டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
தற்கல்வியும் விவாதமும்
நண்பர்களே, நான் ஏற்கனவே சொன்ன கல்விமுறையில் தற்கல்வி என்னும் இரண்டாம்நிலையில் முதற்படி குரு. இரண்டாவதாக உள்ளது விவாதம். அதன் முதல் விதிகளில் ஒன்று, இணையான அறிவுத்திறன் உள்ளவர்களிடம் அன்றி விவாதிக்கக்கூடாது. நாம் அடிக்கடி செய்யும் தவறு இது. ஒரு நூலை வாசித்தால் டீக்கடைக்கு போய், அங்கு யாரென்றே தெரியாதவர்களிடம் அதைப்பற்றி பேசிக்கொண்டிருப்பது. பத்து நிமிடத்தில் அவர்கள், தங்களுடைய தளத்திற்கு நம்மை இறக்கிவிடுவதைப் பார்க்கலாம். அதற்கு அய்யப்ப பணிக்கருடைய கவிதை தான் ஞாபகம் வருகிறது.
நான்கு பெரும் குதிரைகள்
அலங்கரித்துவந்தன.
ஒன்று வெள்ளை ஒன்று சிவப்பு.
ஒன்று கருமை ஒன்றுக்கு தவிட்டுநிறம்.
ஒன்றுக்கு நான்குகால்.
ஒன்றுக்கு மூன்றுகால்.
மூன்றாவதற்கு இரண்டுகால்.
நான்காவது ஒற்றைக்காலன்.
ஒற்றைக்கால் குதிரை சொன்னது,
மற்றவற்றிடம்
நடனத்துக்கு நேரமாயிற்று தோழர்களே
நாம் ஒற்றைக்கால் நடனம் ஆடுவோம்.
நடனம் தொடங்கியது .
நான்குகாலன் நடுங்கி விழுந்தது.
மூன்றுகாலன் மூர்ச்சையாயிற்று.
ரெட்டைக்காலன் நொண்டியடித்தது.
ஒற்றைக்காலன் குதிரை மட்டும்
நடனம் தொடர்ந்தது.
எப்போதுமே இணையான, ஒருவகையில் சமானமான ருசியுடையவர்களுடன் விவாதிப்பது என்பது முக்கியமானது.மற்ற எல்லா விவாதங்களும் அறிவை விட அறியாமையையே வளர்க்கும்.
தன்னறம்
நேற்று இங்கு உரையாற்றிவிட்டு செல்லும்போது, என்னுடைய நண்பர்களிடம் விவாதித்துக் கொண்டு போனேன். பாதி வேடிக்கையாகவும், பாதி தீவிரமாகவும் ஒரு விஷயத்தைக் கேட்டார்கள். அரவிந்தர் கர்ம மார்க்கத்தில் இருந்து தன்னுடைய சுதர்மத்தைக் கண்டுபிடித்து ஞானமார்க்கத்தை நோக்கி வந்தார். இதில் Reverse Engineering இருந்தால் என்ன பண்ணுவது? ஒருவர் ஞான மார்க்கத்தில் இருந்து, கர்ம மார்க்கத்திற்கும் அங்கிருந்து கடைசியாகச் சாங்கிய யோகத்திற்கும் வந்தால் என்ன சொல்வது என்றார்கள். அது ஒரு வீழ்ச்சியா? . ஒரு சுவாரஸ்யமான கேள்விதான். அப்படி நடக்குமா என்றால் நடக்கும். காலத்திலும் ஞானத்திலும் முன்னால் மட்டும்தான் போகமுடியும் என்பது ஓர் உண்மை. பின்னால் வர முடியாது. அப்படிப் பார்க்கும் போது ஒருவர் எந்த யோகத்திலிருந்து எந்த யோகத்திற்கு வேண்டுமானாலும் போகலாம், அது அவருடைய தன்னறத்தை சுதர்மத்தை சார்ந்ததாகையால் அவர் முன்னால் தான் போய்க்கொண்டிருக்கிறார்.
