கீதையை அறிதல்-6

டிசம்பர் 2015 -ல் கோவை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை

எழுதியவர் Sakthi Prakash

கீதையை அறிதல்-5

மூலநூலா?

ஆகவே, நம் முன் உள்ள முதல் கேள்வி இதுதான், கீதை என்பது ஒரு மூலநூலா? மூலநூல் அல்லது முதல் நூலை ஆங்கிலத்தில் Canon என்று சொல்வார்கள். மூலநூல் என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட மதத்தின் அல்லது ஒரு சிந்தனைப்பள்ளியின் (School of Thought) முதன்மை நூலாகவும், வழிகாட்டிநூலாகவும் இருப்பதே மூலநூல்.

அதன் இயல்புகள் என்ன ?

ன்று, அது நன்றாக வரையறை செய்யப்பட்ட நூலாக இருக்கும். (Well Defined Text ) நீங்கள் அதில் கொஞ்சத்தை அந்தப்பக்கம் எடுத்துப் போடலாம்  இந்தப் பக்கம்  நீக்கிவிடலாம் என்று எதுவுமே செய்ய முடியாது.

இரண்டு, அதற்கு வழிநூல் இருக்காது. அதற்கு முதல்நூலும் இருக்காது. அதாவது அது இன்னொரு நூலிலிருந்து எழுதப்பட்டதாக இருக்காது, அதை ஒட்டி வேறு நூல்கள் எழுதப்பட முடியாது. அதற்கு விளக்கங்களே எழுதப்படமுடியும். அதை வழிநூல்கள் விரிவாக்கலாம், மறுக்கமுடியாது.

மூன்று, அந்த மதத்தில் உள்ள அத்தனை பேராலும் கேள்விக்கு இடமின்றி அங்கீகரிக்கப்பட்ட ஓர் அதிகாரத்தன்மை அந்த நூலுக்கு இருக்கும். அந்த நூல் மறுத்துப்பேசுவதற்கு இடம் அற்றதாக இருக்கும். நம்பிக்கையால் அது நிலைநிறுத்தப்பட்டிருக்கும், ‘விசுவாசி, அப்போது நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள்என்று அந்த நூல் சொல்லும். அந்த நூலை மறுப்பதற்கான வாய்ப்பை அந்த நூலே மறுத்துவிடும். இதுதான் கடைசியான நபியின் சொல் என்று அது சொல்லும். இதுவே கடவுளின் ஒரே மகனின் சொல் என்று சொல்லும். அதுதான் மூலநூல், அல்லது Canon.

அந்த மூலநூல் எப்படி உருவாகி வருகிறது? இரண்டு வகையில் உருவாகி வரும்?

ஒன்று; மிக வலுவான அமைப்பு கொண்ட ஒரு மதமோ ஒரு சிந்தனையோதான் ஒரு மூலநூலை உருவாக்க முடியும். உங்களுக்கு தெரியும், புத்தர் இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு அஜந்தா அருகே இருக்கும் விதிஷா என்னும் ஊரில் அன்றைக்கு இருந்த பௌத்த ஞானியாகிய மகாகாசியபர் தலைமையில், அன்றைக்கு இருந்த அத்தனை பௌத்தர்களும், முப்பதாயிரம் பௌத்த பிக்ஷூக்கள் கூடி புத்தருடைய உபதேசங்களையும், புத்தருடைய வார்த்தைகளையும், புத்தருடைய வரலாறுகளையும் தொகுத்து கூடைகள் அதாவது பிடகங்கள் என்ற பெயரில் சுத்த பிடகம், விநய பிடகம் என்ற இரண்டு பிரிவுகளாக அவர்களுடைய மூலநூலை உருவாக்கினர். இனிமேல் நீங்கள் பேசினீர்களானால் இதில் விளக்கம் (Interpretation) தான் சாத்தியமே ஒழிய இன்னொரு புத்தகத்தை கொண்டு வைக்க முடியாது என்ற அறிவிப்பு அது. இப்படித்தான் மூலநூல் வரையறுக்கப்படுகிறது. அப்படி வரையறுத்து ஒரு மதம் முழுக்க அதை நிலைநிறுத்துவதற்கு உறுதியான, திட்டவட்டமான ஓர் அமைப்பு தேவை.

இரண்டு; அந்த மூலநூலின் ஆசிரியராக, அல்லது இதுதான் மூலநூல் என்று சொல்வதற்கு ஒரு வரலாற்று மானுடர் தேவை. ஒரு புத்தரோ, இயேசுவோ, நபியோ, லவாட்ஸுவோ. அவர் ஒரு மனிதராக, ஒரு ஞானியாக இருக்கவேண்டும். அவரால் தொடங்கப்பட்டதாக ஒரு மதம் இருக்க வேண்டும். அப்போதுதான் மூலநூல் உருவாகும்.

இது பொதுவான வரையறை. எப்போதுமே விதிவிலக்குகளும் உண்டு. எது மூலநூல் என்பதற்கு சில அடையாளங்கள் இருக்கின்றன. இன்றைக்கு உலகம் முழுக்க பழைய நூல்களை மீட்டெடுத்து, ஒப்பு நோக்கி, பாடபேதங்கள் பார்த்து, பிழை திருத்தி சரியான பிரதியை கொண்டுவருவதற்கு ஒரு முறைமை (Methodology) இருக்கிறது. அந்த முறைமை முழுக்க முழுக்க பைபிள் ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது. .வே.சாமிநாத ஐயர் அவர்கள் பிழை திருத்திய சரியான சங்க இலக்கியங்களையும், சீவக சிந்தாமணி போன்றவற்றையும் தமிழுக்கு கொண்டுவந்தார். அந்த முறைமையை அவர் கிறிஸ்தவ உரையாசிரியர்களிடம் இருந்துதான் ற்றுக்கொண்டார்எப்படி பாடபேதம் பார்ப்பது, பாடபேதங்களை எங்கே கொடுப்பது, புறநடை (Apocrypha) என்பதை எப்படி வரையறுப்பது, இந்த விஷயங்கள் அனைத்துமே கிறிஸ்தவ பைபிள் ஆராய்ச்சியில் இருந்து வந்தவை. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள் சரியான பைபிளை உருவாக்குவதற்கான பெரும் தவம் அங்கே நடந்திருக்கிறது. அது ஒரு பெரிய அறிவியக்கம். நாம் வணங்க வேண்டிய ஒரு அறிவியக்கம் அது. அப்படி ஒரு அறிவியக்கம் இருக்குமென்றால் அது ஒரு மூலநூலுக்காகத்தான் நடந்திருக்கும்.

