கீதையை அறிதல்-7

டிசம்பர் 2015 -ல் கோவையில் ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை

எழுதியவர் Sakthi Prakash

கீதையை அறிதல்-6

முழுமையான வாசிப்பு

ஒரு நூலை படிப்பதற்கு மூன்று தளங்கள் உண்டுதர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு (Logic, Imagination and Intuition). கீதை இந்த மூன்று தளங்களிலும் நின்று படிக்க வேண்டிய நூல். இந்த மேடையில், நான் ஒரு வேளை தரக்கப்பூர்வமாக இதை எப்படி புரிந்துகொள்வது என்பதைப்பற்றி விரிவாக பேசமுடியும். கற்பனையை நீங்கள் தான் செய்ய வேண்டும். உள்ளுணர்வு உங்களிடம் நிகழவேண்டும். இந்த மூன்று வாசல்களை நீங்கள் திறந்ததற்கு பிறகு கிடைக்கும் கீதைதான் உண்மையான கீதை. ஆகவேதான் இங்கே சிக்கல் வருகிறது. கீதையை கோயிலில் வைத்துக்கொள்வது, வீட்டில் பூஜை அறையில் மஞ்சள் பூசி வைத்துக்கொள்வது, அதற்கு பக்கத்தில் ஊதுபத்தியை கொளுத்தி வைப்பது போன்ற செயல்கள் வழியாக அதை ஒரு வழிபாட்டு நூலாக மாற்றும்போது, நான் ஏற்கெனவே சொன்னது போல, ஒரு சிற்பத்தை நக்கிப்பார்த்து அடையக்கூடிய அனுபவத்தை நீங்கள் அடைவீர்கள்.

ஹிந்துக்களாகிய உங்களுக்கு இந்த உலகத்தில் வேறெந்த மதத்தினரை விடவும் மிகப்பெரிய சவால் அளிக்கப்பட்டுள்ளது என்று வாரன் ஹேஸ்டிங்ஸ் ஒரு முறை சொன்னார். நம்மை ஆள வந்த பிரிட்டிஷ் வைஸ்ராய் சொன்னார். அந்த சவாலை இந்த இருநூறு, இருநூற்றைம்பது வருடங்களில் நாம் ஏற்றுக்கொண்டுள்ளோமா என்ற கேள்வி நம் முன்னால் இருக்கிறது. அறிவார்ந்த உச்சம் நோக்கி செல்லக்கூடிய அனைத்துச் சாத்தியங்களும் கொண்ட மதம் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெரிய அறிவுத்துறை உங்கள் முன்னால் திறந்திருக்கிறது. உங்களுடைய தத்துவங்கள் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து மேலே செல்லக்கூடிய ஒரு படிக்கட்டு உங்கள் முன்னால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அங்கே முதல் படிக்கட்டிலேயே தேங்காய் உடைத்து பூஜை பண்ணுபவர்களாக நம்மை மாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கீதையின் இன்றைய முக்கியத்துவம் என்ன? நேற்றைக்கு பேசிமுடித்தவுடன் பின்னாலேயே வந்து ஒருவர் கேட்டார், “இன்றைக்கு கீதையுடைய Relevance என்ன சார்?”. நான் சொன்னேன். ‘அதை நான் இந்த மழை அடிக்கும் திண்ணையில் வைத்து சொல்ல முடியாது. போர்க்களத்தில் வைத்து கிருஷ்ணன் சொன்னார் என்றால் அவர் கிருஷ்ணன். நான் இங்கே வைத்து சொல்ல முடியாது, எனக்கு குறைந்தது ஒரு மைக்காவது வேண்டும்’ என்று. இப்போது சொல்கிறேன். மிக எளிமையான விடை இதுதான். மிகச்சாதாரணமான ஜோதிடர்களால் வழிநடத்தப்படுவதாக இன்று சங்கரரின், வியாசரின் மதம் மாறி நிற்கும் ஒரு காலகட்டத்தில்தான் கீதையின் முக்கியத்துவம் உள்ளது. ஓர் ஆலயத்திற்கு போனால், அங்கே சொல்கிறார்கள், இங்கு உப்பில்லாத சாமி, ரத்த அழுத்தத்துக்கு இங்கேதான் சாமி கும்பிட வேண்டும், நீரிழிவுக்கு அந்தப்பக்கத்தில் வேறு ஒரு சாமி என்று. என்ன தேவைக்கு என்ன சாமி என்று, எந்த சாமி எந்த Specialist என்று ஜோதிடர்கள் குறித்துக் கொடுக்கிறார்கள். பரிகாரங்கள், கர்மங்கள் தவிர அதற்கப்பால் எதுவும் தெரியாத ஒரு பெரும் கும்பலாக நாமெல்லாம் மாறியிருக்கும் காலகட்டத்தில் இரட்டைக்கூர்மை கொண்ட ஒரு வாள் போல முன்னால் கீதை நின்றுகொண்டிருக்கிறது. இதைக் கொண்டுபோய் யாரிடமும் நாம் முன்வைக்கவேண்டிய அவசியம் கிடையாது. நமக்கு நாமே கேட்டுக்கொள்ளக்கூடிய பெரிய அறைகூவலாக கீதையை நான் பார்க்கிறேன்.

இன்றைக்கு என்னுடைய மகனிடம் இந்த சம்பவத்தை சொல்லிக்கொண்டிருந்தேன். கீதையை எப்படி பொருள்கொள்வது?

வி.ராமமூர்த்தி அவர்கள் காந்தியின் கடைசி இருநூறு நாட்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். தமிழில் வந்திருக்கிறது. சுத்தமாக கற்பனையே இல்லாத புத்தகம் அது. ஒரு நிகழ்வுக்குறிப்பு (Chronicle) தான் அது. பெரும்பாலும் The Hindu பத்திரிக்கையில் வந்த செய்திகளை வைத்துக்கொண்டு, அந்த இருநூறு நாட்களில் காந்தி என்ன பண்ணினார் என்று ஒரு டைரி மாதிரி சொல்லும் ஒரு புத்தகம். ஆனால் கைகள் நடுங்காமல், கண்கள் துளிக்காமல் படித்து முடிக்கமுடியாத ஒரு காவியமும்கூட. அது அந்த வாழ்க்கையினால் அந்த மகத்துவத்தை அடைகிறது.