அதை ஒட்டி தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். பல வகையிலும் இந்த சுதர்மம் என்பதைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். பகவத்கீதையில் பேசப்படும் சுதர்மம் என்பது மிக மிக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அல்லது தவறாக பிரச்சாரம் செய்யப்பட்ட ஒன்று. அதை குலதர்மம் என்றும் ஜாதிய தர்மம் என்றும் விளக்கும் கீதை வெறுப்பாளர்கள் இருக்கிறார்கள். கீதையை வெறும் சாதிக் காழ்ப்பின் ஆயுதமாக அவர்கள் காண்கிறார்கள். உண்மையில் மறுபக்கம் கீதை சொல்வதை குலதர்மம் அல்லது ஜாதிய தருமம் என்றும் எடுத்துக்கொண்டிருக்கும் ஏராளமான மதத்தலைவர்களும் உள்ளனர். இருசாராரும் இருவகை இருளில் இருக்கிறார்கள். நாராயண குரு சொன்ன உபநிடத வரியை எடுத்துச் சொன்னால், “அறிவின்னு அதிருண்டு எதிருண்டு, அறிவில்லாய்மைக்கு ரண்டுமில்ல” – அறிவுக்கு எல்லையுண்டு, எதிர்ப்பும் உண்டு. அறிவின்மைக்கு இரண்டுமே இல்லை. இருவகை அறியாமைகள் நடுவே, இரண்டு பக்கமும் டைனோசரும் டிரெக்ஸும் வரும்போது டந்து போவது போல், நாம் இந்த காலகட்டத்தில் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறோம்.
கீதையிலே பேசப்படும் சுதர்மம் அல்லது தன்னறம் என்பது என்ன? ஒவ்வொருவரும் தானே கண்டடையக்கூடிய தன்னுடைய இயல்பு சார்ந்த இவ்வுலகச் செயல்பாடு ஒன்று உண்டு. ஒருவன் எந்த வயதில் தன்னை ஒரு கவிஞன் என்று கண்டுகொள்கிறான்?. ஒருவன் எந்த வயதில் தன்னை ஒரு எழுத்தாளன் என்று கண்டுகொள்கிறான் ? ஆனால் கண்டடைகிறார்கள் அல்லவா? நான் இன்னார் என்று சொல்கிறார்கள் அல்லவா? பல வருடங்களுக்கு முன்னால் சென்னைக்கு தன்னுடைய சகோதரர்களுடன் ஒருவன் வந்தான். அவனுடைய ஐந்து வயதில் ஒன்றாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, கொட்டாங்குச்சியில் தாளம் போட்டு பாடினான். அப்போது அவன் தெரிந்து கொண்டான், தான் ஒரு பாடகன் – இசைக்கலைஞன் என்று. இனிமேல் படிக்க மாட்டேன் என்று முடிவு செய்தான். அதன்பிறகு இசைதான் அவனுடைய தொழிலாக, வாழ்வாக, பொழுதுபோக்காக எல்லாமாக இருந்தது. சகோதரனுடன் சென்னைக்கு வருகிறான். இசையையே ஒரு தொழிலாக எடுப்பதற்கு முயற்சி செய்கிறான். சாப்பாடு இல்லை, கடுமையான வறுமை. வழக்கமாக சாப்பிடும் ஒரு ஹோட்டலுக்கு வந்து அதன் வாசலில் உட்கார்ந்திருக்கிறான். அந்த ஹோட்டல் முதலாளியின் பையன் அங்கே இருக்கிறார். அவர் கேட்கிறார், ஏதாவது சாப்பிடலாமே என்று. இல்லை, பைசா இல்லை என்கிறான். ஏதாவது வேலை ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் செய், வேலை செய்துவிட்டு சாப்பிட்டுக்கொள் என்கிறார். நான் வேண்டுமானால் ஒரு மணி நேரம் பாடுகிறேன், வேலை செய்ய மாட்டேன். இந்தக் கையால் சங்கீதம் தவிர எந்த வேலையும் செய்ய மாட்டேன். ஏனென்றால் நான் பாடகன், இசைக்கலைஞன் என்கிறான் அவன். உனக்கு அவ்வளவு திமிரா? அப்படியென்றால் பட்டினி கிடந்து சாவு என்கிறார் கடை உரிமையாளர். பரவாயில்லை சாகிறேன். இந்த நகரம் ஒரு இசைக்கலைஞனை சாகவிட்டால் அது எனக்குப் பழியில்லை, நகருக்கே பழி. ஆனாலும் என்னால் வேலை செய்ய முடியாது என்கிறான்.அந்தப் பையனுடய அப்பா அங்கே வருகிறார். செய்தியறிந்து அவர் பதறுகிறார். “டேய், இப்படி ஒருத்தன் சொல்லிவிட்டானென்றால் அவனுக்கு அவனுடைய சுதர்மம் என்னன்னு தெரியுதுடா, சாப்பாடு போடு” என்கிறார். “நீ எப்போது வேண்டுமானாலும் இங்கே சாப்பிட்டுக்கொள்” என்கிறார். வென்று புகழ்பெற்றபின் ஒரு சக்கரவர்த்திபோல் அவர் சென்று அந்த உணவக உரிமையாளரைப் பார்க்கிறார். நாமனைவரும் அறிந்த இசைமேதையின் வாழ்க்கை இது.