குர்ரானை நீங்கள் எடுத்துப்பார்த்தீர்கள் என்றால், காட் (Khatt) என்று அவர்கள் சொல்லும் ஒரு கலை உண்டு, எழுத்துருக்கலை (Calligraphy). குரானை விதவிதமாக, அலையலையாய் ஓவியங்களாக எழுதிப் பார்ப்பது அது. அவர்களுக்கு உருவ வழிபாட்டிற்கு தடை இருக்கிறது. ஆகவே உருவங்களை வரைவதற்கு தடை உண்டு. எனவே எழுத்துக்களையே ஓவியங்களாக வரைந்து விதவிதமாக குரான்களை உருவாக்கியிருக்கிறார்கள். மானுடத்தின் மிகப்பெரிய கலைகளில் ஒன்று அது. பல்லாயிரக்கணக்கான குரான் நூல்கள் இன்றைக்கு கிடைக்கின்றன. விக்ரஹ ஆராதனை தடை செய்யப்பட்ட ஒரு மதத்தில், ஒரு நூலே விக்ரஹமாக ஆவதைத்தான் நாம் பார்க்கிறோம். அதனால்தான் அதில் ஒரு தாளை ஒருவன் மிதித்து விட்டால் அவர்களுக்கு கோபம் வருகிறது. எவனாவது அதை எரித்து விட்டானென்றால் அவர்கள் கலவரத்தில் இறங்குகிறார்கள். ஏனென்றால் அது ஒரு விக்ரஹம். ஒரு நூல் அல்ல, அதற்கும் மேல். தன்னளவிலேயே அது புனிதமானது. அதன் உள்ளடக்கம் மட்டுமல்ல, அதுவே புனிதமானது.

யோசித்துப் பாருங்கள், இந்து மதத்தில் அப்படியில்லை. இந்து மதத்தில் சரியான மகாபாரதத்தை எழுதுவதற்கான முயற்சி என்பது 18 ஆம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் மகாபாரதத்தை தொகுக்க ஆரம்பித்த பிறகுதான் ஆரம்பிக்கிறது. சரியான கீதையை உருவாக்குவதற்கான முயற்சிகள், கீதையின் பிரதிசார்ந்த ஆய்வுகள் (Textual Studies) எல்லாமே இந்தியாவை ஆராய்ச்சி செய்த ஐரோப்பியர்களால் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. நம்மால் அல்ல. இன்னும்கூட நாம் கீதையின் ‘சரியான பிரதி’ என்ற ஆய்வில் பெரிதாக ஈடுபடவில்லை. விளக்கம்தான் அளித்துக்கொண்டிருக்கிறோம்.

கீதைக்காக  ஏட்டுச்சுவடி பிரதிகள் இருக்கின்றன. அதில் சில சமயங்களில் மகாபாரதப் படங்கள் இருக்கின்றன. அலங்காரமாக சில சுவடிகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் அதை  ஒரு புத்தகமாக, ஒரு ஓவியமாக, ஒரு சிற்பமாக எல்லாம் மாற்றக்கூடிய முயற்சி நமக்கு கிடையாது. ஏனென்றால் நம்மை பொறுத்தவரை அது மூலநூல் கிடையாது. ஒரு பொது மதநூல் கிடையாது. அது மூலநூல் அல்ல. அதை மூலநூலாக நாம் இன்று பார்ப்பது சரியா, தவறா என்ற விவாதத்திற்குள் இப்போது போக வேண்டியதில்லை. ஆனால் அது மூலநூல் இல்லை என்பதில் இருந்து ஆரம்பிக்கவேண்டியிருக்கிறது. நேற்றைக்கு நான் சொன்னேன். என்னுடையது பக்தியின் அறிதல்முறை அல்ல. ஞான மார்க்கத்தின் அறிதல் முறையைத்தான் இந்த மேடையில் நான் முன்வைக்கிறேன். ஞான மார்க்கத்தை முன்வைக்கும் ஒருவனை பொறுத்தவரை இந்தப்புரிதல் மிக முக்கியமானது. ஒரு பக்தன் கீதையை வழிபடுநூலாக நினைக்கலாம். ஆனால் அறிவுப்பாதையை எடுத்துக்கொண்டவன் அதை செய்ய மாட்டான்.

இந்து மரபில் மூலநூல் உண்டா?

இந்து மதம் என்று இன்றைக்கு சொல்லப்படுவது என்ன? இன்றைக்கு தமிழ்நாட்டில் அரைகுறைப் படிப்பாளிகளிடம் (அவர்கள் தான் தமிழ்நாட்டின் எண்ணிக்கையில் பெரும்பகுதி, அவர்கள் மட்டும் ஒரு கட்சி ஆரம்பித்தால் நம்முடைய ஆளும்கட்சி அவர்கள்தான்) பேசினீர்களென்றால்; இந்து மதம் என்பது ஒன்று இல்லை, வைணவம் இருக்கிறதுசைவம் இருக்கிறது, சாக்தம் இருக்கிறது, இந்துமதம் என ஒன்று இருந்ததில்லை, ஆகவே இப்போதும் இந்துமதம் என்பதே இல்லை என்று சொல்வார்கள்.

இந்துமரபில் மதம் என்கிற வாரத்தைக்கான அர்த்தம் வேறு. உறுதியான தரப்பு என்பதே மதம் என்னும் சொல்லின் பொருள். இந்து மதம் என நாம் இன்று சொல்லும் அமைப்புக்குள் பல மதங்கள் உள்ளன. ஆனால் ஒரு மார்க்கமாக, ஒரு தர்மமாக, இது குறைந்தது மூவாயிரம் வருடங்களாக இங்கே இருந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஒரு ஒரு பாடத்திட்டம் (Curriculam ) இருக்கிறது. சாதாரணமாக, படிக்கும் வழக்கம்கொண்ட எல்லோருக்கும் தெரிந்ததுதான். வேதங்கள், உபநிடதங்கள், வேதாந்தங்கள் என்று அதன் அடிப்படை ஆரம்பிக்கும். அதன்பிறகு பிரஸ்தானத்திரயம் என்று சொல்லப்படும் நூல்கள். முத்தத்துவம் என்று தமிழில் சொல்லலாம். உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை. அதன்பிறகு ஆறுமதங்கள்சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணபத்யம். மேலும் ஆறுதரிசனங்கள்சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் இவ்வளவுதான் இந்துமதம்.