காந்தி கிட்டத்தட்ட முப்பதுமுப்பத்தைந்து ஆண்டுகாலம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும், இந்த தேசத்தின் விடுதலைக்காக செலவழித்திருக்கிறார். தன்னுடைய அனைத்து உழைப்பையும், அனைத்து கண்ணீரையும் இந்த தேசத்திற்காக செலவழித்திருக்கிறார். சுதந்திரம் கிடைக்கிறது. இந்துக்களும், முஸ்லிம்களும் மாறி மாறி வெட்டிக் கொல்கிறார்கள், எங்கு பார்த்தாலும் இரத்தம் ஓடுகிறது. பிரிட்டிஷாருடைய ராணுவ வல்லமையால் மட்டுமே ஒன்றாக நிறுத்தப்பட்ட தேசம் இது, இப்போது அந்த ராணுவத்தை காந்தி வெளியே அனுப்பிவிட்டார், ஒரு எரிமலையை திறந்து விட்டுவிட்டார், இந்த தேசத்தை அழிவுப்பாதைக்கு இந்த கிழவன் கொண்டுவந்துவிட்டார் என்று அன்றைக்கு இருந்த அறிவுஜீவிகள் அனைவருமே சொல்லும் ஒரு காலம் வந்துவிட்டது.

காந்தி நவகாளிக்கு வருகிறார். இஸ்லாமியர்களால் இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பிணங்கள் அகற்றப்படாமல் சாலை முழுக்க கிடக்கும் ஓர் இடம்.தன் பேத்திகளின் தோளில் கை போட்டுக்கொண்டு, அங்கு வருகிறார். ஒரு பழைய பங்களாவில் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தனர். முந்தைய நாளில் அங்கு யாரோ மலத்தையும், முள்ளையும் கொண்டுவந்து நிரப்பிவிட்டு போய்விட்டார்கள். அங்கு வரும்போது தொண்டர்களுடன் சேர்ந்து அவரே அந்த மலத்தை அள்ளி வெளியே கொட்டினார். சுண்ணாம்பு வரவழைத்து அதன்மேல் பரப்பினார். அதன்மேல் பாயைப்போட்டு உட்கார்ந்து ராட்டை சுற்றினர். செய்திகள் என்ன வந்திருக்கிறது என்று வாசித்துக் காட்டுகிறார்கள். அழிந்து கொண்டிருக்கும் ஒரு நாடு.அவரால் மெல்ல மெல்ல மெல்ல கட்டி எழுப்பப்பட்ட ஒரு நாடு, தேன் கூடு மாதிரி கலைந்து, மாறி மாறி கொன்று, ஒழித்து, வெறிகொண்டிருக்கிறது. யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இந்த சித்திரம் உலகத்தின் கண் முன் வரவேண்டுமென்று வெள்ளையர்கள் விரும்பினர். ஆகவேதான் ஒரே மாதத்திலேயே மொத்த இந்திய ராணுவத்தையும் வெளியே கொண்டுபோனார்கள். எந்தவொரு நாடாக இருந்தாலும், எவ்வளவு ஒரு அகிம்சைமிக்க நிலமா இருந்தாலும், ராணுவத்தையும் போலீசையும் ரத்து செய்தால் என்ன நடக்குமோ, அதுதான் இங்கேயும் நடந்தது. ஒரே வாரத்தில் அத்தனை வெள்ளை அதிகாரிகளும் போனதால், ராணுவமே செயலிழந்து விட்டது. ஆணை பிறப்பிப்பதற்கு ஆள் இல்லை. ஆனால் காந்தியிட்ம் சொல்கிறார்கள், உங்களுடைய வாழ்க்கைச்செயல்பாடு (Life Mission) எதுவோ, அது இந்த தேசத்தையே அழிப்பதாக மாறிவிட்டது என்று. அவர்பெருமூச்சுடன் கேட்டுக்கோள்கிறார்.

எப்படி இருக்கிறார். உபவாசம் இருந்து மெலிந்து, வயிறு அடிவயிறுடன் ஒட்டியிருக்கிறது. வயிற்றில் நரம்புகள் தெரிகின்றன. சாப்பிடாததனால் குரல் வெளிவர மறுக்கிறது. அவர் வாயில் காது வைத்து, மனு அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு உரக்கச் சொல்கிறார், “எனக்கு சுதர்மம் என்று எதை சொல்லத்தோன்றுகிறதோ அதைத்தான் நான் செய்தேன். விளைவுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் கிருஷ்ணனை நம்புகிறவன்“. இரவு நெடுநேரம் ஆட்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இரண்டு மணிநேரம் தூங்குகிறார். பிரம்ம முகூர்த்தத்தில் வழக்கம் போல் விழித்தெழுகிறார். கீதையை திறந்து படிக்கிறார். அவர் அந்த இடத்தில் இழப்பவை அனைத்தையும் அந்த நூல் அவருக்கு கொடுக்கிறது. அத்தனை ஆன்மபலத்தையும் அது அளிக்கிறது. எழுந்து தன்னுடைய பேத்திகள் தோளில் கைவைத்துக்கொண்டு முள்ளும் மலமும் விரிக்கப்பட்ட பாதையில் நடந்து போகிறார். கூப்பிய கரங்களுடன் இஸ்லாமிர் வாழும் இடங்களுக்குள் போகிறார். அவர்களை வெறிகொண்ட கூட்டம் எதிர்கொள்கிறது. ஆனால் அதிலிருந்து பெண்களின் குரல் தனியாக ஒலிக்கிறது. அவர்கள் இறங்கி வருகிறார்கள். காந்தியை வணங்குகிறர்கள். ஓர் எரியும் பரப்பில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு போவதுபோல் அவர் போன வழி தெரிந்தது என்று டொமினிக் லாப்பியர் (Dominique Lapierre) தன்னுடைய நூலில் சொல்கிறார். (நள்ளிரவில் சுதந்திரம்)