ஒருவன் தன்னுடைய சுதர்மத்தை எங்கு கண்டுகொள்கிறான்? ஒரு மாயப்புள்ளியில். தன்னை அறிவதுதான் அது. உன்னுடைய முழுமை என்பது உன்னுடைய தன்னறம் வழியாக அமைவதுதான் என்று கீதை சொல்கிறது. உன் அப்பா இந்த வேலை செய்ததனாலும் நீயும் இந்த வேலையை செய் என்று கீதை சொல்லவில்லை. உனக்கே தெரியும் நீ யாரென்று. இரண்டு வகைகளில் தெரியும். நீ எதைச் செய்து கொண்டிருக்கிறாயோ அதில் நிறைவின்மை வழியாகத் தெரியும். எதைச் செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்யும்போது வரும் கட்டற்ற உவகை வழியாகத் தெரியும். தன்னறத்தை ஆற்றும் ஒருவன், அந்த செயல் வழியாக ஒவ்வொரு நாளும் விடுபட்டுக்கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு நாளும் தன்னைச் சூழ்ந்த அச்சம், இழிமை, இளிவரல்களில் இருந்து விடுபட்டுக்கொண்டே இருக்கிறான். இன்பத்துக்கும், துன்பத்துக்கும் அதைச் சரணடைகிறான். ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் கச்சேரி முடிந்த பிறகு என்ன செய்வீர்கள் என்று எஹுதி மெனுஹின் அவர்களிடம் கேட்டார்கள். நான் ஓய்வு எடுப்பேன் என்றார். என்ன ஓய்வெடுப்பீர்கள்?. ‘அறைக்குப் போய் நன்றாக வெண்ணீரில் குளிப்பேன். வேறு சட்டை மாற்றிவிட்டு ஓய்வாக உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்துவிடுவேன்’ என்கிறார். ஒவ்வொரு தருணத்திலும் தெய்வத்துக்கு நிகராக நீங்கள் உங்கள் கர்மத்தை வைக்கமுடியும் என்றால், அது உங்கள் தர்மம். அதுதான் உங்களுடைய சுதர்மம். ஒரு நூலாக கீதை சொல்லும் வழி அதுதான்.
அச்சத்தால் நீங்கள் ஒன்றை செய்கிறீர்கள், ஆசையால் ஒன்றை செய்கிறீர்கள், பலவீனத்தால் ஒன்றை செய்கிறீர்கள். அது உங்கள் தர்மம் இல்லை. சுதர்மம் என்பதை யாராவது உங்களுக்கு சொல்ல வேண்டியது உண்டா? இல்லை. அதை இன்னொருவர் சொல்ல முடியாது. சொன்னால் நீங்கள் செவிகொடுக்க மாட்டீர்கள். ஏன் அது சுதர்மம் என்று சொல்லப்படுகிறது என்றால் அது சுயமாக மட்டுமே கண்டடையக்கூடியது என்பதனால்தான். அதை நீங்கள் கண்டடையக்கூடிய ஒரு தருணம் உண்டு. அதுதான் கீதை சொல்லும் சுதர்மம். கீதாமுகூர்த்தம் போலவே தன்னறம் என்னும் தருணமும் தானே வந்தமைவது. அரியது. வாழ்க்கையையே மாற்றியமைப்பது. தெய்வம் தோன்றும் கணம் அது.