இந்துமதம் என்றால் என்ன, வரையறுத்து சொல்லமுடியுமா? என்று கேட்டால், ஒவ்வொரு இந்துவும் சொல்ல வேண்டிய முதல் பதில் இதுதான்இந்த வரையறை நானோ, நீங்களோ உருவாக்கியது அல்ல. இந்து மதம் என்பது வெள்ளைக்காரர்கள் உங்களுக்கு உருவாக்கி கொடுத்தது என்று சொல்வார்கள். அப்படியல்ல; வெள்ளைக்காரன் ஒழுங்காக சுட்டுத்தின்னத் தெரியாதவனாக இருந்த காலகட்டத்திலேயே இந்த பாடத்திட்டம் உருவாகிவிட்டது.

இந்த இந்துமத அமைப்பில் எங்காவது மூலநூல் என்ற வார்த்தை இருக்கிறதா? முதல்நூல் என்ற கருதுகோள் இந்த மதங்களில் ஏதாவது பகுதிகளில் இருக்கிறதா?

ஆறு தரிசனங்களை எடுத்து பார்ப்போம். ஆறு தரிசனங்களில் சாங்கிய தரிசனத்தின் முதல் குரு என்று கருதப்படுபவர் கபிலர். அவரால் எழுதப்பட்ட நூல் என்று ஒன்று இன்றைக்கு இருக்கிறது. சாங்கிய சூத்திரங்கள். அது அவரால் எழுதப்பட்டது அல்ல என்று சொல்கிறார்கள், சாங்கியகாரிகை எனும் நூல் அதன்பிறகு வருகிறது. ஈஸ்வரகிருஷ்ணர் எழுதியது. அதன்பிறகு பல நூல்கள் இருக்கின்றனகடலங்குடி நடேச சாஸ்திரி அவர்கள் கும்பகோணத்தை சேர்ந்தவர். சாங்கிய தரிசனநூலுக்கு உரை எழுதியிருக்கிறார். தமிழில் இன்று கிடைக்கிறது.நியாய சாஸ்திரத்திற்கு கௌதமரின் மூலநூல் இருக்கிறது. நியாய சூத்திரங்கள். யோகத்திற்கு பதஞ்சலி யோகசூத்திரம்  இருக்கிறது. வைசேஷிகத்திற்கு வைசேஷிக சூத்திரங்கள் இருக்கின்றன. பூர்வ மீமாம்சத்திற்கு ஜைமினி எழுதிய மீமாம்ச சூத்திரங்கள் இருக்கின்றன. உத்தர மீமாம்சம் அல்லது வேதாந்தத்திற்கு பாதராயணரின் பிரம்ம சூத்திரம் இருக்கிறது. இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு நூல் இருக்கிறது

ஆனால் இவை எவையுமே மூல நூல்கள் கிடையாது. இந்த நூல்கள் அனைத்திற்குமான பொது அம்சம் சில உண்டு. ஒன்று, இந்த நூல்கள் என்ன சொல்லுமென்றால் இதற்கு முன்னால் இருந்த நூல்களை உத்தேசித்து  ‘என்று சொல்லப்படுகின்றது’ என்று  வரையறை செய்யும். உங்களுக்குத் தெரியும், இதெல்லாம் புதிய விஷயமில்லை. தொல்காப்பிய சூத்திரமேஎன்பஎன்றுதான் உள்ளது. ஏனென்றால் அது முதல்நூல் கிடையாது. இலக்கண நூல்களின் வரிசையில் வந்த முதிர்ந்த நூல் அது. இந்த  சூத்திர நூல்கள் எல்லாமே, “என்று சொல்லப்படுவதை நான் இப்படிச் சொல்கிறேன்என்றுதான் சொல்கின்றன. ஆகவே அவை மூலநூல் அல்ல.

இரண்டாவதாக; இந்த அத்தனை நூல்களுக்குமே வழிநூல்கள் தொடர்ந்து வந்திருக்கின்றன. தொடர்ச்சியாக அடுத்தகட்ட நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை மறுத்தும் விளக்கியும் விரிவாக்கியும் நிறைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன. ஆகவே இந்த முதல்நூல் அந்தஸ்து அந்த நூல்களுக்கு கிடையாது. எந்தவொரு நூலையும் இம்மரபுகள் தங்கள் முதல்நூல் என்று முன்வைப்பதில்லை.

அப்படியென்றால் இந்து மதத்திற்கு என்று ஏதாவது முதல்நூல் உண்டா?  இந்து மதத்திற்கான முதல்நூல்கள் என்று சில தரப்புகளால் சொல்லப்படுபவை நான்கு வேதங்கள். இன்னும் விமர்சன ரீதியாக பார்த்தால், முதல் மூன்று வேதங்கள் மட்டுமே இந்து மதத்தின் முதல்நூல்களாக கருதப்படுகின்றன. ஆனால் எல்லோருக்கும் அல்ல. மொத்த இந்து மதத்தையும் வைதிகம், அவைதிகம் என்று இரண்டாக பிரிப்பார்கள். வேதத்தை முதல் நூலாக ஏற்றுக்கொண்ட மரபை வைதிகம் என்றும், ஏற்றுக்கொள்ளாத மரபை அவைதிகம் என்றும் குறிப்புடுவார்கள். அவைதிக மரபு வலுவாக இப்போது நாம் பேசிக்கொண்டிருக்கின்ற இந்தக்காலம் வரைக்கும் இந்து மதத்திற்குள் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆறு தரிசனங்களில் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், ஆகிய நான்குக்கும் வேதம் முதல்நூல் அல்ல. சாக்தம், சைவம் ஆகிய மதங்களின் பல பிரிவுகளுக்கு வேதம் முதல்நூல் கிடையாது. வேதம் முதல்நூல் அல்ல என்பதனால் அவை இந்துமதம் அல்ல என்று எவரும் சொல்லவும் முடியாது.

மூன்றாவதாக; இதை முதல்நூலாக ஏற்றுக்கொண்ட மரபுகள்கூட, ஒரு Canon ஆக, மறுக்கமுடியாத மூலநூலாக ஏற்றுக்கொள்ளவில்லைநமக்கு அறிதலுக்கு மூன்று முறைகள் இருக்கின்றன. பிரத்யட்சம், அனுமானம், ஸ்ருதி. தமிழில் சொல்வதானால் நேர்க்காட்சி, ஊகம், முன்னோர் சொல். சில தரப்பினர் அந்த முன்னோர் சொல்லாக வேதத்தை வைத்துக்கொள்வார்கள். ஆறு தரிசனங்களில் வேதத்தை ஸ்ருதியாக ஏற்றுக்கொண்டவை இரண்டுதான், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம். பூர்வ மீமாம்சம் மட்டும்தான் வேதத்தை மூலநூல் ஆக, Canon ஆக ஏற்றுக்கொண்டது. மறுக்க முடியாதது என்று வேதத்தை ஏற்றுக்கொண்ட ஒரே இந்திய தரிசனம் என்பது பூர்வ மீமாம்சம் மட்டும்தான். அவர்களுக்கு அது ஔபௌருஷேயம், மனிதனால் சொல்லப்பட்டது அல்ல. ககனவெளியில் இருந்தது, ரிஷிகளால் கண்டெடுக்கப்பட்டது. ஆகவே அதை எந்த மனிதனும் மறுத்துப்பேசவோ மாற்றிப்பேசவோ முடியாது. வேதத்தை தெய்வச்சொல்லாக நம்புபவர்கள் பூர்வ மீமாம்சகர்கள். ஜைமினியின் வழி வந்தவர்கள். இன்றைக்கு இருக்கும் வைதிக மரபில் பிராமணர்களில் கணிசமானவர்கள் இந்த மரபை சேர்ந்தவர்கள்தான். வேத வேள்விகளை செய்பவர்கள், வேள்விகளின் பயன்களை பற்றி பேசக்கூடியவர்கள் அனைவரும் பூர்வமீமாமசகர்கள்தான்.

