கீதையை அறிதல்-13

டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். நான்காம் நாள் உரை

எழுதியவர் Sakthi Prakash

அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான்காவது நாளான இன்று, பகவத்கீதையை பற்றி தொடர்ந்து மூன்று நாட்களாக நான் உருவாக்கிய ஒரு சித்திரத்தை நிறைவு செய்யலாம் என்று நினைக்கிறேன். முதல்நாள் கீதையின் வரலாற்றுச் சித்திரத்தை அளிக்க முயன்றேன். அந்த வரலாற்றுச் சித்திரம் கீதையின் தர்க்கத்தை, சொற்பொருளை, தரிசனத்தை அடைவதற்கு மிகவும் முக்கியமானது என்பது என்னுடைய கருத்து. பக்தி நோக்கில் இதை அணுகக்கூடியவர்களுக்கு அது தேவையற்று இருக்கலாம். ஆனால் அறிவின் வழியே, ஞானமார்க்கத்தை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அது இன்றியமையாதது. எப்படி ஆதிசங்கரரும் மத்வரும் அவர்களுடைய காலத்தின் அறிவின் உச்சத்தில் நின்று கீதையை அணுகினார்களோ, அதைப்போல இன்றைய இளைஞன் இன்றைய அறிவின் உச்சத்தில் நின்றுதான் அதை அணுக வேண்டும் என்பதே அந்த உரையின் சாரம். இருபதாம் நூற்றாண்டை ஆளும் நவீன அறிவியல் சிந்தனைகள், சமூக சிந்தனைகள், இயற்கை சிந்தனைகள் ஆகியவற்றை அறிந்து அவற்றின் வெளிச்சத்தில் கீதையை அணுகும் ஒரு பாதையை முன்வைத்தேன்.

இரண்டாவது நாள், கீதையின் இடம் இந்திய சிந்தனை மரபில், இந்து ஞான மரபில் எந்த வகையில் பொருந்துகிறது என்பதைப் பற்றிய ஒரு விரிவான சித்திரம் அளிக்கப்பட்டது. கீதை எப்படி ரிக் வேதத்தின் பத்தாவது காண்டத்தில் உள்ள சிருஷ்டி கீதம் என்னும் மகத்தான பாடல்களில் அமைந்துள்ள பிரம்ம தரிசனத்தை, உபநிஷத்துகள் வழியாக, வளர்த்து மீட்டிக்கொண்டு வந்து, ஒரு முழுமையை நோக்கி கொண்டுவந்து சேர்த்திருக்கிறது என்பது அந்த உரையின் சாரமாக இருந்தது.

அந்த பிரம்ம தரிசனம் முழுமையடைந்தபின் ஒரு பசு தன் உடலைத் திரும்பி பார்ப்பது போல தன்னை ஒட்டுமொத்தமாகத் திரும்பிப் பார்த்து தொகுத்துக் கொள்ளும் ஒரு நூலாக கீதையை பார்க்கலாம் என்பது நேற்றைய உரையின் சாரம். அதாவது விறுவிறுப்பான வேதாந்தம் என்று விவேகானந்தர் சொல்வது போல, வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும், நடைமுறைத் தளத்திலும் செயல்படும் ஒரு வேதாந்த தரிசனத்தை கீதை முன்வைக்கிறது. ஆகவேதான் அது யோக மீமாம்சை என்ற முறைப்படி அமைந்திருக்கிறது. அந்த யோக மீமாம்சை என்ற சொல்லை நீங்கள் நினைவில் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். யோகம் என்ற சொல் தியானம் என்ற பொருளிலும், யோக தரிசனம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.  கீதையின் உள்ளே பல இடங்களில் யோக தரிசனம் என்ற அர்த்தத்திலும், யோகம் செய்தல் என்ற அர்த்தத்திலும் அச்சொல் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கீதையின் அர்த்தங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டிருக்கும் விதம் வழியாக, கீதையின் தலைப்பில் இருக்கும் யோகம் என்பது Dialectics என்று மேலை நாட்டினரால் சொல்லப்படும் முரணியக்க அடிப்படைதான் என்று  நேற்றைய உரையில் விளக்கினேன்.

முரணியக்கம் என்பது நேர்நிலையும் எதிர்நிலையும் ஒன்றையொன்று சந்தித்து, மோதி, முயங்கி இன்னொன்றை உருவாக்கி முன்செல்லும் ஒரு வழிமுறை. சிவனும் சக்தியும் இணைவதுபோல. சத்தும் சித்தமும் இணைவதுபோல. நம்  மரபில் இதைப்பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. மேலை நாடுகளில் அது Thesis- Anti Thesis – Synthesis என்று சொல்வார்கள். இங்கு அதற்கு யோக மீமாம்சை அல்லது யோகாத்மா முறை என்று பெயர். கீதையை இந்த வகையில் தான் மரபார்ந்த முறையில் படித்திருக்கிறார்கள். அப்படித்தான் படிக்க வேண்டும் என்பதை மிக விரிவாக தெளிவாக எழுதியவர் அரவிந்தர். The Message of Gita என்பது அவருடைய நூல். அந்த அடிப்படையில் கீதையை மிக விரிவான யோக மீமாம்சை முறைப்படி விளக்கியவர் நடராஜ குரு.

