டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
பலகுரல் நூல்
நண்பர்களே, கீதையை நாம் தொடர்ந்து கூர்ந்து பார்க்கும்போது நமக்கு சில விஷயங்கள் அதில் தெரியும். அதை வாசித்து அறிந்து கொள்வதற்கு சில வழிமுறைகள் இருப்பது போலவே, அது நம்மிடம் பேசுவதற்கு சில பாணிகளை வைத்திருக்கிறது. ஒவ்வொரு நூலுக்கும் அந்த பாணி உண்டு. புனைவுப் பாவனை என்று அதை சொல்வார்கள். தன்னை ஒருவிதமாகப் பாவனை செய்துகொண்டுதான் ஒரு நூல் உங்களிடம் பேசும். திருக்குறளில், ஆன்றவிந்து அடங்கிய தெய்வப்புலவர் தன் ஞானத்தின் அரியணை ஒன்றில் அமர்ந்து நம்மிடம் பேசும் தோரணை ஒன்று இருக்கிறது. வேதாந்திர சூத்திரமோ, இமயமலை அடுக்குகளுக்கு உள்ளாக தேடித்தேடி நாம் செல்லக்கூடிய ஒரு இடத்தில், ஓர் கல்விநிலையில் தன்னைத் தேடி வருபவனிடம் மட்டுமே பேசும் பழக்கம் கொண்ட ஒரு முனிவர் அமர்ந்து நம்மிடம் பேசும் பாவனை கொண்டிருக்கிறது.
ஆனால் கீதை அப்படியல்ல. இது சந்தைக்கு வந்த வேதாந்தம். சபைக்கு வந்த வேதாந்தம். மீன் கடை வேதாந்தம். கறிக்கடை வேதாந்தம். இதனுடைய பாவனை என்பது தன்னை பலவாக மாற்றிக்கொண்டு சொல்லக்கூடிய தன்மை கொண்டது. இதனுடைய புனைவுப்பாவனை என்ன என்பதை நாம் அறியவேண்டியது முக்கியமானது. ஒன்று, இது வெளிப்படையாகவே போர்க்களத்தில் நிற்கும் ஷத்ரியன் ஒருவனுக்கு அவனுடைய நண்பனாகிய சாரதியால் சொல்லப்பட்டது என்ற ஒரு பாவனையை இது மேற்கொண்டிருக்கிறது. கீதை வெளிப்படையாக கொண்டுள்ள புனைவுப் பாவனை இது. இந்தப் பாவனைக்கு உள்ளே, இது ஒவ்வொரு விஷயத்தையும் சொல்வதற்கு ஒருவிதமான வழிமுறையை கொண்டிருக்கிறது.
ஒன்று, நேரடியான அறிவுறுத்தலின் தொனியில் பல விஷயங்களை சொல்லிச் செல்கிறது. இரண்டு, தத்துவார்த்தமான சூத்திரங்களாக சில விஷயங்களை சொல்லிச் செல்கிறது. அறிவியல் சூத்திரம் போல சில சுலோகங்கள் இருக்கின்றன. மூன்றாவதாக, புதிர் மொழிகளாக சில விஷயங்களை சொல்லிச் செல்கிறது. நான்காவதாக உவமைகள், இலக்கிய அணிகள் வழியாக சில விஷயங்களை சொல்லிச் செல்கிறது. இந்த நான்கையும் வெவ்வேறு வகையாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு பயிற்சி, ஒரு ஆசிரியனால் கீதையின் மாணவனுக்கு அளிக்கப்பட வேண்டும்.
முதலில் சொல்லவேண்டிய ஒன்றுண்டு. கீதாசிரியனே நேரடியாக சொல்வதுபோல் அமைந்த கீதையின் வரிகளை, கிருஷ்ணன் கடவுளாக நின்று சொன்ன மேற்கோள்கள் என்று கொண்டுவந்து வைப்பது மிக மிகத் தவறானது. நவீன இலக்கிய வாசிப்பில் உள்ள வரிகளில் ஒன்று, “There is no Text, Only Context”. பிரதி அல்லது படைப்பு என்று ஒன்று இல்லை. படைப்புச் சூழல், பேசப்படக்கூடிய களம் மட்டும்தான் இருக்கிறது. ஒரு நூலை எடுத்து இன்னொரு களத்தில் வைத்தால், அதனுடைய பொருள் அற்புதமாக மாறிவிடும். பசு என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஆனால் அதுவே வீட்டிற்கு வந்த மருமகளைக் குறிக்கும்போது வேறு அர்த்தம். ஆகவே எந்தக் களத்தில், எந்த சூழலில் அந்த வரி சொல்லப்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியமானது. ஆகவே கீதையின் ஒரு நான்கு வரியை எடுத்து பைபிள் போல சுவரில் எழுதிப்போடுவது என்பது மிக மிக அபாயகரமானது. இது ஒற்றைப் பிரதி, இதற்கு ஒரு நாடகத்தன்மை இருக்கிறது. இது ஒரு பெரிய விவாதம். முன்னும் பின்னும் விரியும் ஒரு விவாதக்களத்தில் இது சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இது எந்த யோகத்தில், எந்த தருணத்தில், எந்தெந்த வரிகளுக்கு முன்னும் பின்னுமாக சொல்லப்பட்டிருக்கிறது என்பது மிக முக்கியமானது. இந்தப் பாவனை பிரம்ம சூத்திரத்திற்கு கிடையாது. இந்தப் பாவனை திருக்குறளுக்கு கிடையாது. ஆகவே அதனுடைய எந்தக் குறளையும் தனியாக எடுத்து நீங்கள் போடலாம். ஏனென்றால் தனித்தனியாகத்தான் அவரே சொல்லியிருக்கிறார். இது அப்படியல்ல.