உத்தர மீமாம்சம் என்பது வேதாந்தம். பாதராயணரின் வேதாந்த சூத்திரங்களின் வழி வந்தது. கீதை அந்த மரபைச் சேர்ந்த நூல்தான். அந்த நூலுக்கு வேதம் என்பது ஒரு முன்னோர் சொல் அல்லது முதல் Reference நூல் தானே ஒழிய, மறுக்கமுடியாத நூல் அல்ல. உதாரணமாக, கீதை ஆரம்பிப்பதேமூன்று குணங்களை வலியுறுத்தும் வேதங்களை நீ வேருடன் பிடுங்கி வீசுவாயாக’ என்று அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் சொல்லும் வரியில் இருந்துதான். ஸாங்கிய யோகத்தில் 42 –ல் இருந்து 46 வரைக்குமான வரிகள் அவை. வேதங்களை நிராகரிப்பதற்கான அறிவுரைகள். அதாவது வேதத்தை அப்படியே வேதாந்தம் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு விமரிசன ரீதியான அணுகுமுறையே உள்ளது.

இதைப்பற்றி விரிவான விவாதங்கள் இருக்கின்றன. வேதாந்த நோக்கில் வேதம் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கிறது. உள்ளடக்கத்தின் அடிப்படையில் கர்ம காண்டம், ஞான காண்டம் என்று பிரிப்பார்கள். வேள்விகளை செய்வதும், சடங்குகளை செய்வதும், அவற்றின் பயன்களை எதிர்நோக்குவதற்குமான ஒரு வழியை கர்ம காண்டம் என்றும், ஞானத்தை மட்டுமே வழியாகக் கொண்டு பிரம்மத்தை அடைவதற்கான வழிமுறைகளை பேசுவதை ஞான காண்டம் என்றும் சொல்கிறார்கள். ஞானகாண்டத்தின் நீட்சி மட்டும்தான் கீதை. கர்ம காண்டத்தை முழுமையாக நிராகரிப்பது கீதை.ஆகவே கீதையின் வழிமுறை என்பது வேதங்களை விமர்சன ரீதியாக ஏற்றுக்கொண்டு, மறுத்து முன்செல்வதே ஒழிய, முதல்நூலாக வழிபட்டு முன்வைப்பது அல்ல. ஆக இதற்கு முன்னால் இருந்ததை விமர்சன ரீதியாக பார் என்று சொல்லி தொடங்குகிறது கீதை. சொல்லிமுடித்து, நான் சொல்கிறேன் என்று நீ எடுத்துக்கொள்ள வேண்டாம், இதையும் நீ விமர்சன ரீதியாக பார்த்து உனக்குப் பிடித்திருந்தால் ஏற்றுக்கொள் என்று கிருஷ்ணன் அர்ஜீனனிடம் சொல்கிறார். ஆக இதுவும் மூலநூல் கிடையாது. விசுவாசி, நீயும் உன் வீட்டாரும் ரட்சிக்கப்படுவீர்கள் என்று கிருஷ்ணன் சொல்லவில்லை, யோசித்துப்பார் என்று சொல்கிறார்.

இதற்கு பெரிய வித்தியாசம் இருக்கிறது நண்பர்களே! கிருஷ்ணன் ஒரு இடையன் ஆனால் நல்ல மேய்ப்பன் கிடையாது. உங்களை மந்தைகளாக வழிநடத்திச் செல்வதற்காக அவர் வரவில்லை. உங்களுடைய அறிவை நோக்கி பேசும் ஒரு மகா குருநாதராகத்தான் அவரை நாம் இந்நூலில் பார்க்கிறோம். ஒரு நீண்ட மரபில் கீதையை நாம் எங்கே கொண்டு வைப்போம் என்பதற்கான இடத்தை நான் சொல்கிறேன். கீதை ஒரு மூலநூலாக, ஒரு Canon ஆக தன்னை முன்வைக்கவில்லை. அது ஒரு பாடநூல் என்று சொல்லலாம், இது ரொம்ப முக்கியமான வரி. இந்த உரையில் நான் அழுத்திச் சொல்லக்கூடிய விஷயம், கீதை ஒரு முதல் நூல் அல்ல, வழிபாட்டு நூல் அல்ல, அது ஒரு பாடநூல்.

கீதையைக் கற்கும் முறை

கீதை எப்படி கற்கப்பட்டது என்பதற்கு ஒரு மரபு இருக்கிறது. ஏற்கெனவே சொன்னேன், இது நீண்டகாலம் Popular text ஆக எல்லோருக்கும் தெரிந்த நூலாக இல்லை. நம்முடைய தாத்தாக்கள் அதைக் கேள்விப்பட்டதே கிடையாது. ஆனால் அது இல்லாமல் இருந்ததா என்றால், இல்லை. நம்மாழ்வார் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய மரபில் பேசிய முக்கியமான அறிஞர்கள் அத்தனைபேரும் அதை அறிந்திருக்கிறார்கள். நீங்கள் ஞானத்தின் வழியை தேர்ந்தெடுத்து ஒரு குருநாதரிடம் சென்றீர்களென்றால் அந்த குருநாதர் பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் இரண்டையும் சார்ந்தவராக இருந்தாரென்றால், உங்களுக்கு கீதை கண்டிப்பாக சொல்லப்படும். வேதாந்த மரபின் முக்கியமான பாடநூலாக அது கருதப்பட்டது.

