இருக்கிறது. மடாகாசத்தில் இருக்கிறது. குடத்திற்குள் இருக்கும் வானம், பிரம்மாண்டமான வானத்தின் பகுதியாக இருந்துகொண்டே குடத்திற்குள்ளும் இருப்பது போல, பிரம்மம் பிரம்மமாக இருந்துகொண்டே ஒரு ஆத்மாவிற்குள்ளும் இருந்து கொண்டிருக்கிறது என்பது அத்வைத உவமைகளில் ஒன்று. கீதையின் இந்த வரியில் இருந்து சங்கரரின் அந்த வரிக்கு போகக்கூடிய ஒரு பயணம் நிழந்தது என்றால், நீங்கள் கீதையை வாசிக்க ஆரம்பிக்கிறீர்கள்.

நண்பர்களே! இதற்கும் அப்பால் ஒரு தளம் இருக்கிறது. அது Esoteric – மறைஞானப் பொருள். ஒரு குருவிடம் இருந்து மாணவனுக்கு ரகசியமாக அறிவுறுத்தும் குறியீட்டு அர்த்தம் என்பதற்கு Esoteric என்று சொல்வார்கள். அதை ரகசியமாகவே சொல்லமுடியும்.  பொதுவான அறிவுத்தளத்தில் அதை விவாதித்தால், அது வெறும் அர்த்தமாக மாறும், அகக்குறியீடாக மாறாது. அப்படி ஒரு தளம் இருக்கிறது என்பதை சுட்டுவதற்காக மட்டும் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். அதை நான் விளக்கக்கூடாது. ஒன்று, கீதையின் அந்த கதைஅமைப்பு. வெள்ளி நிற ரதங்கள் பூட்டப்பட்ட தேரை ஒரு பெரிய குறியீடாக சொல்லலாம். அதை ஓட்டுபவன் அதில் அமர்ந்திருக்கிறான், ஆனால் அவன் எந்தப் போரிலும் ஈடுபடுவதில்லை. அந்தப் போரை நிகழ்த்துவதற்காக ஒருவன் வில்லுடன் அதன்மேல் அமர்ந்திருக்கிறான். ஆனால் அவன் கையில் கடிவாளம் இல்லை. அதன் மேலே பறக்கும் அந்த குரங்குக் கொடி இன்னொரு குறியீடு. நிலைக்காமல் தாவும் குரங்கும்க நுட்பமாக கோர்க்கப்பட்ட இத்தகைய பல குறியீடுகளின் ஒரு தொகுப்பாக அந்த கதைச்சித்திரம் இருக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் சொல்லி, இந்த மறைஞான விஷயத்தை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இரண்டு  ‘நான்’களில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஒன்று இந்த நூலைச் சொல்பவனாகிய கண்ணன் என்னும் ஞானாசிரியனின் ‘நான்’. இன்னொன்று, இந்த நூலுக்கு உள்ளே இருக்கும் கண்ணன் மொழியாக வரக்கூடிய ‘நான்’ என்பது பிரம்மத்தை குறிக்கிறது. இந்த இரண்டு நான்களின் இணைவு இந்நூல். ஒரு சொல்லாட்சி எந்த நான் வாயில் இருந்து வருவது என்பது இந்த நூலைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. இதைப் புரிந்துகொள்ளாத இடர்பாடு இந்த நூலைப் பற்றி பேசும் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது உரைகளில் இருக்கிறது. நான் என்று ஓரிடத்தில் கண்ணன் சொல்வது பார்த்த சாரதியாகிய கண்ணனை.  என்னை சரணடைக, என்னை தியானம் செய்க, என்னைத் தவிர எதையும் யோசிக்காதே என்று சொல்வது பிரம்மத்தைக் குறிக்கிறது. நீங்கள் எல்லாமே ஒரே  கண்ணனைத்தான் என்று எடுத்துக் கொள்ளும்போது, அது ஓட்டு மொத்த அர்த்தத்தையும் சிறிய அளவிற்கு கொண்டு போய் விடுகிறது.

பிரம்மம் – The Ultimate, The Absolute, முழுமுதன்மை, அறிய முடியாமை. எட்டு வகையான அறிய முடியாமைகளால் மட்டுமே சொல்லத்தகுந்த ஒன்று இங்கே நான், நான், என்னை, என்னை என்று தோன்றுகிறது. அதைச் சுட்டக்கூடிய ஒரு ஞானாசிரியன், வெளியே நின்று கொண்டு நான் சொல்கிறேன் என்று சொல்கிறான். இந்த இரண்டு விஷயங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டால், இதனுடைய மறை ஞானப் பிரதியை ஓரளவிற்கு நம்மால் தெளிவாக அறிய முடியும். அகம் பிரம்மாஸ்மி என்னும் பொருளில் அவனே இவன். இவனே அவன். அது நீயேதான்.

கீதையின் இறுதிச் சுலோகம், அந்த மறைஞான அர்த்தத்தை முழுமைப்படுத்தக் கூடியது என்று சொல்வார்கள். எங்கு யோகத்தில் அமர்ந்த கிருஷ்ணனும், வில்லேந்திய விஜயனும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெற்றியும் வலிமையும் நீதியும் இருக்கும். அதை திரும்பச் சொல்கிறேன். “எங்கு யோகத்தில் அமர்ந்த கிருஷ்ணனும், வில்லேந்திய விஜயனும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெற்றியும் வலிமையும் நீதியும் இருக்கும்”.