நேற்றைக்கு பேசும்போது அதைத்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவர் ஞான மார்க்கத்திலிருந்து கிளம்பி, சாங்கிய தரிசனத்திற்கு வந்து, ஒரு சாதாரண குடும்பத் தலைவனாக மாறி இறந்தாரென்றால் அது ஒரு வீழ்ச்சியாகுமா? ஒரு குடும்பத்தலைவர் தான் உண்மையில் அவர் என்றால், தான் வந்து சேர்ந்த இடத்திற்கு அவர் வரவேண்டியவர்தானே அவர்?. அவருடைய இயல்பான பாதை அது. அவருடைய நிறைவுதான் அளவுகோலே ஒழிய, ஏறுமுகம் இறங்குமுகம் அல்லது Ascending – Descending Order என்பது அதற்கு கிடையாது. ஞானம் என்பது வளர்ச்சியின் பாதை மட்டுமே, முன்னால் செல்லக்கூடிய பாதை மட்டுமே.
தனித்த பயணம்
சுவாத்யாயத்தில் ஒன்று குருமுகமாக கற்பது. இன்னொன்று நண்பர்களுடன் அல்லது சமானமான அறிவுடையவர்களுடன் விவாதித்து அறிதல். மூன்றாவதாக தானே கற்றுக்கொள்தல். தானே கற்றுக்கொள்வதில் பல படிநிலைகள் உள்ளன. ஒன்று அந்த நூலின் ஒவ்வொரு வார்த்தையையும் அறிவது. நேற்றே நான் சொன்னேன். இந்த நூல்கள் அனைத்தும் சூத்திர வடிவில் அமைந்தவை என. சூத்திர வடிவம் என்பது சுருக்கப்பட்ட வடிவம், விதை வடிவம். விரிவாக்கிக் கொள்ளக்கூடிய பொறுப்பு உங்களுக்கு இருக்கும்போது, உங்களுடைய மொத்த கற்பனையையும் ஞானத்தையும் ஒவ்வொரு வார்த்தையிலும் போடுவதற்கு நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள் என்பதனால், வாசிப்பு ஒரு இயல்பான தன்னிச்சையான செயல்பாடாக இருக்க முடியாது. ஆக அதற்குப் பல படிநிலைகள் இருக்கின்றன.
முதலில் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும்.இரண்டாவதாக, அந்த வார்த்தையை மாற்றி சமானமான வேறு வார்த்தையை போட்டு, அப்போது எந்த அளவுக்கு அர்த்த இழப்பு இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் அந்த வார்த்தை எந்த அளவுக்குச் சரியாக அங்கு போடப்பட்டிருக்கிறது என்று அந்த மாற்றுச்சொல் போடும்போதுதான் புரியும். உதாரணமாக, “சர்வமிதம் ஜகத் மோகிதம்” என்ற கீதை வரியை சர்வமிதம் ஜகத் காமிதம் என்று ஏன் சொல்லக்கூடாது? இங்குள்ள அனைத்தும் பிரபஞ்சத்தைக் கண்டு மோக வயப்பட்டிருக்கின்றன, மோக வளையத்தில் ஆழ்ந்திருக்கின்றன . அது கீதையின் சொற்பொருள். இங்குள்ள அனைத்தும் பிரபஞ்சத்தை விரும்புகின்றன என்று நாம் சொல்லை மாற்றிக்கொண்டால்எவ்வளவு வித்தியாசம்! மோகம் என்பது கட்டற்றது, மயக்குவது, பித்துப் பிடிக்க வைப்பது, நிலை மறக்கச் செய்வது. காமம் என்பது தான் என்ற நிலையிலிருந்து விரிந்து கொள்வது. காமித்தல் என்பது எனக்கு வேண்டும், நான் அடைய வேண்டும் என்ற விருப்பம். மோகம் என்பதில் நான் கூட அதில் கிடையாது. ஆக அந்த ஒரு வார்த்தையை மாற்றிப் பார்ப்பதன் மூலம் அந்த வார்த்தை எவ்வளவு முக்கியமானது என்று கண்டுகொள்கிறோம்.