‘தானாகவே வரும் போர் வாய்ப்புகள், ஒரு ஷத்ரியனுக்கு விண்ணகத்தின் வாயில்களை திறந்து விடுபவையாகையால் அவை வரவேற்கப்படுகின்றன’. இது ஒரு கீதை வரி. இதை தனியாக எடுத்துப் போட்டால் என்ன அர்த்தம்? வம்புச் சண்டைகளை விடாதே என்று அதை சிலர் புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. இது சாங்கிய யோகத்தில், ஷத்ரியனாக தன்னை முன்னிறுத்தக்கூடிய ஒருவனுக்கு சொல்லப்பட்ட முதல்கட்ட ஆலோசனை. தானாகவே வரக்கூடிய போர் வாய்ப்புகள் அனைத்தும் வென்று செல்வதற்கான வாய்ப்பாக ஒரு ஷத்ரியனுக்கு ஆவதானால், அல்லது தோல்வியடைந்தால் வீரமரணம் அடைந்து சொர்க்கத்திற்கு போவதற்கான வாய்ப்பாக அமைவதானால், நல்வாய்ப்புகள் என்றே ஷத்ரியனால் கொள்ளப்பட வேண்டும் என்று விளக்குகிறது இது. ஆனால் ஒரு ஷத்ரியனுக்கு போர்முனையில் பொருள்படும் நடைமுறை உபதேசத்தின் பகுதியாகத்தான் இது சொல்லப்படுகிறது. இது கர்ம யோகத்தின் பகுதியாக சொல்லப்படவில்லை. மோட்ச ஸந்யாச யோகத்தின் பகுதியாக சொல்லப்படவில்லை. இதற்குநேர் மாறான வரியும் கீதையில் உண்டு. தொடர்ந்து கீதை வரிகள், இந்த மாதிரி உதிரிகளாக பொருளற்று அல்லது தவறான பொருள் அளிக்கும்படியாக மாற்றப்படுகினறன. ஆகவே இந்த மேற்கோள் உரைகளில் இருந்து தள்ளி நிற்க வேண்டிய கட்டாயம் கீதை வாசகர்களுக்கு உண்டு. நாங்கள் இலக்கியத்தில் இந்த மாதிரியான ஆட்களை ‘மேற்கோள் பொறுக்கிகள்’ என்போம். கீதையை அறிந்து கொள்ள வேண்டியது மேற்கோள் வழியாக அல்ல. ஒரு கீதை வரியை ஒருவர் சொன்னால், ‘சரிங்க இது எந்த சந்தர்ப்பத்தில் எந்த Context -ல் எந்த யோகத்தில் சொல்லப்பட்டது?’ என்ற கேள்வி எழவேண்டும் நம்மிடம்.