அதைப் படிப்பதற்கு ஒரு முறைமை இருக்கிறது. அந்த முறைமையை மனனம், சுவாத்யாயம், தியானம் என்று அந்தக்காலத்தில் பிரித்தார்கள். முதலில் மனப்பாடம். மொத்த நூலையும் மனனம் செய்வதென்பது ஒரு தொடக்கம். சுவாத்யாயம் என்பது அடுத்த கட்டம். சுவாத்யாயம் என்பது ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொண்டு தான் மேலும் கற்றுக்கொள்வது. ஆசிரியர் உங்களுக்கு ஒரு ரயிலுக்கு கைகாட்டிப்பலகை மாதிரிதான் செயல்பட முடியும். ரயில்தான் போக வேண்டும், கைகாட்டிப்பலகை அங்கு வராது. ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு நீங்களே முழுமையாக அனைத்து கோணங்களிலும் அதை அறிவதற்குப் பெயர்தான் சுவாத்யாயம்.

அதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.

ஒன்று, ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணிப் பயில்வது. ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன அர்த்தம் என்று முழுமையாக கற்றுக்கொள்வது.

இரண்டாவதாக, அந்த வார்த்தையின் இணைவு முறைகளை கற்றுக்கொள்வது. அதற்கு என்ன செய்வார்களென்றால் அந்த வார்த்தைக்கு பதிலாக வேறு வார்த்தையை போட்டுப் பார்ப்பார்கள். அந்த வேறு வார்த்தையை போட்டால், அந்த அர்த்தம் சிறிதளவேனும் மாறுபடுமென்றால் அந்நூலில் உள்ள அந்த குறிப்பிட்ட வார்த்தைக்கு விசேஷமான அர்த்தம் உண்டு. நாம் சாதாரணமாக எடுக்கும் நேர் அர்த்தம் அல்ல. திருக்குறளையும் இப்படித்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் 

மூன்றாவதாக, அதனுடைய வைப்பு முறையை பார்ப்பது. திருக்குறளை எடுத்துக்கொண்டால், “எண்ணென்ப ஏனை எழுத்தென்பஎன்று வருகிறது. ஏன் எழுத்து இரண்டாவதாக வருகிறது என்பது மிக முக்கியமானது. அதுதான் வைப்புமுறை .

இந்த மூன்று கோணங்களிலும் முழுமையாக சுவாத்யாய முறைப்படி அதை புரிந்துகொண்ட பிறகுதான் தியானம் என்பது அமையும். நான் சம்பந்தப்பட்டிருந்த நித்யாவின் குருகுலத்தில் ஒருவருக்கு கீதையை நித்யா சொன்ன அனுபவம் எனக்கு இருக்கிறது. அதிகாலை 5.30 மணிக்கு ஊட்டி குளிரில் குளித்துவிட்டு நித்யாவை பார்க்க வேண்டும். அரைமணி நேரம் ஒரே ஒரு சுலோகத்தை பற்றி அவருக்கு மட்டும் வகுப்பெடுப்பார். அதன்பிறகு அந்த முழுநாளும் யாரிடமும் பேசக்கூடாது, புத்தகம் படிக்கக்கூடாது, ரேடியோ கேட்கக்கூடாது, செய்திகள் எதையும் கேட்கக்கூடாது, பாட்டு கேட்கக்கூடாது, வேலைகள் செய்யலாம், படுத்துக்கொள்ளலாம்.

மொத்த கீதையையும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக அவ்வாறாக அவர் முடிக்கும் போது, அந்த நூல் எங்கு சென்றிருக்கும்? அங்கே போக வேண்டும் அது. நிலத்தடி நீர் எங்கேயிருக்கிறதோ அங்கே போக வேண்டும். மழைத்தண்ணீர் மாதிரி பெய்யக்கூடாது. பல்லாயிரம் லிட்டர் மழைத்தண்ணீர் பெய்யும்போது ஒரு லிட்டர் கூட நிலத்தடியில் போகாது. மொத்தமாகவே நிலத்துக்குள் நீர் போக வேண்டும், அதற்குப் பெயர்தான் தியானம். ஒரு தருணத்தில் தன்னிச்சையாக ஒரு கவிதைவரி உங்களுக்கு நினைவில் வருகிறதல்லவா? அந்த வரி மட்டும்தான் கவிதையாக உங்களுக்குள் சென்றுள்ளது. ஓர் அனுபவத்தை பார்க்கும்போது ஒரு திருக்குறள் உங்கள் நினைவுக்கு வந்தால் அந்த திருக்குறளை மட்டும்தான் தியானம் மூலம் தொட்டிருக்கிறீர்கள் என்று பொருள். புத்தகத்தை பார்த்து திருக்குறளை நீங்கள் யோசித்துக்கொண்டீர்களென்றால் அது உங்களுக்குள் இல்லை.

இப்படி அறிய வேண்டிய ஒரு நூலாக பல்லாயிரம் வருடங்கள் கீதை இருந்திருக்கிறது. இதுதான் கீதையின் கல்விமுறை. அது ஒரு பாடநூலாக இருந்திருக்கிறதே ஒழிய, ஒரு பிரபலமான மூலநூலாக இருந்தது கிடையாது.

ஏன் இத்தனை உரைகள்?

கீதை வேதாந்த மரபின் முந்தைய நூல்களின் கடைசிக்கட்டத்தில் வந்த ஒரு நூல். அதன்பிறகு பல நூல்களை இது உருவாக்கியிருக்கிறது. இந்திய மரபில் இதற்கு என்ன இடம் என்று கேட்டால் முக்கியமாக சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று பேர் எழுதிய உரைகளை குறிப்பிட்டுச் சொல்வார்கள். எட்டாம் நூற்றாண்டில் சங்கரரும், பன் னிரெண்டாம் நூற்றாண்டில் ராமானுஜரும், பதினான்காம் நூற்றாண்டில் மத்வரும் இதற்கு உரை எழுதினார்கள். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் சார்ந்து எழுதப்பட்ட உரைகள் அவை. இந்த மூன்று உரைகளையும் ஒரே புத்தகமாக நீங்கள் வாங்கிப் படிக்கலாம். ஸ்ரீதரன் என்பவர் மொழிபெயர்த்து நர்மதா பதிப்பகம் வெளியீடாக தமிழகத்தில் கிடைக்கிறதுஇது ஒரு முக்கியமான உரைத்தொகுப்பு.

அதன்பிறகு பதினான்காம் நூற்றாண்டிலிருந்து நிம்பார்க்கர், வல்லபர் என பலரின் விளக்கங்கள் இருக்கின்றன. அதன்பிறகு இந்தியாவின் விடுதலை வேள்வி தொடங்கும் காலத்தில், இந்திய தேசியம் உருவான காலத்தில் மூன்று முக்கியமான உரைகள் இருக்கின்றன. ஒன்று, பால கங்காதர திலகர் எழுதியகீதா ரகசியம்என்ற உரை; இன்னொன்று, அன்னிபெசன்ட் பகவான்தாஸ் உடன் சேர்ந்து எழுதிய கீதை உரை; மூன்றாவதாக டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய உரை. இதைத்தவிர காந்தியின் கீதை விளக்கங்கள் ‘அனாசக்தி யோகம்’ என தொகுக்கப்பட்டுள்ளன. வினோபா பாவேயின் கீதை விளக்கங்கள் உள்ளன.