திருக்குறளைப் படிப்பதற்கும் இந்த வழிமுறை முக்கியமானது. திருக்குறளில் அதிலுள்ள ஒரு வார்த்தையை எடுத்து விட்டு அதற்கு சமானமான இன்னொரு வார்த்தையை வைத்துப் பாருங்கள். அப்போது ஒரு அர்த்தக்குறைவு ஏற்படுகிறது இல்லையா? அது ரொம்ப முக்கியமானது. ஏற்கெனவே நான் சொன்ன உதாரணம் ஒன்று உண்டு, “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு’ ஏன் மணற்கேணி? வெறும் கேணி போதுமே. அல்லது மண் கேணி என ஏன் இருக்கக்கூடாது? மண்கேணிக்கும், மணற்கேணிக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மணல்கேணியை தோண்டிக்கொண்டே இருக்கவேண்டும். தொடத்தொடத்தான் கேணியே இருக்கும். தொடாமல் இருந்தால் தூர்ந்து போய் விடும். ஆக அந்த வார்த்தை அங்கே மிகக் கவனமாக போடப்பட்டிருக்கிறது. ஆகவே இந்த மாதிரியான சூத்திர நூல்களில் ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணிப் படிக்க வேண்டும். அதனால் தான் எழுத்தெண்ணிப் படிப்பது என்ற வார்த்தை நம்முடைய சொல்லாட்சியில் இருக்கிறது.
மூன்றாவது வைப்பு முறையைப் பார்ப்பது. ஒரு சொல்லுக்குபின் ஏன் இன்னொரு சொல் உள்ளது? அந்த அடுக்கு ஏன் அப்படி உள்ளது? எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்னும் குறளில் எண்ணுக்குப் பின் ஏன் எழுத்து சொல்லப்பட்டது? அந்த வைப்புமுறை ஒருபோதும் தற்செயல் அல்ல. அதற்குப் பின் உள்ள கணிப்பு முக்கியமானது.
அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு போவதென்பது ஒரு வலைப்பின்னலாக அந்த ஞானத்தை மாற்றிக்கொள்வது. ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தொட்டுத் தொட்டு செல்லக்கூடிய ஒரு வார்த்தை. “சர்வமிதம் ஜகத் மோகிதம்” எங்கோ ஓர் இடத்தில் அந்த வரி “ஈசோவாஸ்யம் இதம் சர்வம்” என்ற வரியோடு இணைகிறது. சர்வமிதம் ஈஷோவாஸ்யம் – இங்கு அனைத்திலும் இறை உறைகிறது. இங்குள்ள அனைத்தும் மோகம் கொண்டுள்ளன. இங்குள்ள அனைத்தும் இறைமேல் மோகம் கொண்டுள்ளன. மிகப்பெரிய பிரம்மாண்டமான மோகம், இங்குள்ள அனைத்திலும் உரையக்கூடிய அந்த ஈஸன் மேல் தானா? ஒரு மரத்தைப் பார்த்து எனக்கு வரக்கூடிய மகிழ்ச்சி என்பது ஈசனின் வாஸ்யம் அதில் இருப்பதனால் தானா? இப்படி கற்பனையை, எண்ணத்தை கற்றவற்றைத் தொடுத்துக்கொள்வதன் வழியாக பெருக்கிக்கொள்வது என்பது சுவாத்யாயத்தில் மிக முக்கியமானது. அது நாமே நமக்குள்ளும் வெளியிலும் செய்யும் பயணம். ஒரு நூல் நூற்றுக்கணக்கான நூல்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது. நான் இங்கு பேசும்போதே ஒரு கீதை வரியுடன் நவீன கவிதை இணைவதை நீங்கள் பார்க்கலாம். ஒரு கீதை வரியுடன் ஒரு குறள் இணைவதை நீங்கள் பார்க்கலாம். இது சுவாத்யாயத்தின் மிக முக்கியமான அம்சம். ஒன்றிலிருந்து ஒன்றென கிளைபிரிந்து செல்லும் ஞானத்தால் ஏறி இவ்வுலகைச் சுற்றி வருவது.