உதாரணமாக, மிகத் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வரி ஒன்று இருக்கிறது. அர்ஜுன விஷாதயோகத்திற்குப்பின் சாங்கிய யோகத்தில் ‘அர்ஜுனா, இந்தப் போரை நீ தவிர்த்தாய் என்றால், உன் குலமகள் கற்பிழப்பாள், குலக்கலப்பு ஏற்படும். ஆகவே இது வேண்டாம்’ என்று கிருஷ்ணன் சொல்லும் வரி. இந்த வரியை எடுத்துக்கொண்டு மொத்த கீதையுமே குலக்கலப்பை தடுக்கும் பொருட்டே எழுதப்பட்டது என்று விளக்ககும் அறிஞர்கள் நிறைந்த ஒரு துரதிருஷ்டவசமான காலத்தில் வாழ்வதற்கு நமக்கு கொடுத்து வைத்திருக்கிறது. ஒரு தபாலட்டையில் எழுதவேண்டிய இந்த வரியை சொல்வதற்கு எதற்கடா இவ்வளவு பெரிய வேதாந்த புத்தகத்தை அவன் எழுதினான் என்று கேள்வி கூட இங்கே யாரும் கேட்பதில்லை. அந்த சந்தர்ப்பம் என்ன? போர்முனையில், போர் தொடங்குவதற்கு முன் இல்லையா? அந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு வீரன் இந்தப் போரை நான் நடத்தமாட்டேன் என்று வில்லைக் கீழே வைக்கிறான். அவனிடம் அவனுடைய சாரதியாகிய தோழன் சொல்கிறான். இவ்வுலகில் ஒரு போர் வீரன் அடைய வேண்டிய வெற்றி அல்லது வீரமரணம், புகழ் அனைத்தும் நீ போர் புரிந்தால் தான் வரும். ஏதோ ஒரு காரணத்தினால் நீ போர்புரிவதைத் தவிர்த்தாய் என்றால் இவையெல்லாம்தான் நடக்கும் என்று. இன்றைக்கும் உங்களுக்குத் தெரியும், எந்தப் போர் தோற்றாலும் முதலில் நடப்பது கற்பழிப்புதான். ஒரு அரசன் தன் நகரத்தை, தன் குலப் பெண்களை காப்பாற்றும் பொறுப்பு உள்ளவன். ஒரு காட்டில் யானை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. தன் மந்தைகளை பாதுகாப்பது அதனுடைய இயல்பான தர்மம். ஆகவே உன் மந்தை, உன் பெண்கள், கவரப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது ஓர் அரசனிடம் எந்த மூதாதையும் எளிதாக சொல்லும் ஓர் உலகியல் உண்மை மட்டும்தான். அதற்கப்பால் அதில் எதுவுமே கிடையாது. எந்தப் போர் என்றாலும் மன்னன் வீழ்ந்துபட்டால், பெண்கள் கற்பிழப்பார்கள்.
கீதையின் மொத்த செய்தியே குலக்கலப்பு தேவையில்லை என்று சொல்வதாக இருந்தால், அதை சொல்பவனுக்கு அதைச்சொல்ல என்ன தகுதி இருக்கிறது? அவனே ஷத்ரியன் அல்ல, யாதவன்தான். யாதவ மன்னனாகிய அவன், யாதவ குலத்தில் இருந்து ஒரே ஒரு பெண்ணைத்தான் மணம் செய்து கொண்டான், சத்யபாமை. ஷத்ரிய குலத்திலிருந்து அடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டான், ருக்மிணி. மீனவ குலத்தில் இருந்து காளிந்தியை திருமணம் செய்து கொண்டான். வேடர் குலத்திலிருந்து ஜாம்பவதியை திருமணம் செய்து கொண்டான். அவன் செய்யாத குலக்கலப்பா?. சரி கேட்பவனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவனுடைய மூதாதையர் அரக்கர் குலத்தை சேர்ந்த சர்மிஷ்டைக்கு பிறந்தவர்கள். அவனுடைய அன்னை யாதவ குலத்தைச் சேர்ந்தவள். தந்தை ஷத்ரியன். அவன் மணம் செய்து கொண்டது ஷத்ரிய பெண்ணாகிய பாஞ்சாலியை. கூடவே, நாக கன்னியாகிய உலூபியை, யாதவ பெண்ணாகிய சுபத்ரையை, தொலைதூரத்து மணிபுரத்தை சேர்ந்த சித்ராங்கதையை. மொத்த மகாபாரதமுமே குலக்கலப்பின் இதிகாசம்தான். அதன் நடுவில் வரும் ஒரு படைப்பு மொத்தமும், குலக்கலப்பிற்கு எதிராகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என ஒருவன் சொல்வான் என்றால் அதிலிருக்கும் முட்டாள்தனத்திற்கு எல்லையே கிடையாது.
போரின் அந்த சந்தர்ப்பத்தில், ஓர் அரசனிடம் எது சொல்லப்படவேண்டுமோ அது சொல்லப்படுகிறது. நீ தோற்றால் இது நடக்கும், அவ்வளவுதான். ஆகவே மகாபாரதத்தில் இருந்தோ அல்லது கீதையில் இருந்தோ, ஒரு மேற்கோளை வெளியே எடுத்து வைப்பது என்பது அறிவுக்கு பதிலாக அறியாமையை துண்டுபடுத்தி வைப்பதுதான். துண்டுபடுத்தி வைக்கப்பட்ட அறிவே தன்னளவில் அறியாமைதான் என்று சொல்லலாம். இது கீதையின் வாசகன் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது. இது ஒரு நெறிநூல் அல்ல, இது ஒரு உபதேசம் அல்ல. கிருஷ்ணரின் நெறிகாட்டல் அல்ல இது. இது ஒரு வேதாந்த நூல். ஒரு மாபெரும் விவாத நூல் இது. அந்த விவாதக்களத்திற்கு அப்பால் தனித்தனியாக நிற்கும் நல்லுபதேசங்கள் எதுவும் இந்த நூலில் இல்லை.