தீயை அவரால் அணைக்க முடிந்தது. பிரிட்டிஷ் ராணுவம் மேற்கு முனையில் செய்ய முடியாததை, ஒரு தனிமனிதன் கிழக்கு முனையில் செய்தார். அவருக்கு அந்த ஆற்றலைக் கொடுப்பதற்கு அங்கே அந்த நூல் தேவையாக இருந்தது. ’ஆகவே கொலைபுரிக!’ என்று திரும்ப திரும்ப சொல்லும் ஒரு நூல் அவருக்கு அந்த ஆற்றலைக் கொடுத்தது. அதுதான் கீதையின் முதன்மையான விசை, முதன்மையான சக்தி. கீதை எதை கொடுக்கிறதென்றால், இந்த ஆன்மீக ஆற்றலைத்தான். அன்றைய ராஜதந்திரிகள் சொன்ன அத்தனை கற்பனைகளையும் மீறி, இன்றைக்கு நாமெல்லாம் ஒரே தேசமாகத்தான் இருக்கிறோம். நாம் எவரும் நம் சகோதரன் கழுத்தை கிழித்துக்கொள்ளவில்லை. நம்முடைய விரோதத்தையும் கசப்பையும் வளர்ப்பதற்கு, ஆயிரக்கணக்கான வழிகளை காட்டினார்கள். என்னென்னவாகவோ எல்லாம் செய்தார்கள் அல்லவா! நாம் ஒன்று திரண்டுதான் நின்று கொண்டிருக்கிறோம்.

காந்தியின் கையில் கீதை இருந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அது வியாசரின் கையில் இருந்திருக்கலாம், சங்கரரின் கையில் இருந்திருக்கலாம். ஒரு படகுபோல அது இந்த காலகங்கையின் நூற்றுக்கணக்கான அலைகளில் மிதந்து இங்கே வந்திருக்கிறது. அந்த அலைகளையும் சேர்த்துதான் அதை நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் கையில் இருக்கும் அந்த நூல் பதினெட்டு அத்தியாயங்களில் சில ஸ்லோகங்களை குறித்துவைத்திருக்கும் நூல் அல்ல. நீங்கள் உங்களை ஒரு வாசகனாக நினைத்துக் கொண்டீர்களானால், அதிகபட்சம் நாற்பத்தைந்து நிமிடத்தில் கீதையை படித்து முடித்துவிடலாம். அது அல்ல நம் அறைகூவல், அதன் வழியாக செல்லத்தக்க பயணம் ஒன்று பிரமாண்டமாக நம் முன் இருக்கிறது. அதுதான் கீதையின் சாராம்சம் என்று நான் நினைக்கிறேன்.

கீதையின் இடமென்ன?

இந்த உரையை இரண்டு பகுதிகளாக பிரித்துச் சொல்லலாம் என்று நினைத்தேன். ஓர் உச்சத்தைக் கடந்து அடுத்த கேள்விக்கு நான் வருகிறேன். இந்திய ஞானமரபில் கீதையின் இடம் என்னவாக இருக்கும்?

மிகவிரிவான ஒரு புலத்தில் வைத்து பார்க்கவேண்டும். உலக வரலாறு என்கிற ஒரு பெரிய சித்திரத்தில் வைத்து பார்த்தால், கடவுள் உருவகங்கள் ஒவ்வொரு மனித மனதிலும் ஒவ்வொரு விதமாக உருவாகி வந்திருக்கிந்றன என்பதைக் காணலாம். ஒரு நிலப்பகுதிக்கு என்று கடவுள் உருவகம் உண்டு. Asia Minor ,அதாவது இன்றைக்கு இருக்கக்கூடிய அரேபியா ,அந்தப் பகுதிக்குபிதா’ என்கிற கடவுள் உருவகம் இருக்கிறது. ஒரு குடும்பத்தின் தலைவன் யார்? அப்பா. இந்த பிரபஞ்சத்திற்கு அப்பாவாகிய ஒருவர், அவர்தான் பிதா. மிகப்பெரிய மேய்ச்சல்ச் சமூகங்களில், இருப்பதிலேயே வயதான ஒரு தந்தையை அத்தனை பேருக்கும் தந்தையாக உருவகிக்கும் ஒரு மரபு  இருந்தது. ஆகவே மண்ணில் உள்ள அனைத்து மக்களுக்கும் தந்தையாக இருக்கும் ஒரு தந்தை, அது அவர்களுடைய தெய்வ உருவாகமாக உருவாகி வந்தது.

இன்றைக்கு உலக மக்கள் தொகையில் மிகக்கணிசமான ஆட்கள் நம்பும் தெய்வ உருவகம் என்பது இந்த ஆதித்தகப்பன் என்கிற உருவகம் தான். அதற்கு முன்னால் ஒரு உருவகம் அவர்களுக்கு இருந்தது, அது தவறு செய்தால் தண்டிக்கக்கூடிய அக்னி வடிவமான ஒரு தெய்வம். அது யஹோவா என்று சொல்லப்படுகிறது. தீ தெய்வம். பாலைவனத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனின் தெய்வம் தீயாகத்தானே இருக்க முடியும்? சுட்டெரிக்கக்கூடிய ஒரு வெம்மையாகத்தானே இருக்க முடியும்?இப்படி தொடர்ந்து பல தெய்வங்களை மனிதர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த தெய்வ உருவகங்களுக்கு எல்லாம் ஒரு பொதுப்போக்கு, ஒரு Pattern இருக்கிறது. அதை தொகுத்து இப்படி சொல்லலாம். ஒன்று: சிறு தெய்வங்கள், அதாவது Functional Gods என்று சொல்வார்கள். குட்டித் தெய்வங்கள். தாய்த்தெய்வமான மாரியம்மன் மாதிரி. எல்லைக் காவலுக்கு மாடசாமி மாதிரி. அதோடு குடும்ப தெய்வங்கள் இருக்கின்றன. குலதெய்வங்கள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட செயலையோ, ஒரு குறிப்பிட்ட கருதுகோளையோ, ஒரு குறிப்பிட்ட விஷயத்தையோ குறிக்கும் தெய்வங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட செயலை ஆற்றக்கூடிய தெய்வங்கள் உள்ளன. இப்படி ஆயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றன. இயற்கையிலேயே மனிதன் உருவாக்கிக்கொண்ட தெய்வங்கள் எல்லாமே, Functional God ஆகத்தான் இருக்கின்றன. இறுதிச்சடங்கு செய்யும்போது அங்கு ஒரு கடவுள் இருக்கிறது, அது இறுதிச்சடங்கின் கடவுள். குழந்தை பிறக்கும்போது பூஜை பண்ணுவதற்கு ஒரு கடவுள் இருக்கிறது, அது பிறப்புக் கடவுள். மழைக்காலத்திற்கு ஒரு கடவுள், வெயில் காலத்திற்கு வேறு ஒரு கடவுள். அப்படித்தான் ஆப்பிரிக்காவில் இன்றைக்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கிறார்கள். நமக்குத் தெரியும், கிரேக்க மதத்தில் பல்லாயிரக்கணக்கான தெய்வங்கள் இருக்கின்றன. அந்த தெய்வங்களுக்கு இடையே சிக்கலான உறவுகள் இருக்கின்றன. இவை எல்லாமே Functional Gods.