கீதைத்தியானம்
இவ்வாறு சுவாத்யாயத்தின் மூன்று தளங்களை அடைந்தபிறகுதான் தியானம் அமையவேண்டும். ஒரு நூலை மனனம் செய்து, குரு முகத்திலிருந்து கற்று, இணையான அறிவுடையவர்களுடன் விவாதித்து அறிந்து, தற்கல்வியால் முழுமை செய்த பிறகும் ஒரு அறிதல் பாக்கி இருக்கிறது. அதுதான் தியானம். கவிதை வாசிக்கக்கூடியவர்களுக்கு இதை நான் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கவிதை வாசிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும், ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்து நூறுமுறை படித்தும், நண்பர்களுடன் நூறுமுறை விவாதித்தும் கூட, என்றோ ஒரு தருணத்தில் தன்னிச்சையாக அந்த ஒரு கவிதை வரி நினைவுக்கு வரும்போதுதான் தெரியும் அது உண்மையில் என்ன வரி என்று. அந்தக் கவிதையின் ஊற்று தெரியும். அந்தக் கவிதை நம்முடையதாகவே ஆகிவிடும். நாம் எழுதியதுபோல. நம்மில் முளைத்ததுபோல.
என் அனுபவம் ஒன்று இருக்கிறது. என் அம்மா தற்கொலை செய்து கொண்டார். அந்த அலைக்கழிப்பில் நான் இருந்த நாட்கள். கடுந்துயரில் நினைவு சிதறிவிட்டிருந்தது. திருவனந்தபுரத்தில் ஒரு விடுதியில் நான் தங்கியிருக்கிறேன். பிரமிள் எழுதிய ஒரு வரி எனக்கு ஞாபகத்தில் வந்தது.
வழிதொறும்
நிழல்வலைக் கண்ணிகள்
திசை தடுமாற்றும்
ஓர் ஆயிரம் வடுக்கள்
வார்த்தை என்பதைவிட, அதன் அர்த்தம் என்பதைவிட, அந்தக் கவிதை மேலான ஒன்று. அந்த சொற் சேர்க்கையால் எனக்கு பைத்தியம் பிடித்தது. ஒரு பூனையை துரத்தி துரத்தி வண்டு கொட்டுவது மாதிரி, எங்கே ஒளிந்தாலும் அது தொடர்ந்து வருவது மாதிரி, இந்த வரி என்னைத் தொடர்ந்து வந்தது. பஸ் பிடித்து மானந்தவாடி போய், அங்கிருந்து மைசூர் போய் அங்கிருந்து மங்களூர் வந்து, மங்களூரில் இருந்து காசர்கோடு திரும்பும் வரைக்கும் இந்த வரி என்னுடன் பயணித்தது.’வழிதொறும் நிழல்வலைக் கண்ணிகள் திசை தடுமாற்றும் ஓர் ஆயிரம் வடுக்கள்’ ஆயிரம் வடுக்களின் நிழல் வலை. வலைவிரிந்த வழிகள். வழிகளில் அலையும் திசைதடுமாற்றம்.இப்படி உங்களை பித்துப் பிடிக்க வைக்கக்கூடிய, உங்களுக்கு உள்ளே ஊடுருவிச் சென்றுவிடக்கூடிய, ஒரு மூங்கிலில் வண்டு துளைபோடுவது போல் உங்கள் ஆத்மாவில் துளைபோட்டு, அதை புல்லாங்குழலாக மாற்றக்கூடிய ஒரு தருணத்தை, ஒரு வார்த்தை எடுக்கும்போது தான் நீங்கள் அதை தியானத்தில் அறிகிறீர்கள் என்று அர்த்தம்.