தத்துவமும் கீதையும்
நான் நேற்றே சொன்னது போல பிரஸ்தானத்திரயத்தின் ஒரு பகுதி கீதை. இதை ஒரு தத்துவ நூலாகத்தான் குறைந்தது இரண்டாயிரம் வருடங்களாக நமது மரபு அணுகிவந்திருக்கிறதே ஒழிய, எந்த மதத்தின் மூலநூலாகவும் அல்ல. ஆகவே, தத்துவநூலை ஒரு நெறிநூலாகப் பார்ப்போம் என்றால் எவ்வளவு பெரிய அறியாமை! செய்யலாம் ! என் நண்பர் ஒருவர் செல்போனை வைத்துக்கொண்டு ஆணி அடித்துக்கொண்டிருந்தார். ‘சின்ன ஆணிதாங்க இது’ என்றார். ‘அது அதற்கானது இல்லைங்க’ என்றேன். அதைப்போலத்தான் இது. எவ்வளவு சிக்கலான பொருளை வைத்தும் எல்லா முரட்டுத்தனமான வேலைகளையும் செய்யலாம். ஆனால் அதற்கானதல்ல இது. தத்துவார்த்தமானது.
‘வேள்வி மிச்சமாக படைக்கப்பட்ட உணவை உண்பதனால் பக்தர்கள் எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார்கள். தனக்கு மட்டுமாக படைக்கப்படும் உணவை உண்பவர்கள் கொடிய பாவத்தில் ஆழ்கிறார்கள்’. இது ஒரு கீதை வரி. அதாவது ஒரு வேள்வியில் படைக்கப்பட்ட உணவில் மிச்சத்தை, பிரசாதத்தை, உண்பவர்கள் மட்டுமே எல்லா வகையான நன்மைகளையும் அடைகிறார்கள். தனக்கு மட்டுமாக படைக்கப்பட்ட உணவை உண்பவர்கள் கொடிய பாவத்திற்கு ஆளாகிறார்கள். இதை எடுத்துக்கொண்டு, வேள்விகளில் படைக்கப்பட்ட அன்னத்தை சாப்பிட்டால் மட்டுமே புண்ணியம் கிடைக்கும், சமைத்துச் சாப்பிட்டால் பாவம் கிடைக்கும் என்று ஒருவர் விளக்கினார் என்றால் என்ன பொருள்? அடுத்த வரி என்ன? தனக்கு மட்டுமாக படைக்கப்பட்ட உணவை உண்பது பாவம். அப்படியென்றால் வேள்விக்கு படைக்கப்படாத அனைத்து உணவும் தனக்கு மட்டுமாக படைக்கப்பட்டதா? இந்த உலகில் எத்தனை பேர் வேள்வி மிச்சத்தை மட்டும் உண்ண முடியும்? வேள்விசெய்யும் அந்தணர்களா? அவர்கள் கூட, தினமும் காலையில், மத்தியானம், சாயங்காலமும் உண்ண முடியுமா?
அப்படியென்றால், அங்கே வேள்வி என்கிற வார்த்தை எதைக் குறிக்கிறது? கீதையில் இருந்து பெரும்பாலும் வரும் விளக்கம் என்ன? அல்லது மொத்த மகாபாரதமும் கொடுக்கும் விளக்கம் என்ன? வேள்வி என்பது வேள்வி தான். ஆனால் பரந்துபட்ட பொருள், தத்துவார்த்தமான பொருள் வேறு. கீதை என்பது வேதாந்த நூல். வேதாந்தப்பார்வையில் இவ்வுலகு வாழ்க என்ற எண்ணத்தோடு ஆற்றப்படும் செயல்தான் வேள்வி என்பது. இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு செய்யும் செயல் வேள்வி. அனைவருக்குமென பகிர்ந்து செய்யப்படுவது வேள்வி. தன்னலம் முதன்மைப்படாத செயலே வேள்வி. உலகமே பசியாறவேண்டும் என்னும் எண்ணத்துடன் செய்யப்படும் வேளாண்மை என்பது ஒரு வேள்விதான். நூற்றுக்கணக்கான வரிகள் வழியாக மகாபாரதத்தில் அது சொல்லப்பட்டிருக்கிறது. வேள்வியாக அன்றி ஒன்றை ஒருவன் செய்யக்கூடாது என்றே கீதை சொல்கிறது. நீ செய்வது எதுவாக இருந்தாலும் அது வேள்வியாக இருக்க வேண்டும். அதை இவ்வுலகு வாழ்க என்று செய்ய வேண்டும். இது அனைவருக்குமாக என்று செய்யப்பட வேண்டும். அது கிருஷ்ணார்ப்பணம் என்று செய்யப்பட வேண்டும். அது வேள்வி. அப்படி செய்யப்படும் உணவை உண்பவன் அனைத்து நலன்களையும் அடைவான். தனக்கு மட்டுமாக என்று செய்யும் செயல்களின் விளைவை உண்பவன் பெரும் பாவத்தை அடைகிறான். அதுவே கீதையின் செய்தி.