இந்த கடவுள்களில் இருந்து அடுத்த கடவுள் உருவகத்திற்கு வருகிறான் மனிதன். அதுதான் Almighty God. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்யும் முழுமுதல் தெய்வம். முன்னர் சொன்ன சிறுதெய்வத்தில்  இருந்து இந்த முழுமுதல் தெய்வத்துக்கு வருவது மனித வரலாற்றில் ஒரு பெரிய பாய்ச்சல் என்று சொல்கிறார்கள். பிதா என்பது ஒரு முழுமுதல் தெய்வம். நம்  சிவன், விஷ்ணு, பிரம்மா மூவருமே முழுமுதல்தெய்வங்கள். அல்லா என்பது ஒரு முழுமுதல்தெய்வம்

இதற்கு அப்பால் ஒரு தெய்வ உருவகம் இருக்கிறது, அது தத்துவார்த்தமான தெய்வம். Philosophical God. தத்துவ சிந்தனைதான் அதை சென்று தொடமுடியும். தத்துவ சிந்தனை கொஞ்சமும் உருவாகாத மனதிற்கு அதைச் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. அப்படி, தத்துவ உருவகமாக தெய்வங்கள் உருவகிக்கப்பட்டதில் முக்கியமானதும், முதன்மையானதும், தொன்மையானதும் நம்முடைய மண்ணில் தோன்றிய பிரம்மம் என்ற இறையுருவகம்.  அது ஒரு கருத்துருவம்தான். ஒரு Concept. ரிக் வேதத்தின் ஆரம்ப கட்டத்தில் சிறுதெய்வங்கள் எல்லாம் அதிகமாக பேசப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்திரன், வருணன், மித்ரன், சோமன். இந்திரனைப் பார்த்தால் கிட்டத்தட்ட நம்ம கருப்பசாமிக்கு நெருக்கமானவராகத் தெரிகிறார். உனக்கு சுருட்டு தருகிறேன், வந்து இதைப் பண்ணிவிட்டுப் போ என்று நம்முடைய கருப்பசாமியிடம் கேட்பது போலத்தான்; உனக்கு சோமபானத்தை தருகிறேன், குடித்துவிட்டு எனக்கு இதைக்கொடு என்று கேட்கிறார்கள். ஆனால் எங்கோ ஒரு இடத்தில் அந்த மனம், மிகத்தொன்மையான தொல்குடி மனம், அந்த அந்த ரிஷி மனம், இந்த கடவுள்களிலிருந்து இவர்களை ஆட்டிவைக்கக்கூடியதும், மையமானதுமான ஏதோ ஒன்றுக்கு போகும் பயணத்தை மேற்கொள்வதை நீங்கள் ரிக்வேதத்தின் ஏழாம் காண்டத்தில் பார்க்கலாம். இந்த பரிணாமத்தை ஒரு வரைபடம் மாதிரி அவ்வளவு தெளிவாகக் காட்டக்கூடிய ஒன்று ரிக்வேதம்.

ம.ரா, ஜம்புநாதன் அவர்களுடைய மொழிபெயர்ப்பில் தமிழில் இன்றைக்கு வேதங்கள் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் படித்துப்பார்க்கலாம். அதன் ஆரம்பகட்டத்தில் திரும்பத் திரும்ப கர்மங்கள்தான் சொல்லப்படுகின்றன. அதாவது வேள்விச்சடங்குகள். இதை நான் உனக்குத் தருகிறேன், நீ எனக்கு இதைக்கொடு. ’பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன், நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா’. இந்த ‘Dealing’ தான் ரிக்வேதத்தின் தொடக்கப்பகுதி முழுக்க இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அந்த மனம் ஒரு பிரமாண்டத்தை, ஒரு முடிவின்மையை உணர ஆரம்பிக்கிறது. இங்கு உட்கார்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் நண்பர்களே! நாம் அறிவியலை எல்லாம் தாண்டி வந்திருக்கிறோம். ஆனால் முதன்முதலாக முடிவின்மை, அலகின்மை, Endlessness, Infinity என்ற ஒரு விஷயத்தை உணர்ந்தவன் எவ்வளவு பெரிய அகத்தாவலை நிகழ்த்தியிருப்பான்? நாம் அன்றாட வாழ்க்கையில் முடிவற்றது என்று எதுவுமே கிடையாது. முடிவிலி என்பது ஒரு தூய கருத்துருவகம், கற்பனையால் மட்டுமே அறியத்தக்கது. கற்பனையை வீசி எறிந்து தொடவேண்டியது.அந்த முடிவிலியை ஒரு மனம் தொட்டு உணரும்போது, அது பைத்தியம் ஆகாமல் திரும்பி வந்து சொன்ன சில விஷயங்கள் ரிக்வேதத்தில் இருக்கின்றன. அங்கிருந்துதான் எல்லாமே ஆரம்பிக்கிறது. இத்தனை ஆயிரம் வருடங்கள் கடந்து போயிருக்கிறது.