கீதையைக் கற்றல்

கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒன்றையொன்று தொடுத்துக்கொண்டு, ஒரு வடிவை நிறைவு செய்யக்கூடிய வகையில் அமையவில்லை. ஒன்றையொன்று மறுத்து மேலதிக, மேலதிக தளங்களைத் தொட்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது, ஒன்றின் மறுப்பாகவும் இன்றியமையாத நீட்சியாகவும் தான் அடுத்த யோகம் அமைந்துள்ளது என்பது நேற்றைய உரையின் சுருக்கம் என்று சொல்லலாம். நேற்று ஒரு தனிப்பட்ட அந்தரங்கமான ஒரு விஷயத்தை சொல்லி இந்த உரையை முடித்தேன். அது கீதா முகூர்த்தம் என்ற ஒரு விஷயத்தைப் பற்றி. கீதை திறந்து கொள்ளும் தருணம். முத்துச்சிப்பி மாசை ஏற்பது போல, மழைத்துளியை ஏற்பது போல, நம்மில் அந்தக் கரு விழக்கூடிய தருணத்தைப் பற்றி.

ஆனால் அதற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. நண்பர்களே, Alexander Fleming பென்சிலின் என்ற மருந்தை கண்டுபிடித்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பாக்டீரியாவில் அவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒரு ரொட்டித் துண்டை கை மறதியாக தன்னுடைய அறையில் அந்த பாக்டீரியா வளரும் தட்டு மேல் வைத்தார். சில நாட்கள் கழித்துப் பார்க்கும்போது அந்த ரொட்டித்துண்டு பூசனம் பூத்திருந்தது. அந்த பூசனம் பூத்த ரொட்டித்துண்டை எடுத்துப் போட்டுவிட்டு பார்த்தால், அந்த ரொட்டித்துண்டு இருந்த சதுரம் பாக்டீரியாக்கள் இல்லாமல் இருந்தது. இந்தப் பூசணத்தில் பாக்டீரியாக்களை கொல்லக்கூடிய ஏதோ ஒன்று இருக்கிறது என்று கண்டார். ஒரு மின்னல் போல அது அவருக்கு தெரிகிறது. அவர் அதை மேற்கொண்டு ஆராய்ச்சி செய்தார், பென்சிலினை கண்டுபிடித்தார். அத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஒரு கணத்தில் நிகழழும் ஒரு மின்னல், ஒரு Flash, ஒரு திறப்பினால் வரக்கூடியவை. அதுதான் கீதா முகூர்த்தம் என்பது.

ஆனால் அடுத்த கேள்வி ஒன்று இருக்கிறது. அங்கே ஆய்வுக்கூடத்தில் இருந்த ஆய்வக உதவியாளர் கண்ணில் ஏன் அது படவில்லை?  ஏன் இன்னொரு குமஸ்தா  பார்வைக்குப் படவில்லை? ஆப்பிள் எல்லா வெள்ளைக்காரன் தலையிலும் தான் விழுகிறது. ஆனால்  நியூட்டன் தலையில் விழும்போது தான் அது புவியீர்ப்பு விசை பற்றிய கண்டுபிடிப்பாக மாறுகிறது. நாம் ஓர் ஞானத்தின் வளாகத்தில் அதில் ஒன்றி அமர்ந்திருக்கும் போதுதான் அந்த ஞானவாசல் திறக்கும் தருணம் வாய்க்கும். கீதாமுகூர்த்தம் கீதையை முற்றிலும் அறியாத ஒருவனுக்கு கிடைப்பது என்பது அபூர்வம். அரிதாக நிகழலாம், இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அதற்காக அமர்ந்திருப்பது, அதற்காக காத்திருப்பது, அதற்காக தவம் இருப்பது மிக முக்கியமானது. அப்போதே கீதை நம்மில் மின்னல் என நிகழ்கிறது.பைபிளில் ஒரு வரி வரும். கேளுங்கள் தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். அது போல, தவமிருங்கள் திறக்கப்படும் என்பதே கீதையை வாசிப்பது பற்றிய உபதேசமாக இருக்க முடியும். இந்த முறையிலே ஒருவன் கீதையை எப்படி அணுகி, என்ன கோணங்களில் அதை உள்வாங்க முடியும் என்பதைப் பற்றி சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

முதல் விஷயம், கீதையை மூன்று முறைகளில் அணுக வேண்டும் என்பது நம்முடைய மரபில் தொடர்ந்து இருந்து வரும் முறைமை. ஒன்று, குருமுகமாக அணுக வேண்டும். இரண்டு, சமானமான அறிவுள்ளவர்களிடம் விவாதித்து அறிய வேண்டும். மூன்றாவதாக தானாகவே சிந்தித்து தன்னுடைய தர்க்கத்தை வளர்த்துக்கொண்டு அறிய வேண்டும். இந்த மூன்று அறிதல்களையும் முக்கியமாக முன்வைக்கிறார்கள். இன்னும் விரிவான கோணத்தில் நேற்றைக்கு சொன்னேன். மனனம், சுவாத்யாயம், தியானம் என்று மூன்று நிலைகளில் கீதையை அறிய வேண்டும். எந்தவொரு நூலையும் இந்த மூன்று நிலைகளில் தான் அறிய வேண்டும். நான் பலமுறை சொன்னது போல, திருக்குறளையும் இப்படி படிப்பவர்களால் தான் அறிந்து கொள்ள முடியும்.

