மண்ணாப்பேடி

பேரன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

உங்கள் வாசகன் சண்முகநாதன் எழுதிக்கொள்வது….

நான் கடந்த வாரம் நாகர்கோயில் வந்திருந்தேன்.நண்பர்களோடு மூன்று நாள் விடுமுறைக்காக ….  நாகர்கோயில் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று வந்தோம்.. உங்கள் கதைகளில்  வரும் அனைத்து ஊர்களையும்  மற்றும் நீங்கள் வாழ்ந்து வளர்ந்த ஊர்களையும் பார்க்க மிகவும் இனிமையாக உணர்ந்தேன்.. குறிப்பாக “படுகை” யில் வரும் பேச்சிப்பாறை (படுகையில் வரும் “கான்வென்ட் குழந்தை காட்டில் வழி தெரியாமல் நிற்பதுபோல் குரோட்டன்ஸ் வளர்க்கப்பட்டிருந்தது” என்ற உவமை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று) மற்றும் நீங்கள் வேலை பார்த்ததாக சொன்ன தக்கலை. ஏனோ உங்கள் பகுதியான ராஜலக்ஷ்மி நகர், பார்வதிபுரம் வரை வந்து திரும்பி வந்து விட்டேன்… எனக்கு என்னமோ திரும்பி விடவேண்டும் என்றே தோன்றியது. ஊட்டி முகாமில் (2010) உங்களை நேரில்  சந்தித்திருக்கிறேன்.. ஏனோ வீட்டிற்க்கு வருவதற்கு ஒரு கூச்சம்.

நிறைய காரணங்களுக்காக எழுத விழைந்து இப்போதுதான் எழுத முடிந்தது. உங்களின் எல்லா நாவல்களையும் ஏறத்தாழ படித்திருக்கிறேன் சில பெரிய நாவல்களை தவிர.. நான் எப்போதும் உங்களின் நாவல்களின் ரசிகன்.. அதில் வரும் தத்துவங்களும், உணர்ச்சிகளும் எனக்கு மிகுந்த எழுச்சியைத் தந்திருக்கிறது.. உங்களைப் பற்றி நான் எனது நண்பர்களிடம் பேசாத நாட்களை இல்லை எனலாம்.. குறிப்பாகத் தன்னறம் பற்றிய கட்டுரை. அப்புறம் உங்களின் அறம் வரிசைக் கதைகள்.. உங்களின் அந்தத் தொகுப்பு வருவதற்காகக் காத்திருப்பவர்களில் நானும் ஒருவன். நானும் ஒரு வரலாற்றுப் பிரியன்.

இப்போது எழுதுவது, நாங்கள் பத்மநாபபுரம் சென்றிருந்த போது அங்குள்ள கல்வெட்டுகளைப் பார்க்க நேர்ந்தது… அதில் “மன்னாப்பேடி ” என்ற முறையை ஒழிப்பது பற்றியான ஒரு உறுதி மொழி செதுக்கப்பட்டிருந்தது … அப்படி என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்க முடியுமா.?
அப்புறம் யானை டாக்டர் 50 புத்தகம் நேற்று எனக்குக் கிடைத்தது. அதற்கு உங்களுக்கும், அரங்கன் அண்ணாவுக்கும் மிகவும் நன்றி.. எல்லோரிடமும் விநியோகித்து வருகிறேன்… உங்களிடம் சொல்ல மறந்துவிட்டேன் என் வீட்டின் பெயர் கூட “அறம்” தான். எழுத்தில் எதுவும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி,

சண்முகநாதன்,
தேவகோட்டை.

உமையம்மை ராணி -மரவெட்டு ஓவியம்

அன்புள்ள சண்முகநாதன்

வீட்டுக்கு வந்திருக்கலாம், நிறையவே பேசியிருக்கலாம்

மண்ணாப்பேடி-புலைப்பேடி முறை பற்றி ரப்பர் நாவலிலேயே ஓர் அத்தியாயம் வரும்.

அது இப்பகுதியில் இருந்த ஓர் ஆசாரம். வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்கள் [அதிகமும் ஆடி மாதம்] மண்ணாப்பேடி-புலைப்பேடி நாட்களாக கோயிலில் கிராமசபை கூடி அறிவித்துப் பறையறிவித்து விடுவார்கள். அந்த நாட்களில் தாழ்ந்தநிலைச் சாதியைச்சேர்ந்த ஒருவர் [வண்ணர்,  புலையர்] ஒரு நாயர்,நம்பூதிரி, வேளாளர் சாதிப்பெண் மீது ஒரு சிறிய கல்லையோ குச்சியையோ எறிந்து தொட்டுவிட்டு ‘தொட்டேன் பூஹோய்’ என மும்முறை கூவி அழைக்கவேண்டும். அந்த நாளில் அதைச்செய்வது குற்றம் அல்ல.

நம்பூதிரிகள்

அந்தப்பெண் அதன்பின் தன் சாதியில் சேர்ந்துகொள்ளமுடியாது. அந்தப்பெண்ணை அந்தக் கல்லெறிந்தவனுடன் அனுப்பிவிடுவார்கள். அவள் அச்சாதியில் சேர்ந்து அவனுடைய மனைவியாக வாழ்வாள். அவளுக்கு அவள் குடும்பத்தினர் ‘படியடைத்து பிண்டம் வைப்பார்கள்’ [ இறுதிச்சடங்குகள் செய்து வீட்டுமுன் கதவை மூடிக்கொண்டு விடுவார்கள்] அத்துடன் அவளை மறந்து விடுவார்கள்– இது சாஸ்திரம். பேடி என்றால் அச்சம் என்று பொருள்.
இது உயர்சாதிப் பெண்களை அச்சுறுத்திக் கட்டுக்குள் கொண்டுவர உயர்சாதி ஆண்கள் செய்த சதி என ஒரு தரப்பு நெடுநாட்களாக இருந்தது. எல்லாவற்றையும் ஒடுக்குமுறை நோக்கிலேயே அணுகும் மார்க்ஸிய ஆய்வுமுறையின் அடிப்படைச் சிக்கல் இது.