அதன் காலகட்டம் ஏறத்தாழ ஐந்தாயிரம், ஆறாயிரம் வருடங்கள். குறைந்தது நாலாயிரம் வருடங்கள் கழிந்துதான் வேறு பண்பாடுகளில் முடிவிலி என்ற வார்த்தையை கண்டடைய ஆரம்பிக்கிறார்கள். வேள்விக்ளைச் செய்கிறார்கள். எங்கோ ஓர் இடத்தில் ஒரு சந்தேகம் வருகிறது. மார்க்ஸிய அறிஞரும், இந்திய தத்துவவியலாளருமான கே. தாமோதரன் அவருடைய ‘இந்திய சிந்தனை’ என்ற நூலில் சொல்கிறார். ‘யார் அந்த தேவன்? யாருக்கு நாம் அவிஸ் அளிக்கிறோம்?’ என்று ஒரு ரிக்வேத சூத்திரம் இருக்கிறது. அந்த ஐயம்தான் தத்துவசிந்தனையின் தொடக்கம் என்கிறார்.  யாருக்கு முன்பாக நாம் இந்த சடங்குகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற வினா அது. நம்பிக்கை கேள்வியாக உருமாறுகிறது. அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு போகிறது. ‘எங்கும் ஒளிரக்கூடிய சூரியன் ஒன்றே! விண்ணும் எரியக்கூடிய நெருப்பு ஒன்றே! இவையனைத்திலும் ஒளிரக்கூடிய காலை ஒன்றே! அந்த ஒன்றே இது அனைத்தும்!’

அதை முக்கியமான ஒரு திருப்புமுனை என்று சொல்கிறார்கள். எண்ணிப்பாருங்கள். ஒரு நாள் காலையில் வாசலைத் திறந்து பார்க்கும்போது, கோடிக்கணக்கான வடிவங்களாக இங்கே தெரியும் அனைத்தும் காலை என்ற ஒன்றின் வடிவங்கள் தானே என ஒருவன் உணர்வது! ஒரே ஒளிதான், Light என்ற ஒரு நிகழ்வுதான் இங்கே அனைத்தையும் இத்தனை பொருட்களாக மாற்றுகிறது. இதை பச்சையாகவும், அதை சிவப்பாகவும், அதை உருண்டையாகவும், இதை நீளமாகவும் காட்டுவது ஒளிதான். அந்த ஒருமை உணர்வை போய்த் தொடுகிறார்கள் ரிஷிகள். அந்த ஒருமையுணர்வை தொட்டு மீண்டுவருவதன் ஊசலாட்டங்களும், தயக்கங்களும் நிறைந்த நூல் ரிக்வேதம்.

வேததின் சாராம்சம் என்னவென்றால், ஒரு தொல்மனம் Primitive mind கண்டடைந்த உண்மைதான். தொன்மையான மனம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், மொழியே சரியாக உருவாகாத ஒரு காலத்தில் எழுதப்பட்டது ரிக்வேதம். எழுவாய் பயனிலை என்கிற அமைப்பே கிடையாது. செய்வினை, செயப்பாட்டுவினை என்ற அமைப்பே கிடையாது. அதாவது ராமன் ராவணனைக் கொன்றான் என்று அந்த மொழியில் சொல்ல முடியாது. ராம ராவணக் கொலை என்றுதான் சொல்லமுடியும். இதில் யார் யாரைக் கொன்றார் என்று தெரியாது. சிறிய இனக்குழு தானே! அவர்களுக்குள் இதெல்லாம் புரிந்திருக்கும் போலிருக்கிறது. மொழியின் எல்லா இலக்கண அமைப்புகளுக்கும் முன்னர் இருக்கும் ஒன்று அந்த மொழி . அதனால்தான் இவ்வளவு குழப்பங்கள் வருகின்றன. ஏனென்றால் அது பொதுவான தெளிவான இலக்கணம் இல்லாத ஒரு காலத்தில் எழுதப்பட்டது. அதை எடுத்து வைத்து என்ன வேண்டுமென்றாலும் பொருள் எடுக்கமுடியும். மிகச் செறிவாகவும் சுருக்கமாகவும் இருக்கும் ஒரு மொழியில் அந்த தொல்மனம் தன் கற்பனையினாலும் உள்ளுணர்வினாலும் இந்த தரிசனங்க்ளை அடைந்தது. அதற்கு அப்பால் இது மனிதனுக்கு இவ்வாறு நிகழ வேண்டும் என்று எண்ணிய ஏதோவொன்றின் இச்சையாலும் இந்த் விஷயங்களை அடைந்து இருக்கலாம்.

ரிக்வேதத்தின் பத்தாவது காண்டம் மிக முக்கியமானது என்று சொல்வார்கள். அதுதான் வேதத்தின் முடிவு. வேதாந்தம் என்கிற வார்த்தையே இந்தப்பொருளில் தான் ஆரம்பத்தில் கருதப்பட்டது. வேத முடிவு. ரிஷி பரமேஷ்டி பிரஜாபதியின் ஒரு பாடல் ரிக்வேதத்தில் இருக்கிறது. அதை சிருஷ்டி கீதம் என்று சொல்வார்கள். மிக முக்கியமான இந்திவியலாளர்கள், பேரறிஞர்கள் அத்தனை பேரும் சொல்லும் ஒரு கருத்து, மனித குல வரலாற்றின் உச்சகட்ட கவித்துவம் முதலில் நிகழ்ந்த தருணங்களில் ஒன்று சிருஷ்டி கீதம். நீங்கள் மதநம்பிக்கையே இல்லாத ஒருவராக இருக்கலாம். ஆன்மீகம் மறுப்பாளராக இருக்கலாம். ஆனால் அது மதம், ஆன்மிகம் ஆகியவற்றையும் தாண்டிய கவித்துவம்.  புரிந்து கொள்வதற்கே கஷ்டமான, ஆனால் மிக எளிமையான, ஒரு பெரிய ஆச்சரியமும் வியப்பும் வெளிப்படக்கூடிய ஒரு மகத்தான மொழித்தருணமே சிருஷ்டி கீதம். அதை நான் என்னுடைய மொழிபெயர்ப்பில் படிக்கிறேன், அது ஒரு உணர்வை உங்களுக்கு உருவாக்கும் என்பதற்காக.

அப்போது அசத் இருக்கவில்லை

சத்தும் இருக்கவில்லை

உலகம் இருக்கவில்லை

அதற்கப்பால்

வானமும் இருக்கவில்லை

ஒளிந்துகிடந்தது என்ன?

எங்கே?

யாருடைய ஆட்சியில்?

அடியற்ற ஆழமுடையதும்

மகத்தானதுமான நீர்வெளியோ?