மனனம், சுவாத்யாயம், தியானம். மனப்பாடம் செய்வது தொடக்கம். சொல் எண்ணிக் கற்றல், அனைத்து வழிகளிலும் அறிந்து கொள்ளல், எல்லா தொடர்நூல்களையும் கற்றல், அனுபவம் வழியாக விரிவாக்கிக்கொள்ளல் ஆகியவை அடங்கியதுதான் சுவாத்யாயம். ஊழ்கத்தில் அமர்ந்து தியானித்து அறிதல் என்பது தியானம். அந்த இரண்டாவதாக சொல்லக்கூடிய சுவாத்யாயத்தில்தான் முன்னர் சொன்ன மூன்று முறைகள் இருக்கின்றன. அதாவது குரு, விவாதத்தின் தோழன், தான் ஆகியவை. அந்த மூன்று நிலைகளிலும் சுவாத்யாயத்தை நாம் முழுமை செய்ய வேண்டியிருக்கிறது.

குரு என்னும் வழிகாட்டி

இரண்டாவதாக சொல்லப்படுவது சுவாத்யாயத்தில் குரு என்பதன் இடம். இந்த மேடையிலே குரு என்ற வார்த்தையை உச்சரிக்கையிலேயே ஒரு மன நெகிழ்வுக்கும், ஒரு மெல்லிய தளர்ச்சிக்கும் நான் ஆளாகிறேன். எங்கு நின்று பேசுகிறோம் என்ற ஒரு தளர்ச்சியும், இங்கிருந்து இப்படி பேசுவதற்கான இடம் எனக்கு அமைந்தது என்ற ஒரு பெருமிதமும் என்னை அப்படி ஆக்குகிறது. என்னுடைய பேராசிரியர்கள், என்னுடைய குருநாதர்கள் என்னைக் கண்டெடுத்தார்கள். என்னை உருவாக்கினார்கள்.

ஒரு குருவை எப்படி அடைவது என்பதை பல தருணங்களில் பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். உங்களுடைய தாகத்தால், உங்களுடைய பசியால், உங்களுடைய தேடலால், உங்களுடைய குருவை அடைகிறீர்கள் என்பதுதான் அதற்கான பதில். அந்த குரு இந்த இந்த அடையாளங்களோடு இருப்பார், இப்படி இப்படி தோற்றமளிப்பார், இந்த இந்த வகைகளிலே பேசுவார் என்று எவராலும் வரையறுத்துச் சொல்ல முடியாது. நீங்கள் உங்களுடைய தேடலை தீட்டிக்கொண்டால் குரு உங்களைத் தேடி வருவார் அல்லது குரு அமைவார் என்பதுதான் இந்த மரபிலே பல்லாண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது. உங்கள் குரு உங்கள் தகுதியால் தீர்மானிக்கப்படுகிறார். அறிவுத்தாகம் அற்றவர்கள் அறிவற்றோரையே குருவென அடைகிறார்கள்.

என்னுடைய ஆசிரியர் சுந்தர ராமசாமி சொல்வார், ஒரு புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற தீவிர ஆசை இருக்குமென்றால் அந்தப் புத்தகம் உங்களைத் தேடி வரும் என்று. எப்படியாவது அந்தப் புஸ்தகம் உங்கள் கண்களில் பட்டுவிடும். அந்தப் புத்தகம் உங்களுக்காகக் காத்திருக்கும் என்பார் சுரா. புத்தகத்திற்கே அந்தத் தன்மை உண்டு என்றால் ஆசிரியருக்கும் அந்தத் தன்மை உண்டு. என்னுடைய ஆசிரியரை நான் எப்படி கண்டடைந்தேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். ஒருமுறை நாகர்கோயிலில் சுந்தர ராமசாமியின் இல்லத்திலே ஜெ.ஜெ.சிலகுறிப்புகள் மொழியாக்கத்தைச் செம்மை செய்ய ஆற்றூர் ரவிவர்மா வந்திருந்தார். அப்போது  என்னை ஆற்றூர் ரவிவர்மாவிற்கு சுந்தர ராமசாமி அறிமுகம் செய்தார். ஆற்றூர் ரவிவர்மா ஒரு முதிர்ந்த பேராசிரியர். கொஞ்சம் Cynical – ஆன, ஒரு ஐயம் கலந்த சிரிப்பு கொண்டமனிதர். ஆகவே அதிகமாக மனிதர்களை அணுகவிட மாட்டார். தாடியைத் தடவியபடி ‘என்ன பண்ணுகிறாய், எங்கே இருக்கிறாய்?’ என்று சும்மா இரண்டு கேள்விகள் கேட்டார், விட்டுவிட்டார். அதற்குப் பின் எதுவுமே பேசவில்லை.

