டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். மூன்றாம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-10
அறச்சிக்கலில் தொடங்குதல்
நடராஜகுரு அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாப் போனபோது ஒரு சாஸ்திரி கீதையை சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டார். அவரும் நித்ய சைதன்ய யதியும் சேர்ந்து செய்த பயணங்களின் குறிப்பாகிய ‘குருவும் சீடனும்’ என்னும் நூலில் இந்நிகழ்வு வருகிறது. ‘அர்ஜூனன் அறியாமையினாலும், மனத்தடுமாற்றத்தினாலும் வில்லைக் கீழே வைத்தபோது, பகவான் அவனுக்கு அறிவு தெளியும்பொருட்டு சொன்னது கீதை’ என்று ஆரம்பிக்கிறார் சாஸ்திரி. நடராஜ குரு அரங்கில் பார்வையாளராக உட்கார்ந்திருந்தார். ஏனென்றால் அப்போது அவர் பிச்சை எடுத்து அலையும் ஓர் எளிய சாமியார். குரு எழுந்து, ‘ஒரு நிமிடம். ஒரு சின்ன ஐயம். சொந்த குருநாதனையும், பிதாமகனையும் கொல்ல மாட்டேன் என்று ஒருவன் சொல்வது அவ்வளவு பெரிய அறியாமையா என்ன?’ என்று கேட்டார். ‘நீங்கள் சொல்லுங்கள், என் தாத்தாவை கொல்ல மாட்டேன், என் குருநாதரை கொல்ல மாட்டேன், வெறும் மண்ணுக்காகவும், பொன்னுக்காகவும் என் சொந்தக்காரர்களை கொன்று குவிக்க மாட்டேன் என்று ஒருவன் சொல்வது ஒரு சாதாரணமான அறியாமையும், முட்டாள்தனமுமா?’. சாஸ்திரிக்குப் பதில் தெரியவில்லை. ஆனால் அந்த சாஸ்திரி கொஞ்சம் விவரமான ஆள். அவருக்கு நடராஜ குரு வெறும் சாமியார் இல்லை, ஒரு குரு என தெரிந்துவிட்டது. அவர் சொன்னார், ‘நீங்கள் இங்கே மேடைக்கு வந்து சொல்லுங்கள் குரு. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை. இந்த ஆசிரமத்திற்கு பிச்சை எடுக்கத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள்தான் இங்கே மேடையில் இருக்க வேண்டும், இங்கே வந்து சொல்லுங்கள்’.
குரு மேடை ஏறி சொன்னார், ‘தவறுக்கு எதிராக சரியை சொல்லும் அத்தியாயம் அல்ல அர்ஜுன விஷாத யோகம். சரிக்கு எதிராக மேலும் சரியை சொல்லும் அத்தியாயம் அது’. எப்போதுமே தர்மசங்கடங்கள் என்பவை தர்மத்தின் சங்கடங்கள் தானே ஒழிய தர்ம-அதர்ம பிரச்சினைகள் அல்ல. தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான பிரச்சினை தெளிவாக உங்கள் முன்னால் இருக்கிறது. அதை விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு தர்மத்திற்கும், இன்னொரு தர்மத்திற்குமான முரண்பாடுதான் ஒருபோதும் தீர்க்கமுடியாததாக இருக்கிறது. அதுதான் க்ஷுரஸ்யதாரா. அதுதான் சவரக்கத்தியின் முனையால் அறுத்து பார்க்கவேண்டிய இடம்.அதுதான் சவரக்கத்திமுனை நடை.அந்த உச்சத்திலிருந்து கீதை ஆரம்பிக்கிறது. இதுதான் அர்ஜுன விஷாத யோகம்
இந்தக் கேள்வி முக்கியமானது. உலகியல் லாபங்களுக்காக நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் நியாயப்படுத்த முடியுமா? சுயநலத்துக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமா? இது ஒரு சிக்கல்தான். இந்தக் கீதை முகூர்த்தத்தை சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ சென்றடையாத மிகச் சிலர்தான் இருப்பார்கள். ஏதோவொரு தருணத்தில் நீங்கள் அந்தக் கேள்வியை சென்றடைவீர்கள். அதுதான் கீதாமுகூர்த்தம். அந்த முகூர்த்தத்தில் இந்தச்சொல் வந்து அமர்கிறது, ‘தர்மஷேத்ரே குருஷேத்ரே’.