நாஞ்சில் நாடன் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை எழுதியிருப்பார். அவருடைய தந்தையுடன் அறுவடை செய்து கொண்டிருக்கும் போது, நிறைய கதிர்கள் உதிர்ந்து கிடக்கின்றன. ‘இதையெல்லாம் பொறுக்கிக் கொள்ளலாமே? ஒரு மூட்டை, அரை மூட்டை வரும் போல இருக்கிறதே?’ என்று இவர் சொல்கிறார். அப்போது அவருடைய அப்பா சொல்கிறார். ‘இந்த வயல் நமக்கு மட்டும் சொந்தம் கிடையாது. நாம் வேலி போட்டு வெள்ளாமை பண்ணுகிறோம். ஆனால் பறவைகளுக்கு இது சொந்தம் தான். அவைகளும் சாப்பிட வேண்டும். மொத்தத்தையும் பொறுக்கிக் கொண்டு போவதற்கான உரிமை நமக்குக் கிடையாது’. அந்த மனநிலைகொண்ட விவசாயத்தின் பெயர்தான் வேள்வி. அதைத்தான் இங்கே சொல்கிறார் கிருஷ்ணன். எச்செயலும் வேள்வியாகும். கல் உடைத்தலும், இரும்பு உருக்குதலும் வேள்வி ஆகும். வணிகமும் வேள்வி ஆகும். தனக்கென மட்டும் அது செய்யப்படாவிட்டால், உலகம் வாழ்க என்று செய்யப்படுமென்றால், இங்குள்ள அனைவருக்குமென என்று செய்யப்படுமென்றால், அது வேள்வியாகும்.
அந்தத் திறப்பை இந்த வரிகளில் நாம் அடையவில்லை என்றால், தெய்வத்தைக் காணாமல் கற்சிலை முன் நிற்பவர்களே ஆவோம். அதுதான் பெரும்பாலான தருணங்களில் கீதை போன்ற மூலநூல்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது. எது அவற்றின் மெய்ஞான ஆயுதமோ, அது வெறும் பெளராணிகர்களின் கருவியாக மாறி விடுகிறது. எது ஞானத்திற்கான வழியோ அது வெறும் மேற்கோளாக, உத்தரணியாக, மாற்றப்படுகிறது. அந்நூல் செயலற்றுவிடுகிறது. பழிக்கு உள்ளாகிறது. பொதுவெளிக்கு வந்தமையாலேயே இருளுக்குள் செலுத்தப்பட்ட நூல்களில் ஒன்று கீதை.
‘தோன்றி மறையும் இந்தப் பருப்பொருள்கள் மேல் உன்னதமானதும், அழிவற்றதுமான இன்னொரு இயற்கை உண்டு. அது முழுமையானது. அழிவற்றது. இந்த அகிலங்கள் எல்லாம் நலிவடையும் போது அது அழிவற்றதாக இருக்கிறது’. இது கீதையின் இன்னொரு வகையான தத்துவ கூற்று. இந்த தத்துவ சூத்திரம், இயற்பியலில் வரும் ஒரு வரி மாதிரித்தான் இருக்கிறது. அழியக்கூடியதும், மாறிக்கொண்டிருப்பதும் ஆன இந்த உலகங்களுக்கு அப்பால், அழிவற்றதும் எப்போதும் இருப்பதுமான இன்னொரு உலகம் ஒன்று இருக்கிறது. அது முழுமையானது. அழிவற்றது. இந்த அகிலங்கள் எல்லாம் அழிந்த பிறகும், அந்த அகிலம் மிஞ்சி இருக்கும். இதை ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) சொல்லியிருந்தால் இதை ஒரு பிரபஞ்சவியல் தத்துவம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இது வெவ்வேறு அகநிலைகளை தொட்டுச் செல்லும் வரி. அந்த தளங்களுக்கெல்லாம் இந்த வரியை கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இதை வாசிக்கும் ஒரு நவீன சிந்தனையாளனுக்கு இருக்கிறது.