முழுநாளும் நான் அவருடன் இருந்து அந்த மொழியாக்கப் பிரதியை மேம்படுத்துவதற்கு செலவழித்தேன். மாலையில் அவர் கேட்டார், எனக்கு ஒரு ரேஸர் வாங்க வேண்டும், எங்கே கிடைக்கும் என்று தெரியுமா என்று. நான் கூட்டிக்கொண்டு போகிறேன் என்று சொல்லி, நான் அவரை வெளியே கொண்டு போனேன். அப்போது எனக்கு இருபத்தி இரண்டு வயது. நாகர்கோயில் சாலையில் இருவரும் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.  நான் சொன்னேன், ‘சார் ஒரு நிமிடம் நில்லுங்கள்’ என. நின்று என்னை நோக்கி ‘ஏன்?’ என்று அவர் கேட்டார். நான் ‘ஒரு பன்றிக்கூட்டம் ரோட்டை குறுக்காகக் கடக்கப் போகிறது’ என்றேன். ‘எப்படித் தெரியும்?’ என்றார். ‘அந்த அம்மாப் பன்றி சாக்கடையின் விளிம்பில்  தலைதூக்கி மேலே பார்க்கிறது. அது காதை சற்றே மடிக்கிறது. அப்படியென்றால் கீழே குட்டிகள் இருக்கின்றன. வேவு பார்த்தபின் அம்மா எழுந்து சாலையைக் கடந்து போகும், குட்டிகள் தொடர்ந்து போகும்’ என்றேன். ‘பார்க்கலாமே’ என்று ஆற்றூர் ரவிவர்மா நின்றார். அம்மாப் பன்றி மேலே மேலே பார்த்தது, வலது காலை மடித்தது, ஏறி தாண்டிப் போனவுடனே அதன் வலது பக்கத்தில் இருந்து குட்டிகள் பின்னால் சென்றன. நான் சொன்னேன், ‘அதில் ஒரு குட்டியாவது வாலை சுழித்திருக்கும், அந்தக்குட்டி முழுதாக  மறு பக்கம் போகாது, பாதியில் திரும்பி வரும். நம்மைப் பார்க்கும்’ என்றேன். அதுபோலவே வாலை சுழித்திருந்த குட்டி திரும்பி வந்தது, எங்களைப் பார்த்தது. அம்மா ஒரு ஓசை விட்டவுடனே திரும்பிப் போய்விட்டது. ‘அதுதான் முதன்மைப் பன்றி. தலைமைவகிக்கப்போவது’ என்றேன். கொஞ்ச தூரம் ஆற்றூர் ஒன்றுமே சொல்லவில்லை. அப்புறம் திரும்பி பார்த்து, மலையாளத்தில் என்னிடம் ‘எழுதுவீர்களா?’ என்றார். அப்போது நான் ஒரு கதை கூட எழுதியது கிடையாது. அதாவது இலக்கியத் தரமாக எழுதியது கிடையாது. ஆகவே ‘இல்லை’ என்று சொன்னேன். ‘நீ எழுத்தாளன், நீ எழுதலாம்’ என்று சொன்னார். இது குரு நம்மை கையில் எடுத்துக்கொள்ளும் தருணம். அவர் நம்மை கண்டுகொள்ளக்கூடிய தருணம். அப்படித்தான் ஆசிரியர்கள் அமைகிறார்கள்.

அதற்கு ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால், ஒரு ரயிலில் நான் சென்று கொண்டிருந்தேன். மேலே ஒருவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். அப்புறம் அதை அப்படியே திருப்பி வைத்தார். நான் அவரிடம் ‘அந்தப் புத்தகத்தை நான் படிக்கலாமா?’ என்று கேட்டேன். நின்றுகொண்டே போகவேண்டிய அளவிற்கு மலபார் எக்ஸ்பிரஸில் கடுமையான கூட்டம். ‘தமிழ்ப் புத்தகமாக இருந்ததால் கேட்டேன்’ என்றேன். அவர் அதை எனக்கு கொடுத்துவிட்டு, ‘செம போர் படிக்கவே முடியாது, யாரோ கொடுத்தது’ என்றார். அது சுந்தர ராமசாமி எழுதிய ஜே. ஜே. சில குறிப்புகள். நான் அந்தப் புத்தகத்தை நின்றுகொண்டே எர்ணாகுளம் போவதற்குள் படித்து முடித்தேன். அதன்பிறகு காசர்கோடு போய் உடனடியாக ராமசாமிக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். அது பல வகையில் என்னுடைய குழப்பங்களை, ஐயங்களைச் சொல்லும் கடிதம். அவர் எனக்கு ஃபோன் பண்ணி, ‘நீங்க வாங்கோ’ என்றார். நான் அவருடைய முகவரியைத் தேடிப் போனபோது, ஒரு விஷயம் எனக்குத் தெரிந்தது. என்னுடைய சொந்த அக்காவின் வீட்டிற்கு முன்னால் ஒரு பெட்ரோல் பங்கில் காரை வழக்கமாக நிறுத்ததுபவர் அவர். சுதர்சன் டெக்ஸ்டைல் கடையின் முதலாளி . பலமுறை நான் சிறிய வயதிலிருந்தே பார்த்த மனிதர். அவரும் என்னைப் பார்த்திருக்கிறார். ‘நீங்கள் தானா? அங்கே விளையாடிக் கொண்டிருப்பீர்களே?’ என்றார். ‘ஆமாம், நான்தான்’ என்றேன். அப்புறம் பேச ஆரம்பித்தோம். ‘அடிக்கடி வந்திட்டிருங்கோ’ என்றார். அங்கே ஆரம்பித்தது ஓர் உறவு. இது நான் குருவைத் தேடிப் போன தருணம்.