1986 -ல் தான் முதன்முறையாக நான் பாலைவனத்தைப் பார்க்கிறேன். ஜெய்சால்மருக்கு பாலைவனத்தை பார்ப்பதற்காக போனேன். முதல் பார்வைக்கு, பாலைவனம் எனக்கு அளித்த அந்த வெறுமையை என்னால் நன்கு அமைந்த வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஏனென்றால் அதில் வண்ணங்கள் கிடையாது. நம் மரபு வண்ணங்களை ரதிபாவம் என்று சொல்கிறது. ரதிபாவம் என்றால் உலகியல் மகிழ்வு. இந்த உலகத்தின் கொண்டாட்டங்கள் அனைத்தும் வண்ணத்தில்தான் இருக்கின்றன. வண்ணங்கள் இல்லாத உலகம் என்பது ருசிகள் இல்லாத உலகம். காமிகம் இல்லாத உலகம், விரும்புவதற்கு ஏதுமில்லாத ஒரு உலகம். வெறுமையில் விரிந்திருந்தது சாம்பல் கலந்த, சிவப்பு கலந்த மண். புழுதிபடிந்த வீடுகள், புழுதிபடிந்த மனிதர்கள், புழுதிபடிந்த ஒட்டகம், புழுதிபடிந்த பெட்டிக்கடை, பஸ்ஸூம் புழுதி. அந்தப் பெரும் சோர்வு தாங்க முடியாமல், ஜெய்சால்மர் பக்கத்தில் சிறிய ஹோட்டலில் தங்கினேன். இரவில், நள்ளிரவுக்கு மேல் எழுந்து வெளியே வந்தேன். நடந்து போய் அந்தப் பாலைவனத்தைப் பார்த்தேன். அப்போது அது வேறொரு தோற்றத்தைக் கொண்டிருந்தது. நிலவு அதனுடைய முழுமையுடன் வெளிப்படுவது பாலைவனங்களில் மட்டும்தான். நிலவு ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும். கிட்டத்தட்ட சூரியன் அளவிற்கு பெரியதாகத் தெரியும். பழுத்து, சிவந்து, கனன்று, உருகி அது அந்தரத்தில் அங்கே நிற்பது மாதிரி. வைக்கம் முகம்மது பஷீர் அவருடைய கதை ஒன்றில் இதை எழுதியிருக்கிறார். இதே ஜெய்சால்மரில் இதே மாதிரி ஒரு நிலவைப் பார்க்கிறார். ‘யா அல்லா! உன்னுடைய மகத்துவத்தைப் பார்ப்பதற்கு எனக்கு ஆற்றல் இல்லை. நான் எளிய உயிர். ஒரு சின்னஞ்சிறு புழு’ என்று உணர்ந்து அழுதபடி ஓடி ஜெய்சால்மரின் சிறிய சந்துகளுக்குள் புகுந்து கொள்கிறார். அந்த நிலவைப் பார்த்து நான் அன்றைக்கு அழுதேன். அந்த நிலவு வானில் நின்று பொன்னாக ஒளிரும் ஒரு கண்ணீர் துளியாக என்னைத் தானும் உணர்ந்தது.
நெடுங்காலத்திற்கு பிறகு ஒரு கனவில் மறுபடியும் அந்த நிலவைப் பார்த்தேன். அந்த நிலவை திரும்பவும் பார்த்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறேன். அலை அலையாக பாலைவனம் விரிந்து கிடக்கிறது. நிலவில் பாலைவனத்தில் பார்த்தால் அது கடல் மாதிரியே தோன்றும். அலைகளின் அசைவுகள் மாதிரியே தோன்றும். தூரம் என்பதே ஏதோவொரு வகையில் இல்லாமல் ஆகி, ஒரு பெரிய படுதா மாதிரி இரட்டை பரிமாணமாக ஆகிவிடும். எத்தனை நடந்து சென்றாலும் தூரம் குறையாமல் ஒரே இடத்தில் போய்க்கொண்டே இருப்பதுபோல ஒரு கனவு. கனவு முடிந்து எழுந்து தண்ணீர் குடிக்கும் போது அந்த வரி மறுபடியும் என்னுள் வந்தது. வழிதொறும் நிழல்வலைக் கண்ணிகள். ஆனால் இப்போது நான் அந்நிலம் மேல் பெரும் மோகத்துடன் இருந்தேன். ‘சர்வமிதம் ஜகத் மோகிதம்’ – இங்குள்ள அனைத்தும் இப்பிரபஞ்சத்தின் மேல் பெரும் மோகம் கொண்டுள்ளன. இம்முறை சுழன்று வந்து கொட்டும் கொடுக்கு கொண்ட வண்டு அல்ல, இசைக்கும் சிறிய பறவை என்னை சுற்றிச் சுற்றி வருவது மாதிரி, ஒளிரும் ஒரு பூச்சி சுற்றி வருவது மாதிரி அந்த வரி என்னைச் சுற்றியது.