அதற்கு முன்னால் நீங்கள் வாசிப்பது வெறும் வார்த்தைதான். ‘தர்மஷேத்ரே குருஷேத்ரே’. அறநிலையான குருநிலத்தில்….போர்க்களம் எப்படி அறநிலையாக ஆகும்? இவ்வுலகமே மாபெரும் போர்க்களம். எனில் போரில் வெல்லவேண்டுமென்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாமா? அந்த வினாவை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உங்கள் ஆத்மாவே அதிரும்படி கேட்டுக்கொள்ளாமல் கீதையை அணுகுவீர்கள் என்றால் நூறு முறை சபைகளில் உட்கார்ந்து வெவ்வேறு குருநாதர்கள் உரைக்கும் உரைகளை கேட்டு எழுந்து போய்க்கொண்டே இருக்கலாம். கற்பாறை மேல் பெய்யும் மழை அது. என்னிடம் ஒருவர் சொன்னார், கிட்டத்தட்ட நூற்றைம்பது மணி நேரம் ஒருவர் கீதை உரை ஆற்றியிருக்கிறார் என்று. ‘அந்த உரையை நீங்கள் கேட்டீர்களா?’ என்று என்னுடைய பையன் அவரிடம் கேட்டான். ‘ஆமாம், கேட்டேன்’ என்றார். ‘நீங்கள் என்ன உணர்ந்தீர்கள்?’ என்று அவன் கேட்டான். அவருக்கு சொல்லத்தெரியவில்லை. நல்ல உரை என்பதற்கு அப்பால் அவரிடம் எந்த உளப்பதிவும் இல்லை. ஏனென்றால் கீதையைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு தருணம் இருக்கிறது. முத்துச் சிப்பி பிளந்து வாய் திறக்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு தான் முத்து உள்ளே உருவாக முடியும். அந்த முதல்துளி உள்ளே சென்றபின்னர்தான் கீதை உண்மையில் ஆரம்பிக்கிறது.
கீதை எனும் இந்த நூலில் உள்ள இந்த பதினெட்டு அத்தியாயங்களை எப்படிப் புரிந்து கொள்வது? நான் ஏற்கெனவே சொன்னேன். மொத்த பகவத்கீதையும் ஏதோ ஒரு வடிவில் மகாபாரதத்தின் சாராம்சமாக அக்காவியத்திலேயே இருக்கிறது. மகாபாரதம் என்னும் பசுவின் பால் இது.அதை மகாபாரதம் இல்லாமல் முழுமையாக அறியவும் முடியாது. அதையே இங்கே சொல்லவிருக்கிறேன். அப்போது முதல் கேள்வி எழுகிறது. பிரபலமான கேள்வி அது. ஏன் இதை நான் செய்ய வேண்டும்? இதை செய்து எனக்கு என்ன கிடைக்கப்போகிறது? நேரடியாகவே இந்தக் கேள்வி எனக்கு வந்த ஒரு தருணம் உண்டு நண்பர்களே! என் இணையதளத்தை நீங்கள் பார்த்தீர்களானால், வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களில் இருந்து இந்தக் கேள்வியை, அர்ஜுனன் கேட்ட அதே கேள்வியை, வேறு வேறு வகையில் கேட்கும் இளைஞர்களைக் காணலாம். முதியோரைக் காணலாம். மனிதர்கள் அடையச்சாத்தியமான மிகப்பெரிய வெறுமையின் கணம் ஒன்று இருக்கிறது. ஒரு முப்பது ஆண்டுகாலம் பிள்ளைகளை படிக்க வைத்து, வேலை வாங்கி, கல்யாணம் பண்ணி வைப்பதற்காகவே தங்களுடைய வாழ்க்கையை செலவிட்டிருப்பார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இதெல்லாம் எதற்கு என்ற எண்ணத்திற்கு வருகிறார்கள். இதுதானா நான்?. இதற்காகவா நான் பிறந்தேன்?. இதற்கப்பால் ஒன்றும் இல்லையா? அந்த பெரிய வெறுமையை நம் உலகியல் நமக்கு அளித்துக்கொண்டே இருக்கிறது.