இதற்கு அடுத்து, மூன்றாவதாக ஒரு தருணம் இருக்கிறது. துறவு பூண்டு, பல இடங்களில் அலைந்து, பல பல பல போலிச் சாமியார்களைப் பார்த்து, சாமியார் என்றாலே ஒரு பெரும் கடுப்பில் இருந்த காலகட்டத்தில் என்னுடைய நண்பர் நிர்மால்யா என்னிடம் ஊட்டியில் வாழ்ந்த குரு நித்ய சைதன்ய யதியை பார்க்க வாருங்கள் என்று சொன்னார். ‘நான் எந்த சாமியாரையும் பார்க்கிற ஐடியாவில் இல்லை’ என்றேன். ஏனென்றால் ஏற்கெனவே ஒரு யோக முறையைப் பயிலப்போய், கிட்டத்தட்ட மனநோயின் விளிம்பு வரைக்கும் என்னை ஒரு சாமியார் கொண்டுபோயிருந்தார். நிர்மால்யா திரும்பத் திரும்ப கூப்பிட்டுக்கொண்டே இருந்தார். ஒருமுறை நான் ஊட்டி போனபோது ‘அரைமணிநேரம் தான், நீங்கள் பார்த்துவிட்டு வாருங்கள், சும்மா வாருங்கள். நீங்கள் கும்பிடக்கூட வேண்டாம்’ என்றார். ‘சரி’ என்று சொல்லி அவருடன் போனேன்.

1992ல் நான் குருகுலத்திற்குள் நுழைகிறேன்.காலையில் எழுபது வயது கடந்த நித்யா, சிவப்புக் கம்பிளிச் சட்டை போட்டு, வெண்தாடியுடன், வெளியே வந்து கைத்தடியை ஊன்றி ஒவ்வொரு பூவாக பார்த்துக்கொண்டு போவதைக் கண்டேன். நான் அங்கே பார்த்தது ஒரு வயது முதிர்ந்த முதியவரை அல்ல. வயது ஒவ்வொரு வருடமும் தென்னை மரத்தில் ஒரு வளையத்தை கூட்டுவது போல, மனிதனில் ஏதோவொன்றை கூட்டிக்கொண்டே இருக்கிறது. முதிர்ந்த மனிதன் தன்மேல் அவ்வளவு சுமையை ஏற்றிவைத்த ஓர் ஆத்மா. ஒரு பெரிய கோபுரத்திற்கு அடியில் இருக்கும் கல் மாதிரி அவன் அவ்வளவு வளைவோடு இருக்கிறான். ஆனால் அவர் என்னுடைய பையன் மாதிரி இருந்தார். அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு வயது குழந்தை மாதிரி இருந்தார். அவ்வளவு தெளிவான கண்கள். அவ்வளவு உற்சாகமாக, அன்று மலர்ந்து புதிதாக வெளியே வந்தது மாதிரி. ஒரு கேள்வியோ ஒரு பதிலோ கிடையாது. நான் பக்கத்தில் போன உடனே காலைநடை போகிறேன், வருகிறாயா என்றார். காலைநடை போனேன். அன்றே அப்போதே அவர் என் ஞானகுருவாக ஆனார். அது இன்னொருவகைத் தருணம். கிட்டத்தட்ட ஒரு நான்கு ஐந்து வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன். அந்தத் தருணம் அப்படி ஒன்றுமே நிகழாமல் சாதாரணமாக ஆரம்பித்தது.அது இருவரும் மாறி மாறிக் கண்டுகொண்ட தருணம் என்று சொல்லலாம்.

ஏன் சொல்கிறேன் என்றால், இந்த குருசீட உறவு இந்த நூற்றாண்டில் மிகப்பெரும்பாலும் இல்லாமல் ஆகிவிட்டது. நித்யாவிடம் நான் கவனித்த ஒரு விஷயம் உண்டு. ஒரு தருணத்திலும் சொன்னது திருப்பிச் சொல்லப்படமாட்டாது. ‘குரு எனக்குச் சரியாகக் கேட்கவில்லை’ ‘எனக்குப் புரியவில்லை’ என்று சொல்லவே முடியாது. ‘உனக்கு புரிவதைத்தான் நான் சொல்வேன், உனக்குக் கேட்கவேண்டும் என்பது உன்னுடைய பொறுப்பு’ என்பார். திரும்பச் சொல்ல மாட்டார். விளக்கவே மாட்டார். நேற்று நண்பர்களிடம் பேசும்போது நான் ஒரு விளக்கம் சொன்னேன். உரையாடல் நடுவே ‘சார், சரியாகக் கேட்கவில்லை இன்னொரு தடவை சொல்லுங்கள்’ என்றார் ஒருவர். ஏனென்றால் அது பள்ளிக்கூடத்தில் இருந்து வரும் பழக்கம். அங்கே இருக்கும் ஆசிரியர் குரு அல்ல, நீங்கள் பணம் கொடுத்து வைத்திருக்கும் ஊழியர். அவர் உங்களுக்கு தேவையென்றால் முப்பத்தைந்து தடவை திருப்பித் திருப்பி சொல்வார். அவர் அதற்குச் சம்பளம் வாங்குகிறார். அவரே அதைச் சிந்திக்கவில்லை. அவை அவரது சொற்களும் அல்ல. ஆனால் ஒரு குரு நம்மிடம் சொல்வதை நாம் கவனிக்கவில்லை என்றால் அது அவருக்கு செய்யும் அவமானம் என்பது நமக்குத் தெரியாது. கவனிப்பது நம் கடமை என்று தெரியாது. அதற்கு நாம் மனம் அளிப்பதில்லை, எந்தப்பயிற்சியும் எடுப்பதில்லை. ஆகவே நாம் அரைக்கவனமாகவே இருக்கிறோம். மெல்ல மெல்ல நாம் கவனிக்கவே இயலாத ஒரு தலைமுறையாக மாறிவிட்டோம். ஆகவேதான் பெரும் கூட்டங்களில் பேச்சாளர்கள் முழங்கிக்கொண்டே இருப்பார்கள், திரும்பி அவையினரைப் பார்த்தால் அவர்கள் எங்கேயோ உட்கார்ந்திருப்பது தெரியும்.