மரணமிருந்ததோ

மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை

ஒன்றேயான அது

தன் அகச்சக்தியினால்

மூச்சுவிட்டது

அதுவன்றி ஏதுமிருக்கவில்லை

இருட்டால் போர்த்தப்பட்ட வெளி

வேறுபடுத்தலின்மையால்

ஏதுமின்மையாக ஆகிய வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக ஆகியது

அந்த ஒருமையில்

முதலில் இச்சை பிறந்தது

பின்னர் பீஜம் பிறந்தது

அவ்வாறாக அசத் உருவாயிற்று!

ரிஷிகள்

தங்கள் இதயங்களை சோதித்து

அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்

அதன் கதிர்கள்

இருளில் பரந்தன

ஆனால் ஒருமையான அது

மேலே உள்ளதா?

அல்லது கீழே உள்ளதா?

அங்கு படைப்புசக்தி உண்டா?

அதன் மகிமைகள் என்ன?

அது முன்னால் உள்ளதா?

அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?

அதன் மூலகாரணம் என்ன?

தேவர்களோ

சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?

அதை யார் உண்டுபண்ணினார்கள்

அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது

அதுவும் அறியாது!

 

இந்தக் கவிதை எழுதப்பட்டது எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கவிதை சென்று தொடக்கூடிய இடங்கள் என்ன! ‘வேறுபடுத்தல் இன்மையால் ஏதுமின்மையாக ஆகிவிட்ட வெளி’ என்று ஒரு வரி வருகிறது பாருங்கள். இது அது என்று வேறுபடுத்துவதற்கு இன்னொன்று இருந்தால் தானே இருப்பு என்பதே. அது மட்டும் இருந்தால் அதற்கப்பால் ஒன்றுமில்லை.  ‘ஆகாய வடிவான அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது’. இந்த உச்சத்தை ரிக்வேதத்தின் ஒரு கணத்தில் ரிஷி பரமேஷ்டி பிராஜாபதி சென்றடைந்தார். அவன் யாராக இருந்தாலும் அவன் மாமுனிவன். அவன் கரடியின் தோல் போர்த்து, மாமிச உணவு உண்டு , ஏதோவொரு மலையின் சரிவில், ஏதோ புல்வெளியில், ஒரு தீயை நோக்கி அமர்ந்து, இந்த வரிகளை சொல்லியிருக்கலாம், இந்த மேடையில் நின்று அந்த மகானின் பாதங்களை வணங்கிக்கொள்கிறேன்.

எத்தகைய கவிதை! மனித குலத்திற்கு ஒரு பெரிய திறப்பு. தத்துவம் என்ற ஒன்றுக்கு பெரிய தொடக்கம். இது இந்த மதத்திற்கு அந்த மதத்திற்கு சொந்தமானது கிடையாது. இந்து மதம் அழிய வேண்டும் என்று சொல்லும் ஒரு பெரிய நண்பர் தரப்பு எனக்கு உண்டு. அவர்களிடம் நான் சொல்வேன், அழியலாம், இது தேவையில்லை என ஆனால் அழியட்டும். கிருஷ்ணனோ பிரம்மனோ அப்படி நினைத்தால் அழிந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அழியும் என்றால் இந்த மானுடகுலம் உருவாக்கியதன் சில உச்சங்கள் எப்போதைக்குமாக அழிந்துவிடும். மானுடம் சென்றடைந்த மகத்தான கவித்துவமும் தத்துவமும் இல்லாமலாகிவிடும். மானுடம் கள்ளமற்ற காட்டுமிராண்டித்தனத்தில் இருந்து தத்துவ உச்சிக்குச் சென்ற ஒரு பயணத்தின் தடம் மறைந்துவிடும். சிருஷ்டிகீதம் அத்தகைய உச்சம். அந்த இடத்திலிருந்து தொடங்குகிறது இந்திய மெய்ஞானம். சமீபத்தில் நானும் நண்பர்களும் மகாபலேஸ்வர் போயிருந்தோம். ஒரு சிறிய காளையின் வாயிலிருந்து ஒரு செம்பு அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. அதுதான் கிருஷ்ணா நதியின் தொடக்கம். விஜயவாடாவில் பார்த்தீர்களென்றால் பத்து கிலோமீட்டருக்கு தண்ணீர் விரிந்து போய்க்கொண்டிருக்கும். நீராவிக்கப்பல் அதன்மெல் போகும். இந்த வரி அந்த ஒரு வாயில் இருந்து கொட்டிய கிருஷ்ணா. இத்தனை ஆயிரம் வருடங்களைத் தாண்டி இது பெருகிப்போய்க்கொண்டிருக்கிறது. இங்கே ஆரம்பிக்கிறது வேதாந்தத்தின் தரிசனம். இது கொடுத்த ஒரு Jolt, ஒரு Shock, ஓர் அடி என்னவாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். அந்த அதிர்ச்சியின் விளைவாக உதிர்ந்த விதைகள் முளைத்த ஒரு பெரிய வயல் என்று உபநிஷத காலத்தை சொல்லலாம்.

உபநிஷத்துக்காலம் என்பது உபதேசங்களின் காலம் இல்லை, விவாதங்களின் காலம். ரிக்வேதம் உணர்ந்த பிரம்மம் என்கிற கருதுகோளை பல கோணங்களில் விவாதித்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு யோசித்துப்பார்த்தால்; ஒரு ஐநூறு அறுநூறு வருடங்களில் இவ்வளவு பெரிய விவாதம் நடந்திருந்தால் அது எப்படிப்பட்ட காலமாக இருந்திருக்கும். மனிதகுல வரலாற்றை பார்த்தால் தெரியும், ஒரு வரலாற்றுத்தருணம் என்பது எப்படி நிகழ்கிறது என்று. ஒரே வேளையில் ஒரு சூழலில் ஒரு பெரும் கொந்தளிப்பு நடக்கும். பதினாறாம் நூற்றாண்டில் இருந்து பதினெட்டாம் நூற்றாண்டுக்குள் இப்போது பயன்படுத்தும் அனைத்து வகையான அடிப்படைக் கருவிகளையும் ஐரோப்பாவில் மனிதன் கண்டுபிடித்துவிட்டான். புரி (Screw)அதற்கு முன்னால் கிடையாது, பற்சக்கரம் (Gear) அதற்கு முன்னால் கிடையாது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அத்தனை கருவிகளையும் வெறும் இருநூறு வருடத்திற்குள் மனிதன் கண்டுபிடித்து விடுகிறான் என்றால், மனிதனின் மொத்த பிரக்ஞையும் பொறியியல் (Mechanical Engineering) என்கிற ஒரு களத்தில் திறந்துவிடப்பட்ட ஒரு காலம் அது என்றுதான் பொருள். கருமான்களின் பொற்காலம் என்று அதை வரலாற்றில் சொல்வார்கள். ஒரு பெரிய ஏரியில் ஒரு மடை திறப்பது போல்தான் அது. மொத்தத் தண்ணீரும் அதன்வழியாக பீரிடும். ஒவ்வொரு காலகட்டத்திலும் அப்படி ஒரு மடை திறந்திருக்கிறது உபநிடதகாலம் மெய்யியலில் அப்படி ஒரு மடை திறந்த காலம்.