ஆனால் ஆவணங்களையும் ஆசாரங்களையும் விரிவாக ஆராய்ந்த அறிஞர்கள் அப்படி அல்ல என இன்று நினைக்கிறார்கள். அது ஒரு புராதன பழங்குடிச் சடங்கு. சாதிமுறைக்குள் வந்துசேர்ந்து நீடித்தது. இவ்வாறு பிறசாதியிடம் சென்று சேரும் பெண்கள் அனேகமாக விரும்பித்தான் சென்றிருக்கிறார்கள். ஏனென்றால் இந்த அறிவிக்கப்பட்ட நாட்களில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமலிருந்தால் இந்தச்சடங்கே நடக்காது. அன்றெல்லாம் பெண்கள் வீட்டுப் பின்கட்டைவிட்டு வெளியே வருவது மிகமிக அபூர்வமும் கூட. உயர்சாதிவீட்டருகே பிற ஆண்கள் நெருங்கவும் முடியாது. இது சாதிமுறையைக் கறாராகக் கடைப்பிடிக்கும்பொருட்டு அச்சாதிமுறைக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரு நெகிழ்வு, அவ்வளவுதான்.

மறுமணம் தடைசெய்யப்பட்ட நம்பூதிரி சாதிகளிலேயே இது அதிகம். நம்பூதிரிகளில் மூத்த நம்பூதிரிக்கு மட்டுமே நம்பூதிரி சாதியில் மணம்புரிய அனுமதி உண்டு. பிற நம்பூதிரிகள் நாயர் சாதியில் சம்பந்த உறவுதான் கொள்ளவேண்டும். ஆகவே நம்பூதிரிப்பெண்களில் பத்தில் இருவருக்கே மணமாக வாய்ப்பு. பிறர் வாழ்நாள் முழுக்கக் கன்னிகளாக இருந்தாகவேண்டும். அந்தப்பெண்களுக்கு இது அவள் மாட்டிக்கொண்டிருக்கும் ஆயுள்தண்டனையில் இருந்து தப்புவதற்கு சமூகமே அளிக்கும் வாய்ப்பு.

நாயர் சாதியிலும் இது சாதாரணமாக நிகழ்ந்துள்ளது. தாழ்ந்தநிலைச் சாதியினர் போருக்குப் போவதில்லை, ஆகவே ஆண்கள் அதிகம். போர்ச்சாதியான நாயர்களில் ஆண்கள் மிகமிகக் குறைவு. ஆகவே ஆண் துணை கிடைக்காத பெண்களுக்கு இது ஒரு வாய்ப்பு. ஒரு பெண் கன்னியாக இருந்து இறந்தால் அவள் யட்சியாக ஆகி ஆண்களின் குருதியைக் குடிப்பாள் என்ற நம்பிக்கை இருந்தமையால் பல காரணங்களால் ஆண் கிடைக்காத பெண்களை குடும்பத்தினரே அப்படி அனுப்பியிருக்கிறார்கள். அதிகமும் அழகற்ற, ஊனமுற்ற பெண்கள் மற்றும் ஜாதகக் குறை கொண்ட பெண்களை.

கணிசமான தருணங்களில் இப்படி மண்ணாப்பேடி புலைப்பேடி வழியாக தாழ்ந்தநிலைச் சாதிக்குச் சென்ற பெண்ணுக்கு அவள் குடும்பம் நிலங்களும் காடுகளும் அளித்திருக்கிறது. பல தாழ்ந்தநிலைச் சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள் இப்படி உருவானவர்களே. அவர்களிடையே நீடித்த உறவும் இருந்திருக்கிறது. இதெல்லாம் இன்று ஆவணங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

பின்னர் இந்த முறை மிகவும் பழங்குடித்தன்மை கொண்டதாகக் கருதப்பட்டது. நாயர் நம்பூதிரிச்சாதிகளில் கடுமையாக எதிர்ப்புகள் உருவாகி வந்தன. ஆகவே இது உமையம்மை ராணி காலகட்டத்தில் 1680 ல் அரசால் தடைசெய்யப்பட்டது

என் ஆசானும் அண்டைவீட்டினருமாக இருந்த மறைந்த திரிவிக்ரமன் தம்பி அவர்கள் மண்ணாப்பேடி -பறைப்பேடி என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். முழுமையான தொல்சான்றுகள் கொண்ட நூல் அது.

ஜெ

மறுபிரசுரம் / முதற்பிரசுரம் Sep 5, 2011
===========================
 

 

விலக்கப்பட்டவர்கள்


விலக்கப்பட்டவர்கள்-கடிதங்கள்


விலக்கப்பட்டவர்கள் கடிதங்கள்

 

 சுசீந்திரம் கைமுக்கு

 

 

 

முந்தைய கட்டுரைதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1
அடுத்த கட்டுரைஹொய்ச்சாள கலைவெளியில் – 4