அந்த குருசீட உறவு இங்கே உருவாக வேண்டும். ஒரு துளியும் சிந்தாமல் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஞானம் செல்வது அந்த உறவின் வழியாகத்தான். மூல நூல்களை, அடிப்படையான நூல்களைப் படிப்பதற்கு குருமுகத்தில் இருந்து பெறும் கல்வி மிக முக்கியமானது என்று பல நூற்றாண்டுகளாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைக்கு நாம் அதை விட்டு விட்டோம். ஆனால் அமெரிக்காவில் உயர்கல்வி என்பது குருகுல அடிப்படையில்தான். பேராசிரியருடன் தங்கி உடனுறைந்து படிப்பதுதான் அங்கே கல்வியாக இருக்கிறது. நித்யா பெரும்பாலான வருடங்கள் போர்ட்லாண்ட் பல்கலைக்கழகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்திலும் தான் தத்துவப் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவருடைய வகுப்புகள் எப்படி நடக்குமென்று அவருடைய மாணவர்கள் எழுதி இருக்கிறார்கள். விடியற்காலை நான்கு மணிக்கு தான் அவர் மாணவர்களை வரச் சொல்வார். எட்டு மணிக்குள் வகுப்புகள் முடிந்துவிடும். பெரும்பாலும் அவர் மாணவர்களை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஏரி, குளங்களுக்குத் தான் போகிறார். அங்கு உட்கார்ந்து தன்னியல்பாகப் பேசுகிறார். வகுப்பு முடிந்து விடுகிறது.இங்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் இருந்த கல்வி முறையை அவர்கள் அங்கே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருநூறு வருடங்கள் முன்னர் உருவாக்கிய கல்விமுறையை நாம் இங்கே உருவாக்கி வைத்திருக்கிறோம்.

உளமும் பொருளும்

இந்த நவீனக் கல்விமுறை நமக்கு வழங்க முடியாத ஒன்று குருகுல முறைக் கல்வியில் உண்டு. என்ன வித்தியாசம் ? இப்படிச் சொல்வேன். நூல்கள் நமக்குச் சிந்தனையை அளிக்கின்றன. குரு சிந்தித்தலை அளிக்கிறார். அந்த சிந்தனை நிகழும்போது நீங்கள் கூடவே இருப்பீர்கள். எப்படி அந்த சிந்தனை அவரிடம் நிகழ்ந்து, அது அவரை மாற்றிக் கொண்டு செல்கிறது என்பதை நீங்கள் பார்க்கலாம். நீங்கள் உடன்செல்கிறீர்கள். நீங்களே சிந்திக்க ஆரம்பிக்கிறீர்கள். நித்யாவுடன் நெடும் பயணங்கள் நான் செய்திருக்கிறேன். சிந்தனையிலும் வெளியுலகிலும். கிட்டத்தட்ட நான்கு ஐந்து மணிநேரம் நடக்கும் வழக்கம் அவருக்கு உண்டு. தொடர்ந்து பேசிக்கொண்டே போவார். மெல்லிய கிண்டலோடு சிரிப்போடு பேசுவார். காலையில் ஊட்டி சில நாட்களில் அதியற்புதமான சாய்வெயிலோடு இருக்கும். பொன் தகடுகள் போல ஒளி விழுவதை அங்கு பார்க்கலாம். ஒரு பெரிய மோன நிலை பசும்பரப்புமேல் நிலவும். மலைப் பிராந்தியங்களுக்கு மட்டும்தான் அந்த தனி ஒளி உண்டு. அந்த ஒளியில் ஒரு கணம் பொன்னாகவும், மறுகணம் வெள்ளியாகவும் மாறி மாறி அவர் நடந்துசெல்லும் அந்தக் காட்சி என் கண்ணில் இருக்கிறது.

அன்றைக்கு ஒரு நாள் ஒரு காலைநடை. குரு கீதையைப் பற்றித்தான் பேசிக்கொண்டு போகிறார். ‘மூன்று குணங்களால் ஆனது இந்த பிரபஞ்சம் இதிலுள்ள அனைத்தும் மோகவயப்பட்டுள்ளன. ஆகவே அவை என்னை அறிவதில்லை’. கீதையில் கிருஷ்ணனின் சொல். குரு அதைச் சொன்னார், பின் “சர்வமிதம் ஜகத் மோகிதம்” என்ற வரியை திரும்பச் சொன்னார். இங்குள்ள அனைத்தும் இவ்வுலகத்தின் மேல் மோக வயப்பட்டுள்ளன. “சர்வமிதம் ஜகத் மோகிதம்” – அந்த வரியை திரும்பத் திரும்பச்ச் சொன்னார். இங்குள்ள அனைத்தும் ஒரு பெரிய மோகவளையத்தில் கட்டுண்டு இங்கு நிலைகொண்டுள்ளன. ஒவ்வொன்றும் இன்னொன்றை நோக்கி பெரும் காதல் கொண்டிருக்கிறது. இயற்கை பேரழகோடு இங்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு அப்பால் செல்லும் ஒன்றை பார்ப்பதற்கு தடையாக இருப்பது இந்த பேரழகே . . .