இவ்வளவு உரைகள் ஏன் இவ்வளவு இருக்கின்றன? அதை யோசித்துப் பாருங்கள். இந்தக் கேள்வியை அடுத்ததாக கேளுங்கள். பைபிளுக்கு எத்தனை உரைகள் இருக்கின்றன? குரானுக்கு எத்தனை உரைகள் இருக்கின்றன? ஆனால் கீதைக்கு மட்டும் ஏன் தலைமுறை தலைமுறையாக இவ்வளவு உரைகள் இருக்கின்றன? இந்த கேள்வியைத்தான் நம்முடைய மரபான அறிஞர்கள் அல்லாதவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். நான் மிகவும் மதிக்கும் மார்க்ஸிய அறிஞராகிய D. D. கோசாம்பி அவர்கள் கீதையை பற்றி சொல்லும்போது, ’மகத்தான இலக்கிய திருட்டு’ என்று சொல்கிறார்.

ஏனென்றால் அவர்கள் மேலைக்கல்வி கற்று, அந்த வழியாக இந்திய மதத்தை புரிந்துகொள்ள முற்பட்டார்கள். மேலைக்கல்வி கற்று வரும்போது, அங்கேயிருந்து பார்க்கையில் கீதை ஒரு மூலநூல் என்கிற புரிதலுக்கு வருகிறார்கள். இது ஒரு மூலநூல் என்ற எண்ணத்தோடு விவாதிக்க வருகிறார்கள். அந்த நூல் தொடர்ந்து மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்பதை பார்க்கிறார்கள். முக்கியமான அறிஞர்களாகிய கீத் (Arthur Berriedale Keith ) கார்பே (Richard Karl von Garbe) போன்றவர்கள் இது வெவ்வேறு காலகட்டங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது என்று உறுதியாக சொல்கிறார்கள். ஒரு மூலநூல் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஒரு மோசடி என்று இவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு மூலநூல் தெளிவாக வரையறை செய்யப்படாமல் இருப்பதால் அதை ஒரு சூழ்ச்சி என்று விளக்குகிறார்கள். ஒரு மூலநூலில் வேறொரு நூலில் உள்ள விஷயங்கள் உள்ளே வந்திருக்கிறதென்றால், அது இரு இலக்கியத் திருட்டு என்று வரையறை செய்கிறார்கள்.  கீதை ஒரு மூலநூல் கிடையாது, மோசடியாக உருவாக்கப்பட்ட ஒரு மூலநூல், அதன் ஆசிரியர் கிருஷ்ணன் அல்ல, அது அவர்  மேல் போடப்பட்ட ஒரு நூல் என்ற வகையான இன்றைக்கு இருக்கும் பிரபலமான வம்புகளை இந்த பேரறிஞர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள்.

ஏனென்றால் இந்திய முறையில் ஒரு நூல் எப்படி கற்கப்படுகிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய முறையில் ஒரு நூல் என்பது ஒருபோதும் மாற்றமற்ற நூலாக இருக்காது. இது ஒரு முக்கியமான கருத்துரு. குரான் அல்லது பைபிளை படிப்பவர்கள் மிகச்சரியாக அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வது மட்டும்தான் முக்கியம். கீதையை தெரிந்து கொள்வது அப்படியல்ல. கீதையை நீங்கள் எப்படி உங்களுக்கு விளக்கிக்கொள்கிறீர்கள் என்பது முக்கியமானது.

நேற்று நண்பர் கிருஷ்ணனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு விஷயத்தை சொன்னார். சட்டத்திலேயே இரண்டு வகையான புரிதல்கள் இருக்கின்றன. சட்டம் சம்பந்தமான விஷயங்களை என்ன அதில் சொல்லப்பட்டிருக்கிறது, அதை சொன்னவன் என்ன உத்தேசித்திருக்கிறான் என்பது மட்டும்தான் புரிந்து கொள்ள வேண்டும், அதை எந்த வகையிலும் விளக்கிக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. ஆனால் அறவியல், அதாவது Ethics சம்பந்தமான விஷயங்கள் வரும்போது உன்னுடைய கற்பனையும் கருணையும் கலந்து நீ புரிந்து கொள்வதற்கான பொறுப்பு உனக்கு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. நான் முதலில் சொன்ன நூல்கள் எல்லாமே சட்டம் என்ற வகைகளை சேர்ந்தவை. அவற்றை மாற்ற முடியாது. ஆனால் கீதை அப்படிக் கிடையாது. இது தியான நூல், ஞான நூல். உங்களுடைய கற்பனைக்கும் விரிவாக்கத்திற்கும் இது காத்திருக்கிறது. ஆகவேதான் இந்த ஒவ்வொரு குருநாதர்களும் அதை மேம்படுத்துகிறார்கள்.

ஒரு சாமானிய வாசகன், சங்கரர், இராமானுஜர், மத்வர் மூன்று பேருடைய உரையை எடுத்துப்பார்த்தால்; என்ன, இவ்வளவு வேறுபாடுகள் இருக்கிறதே என்று ஆச்சரியப்படுவான். ஆனால் இந்த வேறுபாடுகள் தான் அதன் அழகு. அந்த வேறுபாடுகளை உருவாக்குவதுதான் அதனுடைய மகத்துவம். அந்த வேறுபாடுகள் வழியாகத்தான் அது இத்தனை நூற்றாண்டுகளிலும் இந்த நாட்டின் ஆன்மாவிடம் பேசிக்கொண்டிருக்கிறது. நான் வலியுறுத்த விரும்பும் கருத்து இதுதான்.

ஆகவே மெய்யான அறிஞர்கள், இந்த நூலை எடுத்துவைத்து ’கீதையில் கிருஷ்ணன் என்ன சொல்கிறார் தெரியுமா?’ என்று சொல்லமாட்டார்கள். இதன் சாராம்சம் என்பது இந்த நூற்றாண்டில், இப்போது எப்படி பொருள்படுகிறது என்று ஆரம்பிப்பார்கள். ஆகவேதான் சங்கரர் எழுதிய பிறகு மத்வர் எழுத வேண்டியிருக்கிறது, இராமானுஜர் எழுத வேண்டியிருக்கிறது. அவர்கள் மூன்றுபேரும் எழுதிய பிறகு, நிம்பார்கர் எழுத வேண்டியிருக்கிறது. அவர்கள் அத்தனை பேரும் எழுதிய பிறகு, மறுபடியும் திலகர் எழுத வேண்டியிருக்கிறது. இந்தனை பேரும் எழுதிய பிறகு, வினோபாவே இன்னொரு உரை எழுத வேண்டியிருக்கிறது. இன்னும் எழுதப்படும். இன்னும் ஒரு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஏதோவொரு கண்ணாடிக்கூண்டில் இருந்து அன்றொரு அறிஞன் அதற்கொரு உரை எழுதிக்கொண்டிருப்பான். அன்றைக்கு அது வெறுவகையில் பொருள்கொள்ளப்படும்.