மிகுந்த அர்ப்பணிப்புடன் ஆன்மிகப்பணியை செய்பவர்கள், சமூக சேவை செய்பவவர்கள், மிகப்பெரிய செயலை ஆற்றுபவர்கள் திடீரென்று ஒரு கணத்தில் இது ஏன் என்கிற எண்ணத்தை அடைகிறார்கள். ஒரு கொட்டை எழுத்து கேள்வி. இதெல்லாம் ஏன்? இதனால் என்ன பயன்? வணிகத்தில் திடீரென்று ஒரு பிரம்மாண்டமான திருப்பத்தை சந்திக்கும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். நான் சின்னப் பையனாக இருக்கும்போது, கோகோ விவசாயம் பண்ணலாம் என்றொரு பிரச்சாரத்தை அரசாங்கம் முன்னெடுத்தது. ஊரில் அத்தனை பேரும் தென்னை மரத்தை வெட்டிவிட்டு கோகோ போட்டார்கள். ஆரம்பகட்டத்தில் கோகோ போட்டவர்களுக்கு லாபம் கிடைத்தவுடனே எல்லோரும் போட ஆரம்பித்தார்கள். அப்போது கம்போடியாவிலும், பிலிப்பைன்ஸிலும் சர்வாதிகார ஆட்சிகள் இருந்ததனால் கோகோ ஏற்றுமதி அங்கே சிக்கலைச் சந்தித்திருந்தது. காட்பரி நிறுவனத்திற்கு கோகோ தேவைப்பட்டது, இங்கே இருந்து வாங்கிக்கொண்டு இருந்தார்கள். ஒரு சில ஆண்டுகளில் இரண்டு மூன்று நாடுகளில் ஏற்றுமதிப் பிரச்சினை சரியாகிவிட்டது. கோகோவை இங்கே யாரும் வாங்காத நிலை வந்துவிட்டது. நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சிதிலமாகிவிட்டது. அதில் ஒருவர் மனம் உடைந்து என் அப்பாவிடம் கேட்டார். இதெல்லாம் ஏன், எதற்கு இதெல்லாம் நடக்கிறது? அவருக்கு அது ஒரு கீதைத் தருணம்.