அந்த கீதை வரியைச் சொல்லிக்கொண்டே போகும் பொழுது ஒரு பறவையின் இறகு கீழே கிடந்ததைக் கண்டார். குனிந்து அந்த இறகை எடுத்து என்னிடம் காட்டினார்.கரிய நிறத்தில் வெள்ளையும் சிவப்பும் கலந்த வடிவம் கொண்ட ஓர் இறகு. குரு சொன்னார், ‘தாமஸ குணம் கருப்பு, சத்வ குணம் வெண்மை, ரஜோ குணம் சிவப்பு. மூன்று குணங்கள் கொண்ட ஒரு இறகு. எவ்வளவு அற்புதமான ஒரு Engineering. ஒரு பொறியியல் மேதை இதைப் பார்த்தானென்றால் இந்த அளவுக்கு கச்சிதமான ஒரு Texture -ஐ அமைப்பதற்கு அவனுக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று வியந்துவிடுவான். அதன் இயல்பான வளைவு, அதன் மேலே இருக்கும் நெருக்கம் அதிகம் – கீழே அடர்த்தி குறைவு. அதன் எடை தாங்கும் திறன் அதனால் உருவாவது. அதன் ஒவ்வொரு பீலியும் அமைந்துள்ள மிகச்சரியான ஒழுங்குதான் அதன் அழகும் ஆற்றலும். அது ஒரு வருடம், இரண்டு வருடம், ஓராயிரம் வருடத்தில் உருவானது அல்ல, லட்சக்கணக்கான வருடங்களாக உருவாகி வந்திருக்கிறது அது. பறக்க வேண்டும் என்ற பறவையின்  Urge, அந்தத் துடிப்பு அதை உருவாக்கியது. அந்த பெரும் விழைவு வெளியே இருக்ககும் வானத்தையும் காற்றையும் மழையையும் சந்திக்கும் போது உருவான வடிவம், ஒரு Pattern அது.

‘சித் ஜட சமன்வயம்’ என்று சொல்வார்கள். சித்தமும் ஜடமும் சந்திக்கும் புள்ளியில் நடந்தது அது.  இந்த பிரபஞ்சம் அப்படிப்பட்ட இணைவில் உருவானது. நீங்கள் பார்க்கும் இந்த பிரபஞ்சம் என்பது சித் ஜட சமன் வயம்தான். சிஜ்ஜடம் என்பார்கள். ஒரு பக்கம் உள்ளம் – சித்தம், இன்னொரு பக்கம் Matter – பருப்பொருள். இரண்டும் எங்கோ ஒரு இடத்தில் சந்திக்கும் இடத்தில் பிரபஞ்சம் உருவாகிறது. பறக்கத் துடிக்கும் சித்தமும், புரோட்டீனும் காற்றும் ஒளியும் கலந்து உருவானது அந்த இறகு. அப்போது நான் சொன்னேன், ‘சிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு, காற்றின் முடிவற்ற பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என. ‘யாருடைய கவிதை?’ என்று குரு கேட்டார். ‘பிரமிள் எழுதிய கவிதை, தமிழ் புதுக்கவிதை’ என்று நான் சொன்னேன். உடனே அவர் குழந்தைகளுக்கான குதூகலத்தோடு சொன்னார், ‘பறவை இதை கீழே போட்டு என்னைப் பார் என்று சொல்கிறது. இங்கிருக்கும் இந்தப் பிரபஞ்சம், இந்தப் புடவி, இந்த ஜகத் ஓர் எளிய இறகு. பறவை எங்கேயோ இருந்து அதை உதிர்த்திருக்கிறது!’.

அது ஓர் அழைப்பு. நம்ம வீட்டு வாசலில் வந்து கிடக்கும் ஒரு Invitation, ஓர் அழைப்பிதழ். அது வழியாக மேலே போவதற்கான ஒரு பாதை . மீண்டும் குரு அந்த வார்த்தைக்கு போனார், “ஜகத் மோகிதம்”. குரு சொன்னார் ‘மோகம் என்ற வார்த்தை எவ்வளவு முக்கியமானது. பெருமாளின்  மாயத்தோற்றம் என்பது மோகினி. பிரம்மத்தின் மாயை வடிவம் என்பது இந்த பூமி. மோகினி வடிவம் இது. முடிவற்ற பேரழகால் அமைந்தது. இதன் ஒவ்வொரு கூறும் இன்னொன்றை நோக்கி அழகை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றின் அழகு இன்னொன்றால் கண்டடையப்படுவது. ஒன்றை அழகாக்குவது இன்னொன்று. அழகு என்பது இருத்தலும் இருத்தலை அறியும் ஒரு பார்வையும் அல்லவா? அழகை உருவாக்கிக்கொண்டும் வியந்துகொண்டும் இருக்கின்றன இயற்கையிலுள்ள ஒவ்வொன்றும். ஆனால் அழகு என அவற்றில் திகழ்வது எது? மனிதர்கள் ஒருபோதும் அந்த மூல அழகைப் பார்ப்பதில்லை. சித்தூர் ராணி பத்மினியின் ஆடிப்பாவையைத்தான் அலாவுதீன் கில்ஜி பார்த்தான். அதுவே அவனை மோகம் கொண்டு கிறுக்காக்குவதற்கு போதுமானதாக இருந்ததது. நாம் அத்தனை பேரும் ஆடிப்பாவையைப் பார்த்து மோகம் கொண்ட மனிதர்கள் தான்!”.