ராத்திரி பனிரெண்டு மணிக்கு எழுந்து வெளியே போனேன். மழை பெய்து கொண்டிருக்கிறது. சுத்தமாக வெளிச்சமே இல்லை. ஓர் அரற்றல் போல, ஒரு பைத்தியக்காரநின் வரி போல இந்த வரிதான் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது, “சர்வமிதம் ஜகத் மோகிதம்”. ஆயிரம் முறை நான் சொல்லியிருப்பேன். ஒரு ஆப்த மந்திரம் எப்படி உங்களை அலைக்கழிக்குமோ அந்த மாதிரி இந்த வரி கூடவே வந்து கொண்டிருக்கிறது. உறை உருவி தீட்டி போடப்பட்ட வாள் மாதிரி பார்வதிபுரத்தின் நீரோடை ஒளிர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். இந்தப் பக்கம் அந்த வாளைத் தீட்டிய பட்டைக்கல் போல வயல்களில் நீர் நிறைந்து ஒளிர்ந்து கிடப்பதைப் பார்த்தேன். வெறும் ஒரு கிறுக்கல் கோடாக மாறிய வேளி மலை மேற்கே. அங்கே நின்று ஒரு வகையில் கையை விரித்து நெஞ்சு நிறைந்து சொன்னேன், ஆம் சர்வமிதம் ஜகத் மோகிதம். இங்குள்ள அனைத்தும் இப்பிரபஞ்சத்துடன் மோகம் கொண்டுள்ளன. நானும்தான். இது அந்த வேறொன்று எனக்கு விடுத்த ரகசிய அழைப்பிதழாகக்கூட இருக்கலாம். இதன் உள்ளடக்கம் பூடகமாகக்கூட இருக்கலாம். இதை நான் அறிவதனால் அதை அறியமுடியாதவனாக ஆகக்கூடும். நித்யா சொன்னார், அந்தப் பறவையை அறிந்தவன் ஞானி, இந்த இறகை மட்டுமே அறிந்தவன் கவிஞன் என்று. என்னால் அப்பறவையை அறியமுடியாமல் போகலாம். இப்பிறவியில் இந்த இறகொன்றே எனக்கு அருளப்பட்டிருக்கலாம். அந்த நேரத்தில் நெஞ்சில் கைவைத்து சொன்னேன், எதற்கு அதை நான் அறிய வேண்டும்? எனக்கு இது போதும். இங்குள்ள அனைத்திலும் உறைகின்ற அது போதும். ஒரு கவிஞனாக, ஒரு எழுத்தாளனாக ‘ஜகத் மோகிதம்’ என்று நான் அலைந்தால் போதும்.
இந்த இரண்டு வரிகளிலிருந்து அன்றைக்கு நான் அடைந்த அறிதலையே இங்கே முன்வைக்கிறேன். நான் இரண்டரை வருடங்கள் ஒரு வரியின் வழியாகப் பயணம் செய்து அறிந்திருக்கிறேன் என்பதுதான் இதை நான் சொல்வதற்கான தகுதி. கீதையை அறிவதற்கான வழிமுறை இந்த தியானநிலைதான். ஒரு தியான நூலை அணுகுவதற்கான வழிமுறை தியானம் மட்டுமே. படித்து புரிந்து கொள்ளக்கூடிய புத்தகம் அல்ல இது. வாழ்ந்து தொடர்ந்து சென்று அறிவதற்கான ஒரு நூல்.
(மேலும்)