உங்களுடைய ஒட்டுமொத்த கவனம், உழைப்பு, கற்பனை, ஆற்றல் அனைத்தையும் நீங்கள் செலவழித்து ஒரு வணிகத்தை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறீர்கள். ஃபின்லாந்தில் ஒரு எரிமலை உடைகிறது, விளைவாக ஐரோப்பியப் பங்குச்சந்தை சரிகிறது, உங்கள் தொழில் பூஜ்யமாக ஆகிவிடுகிறது என்று கொள்வோம். நீங்கள் அதற்கு பொறுப்பா? உங்களுடைய ஆற்றலோ, குறைபாடோ அதற்குப் பொறுப்பா? அப்படியென்றால் அதை எப்படி புரிந்துகொள்வீர்கள்? அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் புரிந்துகொள்ளத்தக்க எந்த விளக்கமும் இல்லை என்றால் எதை நம்பி வாழ்வீர்கள்? அதுதான் கீதை முகூர்த்தம். ஏன் இதை செய்துகொண்டிருக்கிறேன் ? இவ்வளவு பெரிய வலையில் என்னுடைய பங்கு என்ன? அதையே திரும்பத் திரும்ப உங்கள் உள்ளம் அரற்றுகிறது. அப்போதுதான் அச்சொல் உங்களை வந்தடையும். ‘கர்மண்யே வாதிகாரஸ்தே மா பாலேஷு கதாசன’. உன் சுதர்மம் என்னவோ அதை செய், பலனை எண்ணாதே. உன் செயலுக்கான பயன் என்ன என்னும் அந்த தர்க்கமுறையை இவ்வளவு பெரிய இயக்கத்தில், இத்தனை பிரம்மாண்டமான அமைப்பில் நீ தேடி அறியவே முடியாது. நீ விஸ்வரூபம் எடுத்தால்கூட உனக்குப் புரியாது. அந்த மாதிரியான தருணங்கள் வழியாக எழுந்து வரக்கூடிய ஒன்றுதான் கீதையின் அந்த முதல் கேள்வி. அதற்கு பிரம்மஞானி சொல்லும் பதில்தான், சாங்கிய யோகம். உலகியலில், இந்த வாழ்க்கையில், இந்த அன்றாடத்தில் அதற்கான பதில் அது.
ஆனால் சாங்கிய யோகம் சொல்வது முழுமையான பதில் அல்ல. நீ ஒரு ஷத்ரியன், இத்தனை வருடங்கள் நீ வில்லேந்தியது போர் புரிவதற்காகத்தான். ஷத்ரியனின் இலக்கு என்பது இப்புவியில் அறம் நிலைநாட்டலும், புகழ் ஈட்டலும், வீரமரணம் வழியாக அவ்வுலகில் நிலைவாழ்க்கை அடைவதும் தான். செயலை நீ ஆற்றும்போதுதான் இதெல்லாம் உனக்குக் கிடைக்கும். இந்த இடத்தில் திரும்பிப் போனால், உனக்கு எதுவுமே கிடைக்காது. கோழை என்று, தோற்றுப்போனவன் என்று சொல்லப்படுவாய். எல்லாவற்றுக்கும் மேலே நீயே உன்னை மன்னிக்க மாட்டாய். ஆகவே கொலை புரிக, ஆகவே செயல் புரிக, ஆகவே போரிடுக. இதுதான் சாங்கிய யோகம். இது மகாபாரதத்தில் முன்னால் வந்திருக்கிறதா? வந்திருக்கிறது. சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து, தன் தம்பிகளுடன் பத்தினியை அழைத்துக்கொண்டு, காட்டுக்குப் போகிறான் தர்மன். அவனுடன் அவனுடைய அமைச்சர் சௌனகன் போகிறார். ஓர் ஆலமரத்தடியில் அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள். அப்போது சௌனகன் சொல்கிறார், நீ ஒரு ஷத்ரியன், உன்னுடைய தர்மம் என்பது போர்புரிவதுதான். எதன்பொருட்டு நீ இதில் தோற்றாய்? ஷத்ரியனுக்கு உகக்காத அறத்தைப் பற்றி நீ கவலைப்பட்டாய். எந்த அறம் அது? உண்மையில் அப்படி ஓர் அறம் இல்லை. ஷத்ரியனுக்கு வெற்றியே முக்கியம். வெற்றியால்தான் அவன் தனக்கான அறத்தை நிலைநாட்டமுடியும். அந்த அறம் என்பது அரசியல் அறம்தான். நீ எவ்வகையிலேனும் வெற்றியை அடைந்திருக்கவேண்டும். சௌனக நீதி என்று அப்பகுதிக்குப் பெயர். அதன் இன்னொரு வடிவமே சாங்கிய யோகம்.