உடனே குரு   A. K. ராமானுஜன் எழுதிய ஒரு கவிதையை சொல்கிறார்.

மங்கோலியாவில் ஒரு அரசன் இருந்தான்

அவன் ஒரு குயிலின் பாடலைக் கேட்டான்

அந்தப் பாடல் தனக்கு வேண்டுமென்று நினைத்தான்

ஆகவே அந்தப் பறவை தனக்கு வேண்டும் என்று நினைத்தான்

அந்தப் பறவை அமர்ந்திருந்த மரக்கிளை

அந்த மரக்கிளை அமைந்திருந்த மரம்

அந்த மரம் நின்ற மண்

அந்த மண்ணை ஆளும் காடு

அந்தக் காட்டை ஆளும் நகரம்

அந்த ஆறு, கடல், மலை

அனைத்தும் தனக்கு வேண்டும் என்று நினைத்தான்

ரத, கஜ, துரக பதாதிகளுடன் கிளம்பி சென்றான்

அவன் திரும்ப வரவேயில்லை

ஒரு மோகம், இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அனைவரையும் கட்டி தொகுத்து ஆண்டு வைத்திருக்கிறது. உலகையே வேண்டுமென விழையுமிடம் வரை ஒரே ஒரு மோகம் நம்மைக் கொண்டுசெல்ல முடியும். ஒரு சுலோகத்தில் இருந்து எவ்வளவு தூரம் போவதற்கு இருக்கிறது. “சர்வமிதம் ஜகத் மோகிதம்” – இது அனைத்தும் ஒன்றையொன்று மோகம் கொண்டு அமர்ந்திருக்கின்றன. ஒரு நாளில் நீங்கள் வெளியே போய் இந்த நகரத்தை சுற்றி வந்தால், மனிதன் எத்தனை மனித வடிவங்களை வரைந்து, புகைப்படம் எடுத்து, மாட்டி வைத்து தானே பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பார்க்கலாம். செவ்வாய் கிரகத்தில் இருந்தோ, புதன் கிரகத்தில் இருந்தோ ஒரு வேற்றுக்கிரகவாசி இந்த பூமிக்கு வந்து, இங்குள்ள மனிதர்களை பார்த்தால் சொல்லக்கூடிய முதல் கருத்து, இந்த மக்கள் – இந்த உயிரினம் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் மிகப்பெரிய பைத்தியம் கொண்டது என்று சொல்லும் அல்லவா?. சினிமா போஸ்டர், விளம்பரம் அனைத்திலும் மனிதன் படத்தைத்தான் மனிதன் பார்த்துக்கொண்டே இருக்கிறான். “ஜகத் மோகிதம்”.

இதுதான் ஒரு குருவிடமிருந்து கற்றுக்கொள்ளும் விஷயம். ஒரு நூலின் அர்த்தமென்ன என்பதை, அந்த நூலில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு குரு அதிலிருந்து எவ்வளவு தூரம் போகிறார் என்பதை, நாம் அவருடன் நடந்துசென்று தான் அறிய முடியும். ஆனந்த் எழுதிய ஒரு கவிதை  உண்டு

பறந்து செல்லும் பறவையை நிறுத்திக் கேட்டேன்

பறப்பதெப்படி?

அமர்ந்திருக்கையில் சொல்லத் தெரியாது

என்னுடன் பறந்து வா என்றது.

பறந்தபடி கேட்டேன்

பறப்பதெப்படி?

இப்படித்தான் என்று சொன்னது என்னிடம்.

அப்படித்தான் நாம் ஒரு குருவுடன் சேர்ந்து செல்ல முடியும். ஒரு மாணவனின் ஆசிரியன் யார் என்று நமக்குத் சுத்தமாகத் தெரியாமல் இருக்கும்போது கூட, அவனிடம் பேசும் போது, உங்களுக்கு அந்த ஆசிரியனைத் தெரியுமென்றால் நீங்கள் இன்னாருடைய மாணவனா என்று கேட்க முடியும். அந்த அளவுக்கு ஆசிரியன் மாணவனில் வாழ்கிறான் .அப்படித்தான் நூற்றாண்டுகளாக மூலநூல்கள் கற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. எது வெறும் அறிதல் அல்லவோ, எது உங்கள் ஆளுமையாக மாறுமோ, எது உங்கள் உள்ளுணர்வோடு பேசுமோ, அது ஒரு குருமுகத்தில் இருந்து கற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது ஈராயிரம் வருடங்களாக இங்கே சொல்லப்பட்ட ஒன்று.

(மேலும்)

முந்தைய கட்டுரைஅகிலன்
அடுத்த கட்டுரைதீர்த்தங்காரர்களின் கருணை