மாரிட்ஜானின் உடல்
டியர் அஜி,
மாரிட்ஜானின் உடல் அபாரமான புனைவு. சற்றும் எதிர்பாராத களம், அறிமுகமற்ற நிலம், ஆனால் ஒரு சிறுகதைக்குள்ளாகவே அந்நிலத்தில் ஸ்தூலமான சாட்சியாக வாழ்ந்து பார்த்த அனுபவம். இது எப்படி சாத்தியமாகிறது என யோசித்தேன். உணவு, இசை, வாசனை என புலன்சார் அனுபவங்கள் துல்லியமான விவரனைகள் வழியே சொல்லப்பட்டுள்ளது. நம்மையறியாமலேயே சட்டென அந்நிலத்திற்கு கடத்தப்பட்டுவிடுகிறோம். முக்கியமாக இந்த விவரணைகளின் போது, மேலதிக அர்த்தங்கள் ஏதுமில்லை, விவரிப்பதன் பொருட்டே விவரிக்கிறேன் என்றே செய்யப்படுகிறது. ஆனால் இதன் அனுபவங்கள் எல்லாம் சேர்ந்து வாசகனை ரகசியமாக வேறேதோ ஒன்றுக்கு தயார்ப்படுத்திவிடுகின்றன. புலன் அனுபவம் என்றோ கதைச்சூழல் சார்ந்த நுண்விவரணைகள் என்றோ பாவனை செய்தவை இப்போது கதை நகர்வுகளின் வழியே அதைவிட மேலான ஒன்றின் சாரமாக எழுந்து வருகின்றன. வாசகர் மனதில் தன்னியல்பாக இந்த இணைவுகளை நிகழ்த்துவதே கலையின் வெற்றி. ஒரு நிலத்தின் சாரமாக அமைந்த உணவு, நிலத்தின் சாரமாக அமைந்த இசை என மைத்ரி உட்பட அஜியின் படைப்புகளில் தொடர்ந்து வரும் ஒரு பண்பு இது.
நிலைவிழி, வழித்துணை, ஃபோர்க் ரோஸ்ட், அல்கிஸா, மருபூமி என அஜியின் படைப்புலகில் தொடர்ந்து வரும் இன்னொரு அம்சம் அவை மரணம் அருகிருக்கையில் நடப்பவை. மனிதன் மரணத்தை எதிர்கொள்வதன் கேள்விகளை விசாரிப்பவை அவை என முதலில் நினைப்போம். இப்போது யோசிக்கையில் அப்படியல்ல அல்லது அதுமட்டுமல்ல என்று படுகிறது.
வழக்கமாக கார் பயணங்களின்போது கிருஷ்ணன் சார் அனைவரும் பதில் சொல்ல வேண்டும் என்ற அறிவிப்புடன் சில கேள்விகளை எழுப்புவார். அப்படி ஒருமுறை எழுப்பிய கேள்வி: “இன்னும் ஒருவாரத்தில் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பது உறுதியாக தெரியும்பட்சத்தில், நீங்கள் கடைசியாக செய்யக்கூடிய ஐந்து காரியங்கள் என்னவாக இருக்கும்?” நேர்மையாக எதிர்கொண்டால் நாம் யார் என்பதை நமக்கே காட்டிக்கொடுத்துவிடும் கேள்வி. பதிலளிக்க யோசிக்கையில், பிறருக்கு இருக்கட்டும் – நாம் நமக்கே நிறைவுறும்படியான பதிலை அளிப்பது எத்தனை அரிது என்பது புரியவரும். அவ்வப்போது இக்கேள்வியை நான் எண்ணிக் கொள்வதுண்டு.
எத்தனை கலை, ஆன்மிக உணர்வை நாம் கொண்டிருப்பதாக நினைத்திருந்தாலும் மரணம் அருகிருக்கையில் மட்டுமே நம் உண்மை நிலையை நாமே கண்டுணர்ந்து திகைப்போம்.
மனிதன் எதிர்கொள்ளக் கூடிய தீவிரமான பரீட்சைகள் மரணம் அருகிருக்கையிலோ அல்லது மரணத்தை வைத்து விளையாடுவதாகவோ தான் இருக்க முடியும். அஜியின் படைப்புகளில் வரும் தருணங்களோ மரணம் என்பது பிரபஞ்ச ஆடலின் பகுதியாக, மிகவும் சிறியதாகிவிடுகின்றன. அதன் நாயகர்கள் மரணத்தை ஒரு பொருட்டாக கருதாத அளவிற்கு மேலான ஒன்றை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது மரணம் என்பது ஆடலின் பகுதியாக மேலான ஒன்றுடன் இணையும் நிமித்தமாக மட்டுமே உள்ளது. மரணம் பொருட்டாகாத அந்நிலையை புனைவு அளிக்கும் கனவின் வழியே துளியேனும் உணர்வதே ஒரு வாசகனாக இப்படைப்புகள் அளிக்கும் பெருநிலையாகப் பார்க்கிறேன்.
இங்கிருக்கும் திருவண்னாமலை முதல் ஜப்பானின் மவுண்ட் ஃபுஜி வரை, சாம்பல் பூசிய மேனியனின் ஆடலாக இவ்வுலகை பார்க்கும் மரபு முதல் – கந்தமாதனத்தின் அனல்வாய் வரை சென்றுமீண்டு ஒளியாகி நின்ற தருமன் வரை வெவ்வேறு புள்ளிகளை தொட்டெழுப்புகிறது மாரிட்ஜானின் உடல். வாழ்த்துக்கள் அஜி.
பாரி