ஒரு ஐநூறு வருடங்களுக்குள் பிரம்மம் என்னும் கருதுகோளின் எல்லா சாத்தியங்களையும் வேறு வேறு கோணங்களில் ஆராய்ச்சி பண்ணிவிட்டார்கள். உபநிஷத்துகளில் பிரம்மம் என்ற கருதுகோளை அவர்கள் எப்படி எப்படி எப்படி வளர்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம். மிக எளிமையாக  ‘அன்னம் தான் பிரம்மம்’ என்கிறார்கள். அதாவது உணவே தெய்வம், ஆனால் அன்னம் என்றால் உடல், உணவு, பருப்பொருள் மூன்றும்தான். அதுதான் பிரம்மம். அன்னம் பிரம்மம் என்றால் அன்னமாகி வந்து உடலாகவும் உணவாகவும் பருப்பொருள் சார்ந்த பிரபஞ்சமாகவும் நிலைகொள்வதுதான். அடுத்த வரி வருகிறது,  ‘பிரக்ஞானம் பிரம்மாஸ்மி’. இந்த பிரக்ஞையும் பிரம்மம் தான். அடுத்த வரி, ‘அஹம் பிரம்மாஸ்மி’ நான் பிரம்மம். நான் பிரம்மம் என்றால் என்றால் இந்த மேஜைமேலுள்ள நீர்ப்புட்டி பிரம்மம் இல்லையா? இதெல்லாமே பிரம்மம் தான். ‘தத்வமசி’. அது நீயேதான். இப்படி அந்த தரிசனம் வளர்ந்து வளர்ந்து வந்திருக்கிறது. அது கண்டடைந்த உவமைகள் இருக்கிறதே !. இவ்வளவு பெரிய ஆலமரம் ஒரு விதைக்குள் இருக்கிறது. அந்த விதையை உடைத்துப் பார்த்தால் உள்ளே இருப்பது இன்மை. நீங்கள் ஆலமரத்தை பார்க்க முடியாது, ஒன்றும் இல்லை. அந்த இன்மையிலிருந்து இவ்வளவு பெரிய இருப்பு வரமுடியுமென்றால், அது நீதான் ஸ்வேதகேது. இப்படி ஒரு பெரிய தத்துவ விவாதங்கள் உருவாகி வந்த ஒரு பெரிய காலகட்டம் மரபில் இருக்கிறது.

அதன்பிறகு இந்த ஒட்டுமொத்த ஞானத்தையும் திருப்பி சூத்திர வடிவில் சுருக்குகிறார்கள். அதுதான் பிரம்ம சூத்திரம். சூத்திரம் என்ற ஒரு வடிவத்தை பற்றி ஒரு ஹிந்து கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். சூத்திரம் என்பது புரிந்துகொள்வதற்கான உரைநடை வடிவம் கிடையாது. திருக்குறளைப் பற்றி பேசும்போது இதை நான் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறேன். திருக்குறளை கட்டுரைபோல படிக்கிறார்கள், அது தவறான படிப்பு. நீங்கள் இன்று பார்க்கும் உரைநடை என்பது அச்சு இயந்திரம் வந்தபிறகு உருவானது. அதற்கு முன்னால் இருந்தது உரையாடல்தான். இந்த உரையாடலில் நாம் நாள் முழுக்க பேசக்கூடியதை, ஒரு பத்து வருடம் பேசக்கூடியதை, நான் இரண்டு வாரியாக மாற்றி ஒரு ஏட்டுச்சுவடியில் வைத்திருப்பேன் என்றால் அதற்குப் பெயர்தான் சூத்திரம். ஓர் ஆலமரத்தை விதையாக்கி வைத்திருப்பது போலத்தான் சூத்திரம். பிரம்ம சூத்திரங்கள் அந்த மாதிரி ஒரு சூத்திர வடிவில் எழுதப்பட்டது. ஒவ்வொரு இரண்டு வரியும் ஒரு பெரிய ஞானமாக விரித்தெடுக்கப்பட வேண்டியது. அதற்கான முறைதான் குருகுல முறை என்பது. ‘அதாதோ பிரம்ம ஜிக்ஞாஸா’ என்று பிரம்மசூத்திரம் ஆரம்பிக்கும். பிரம்மத்தை குறித்து அறியும் ஆர்வம் கொண்டவனே கேள் என்று ஆரம்பித்து, பிரம்மத்தைப் பற்றி வரையறைசெய்யும் சூத்திரங்களை அது கொடுக்கும். இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்ட ஒரு மூல வேதாந்த நூலாகத்தான் கீதை இருக்கமுடியும் என்று நான் முன்பே சொன்னேன். பிரம்ம சூத்திரத்தை ஒட்டியோ, அதற்கு முன்னாலோ பின்னாலோ எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் பிரம்ம சூத்திரத்திற்கு முந்தைய ஒரு நூல் கீதைக்குள் இருக்கிறது. நான் அதை நேற்றே சொன்னேன்.