இங்கு போர்க்களத்திலே சாரதியாக, கடிவாளம் ஏந்தி இருப்பவன் தன்னை யோகத்தில் அமர்ந்தவன் என்று சொல்கிறான். யோகத்தில் அமர்ந்த ஒன்றும், வில்லேந்திய ஒன்றும் அமர்ந்திருக்கும் ஒரு தேர். அது என்ன பொருள் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். இணையான வரிக்கு நீங்கள் செல்லக்கூடும் . ஒரு மரத்தில் இரு பறவைகள் அமர்ந்திருக்கின்றன, ஒன்று பழம் தின்கிறது, இன்னொன்று பார்த்திருக்கிறது என்ற உபநிஷத்து வரிக்கு செல்லலாம்.

“ஒரு மரத்தில் இரு பறவைகள் அமர்ந்திருக்கின்றன,

ஒன்று பழம் தின்கிறது, இன்னொன்று பார்த்திருக்கிறது”.

 

நான் இன்னொரு நவீனக் கவிதையை இணைத்துக்கொள்வேன். ஏனென்றால் அழிவற்ற ஓர் உண்மை எப்படியோ மொழியில் நிகழ்ந்துகொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன். தேவதச்சனுடைய ஒரு நவீனக் கவிதை.

கை நழுவி கீழே விழுந்து உடைந்தது கண்ணாடி.

பார்த்துக் கொண்டு இருந்தேன்

கை நழுவி கீழே விழுந்து உடைந்த கண்ணாடியை

விபத்தில் சிக்கியவர்களுக்கு இந்த உண்மை தெரியும். அந்த விபத்தில் நம்மில் ஒன்று அடிபட்டு துடித்து கீழே விழும்போது, நம்முள் வேறொன்று சம்பந்தம் இல்லாமல் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும். நீங்கள் விபத்தில் தப்பினீர்கள் என்றால், அந்த வேறொன்றுதான் அவ்வளவையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அதற்கு விபத்து ஆவதில்லை. அது தன் பாட்டுக்கு இருக்கும். எவ்வளவு துக்கத்திலும், அது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். என்னுடைய அம்மா தற்கொலை செய்துகொண்டு கிடக்கும்போது, நான் கதறி அழும்போது அது அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். பெரும் துயரங்களில் நீங்கள் இதைப் பார்க்கலாம். இன்னொன்று பார்த்துக் கொண்டிருக்கும்.

ஒரு கிளி பழம் தின்பது கிடையாது. அது பழம் தின்பதை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு மரத்தில் இரு பறவைகள். ஒன்று பழம் தின்கிறது, இன்னொன்று பார்த்திருக்கிறது. அந்த வரியின் மறைஞானப் பொருளுடைய நீட்சி தான், எங்கு யோகத்தில் அமர்ந்த கிருஷ்ணனும், வில்லேந்திய விஜயனும் இருக்கிறார்களோ அங்கெல்லாம் வெற்றியும் வலிமையும் நீதியும் திரள்கிறது என்னும் வரி.

இப்படி முடிகிறது கீதை. கடைசியாகச் சொல்கிறான் பார்த்தசாரதி. ‘எல்லா ஞானங்களிலும் மிக ரகசியமானதை உனக்கு இவ்வாறு நான் விளக்கியிருக்கிறேன். இதை முழுமையாக சிந்தித்துப் பார்த்து, நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய்வாயாக!’  இதை சொல்பவன் ஞானாசிரியனாகிய கண்ணன். உடனே நம் செவியில்  ‘சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ’ என்று விராட ரூபத்தில் பெருங்குரல்கொண்டு சொல்வது பிரம்மம். இந்த இரண்டு குரல்கள் அடங்கிய ஒரு நூல் என்று கீதையை சொல்ல முடியும்.

மறுபடியும் ஏ.கே.ராமானுஜனின் ஓர்அழகிய கவிதை வரிதான் ஞாபகத்திற்கு வருகிறது.

அங்குலப் புழு

காட்டில் துடித்து துடித்து மேய்ந்து கொண்டிருந்தது.

இவ்வுலகு அனைத்தையும்

நான் அளப்பேன் அளப்பேன் என்று அது சொல்லியது.

என் காலை அள என்று கொக்கு சொல்லியது

என் கழுத்தை அள என்று மயில் சொல்லியது

என் துதிக்கையை அள என்று யானை சொல்லியது

எல்லாத்தையும் அளந்து விட்டது.

என் பாட்டை அள என்று குயில் சொல்லியது

வளைந்து நெளிந்து துடித்து துடித்து துடித்து

அது செத்தே போய்விட்டது.

அளக்க முடியவில்லை.

இவ்வாறாக இங்கு கீதையை அளக்க நிகழும் ஒரு முயற்சி நிறைவேறியது. நன்றி !

(நிறைவு)

 

முந்தைய கட்டுரைய.மகாலிங்க சாஸ்திரி
அடுத்த கட்டுரைPhilosophy and Balance