மகாபாரதத்தில் ஒரு முக்கியமான விஷயம் உண்டு, அதை இந்த இடத்தில் சொல்ல வேண்டும். தர்மன் சூதாடியது, தர்மனுக்கு சூதாட்டத்தில் ஆர்வம் இருந்ததால் அல்ல. அவன் ஒரு சூதாடி ஆனதனால் அல்ல. சூதாட்டம் என்பது ஒரு நிகர் போர். ஒரு Proxy War. மிகப்பிற்காலம் வரைக்கும், பதினெட்டாம் நூற்றாண்டு வரைக்கும், இங்கே இந்த வழக்கம் இருந்திருக்கிறது. இரண்டு மன்னர்களுக்கிடையே போர் நடக்கும்போது, இரண்டு படைகளும் மோதி பல்லாயிரம் பேர் சாவதற்கு பதிலாக, வேறொரு போரை அவர்கள் நடத்துவார்கள். நீ ஐந்து பேரை அனுப்பு, நான் ஐந்து பேரை அனுப்புகிறேன். இதில் வென்றால் போரில் வென்றதாகவே பொருள் என அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். கேரளத்தில் அண்மைக்காலம் வரை இருந்தது இவ்வழக்கம். அவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள் ஆயுதப்பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உரிய சன்மானம் பேசப்பட்டு தனிப்போருக்கு அனுப்பப்படுவார்கள். அவர்களை சேகவர் என்பார்கள். அந்தப் போர் நிகழும் களம் அங்கம் எனப்படும். கேரள வரலாற்றில் ஏராளமான அங்கச்சேகவர்களின் கதைகள் உள்ளன. அவை திரைப்படங்களாகவும் வந்துள்ளன. தமிழகத்தில் கோழிச்சண்டை அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சதுரங்கம் என்கிற சூதாட்டமும் அந்த வகையான ஒரு போர் தான். அது ஒரு குறியீட்டுப்போர். மெய்யாகவே தானைகளும் யானைகளும் பங்கெடுப்பது. இத்தனை பேரை இழப்பதற்கு பதிலாக சூதாடலாமே என்று யுதிஷ்டிரர் எடுத்த முடிவுதான் அந்த இடத்திற்கு கொண்டுவந்து நிறுத்தியது.
சௌனகர் சொல்கிறார், மக்கள் சாவதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? நீ ஷத்ரியன். படைவீரன் சாவதற்காக கடமைப்பட்டவன். அவர்களைத் திரட்டிக்கொண்டு படையெடுத்துச் செல். தூரியோதனனைக் கொல்ல உன்னால் முடியும். தடந்தோள் தம்பியர் இருவர் இருக்கிறார்கள் உனக்கு. பத்தினியின் கற்பு இருக்கிறது உனக்கு. போய் வெல். தர்மத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் நீ ஷத்ரியனாக பிறந்தாய். தர்மத்தை நிலைநாட்ட வேண்டுமென்றால், உன் கையில் அதிகாரம் உள்ள வாள் இருக்க வேண்டும். அந்த வாளை நீ குருதி வழியாகத்தான் அடைய முடியும். போய் அதை அடை என்று சௌனகர் சொல்கிறார். அதுவே சௌனக நீதி. அதில் அவர் உலகியல் தத்துவங்களின் தேவையைச் சொல்கிறார். சாங்கியம் என்பது ஓர் உலகியல் தத்துவம் என்பதை நினைவில் கொள்க. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் கௌடில்யர் அர்த்த சாஸ்திரத்திலும் இதையே சொல்கிறார். அவரும் உலகியல் தத்துவங்களை அரசன் கற்கவேண்டும் என்கிறார். அதாவது உலகியல்வாதம் ஒட்டுமொத்தமாகவே சாங்கியம் என்று அன்று சொல்லப்பட்டது