ஒரு நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. அது முடிந்து நாடகத்தின் மணி அடித்தாயிற்று. நாடகம் இல்லாமல் ஆகிறது. தெருக்கூத்து நாடகங்களில் இதை நீங்கள் பார்க்கலாம். தெருக்கூத்து நாடகம் நடந்து முடிந்த உடனே எல்லோரும் அப்படியே அந்த உடைகளுடனும் வேடத்துடனும் போய் டீ குடித்துக்கொண்டிருப்பார்கள். அங்கே நாடகம் இல்லை, ஆனால் நாடகத்தில் இருந்த எல்லாம் அப்படியே நீடிக்கின்றன. நாடக விதிகள், நாடகக்கதை, நாடக நடிப்பு அங்கே இல்லாமல் ஆகிவிட்டனவே ஒழிய, அந்த நடிகர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். இங்கு இவ்வகையில் கோர்க்கப்பட்ட இது இல்லாமல் ஆகும். எது இவ்வகையில் கோர்க்கப்பட்டதோ, அது எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். எப்பொருளும் அழிவதில்லை.இந்த வரிக்கு நிகராக, ஆற்றல் அழிவதில்லை என்ற வரியை நீங்கள் இணைத்துப் பார்க்கலாம். பொருள் அழிவதில்லை, ஆற்றல் அழிவதில்லை. எல்லாம் அங்கேதான் இருக்கும், உருமாறும். இந்த பிரபஞ்சத்தின் நிறை மாறுபடாது. நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இதற்கு அப்பால் இன்னொன்று இருக்கிறது. அது மாறாதது. அது இதுவாகத் தோற்றம் அளிக்கிறது. இது அதற்குத் திரும்பிச் செல்கிறது. இந்த வகையில் கீதையின் பல வரிகளை நவீன அறிவியல் சிந்தனைக்கும், நவீன பிரபஞ்சவியல் சிந்தனைக்கும் அருகே கொண்டு வைத்துப் பார்க்கமுடியும்.
ஆனால் நாம் இதை எங்கு வேறுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இந்த இடத்தில் சொல்ல வேண்டியுள்ளது. கீதை நவீன அறிவியலைச் சொல்கிறது என்று நான் சொல்லவில்லை. அன்றே சொன்னார்கள் கீதையில் என்று சொல்லவில்லை. கீதை சொல்வது அறிவியல் அல்ல. அது உயர்தத்துவம். உயர்தத்துவம் எல்லா அறிவுத்துறைகளுக்கும் பொதுவாக ஒன்றேதான். நெற்றியில் விபூதி போட்டால் சளி பிடிக்காது என்கிற மாதிரியான அறிவியல் உண்மை இல்லை கீதை சொல்வது. அப்படிச் சொன்னால் விக்ஸ் இருக்கும்போது, எதற்கு விபூதி என்று ஒரு பையன் கேட்பான். அதற்கு பதில் சொல்லத் தெரியாது இவர்களுக்கு. வழிபாடுகளுக்கு அசட்டுத்தனமான அறிவியல் உண்மைகளைக் கற்பிக்கும் மனநிலையில் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. அனைத்து வழிபாடுகளும் குறியீட்டுத் தன்மை உடையவையே ஒழிய, அவை அறிவியல் கிடையாது. வாசலில் கோலம் போட்டால் எறும்புகளுக்கு தீனி ஆகும் என்கிறார்கள். ஏன் அதை ஒரு டப்பாவில் வைத்தால் எறும்பு எடுத்துக் கொண்டு போகாதா? கோலமாகத்தான் போட வேண்டுமா? இந்த வகையான அசட்டு அறிவியல் அல்ல நான் இங்கே சொல்வது. நான் சொல்வது உயர் அறிவியல். பிரபஞ்சவியல். நவீன அறிவியலே கீதையை ஆதரிக்கிறதே என்று புளகாங்கிதம் அடைவதற்காக நான் சொல்லவில்லை. நியூட்டனோ ஐன்ஸ்டீனோ வந்து கீதைக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. வெள்ளைக்காரனே சொல்லிவிட்டானே என்ற பரவசம் இங்கு வேண்டியதில்லை. கீதையின் உயர்தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு நவீன அறிவியல் அளிக்கும் உயர்தத்துவம் நமக்கு உதவுமா என்று மட்டும்தான் நாம் பார்க்கிறோம். உதவும் என்று நான் சொல்கிறேன். அவ்வளவுதான். நவீன அறிவியலைக் கற்ற மேலைநாட்டினர் பலபேர் இந்தக் கோணத்தில் எழுதியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய பெயரைச் சொல்லி இந்த உரையை அந்தத் திசையில் கொண்டுசெல்ல விரும்பவில்லை.
திரும்பவும் கீதையின் அந்த வரிக்கு வரும்போது அது கொடுக்கும் பிரமிப்புக்கு அளவே கிடையாது. ஏனென்றால் 1970-களுக்கு பிறகுதான் ஒரு கருத்து எழுந்து வந்திருக்கிறது. பிரபஞ்சம் என்பது பல அடுக்குகளால் ஆனது. நாம் பார்க்கின்ற பிரபஞ்சத்திற்கு அடியில் ஒரு பிரபஞ்சம் இருக்கிறது. பிரபஞ்சத் துளைகள் வழியாக, ஒரு பிரபஞ்சத்தில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு போக முடியும். இதெல்லாமே அறிவியல் கோட்பாடுகளாக இன்றைக்கு பேசப்படும் விஷயங்கள். ஒருவகையில் கருதுகோள்கள்தான் அவை. ஆனால் இப்படியெல்லாம் யோசிக்கிறார்கள். நாம் பார்க்கும் இந்த பிரபஞ்சத்திற்கு அடியில் இன்னொரு பிரபஞ்சம் இருக்கிறது, அது மாறாதது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இப்பிரபஞ்சம் என்று இந்த வரியைச் கீதை சொல்லும்போது, அதன் தொன்மையும், அதன் ஆழமும் நம்மை பிரமிக்க வைக்கிறது. அதைச் சுட்டிக்காட்டவே இதைச் சொன்னேன்.