ஏன் நுண்வாசிப்பு தேவை?

கீதைக்கு அத்தகைய பலமுனை வாசிப்புகள் ஏன் என்பது முக்கியமானவையாக உள்ளன? உலகியல் சார்ந்த, அன்றாட வாழ்க்கை சார்ந்த, இங்கு எப்படி வாழ்க்கை நடக்கிறது என்று சொல்லும் ஒரு நூலை, இங்கு வைத்தே பொருள்கொள்ள முடியும். அதற்கு வேறு தெளிவான ஒரு தளம் இருக்கிறது. ஆனால் கீதை அப்படியல்ல. அது மிக நுட்பமானது; அது நுண்ணுணர்வால், தியானத்தால் அறியவேண்டிய ஒரு நூல். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்ககும் இந்த மகாஞானி   தன்னுடைய உள்ளுணர்வின் உச்சத்தில் நின்று சொன்ன ஒரு நூலை, நம்முடைய வீட்டில் கொல்லைப்பக்கத்திலேயோ, வேறு எங்காவதோ வைத்து அவ்வளவு எளிதாக பொருள்கொள்ள முடியாது. முப்பத்தைந்து ரூபாய்க்கு கிடைக்கிறதென்பதால், நீங்கள் வீட்டில் வைத்து படித்து அதை முழுதாக புரிந்துகொள்ள முடியாது. அவன் சென்ற உச்சம் வரைக்கும் செல்வதற்கான ஒரு பெரிய சவால் உங்களுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவேதான் சொல்வார்கள், இன்று கீதை என்பது ஒரு நூல் அல்ல. கீதை என்பது குறைந்தது ஐநூறுஅறுநூறு நூல்களின் ஒரு பெரும் தொகுப்பு. ஒரு நூலகம். ஒரு அறிவுத்தளம். ஓர் அறிவுத்துறை. அதன் உரைகளும் விளக்கங்களும் எல்லாமே கீதைதான். இத்தனை நூல்களுடன் சேர்ந்தேதான் அது திகழ்கிறது. ஒருபோதும் அது தனியாக வருவதில்லை. அது அரசன். முரசறைபவனும், மங்கலப் பொருட்களை ஏந்திக்கொண்டவர்களும் முன்னால் போக, பணியாளர்களும் தொண்டர்களும் பின்னால் வரத்தான் அது எழுந்தருளும். எல்லாவற்றையும் சேர்த்துதான் நீங்கள் அதைப் பார்க்க முடியும். ஒற்றை ஆடைகட்டி உங்கள் கூடத்தில் வந்து உட்கார்ந்திருக்காது. இதை அறிவதற்கான ஒரு மனநிலை இல்லாதவர்களால்தான், ’இது வெவ்வேறு வகையில் மாற்றப்பட்டிருக்கிறது, இது ஒரு இலக்கியத்திருட்டுஎன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

முக்கியமான இன்னொரு விஷயம் இருக்கிறது. கருத்துக்களை உள்வாங்கி தன்வயமாக்கிக்கொள்ளுதல். (Adaptation) வேறு நூல்களில் உள்ள விஷயங்களை எடுத்துக்கொண்டு பேசுவதென்பது இந்திய மரபுக்கு ஒரு பிழையான விஷயம் கிடையாது. நண்பர் மரபின்மைந்தன் முத்தையா இங்கே இருக்கிறார். கம்பராமாயணத்தை எடுத்துக்கொண்டால் அதில் எவ்வளவு நம்மாழ்வாருடைய பாடல்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்று அவரால் சொல்ல முடியும். அதற்கெல்லாம் மூலத்துக்கு Credit கொடுக்க வேண்டிய அவசியம் செவ்வியலில் கிடையாது. ஏனென்றால் அது ஒரே அறிவுப்பரப்பு தான். இதில் எழுதுபவன் முக்கியமே கிடையாது. கம்பன் வேறு, நம்மாழ்வார் வேறு கிடையாது. ஒரே அறிவுத்தளம், வெவ்வேறு மனிதர்கள் வழியாக ஊடுருவிப் போகிறது. ஒரே நதி வெவ்வேறு படித்துறைகள் வழியாகப் போவது போல. ஒவ்வொரு படித்துறைக்கும், நதிக்கு ஒரு பெயரை போடவேண்டிய அவசியம் இல்லை.

ஆகவே ஒரு ஞானம் வெவ்வேறு நூல்கள் வழியாக கடந்து போவதை நாம் பார்க்கலாம். ஆகவே இதை எடுத்து வைத்துக்கொண்டு இந்த நூலின் வரி, அந்த நூலிலே இருக்கிறது, ஆகவே இது இலக்கியத்திருட்டு என்று சொல்வது சரியான பார்வை அல்ல. இந்திய நூல்கல்வி முறையில் இப்படித்தான் ஒரு படைப்பு முன்னெடுத்து செல்லப்படுகிறது. இதை ஐம்பது அறுபது வருடம் முன்னால் இருந்த ஐரோப்பிய பாணி அறிஞர்களுக்கு சொல்லிப் புரியவைப்பது கஷ்டம். ஏனென்றால் அப்பொழுது அவர்கள் அந்த மூலநூல்களை படிக்க்கும் கிறிஸ்தவ சிந்தனைமரபில் இருந்து உருவாகி வந்திருக்கிறார்கள். இன்றைக்குள்ள அறிஞர்களிடம் மிகஎளிதாக இதை சொல்ல முடியும். ஏனென்றால் இன்றைக்கு அவர்களும் இங்கே வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