சாங்கிய யோகம் உலகியல் தத்துவம் சார்ந்த கோணத்தை அழுத்தமாக விளக்குகிறது. ஆனால் அது அர்ஜுனனுக்குப் போதவில்லை. அவனுடைய நோய் அங்கு குணமாகவில்லை. இன்னொன்றும் முக்கியமானது. அர்ஜுனனுக்குத்தான் அந்த நோய் வந்தது. அவனுக்குத்தான் மகத்தான அறத்துன்பம் உருவானது. ஆகவேதான் அவனுக்கு அது உரைக்கப்பட்டது. அவனுடைய அண்ணன் பீமன் இருக்கிறான். மகாபாரதப் போரில் அத்தனை கௌரவர்களையும் கொன்றவன் அவன்தான். அவனுக்கு தயக்கமே இல்லை. பின்னால், அத்தனை பேரும் மைந்தரை இழந்து துயரே வடிவாக இருக்கும் திருதராஷ்டிரரை பார்க்கப் போகிறார்கள். நான்கு பேரும் குற்ற உணர்வால், சோர்வால், கூசி சுருங்கிக்கொண்டு போகிறார்கள். இவர்களுடைய கண்ணீரின் வழியாகத்தான் நான் இந்த அரியணையை அடைந்தேன் என்றால் இது எனக்கு எதற்காக என்று கேட்கிறான் தர்மன். அப்போது பீமன் சொல்கிறான், எனது குலமகள் ஒற்றை ஆடையுடன் சபை நடுவே நின்றாள். அந்த ஒரு தவறுக்காக இன்னும் பலமுறை இந்த கௌரவர்கள் பிறந்தால்கூட அவர்களுடைய தலைகளைப் பிளப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அத்தனை உறுதிப்பாடு உடையவனுக்குக் கீதை தேவையே இல்லை. அவன் சாங்கியத்தில் நிலைத்துவிட்டவன்.
அதன்பிறகு அவர்கள் தங்கள் பெருந்தந்தையை நெருங்குகிறார்கள். ஐவரும் குனிந்து வணங்குகிறார்கள். பீமன் குனிந்து வணங்கும்போது அவர் அவனை இறுக்கப் பிடிக்கிறார். அந்தத் தருணத்தை முன்னரே அறிந்து கிருஷ்ணன் ஒரு இரும்புப் பதுமையை அவர்மேல் தள்ளிவிடுகிறார். மாபெரும் தோள்வல்லமை கொண்ட திருதராஷ்டிரரின் தழுவலில் அது நொறுங்கிப் போய்விடுகிறது. அது நொறுங்கியவுடன், ‘பீமா உன்னை நான் கொன்று விட்டேனே!’ என்று மார்பில் அறைந்து கொண்டு அந்த தந்தை அழுகிறார். அப்போது பீமன் அவர் காலில் விழுந்து ‘என்னைக் கொல்லுங்கள், உங்களுக்காக நான் சாகத்தயாராக இருக்கிறேன்’ என்று சொல்கிறான். இது ஒரு நாடகத்தருணம், கதகளி போன்ற பல கலைவடிவங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அவர் தன் கையை அவன் தலையில் வைத்து ‘தீர்க்காயுஷ்மான் பவ’ என்று சொல்கிறார். கடைசியில், கங்கைக்கரையில் மாண்டவர்களுக்கு நீர்க்கடன் செய்யும் இடத்தில், விழியிழந்த திருதராஷ்டிரர் உண்ண முடியாமல் இருக்கும்போது பீமன் உணவை உருட்டி அவருக்கு வாயில் அளிக்கிறான் என்று வியாசர் சொல்கிறார். அவர் அதை உண்கிறார், ஏனென்றால் உயிரின் விழைவு பெரியது. பீமனுக்கும் சரி அவருக்கும் சரி, எந்த இடத்திலேயும் சந்தேகம் கிடையாது, குற்றவுணர்வு கிடையாது, தயக்கம் கிடையாது. நன்மைக்கும் தீமைக்கும் ஒரே அளவுக்கு ஊக்கத்தோடு செல்பவனாக இருக்கிறார்கள். அடிப்படை இச்சைகள், அதாவது காம- குரோத- மோகங்கள் பரிபூரணமாக நிரம்பிய வெறும் மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கீதா முகூர்த்தமே கிடையாது. ஆனால் அர்ஜுனனுக்கு இருக்கிறது. போர்க்களத்தில் மட்டும் அல்ல, மகாபாரதம் முழுக்கவே அவனுக்கு அந்தச் சிக்கல் இருக்கிறது. ‘ஏன்? எதற்கு இதைச் செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி இல்லாத பொழுதே அவனுக்கில்லை. அப்படிக் கேட்டவனுக்கு சாங்கிய யோகம் சொல்லப்பட்டது. அவனுடைய நோய் அங்கு குணமாகாத போது, அதற்கு அடுத்தகட்டமாக, அதன் எதிர்த்தரப்பாக, அதை மறுத்து, ஆனால் அதையே விரிவாக்கம் செய்து அடுத்தது சொல்லப்பட்டது. அந்த முரணியக்கம்தான் யோக மீமாம்சை. அந்த அடுத்த படிதான் கர்ம யோகம்.