மகத்தான பகடை
தத்துவார்த்தமாக கீதையை அணுகும் இரு வழிமுறைகளை நான் சொன்னேன். ஒன்று, அதன் Ethics, அதாவது அறவியல். அதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். உதாரணத்தை அதன் அடிப்படையில் தான் எடுத்தேன். இரண்டாவது, அதன் பிரபஞ்சவியல். இந்த இரண்டு கோணங்களிலும் தத்துவார்த்தமாக அணுகவேண்டிய பல்வேறு வரிகள் கீதையில் உள்ளன.
மூன்றாவதாக புதிர் கூற்றுகள். இந்தப் புதிர்கூற்றுகளுக்கு ஒரு தனித்தன்மை ஆன்மிக நூல்களில் உண்டு. குறிப்பாக ஜென் பெளத்தத்தில் ஒரு தியான மந்திரமாகவே ஒரு புதிரைக் கொடுப்பார்கள். ஒருவர் ஒரு ஜென் குருகுலத்துக்குப் போகிறார். குரு அவருக்கு ‘ஒரு கை ஓசை தியானம்’ என்று உபதேசம் செய்து அதை கேட்கும்படிச் சொல்லி அனுப்புகிறார். அது ஜென்னில் முக்கியமான வார்த்தை. ஒரு கை ஓசை .ஒரு கைக்கு ஓசையே கிடையாது இல்லையா?. ஆனால் பன்னிரண்டு வருடங்கள் தியானத்திற்குப் பிறகு, அந்த மாணவன் ஒரு கை ஓசையைக் கேட்டான். அவனுக்கு ஞானம் கிடைத்தது. இந்த வகையான புதிர் வழிகள் வழியாக செல்லும் வழக்கம், மாபெரும் மெய்யியல் படைப்புகளுக்கு எப்போதுமே உண்டு. கீதையில் அந்த மாதிரி புதிர் என்று சொல்லப்படத்தக்க நிறைய வரிகள் உள்ளன. அவை தியானத்துக்குரியவை.
‘யோகிகள் வேள்விகளில் அவிஸ் இட்டு தேவர்களை வழிபடுகிறார்கள். சிலர் பிரம்மம் என்னும் நெருப்பில் வேள்விகளையே அவிஸாக இடுகிறார்கள்’. இது ஒரு வரி. சிலர் வேள்விநெருப்பில் அவி இட்டு தேவர்களை வழிபடுகிறார்கள். சிலர் பிரம்மம் என்னும் நெருப்பில் வேள்விகளையே அவியாக அளிக்கிறார்கள். வேள்வி என்பதே படையல்தான். ஆனால் வேள்விகளையே படைக்கிறார்கள். இதை விளக்க ஆரம்பித்தால் நான் ஒரு புரிதலைக் கொடுப்பேன். ஆனால் அதற்காக இது எழுதப்படவில்லை. நீங்கள் அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது. இதை எப்படி யோசிக்கலாம்? ஒரு வேள்வியை ஒருவன் செய்கிறான். ஒரு ரிஷி அந்த வேள்வியையே படையலாக்கிவிடுகிறார். யாருடையது மெய்யான வேள்வி? இவர்கள் வேள்வி செய்கிறார்கள். அவர்கள் வேள்விகளை ஆகுதியாகச் செய்கிறார்கள். காந்தி வேள்வி செய்யவில்லை. வேள்விகளையே படையலாக்கினார். இது ஒரு அர்த்தம் தான். இப்படி திறந்து கொண்டே போகும் பல்வேறு சொல்லாட்சிகள் கீதையில் இருக்கின்றன.