நடராஜ குருவின் ஆசிரியரும், மாபெரும் ஜெர்மானிய தத்துவ ஞானியுமாகிய ஹென்றி பெர்க்ஸன் (Henri Bergson) பன்முக வாசிப்பு (Multiplicity of Reading) என்ற ஒரு கருத்தை தத்துவத்தில் முன்வைக்கிறார். பிறகு அது இலக்கியத்தில் பேருருவம் கொண்டு பல்வேறு முறைகளில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒரு படைப்பின் பன்முகப் பொருள்தரும் தன்மை என்று அதை சொல்லலாம். ஒரு மகத்தான படைப்பு என்பது அத்தனை பேராலும் வெவ்வேறுவகையில்  வாசிக்கப்படும்போதுதான் அது படைப்பு ஆக நிகழ்கிறது. I. A. Richards என்ற முக்கியமான பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகர் அதை வேறொரு கோணத்தில் வாசக எதிர்வினை (Readers Response) என்கிறார். ஒரு படைப்பு என்பது அதை வாசிப்பவர்களுடைய எதிர்வினைகள் வழியாக தொடர்ந்து அர்த்தம் அடைந்து காலத்தில் திரட்டி முன்னிறுத்தப்படுகிறதே ஒழிய, ஒரு கற்சிலை மாதிரி அங்கே நின்று கொண்டிருக்காது. அப்படி நின்று கொண்டிருக்ககும் உரிமை, அப்படி நின்று கொண்டிருக்கும் தன்மை, சட்ட நூல்களுக்கு மட்டும்தான் உண்டு. கொலை குற்றமானது என்று சொல்லும்போது, இல்லை கொலை குற்றமில்லை என்று விவாதிக்க முடியாது. கொலை குற்றமே தான். ஒன்றும் ஒன்றும் இரண்டுதான். ஆனால் இலக்கியத்தில் அப்படியில்லை. தத்துவத்தில் அப்படியில்லை. மெய்ஞானத்தில் அப்படியில்லை.

ஒரு ஞானநூல், ஒரு இலக்கியப்படைப்பு, வாசிப்பின் வழியாக அடையும் விஸ்வரூபத்தை நாம் கீதையிலே பார்க்கிறோம். தொடர்ந்து ஒரே நூல்தான் அத்வைதத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரே நூல்தான் விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரே நூல்தான் துவைதத்தை உருவாக்கியிருக்கிறது. ஒரே நூல்தான் தூய பக்தியை மட்டுமே முன்வைக்கும் புஷ்டிமார்க்கம் என்கிற வைணவ மதத்தை உருவாக்கியிருக்கிறது. அதே நூல்தான் இந்திய சுதந்திர போராட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறது. அதே நூல்தான் வன்முறைக்கு அழைப்பு விடுத்தவர்களின் கையில் ஆயுதமாக இருந்திருக்கிறது. அதே நூல்தான் அகிம்சையை பேசிய வினோபாவேவுக்கும் காந்திக்கும் கையில் இருந்திருக்கிறது. இவ்வளவு  பிரதிவேறுபாட்டை (Textual Difference ) உருவாக்கக்கூடிய ஒரு நூல்தான் மகத்தான ஒரு நூலாக இருக்க முடியும். அதுதான் கீதையின் தகுதி.

இந்த வேறுபாட்டை நான் மறுபடியும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் கோணத்தில் நீங்கள் யோசித்திருப்பீர்களா என்று தெரியாது. ஏனென்றால் இப்போதுகூட ஒரு படைப்பை படித்தவுடனே அதன் ஆசிரியரிடம் வந்து, “சார், நீங்க என்ன சார் உத்தேசித்தீங்க?” என்று கேட்கக்கூடியவர்கள் உண்டு. நூல் ஒரு மொழி வடிவம். மொழிக்கு ஒரு தனித்தன்மை உண்டு நண்பர்களே! மொழி கற்பனையை, உள்ளுணர்வை நோக்கி எழ முயற்சிக்கும். மொழியின் அர்த்தம் வழியாக அது செல்லக்கூடிய எல்லை ஒன்றுண்டு. உண்மையில் அந்த எல்லைக்கு அப்பால்தான், எது அதன் சாராம்சமோ அது இருக்கும். அது எவ்வளவு பெரிய நூலாக இருந்தாலும், அந்த நூலில் இருக்கும் மொழியால் சொல்லப்பட்ட ஒரு வடிவத்திற்கு அப்பால், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால், ஒரு வெறுமைக்கு (Vacuum) அப்பால் தான், அது என்ன சொல்கிறதோ அது இருக்கிறது. ஒரு நூல் என்பது படிக்கட்டு. ஆயிரம் படிகளோ, ஐயாயிரம் படிகளோ, ஏறிச்சென்று மலைமுகடை அடைந்தபிறகு, மேகத்தில் கால் வைத்து மேலே ஏற வேண்டிய  கடமை உங்களுக்கு இருக்கிறது. அதை செய்தால்தான் அந்தப்படைப்பை நீங்கள் ஏற்றதாக ஆகும். அந்த இடைவெளியை நிரப்புவதற்குத்தான் இவ்வளவு உரைகள் ஆற்றப்பட்டிருக்கின்றன. இவ்வளவு விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

இது நம்முடைய மரபு. நானே இதைப்பற்றி நித்ய சைதன்ய யதியிடம் பேசியிருக்கிறேன். நாராயணகுருஆத்மோபதேச சதகம்என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலுக்கு நடராஜகுரு அவ்வளவு பெரிய உரை எழுதியிருக்கிறார். அவருடைய மாணவராகிய நித்யா அதைவிட பெரிய உரை எழுதினார். அவருடைய மாணவராகிய முனி நாராயண பிரசாத் அதைவிட ஒரு பெரிய உரை எழுதியிருக்கிறார். இப்படித்தான் நாம் படைப்புகளை விரிவாக்கிக்கொண்டே போகிறோம். கீதைக்கு நடராஜகுரு ஒரு உரை எழுதி இருக்கிறார். அந்த உரையை உட்கொண்டு இன்னொரு பெரிய உரையை நித்ய சைதன்ய யதி எழுதியிருக்கிறார். இவை இரண்டையும் சேர்த்து வைத்தால் எவ்வளவு பெரியதோ, அதைவிட பெரிய உரையை முனி நாராயண பிரசாத் எழுதியிருக்கிறார். பல்லாயிரம் வருடங்களாக இப்படித்தான் நம்முடைய நூல்கள் கடந்து, கடந்து, கடந்து வந்துகொண்டே இருக்கின்றன.

ஆகவே கீதை மாற்றமில்லாத கற்சிலையாக நின்றுகொண்டிருக்கும் மூலநூல், Canon இல்லை என்பதைத்தான் இங்கு சொல்ல வருகிறேன். நீங்கள் இதைப் படிக்க வேண்டியது, பகவான் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதற்காக அல்ல. நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்கிற ஒரு சோதனையை நிகழ்த்திக் கொள்வதற்கான பயணம்.

(மேலும்)

முந்தைய கட்டுரைதுறைவன்
அடுத்த கட்டுரைஊக்கத்தின் செயல்திட்டம்