முரண்பட்டு முன்னகர்தல்
கர்ம யோகி என்றொருவரை சொல்லமுடியுமென்றால் மகாபாரதத்தில் பீஷ்மரை சொல்லலாம். தன் வாழ்நாள் முழுக்க, தன்னுடைய சுதர்மம் என்று அவர் எதை எண்ணுகிறாரோ, அதில் சஞ்சலம் இன்றி உறுதியாக நிலைத்து நின்றவர் அவர். கடைசி வரைக்கும் அந்த வரைகோடு, அந்த Graph ,மாறாமல் அப்படியே வருகிறது. மாற்றமில்லாத ஆளுமையாக அவர் இருக்கிறார். தியாகம் மட்டும்தான் அவருடைய வாழ்க்கைப் பணியாக இருக்கிறது. போர் புரிந்தார் ஆனால் எதையும் அடையவில்லை. அரசியலை அடைந்தார் ஆனால் ஆட்சி செய்யவில்லை. எல்லாவற்றையுமே ஒரு கர்மயோகமாக செய்யும் மனிதராக அவர் இருக்கிறார். அவருக்கு உணர்ச்சிகள் ஏதுமில்லை. உறவுச்சிக்கல்கள அவர் நம்புவதைச் செய்வதில் இருந்து தடுக்கவில்லை. குலதர்மமே அரசதர்மம் என்பது அவருடைய நெறி. செய்வதெல்லாம் தன் குலம் நாடாளவேண்டும் என்பதற்காக மட்டுமே. அதில் அவருக்கு தயக்கமே இல்லை. அவர் ஒரு கீதையை உரைக்கிறார். பீஷ்ம நீதி என்ற பெயரில் மகாபாரதத்தில் கடைசியில் இருக்கிறது. அது யுதிஷ்டிரருக்கும், அர்ஜுனனுக்கும் சொல்லப்பட்டது
நம் காலகட்டத்தில் ஒரு கர்ம யோகி இங்கே இருந்தார். காந்தி. நான் நேற்றைக்கு சொன்னேன். ஒரு வாழ்நாள் முழுக்க அவர் ஆற்றிய செயல்களுக்கு அவர் ஒரு நிமிடமாவது பிரதிபலன் எதிர்பார்த்திருந்தால், இவ்வளவு செய்கிறேனே எனக்கு இவ்வளவு விளைவு கிடைக்க வேண்டும் என்று கணக்கு போட்டிருந்தால், அவர் ஒன்றுமே செய்திருக்க முடியாது. இந்தியாவின் சுதந்திரம் என்பது அவர் கையில் இல்லை. சர்வதேச அரசியலில் அது இருந்தது. கோடானுகோடி மக்களின் கூட்டு உளவியலில் அது இருந்தது. அவர் அதை மாற்ற முடியாது, அதை ஆட்டுவிக்கும் மந்திரக்கோல் அவர் கையில் கிடையாது. ஆனால் அவர் திரும்பத் திரும்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அந்தப் பிரம்மாண்டத்துடன் மோதிக் கொண்டிருந்தார். தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். நீங்கள் எந்தத் துறையில் சேவையாற்றுபவராக இருந்தாலும், கர்மம் செய்யக்கூடிய பொறுப்பும் உரிமையும் மட்டும்தான் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. கர்மம் நிகழும் அந்த