இந்த வகையில் அறிவதற்கான வழிமுறை என்பது இந்தப் புதிரை உங்கள் மனதில் பகடையாக உருட்டிக்கொண்டே இருத்தல்தான். இதற்கு இன்னொருவர் சொல்லும் பொருள் நமக்கு முக்கியமே அல்ல. இதற்கு உரைவிளக்கமே எழுதலாகாது. இந்த புதிர் விஷயங்களை விவாதிக்கவே கூடாது என்பதுதான் குரு மரபுகளில் வழக்கமாக இருந்திருக்கிறது. ‘கீதையில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது, நீ என்ன நினைக்கிறாய் மாப்பிள்ளை?’ என்று கேட்கக்கூடாது. கேட்டீர்கள் என்றால் அவர் ஒரு பதில் சொல்வார். இல்லையே அது தவறு என்று ஒரு நிலைபாட்டை நீங்கள் எடுப்பீர்கள். அவர் ஒன்றை எடுத்தமையாலேயே நீங்கள் உங்கள் நிலைபாட்டில் உறுதியாக இருப்பீர்கள். விவாதங்களில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். எப்படியாவது நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து விட்டீர்கள் என்றால், அதன்பின் அது உண்மையோ பொய்யோ அது உங்களுடையது தான். அப்புறம் நீங்கள் அதை விடவே மாட்டீர்கள். ஒருவரிடம் கேட்டு, அவர் அதற்கு ஒன்று சொல்லி, இல்லை இல்லை நான் இப்படி நினைக்கிறேன் என்று நீங்கள் அந்த இடத்தில் சொல்லிவிட்டீர்கள் என்றால், எஞ்சிய வாழ்நாள் முழுக்க நீங்கள் அதை மாற்றப்போவது இல்லை. ஆகவே இந்த வகையான புதிர் மொழிகளை உங்கள் உள்ளே, பல்லாயிரம் பகடைகளாக உருட்டுங்கள் என்று சொல்வார்கள். ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும்.
‘ஏமாற்று விசைகளில் நான் சூது’ என்று அவன் சொல்கிறான். உடனே அதற்கு ஒரு பக்தி விளக்கம் இருக்கிறது. ‘அவன் மாயக்கண்ணன் அல்லவா? அவன் மாபெரும் சூதாடி அல்லவா?’ என்று. ஆனால் அந்த வரிகள் முழுக்க, “ஏமாற்று விசைகளில் நான் சூது, ஒளிர்பவற்றில் நான் ஒளி, நானே வெற்றியும் தீரச்செயலும், வலிமையானவர்களின் வலிமையும் ஆவேன்”. தன்னை ஒரு சூது என்று அவன் சொல்கிறான். இந்த வரியில் இருந்து பல்வேறு திசைகளுக்கு நாம் செல்ல முடியும். ஆனால் ஒரு திறப்பை மட்டும் நான் சொல்கிறேன். ஏன் ஒரு சீட்டாட்டம் என்று சொல்லவில்லை? ஏன் விளையாட்டு என்று சொல்லவில்லை? சீட்டாட்டத்தில் திறமை உள்ளது. விளையாட்டில் பயிற்சி உள்ளது. சூதாட்டம் முழுக்க முழுக்க ஊழ், முழுக்க முழுக்க தற்செயலால் ஆன ஒன்று. அதில் ஆடுபவனுக்கு பெரிதாக இடமே கிடையாது. பகடையில் பனிரண்டு விழுகிறதா, பூஜ்யம் விழுகிறதா என்பது இவன் கையிலும் இல்லை. அவன் கையிலும் இல்லை. ஆகவேதான் அவன் சூது. சதுரங்கம் அல்ல. அதில் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கும் இடம் இருக்கிறது, எதிர்த்தரப்பின் புத்திசாலித்தனத்திற்கும் இடம் இருக்கிறது. முழுக்க முழுக்க இரண்டு தரப்புகளுக்கு நடுவே நின்றிருக்கும் பகடை இருக்கிறதே, அதுதான் அவன். வரலாறு எங்கும் இந்த பகடை ஆடிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். நாளைக்கு செய்தித்தாள் எதைத் தாங்கி வரும் என்பதை உங்களால் சொல்ல முடியாது. எந்தவொரு வரலாற்றுச்சூழலை எடுத்துப் பார்த்தாலும், அந்தப் பகடை உருண்டு கொண்டே இருப்பதைக் காணலாம். அவன் அங்கே ஒரு பகடைக்காயாக சுற்றிக்கொண்டே இருக்கிறான். திடீரென்று பனிரெண்டு அடித்து விட்டது, உலகப்போர் ஆரம்பித்து விட்டது. திடீரென்று பூஜ்யம் விழுந்துவிட்டது, எல்லாமே நின்றுவிட்டன. ஆகவே ஆட்டங்களில் அவன் சூது.
ஆனால் இது என் அர்த்தம், ஜெயமோகனின் அர்த்தம். உங்கள் அர்த்தம் வேறானதாக இருக்கலாம். இப்படி குறைந்தது அறுபது அல்லது எழுபது முக்கியமான புதிர்க் கூற்றுகள் இந்த நூலில் இருக்கின்றன. அந்த புதிர் கூற்றுகளை தொட்டு, அறிந்து விரித்தெடுத்துக் கொள்வதன் வழியாக அடையபடுன் ஒரு பகவத்கீதை இருக்கிறது. அது முக்கியமான பகவத்கீதை. அதுதான் மறைஞானகீதை. அதுவே மெய்யான கீதை
(மேலும்)