பின்னால் மிகப்பெரிய கேள்விகள் எழுந்து வந்திருக்கின்றன. இந்திய மரபு உருவாக்கிய முக்கியமான நான்கு கருதுகோள்கள் என்று அறிஞர்கள் சொல்பவை; ஒன்று பிரம்மம், இன்னொன்று மாயை, மூன்றாவது ஊழ், நான்காவது தர்மம். மாயை என்றால் அறிவுமயக்கம். அது பிழை அல்ல. இல்லாதவற்றை உள்ளவை என காட்டி இந்தப்பிரபஞ்சத்தையே உருவாக்கும் பொய்த்தோற்றம். ஊழ் என்றால் பவம் என்று ஜைனர்கள் சொல்வது – ஜைன மதமே அந்த ஒரு வார்த்தைக்குள்தான் இருக்கிறது. தர்மம், மகாதர்மம் – பௌத்த மதமே அந்த ஒரு வார்த்தை மேல்தான் கட்டப்பட்டிருக்கிறது. நான்கு மாபெரும் திறப்புகள் இங்கு நடந்திருக்கின்றன. நான்கு மாபெரும் எரிமீன்கள் இங்கு வந்து விழுந்திருக்கின்றன. அந்த ஒற்றை வார்த்தைகளில் இருந்து உருவான மதங்கள் உருவாக்கிய உருவாக்கிய பெரிய தத்துவ விவாதம் இங்கே நிகழ்ந்தது. பௌத்தம் சில கேள்விகளை கேட்டது. ஜைனம் சில கேள்விகளை கேட்டது. இந்த தத்துவவிவாதம் மாபெரும் அறிஞர்கள் மத்தியில் பேசி முடிவெடுக்கப்பட்டது. அடுத்தபடியாக அதை உங்கள் வாழ்க்கையின் அனைத்து தளங்களிலும் பொருத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

அதாவது உயர்தத்துவத்தை எப்படி அன்றாடவாழ்க்கையில் பொருத்துவது. உதாரணமாக, E=mc2 என்பது உங்கள் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய பொருள்கொண்ட ஒன்றாக மாறக்கூடிய ஒரு மாற்றத்தை நான் சொல்கிறேன். அது ஐன்ஸ்டீன் சொன்ன தத்துவஞானம், உங்களுக்கு தேவையானது நடைமுறை ஞானம். நடைமுறை ஞானத்துக்குரிய அனைத்து தளங்களிலும் வேதாந்தத்த்தின் மெய்யறிதலை எப்படிக் கொண்டு சேர்க்க முடியும் என்ற கேள்வி எழுந்து வந்தபிறகு உருவான நூல் என்று கீதையை சொல்லலாம். ஏன் அது பதினெட்டு அத்தியாயங்களாக இருக்கிறது? சாங்கிய யோகத்தில் இருந்து மோட்ச ஸன்யாச யோகம் வரை இருக்கும் மொத்த வாழ்க்கைக்குமான பதினெட்டு களங்கள் அவை. அவற்றில் ரிக் வேதத்தின் சிருஷ்டிகீதம் சூத்திரம் சொல்லும் அந்த பிரம்மஞானத்தை கொண்டு சென்று சேர்க்கும் ஒரு நூல் தேவைப்பட்டது. அந்த புதிய நூலாக கீதை மாற்றப்பட்டு, பகவத்கீதை என்ற வடிவில் மகாபாரதத்தில் இணைக்கப்பட்டது.

ஆகவே அதன் சாராம்சம் என்பது பிரம்மஞானம் தான். சமையற்கட்டில் பிரம்மஞானம், உங்களுடைய தொழிலில் பிரம்மஞானம், உங்களுடைய எதிரிகளிடம் நீங்கள் செய்யும் உறவாடல்களில் பிரம்மஞானம், இவை அனைத்தையும் விட்டு வெளியே போகும் இடத்தில் பிரம்மஞானம், அதுதான் கீதை. இவ்வளவு இடத்தையும்  தழுவி விரியக்கூடிய ஒரு பிரம்மஞான நூல் தேவைப்படும்போது அதுவரையிலான வேதாந்த ஞானத்தை தொகுத்து திருப்பி எழுதப்பட்டது கீதை. சிருஷ்டி கீதத்தைப் பற்றி இங்கே சொன்னேன். அதன் மெய்யறிதல் எங்கே இருக்கிறது? அதே வரியை சிவவாக்கியரிடம் பார்க்கலாம்.

“அவ்வெனும் எழுத்தினால் அகண்டமாகி நின்றனை

உவ்வெனும் எழுத்தினால் உருத்திரிந்து வந்தனை

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அகர உகர மகரமாய் நின்றதே சிவாயமே”

சிவவாக்கியர் சொன்னதும் சிருஷ்டிகீதத்தின் மெய்ஞானதரிசனத்தைத்தானே? அவற்றுக்கிடையே தூரமே கிடையாது. ஆனால் வரலாற்றுக்காலத்தில் குறைந்தது நாலாயிரம் ஐயாயிரம் வருடங்கள் வித்தியாசம் இருக்கிறது. அந்த ஞானம் அங்கிருந்து இங்கு வரைக்கும் வந்தாலும் ஓர் இம்மிகூட மாறவில்லை. அ என்ற எழுத்து எதைச்சுட்டுகிறது என்றால் அகண்டம். அகண்டம் என்றால் பிரிவற்றதாக, இது – அது என்னும் பிளவு அற்றதாக, அறிதல் – அறிபடுபொருள் என்ற பகுப்பு அற்றதாக, நிற்பது.  உகரம் என்ற எழுத்துதான் இந்த உருவம் அனைத்தையும் எடுத்து வந்தது. மகரம் எதைக் குறிக்கிறது என்றால்; இதைப் பார்த்து பிரபஞ்சமாக நாம் மயங்கினோம் என்பதை. இவை மூன்றுமாக நிற்கும் ஒன்றுதான் சிவாயம் என்று சொல்கிறோம். அதுதான் சிவவாக்கியர் சொல். “ஆகாய வடிவான அதுவே அறியும்” என்ற சொல்தான் அது. இந்த இரண்டு வரிகளுக்கு நடுவில் இருக்கும் நீண்ட காலகட்டத்தை இணைக்கக்கூடியவைதான் கீதையும் அவ்வளவு உரை நூல்களும்.

(மேலும்)

 

முந்தைய கட்டுரைஜெகதீஷ்குமாருக்கு விருது
அடுத்த கட்டுரைஅமெரிக்கப் பள்ளியில் ஓர் உரை