களத்தை, உங்கள் முன் இருக்கும் அந்த விராட ரூபத்தை உங்களால் கற்பனையே பண்ணிப்பார்க்க முடியாது. இங்கே ‘சிறுதுளி’ என்று ஒரு சூழியல் அமைப்பு இருக்கிறது. ஓர் ஏரியை அவர்கள் தூர்வாரித் தோண்டினார்கள். அது ஒரு கர்ம யோகியால் செய்யப்பட்ட வேலை. ஆனால் அதன் மூலம் சூழல் இப்படி இப்படி வளர வேண்டும் என்று அவர்கள் கற்பனை செய்தார்கள் என்றால் அந்த செயலை செய்ய முடியாது. ஏனென்றால் சூழியல் என்பது மிகச்சிக்கலானது. இயற்கை, வானியல், பல லட்சம் மக்களின் உள்ளம் எல்லாம் இணைந்து அதை முடிவுசெய்கின்றன. செயல் மட்டுமே நம் கடமை. செயலே விடுதலை. அத்தனை கர்ம யோகிகளும் கர்மத்தின் மூலம் விடுதலை பெற்றவர்கள்.
சாங்கிய யோகம் சொல்லப்பட்டபோது ‘இல்லை, நான் ஒரு லௌகீகனாக, உலகியலாளனாக, ஒரு சாதாரண மனிதனாக இதை அணுகவில்லை, ஆகவே இந்த பிரச்சினைக்கான உலகியல் தீர்வு எனக்கு திருப்தி அளிக்கவில்லை’ என்று அர்ஜுனன் சொன்னான். ‘சரி, அப்படியென்றால் நீ இதை கர்ம யோகமாகச் செய்’ என்று குரு சொல்கிறார். முதலில் சாங்கிய யோகத்தில், ‘உனக்கு இது கிடைக்கும், அது கிடைக்கும், ஆகவே இதைச் செய். இதைச்செய்தால் கண்டிப்பாக அது கொடுக்கப்படும். இவையெல்லாம் உனக்கு வேண்டும் என்றால் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு முழுமூச்சக இதையெல்லாம் செய்’ என்று சொல்கிறார். ஆனால் உடனே அடுத்து கர்மயோகம் இன்னொன்றைச் சொல்கிறது. ‘இதை செய், இதன் மூலம் நீ விடுதலை அடைவாய். இதை ஏன் செய்கிறேன் என எண்ணாதே. உனக்கு என்ன கிடைக்கும் என்று கணக்கிடாதே. இந்தச் செயல் உன்னை விடுதலை செய்யும் என்பதால் செய். இதற்கு மட்டுமே நீ பொறுப்பு. விளைவுக்கு பெருவெளியின் முடிவின்மையே பொறுப்பு’ என்கிறது. செயலை பயன் கருதிச் செய்யச்சொன்ன நூலே அதன்பின் செயலை தன்னலமில்லாமல் யோகமாக செய்யச் சொல்லும் ஒரு கட்டத்திற்கு நகர்கிறது. முதலில் இருந்த கர்மம் தான் இங்கேயும் வருகிறது. அதன் தொடர்ச்சிதான் இதில் இருக்கிறது. ஆனால் அதன் இயல்பு மாறிவிட்டிருக்கிறது. அதுதான் கீதையின் முரணியக்கம், யோகமீமாம்சை, Dialectics. ஒரு தரப்பும் அதன் மறுதரப்பும் இணைந்து மூன்றாவதாக ஒன்றை உருவாக்கிக் கொண்டு செல்கிறது கீதை.
(மேலும்)