நான் அண்மையில் வாசித்த இரண்டு நூல்கள் என் வாசிப்பையே அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசென்றன. பி.கே.பாலகிருஷ்ணனின் நாவலென்னும் கலைநிகழ்வு (அழகிய மணவாளன் மொழியாக்கம்) ஒரு முக்கியமான நூல். மொழிபெயர்ப்பாயிற்றே என்று தயங்கித்தான் வாங்கினேன். பல மொழிபெயர்ப்புநூல்கள் தேள்கொட்டிய அனுபவத்தை அளித்துள்ளன. ஆனால் இந்நூல் மிக அற்புதமான வாசிப்பனுபவத்தை அளித்தது.
மிகப்பெரிய நாவல்களை எப்படி வாழ்க்கையனுபவத்தைக் கொண்டு கூர்ந்து வாசித்து மதிப்பிடுவது என்பதைக் கற்பித்தது. நான் கல்வித்துறையில் இருப்பவன். இந்தவகையான நூல்கள் கல்வித்துறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும். ஏதாவது கோட்பாட்டை வைத்துக்கொண்டு ஆராய்ச்சி செய்து சலிப்பூட்டுவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையுமில்லை, அதைச்சார்ந்த புரிதல்களுமில்லை. இந்நூல் வழியாக நான் சென்ற தொலைவு மிகுதி.
இன்னொரு நூல் நவீன இலக்கிய முன்னோடிகள். நீங்கள் எழுதிய நூல். இலக்கியவிமர்சனம் வாழ்க்கை, அழகியல் ஆகிய அடிப்படைகளில் எப்படிச் செய்யப்படவேண்டும் என்பதற்கான ஒரு மூலநூல் என்று இதைச் சொல்வேன். விமர்சனம் என்றபேரில் தனக்குத்தெரிந்ததை எல்லாம் இலக்கியம் மீது போடவில்லை. இலக்கியம் எங்கெல்லாம் வாழ்க்கையைத் தொட்டு ஒளிரச்செய்கிறது என்று மட்டுமே இந்நூல் சொல்கிறது . தி.ஜானகிராமன், லா.ச.ரா பற்றிய கட்டுரைகள் மிகச்சிறப்பானவை. அழகியல்விமர்சனம் என்றால் என்ன என்னும் முகப்புக்கட்டுரை (புதுமைப்பித்தன்) மிக ஆழமானது.
இலக்கியத்தை அறிந்து பயில விரும்புபவர்களுக்குரியவை இந்நூல்கள்.
ஆர். கிருஷ்ணராஜ்.
அன்புள்ள கிருஷ்ணராஜ்,
தமிழில் அடிக்கடிக் கண்ணில்படும் ஓர் அபத்தம் உண்டு. ஒரு நாவலின் கதாபாத்திரம் ஒன்று சொல்லும் ஒரு வரியை ஆசிரியரின் கூற்றாக எடுத்துக்கொண்டு மேற்கோள் காட்டுவது, அதைப்பற்றி விவாதிப்பது, மறுத்துப்பேசுவது. ஒரு கதாபாத்திரம் சொல்லும் ஒரு வரி என்பது அந்தக் கதாபாத்திரத்தின் குணச்சித்திரம், அந்தக் கதைச்சூழல் ஆகியவற்றுடன் இணைந்தது. ராவணன் சொல்லும் வசனம் கம்பனுடைய கருத்து அல்ல. இந்த அடிப்படைத் தெளிவே நம் வாசகர்களிடம் இன்று இல்லை.
காரணம் முறையான வாசிப்புப் பயிற்சி இல்லை என்பதே. இலக்கியத்தை வாசிப்பதற்கு பயிற்சி தேவை என்பதே இங்கே பலருக்கும் தெரியாது. கதை வாசிக்கப் பயிற்சி எதற்கு என்பதே பொதுவான மனநிலை. இலக்கியம் என்பது ‘கதை’ மட்டும் அல்ல. அது ஓர் அழகியல் வடிவம். அந்த அழகியல் வடிவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை எப்படி உள்வாங்குவது என்பதை கொஞ்சமேனும் பயிலவேண்டும். இல்லையேல் நாம் மிகக்குறைபட்ட, மிகப்பிழையான வாசிப்பையே அடைவோம். அதன் இழப்பு நமக்கே.
ஒரு வணிக சினிமாவை, அல்லது வணிகக்கேளிக்கை எழுத்தை வாசிப்பதுபோல இலக்கியத்தை வாசிக்கக்கூடாது. ’இந்த இடம் பிடித்திருக்கிறது, இந்த இடம் பிடிக்கவில்லை, இது நம்பும்படி இல்லை, இதை வேறுமாதிரி எழுதியிருக்கலாம், மொத்தத்தில் இது இப்படிப்பட்ட நாவல்’ இதுதான் நம் வாசகர்கள் பெரும்பாலும் படைப்புகள் பற்றிச் சொல்லும் கருத்தாக உள்ளது.
இதிலுள்ள பெரும்பிழை ஒரு படைப்பை தன்னை நோக்கி இழுப்பது. தன்னை அளவீடாகக் கொள்வது. உதாரணமாக, ஒரு தமிழ் வாசகன் தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை வாசித்துவிட்டு ‘ஒரே போர்க்காட்சியாக இருக்கிறது, சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம், ஒட்டவில்லை’ என்று சொன்னால் என்ன பொருள்? (உண்மையிலேயே அப்படி ஒருவர் எழுதியிருந்தார்) தஸ்தயேவ்ஸ்கியை வாசித்துவிட்டு ‘நீண்ட உரையாடல்கள். இப்படி எவராவது பேசுவார்களா, நம்பமுடியவில்லை’ என்று சொன்னால் அவன் எப்படிப்பட்ட வாசகன்?
அதைச் சொல்பவனுக்கு போர் பற்றி என்ன தெரியும்? தத்துவார்த்தமான பிரச்சினைகள் பற்றி என்ன தெரியும்? அவன் அதை அப்படைப்புகள் வழியாகவே தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு அவன் அப்படைப்பை நோக்கி தன்னை செலுத்திக்கொள்ளவேண்டும். தன் ரசனை மற்றும் அறிவுத்திறன் நோக்கி அப்படைப்பை இழுக்கக்கூடாது.
’நம்பமுடியவில்லை’ என்பது தமிழின் ஆரம்பநிலை வாசகன் அடிக்கடிச் சொல்லும் வரி. ஏனென்றால் ஒரு நாவல் பேசும் விஷயம் அவன் அனுபவதளத்திற்குள் வரவில்லை. அவன் ஏற்கனவே அறிந்ததாக அது இல்லை. சரி, அப்படி என்ன அனுபவமும் அறிவும் அவனுக்கு உள்ளது என்று பார்த்தால் மிக எளிய நடுத்தரவர்க்க குடும்ப- அலுவலக வாழ்க்கை கொண்டவன் அவன். அவனுக்கு தெரிந்ததைக் கொண்டு அவனை நிறைவுறச்செய்தால் மட்டுமே அவனுக்கு ஒரு படைப்பு பிடிக்கும் என்றால் அவன் தேடுவது இலக்கியம் அல்ல, வம்புகள் மட்டுமே. அவன் திரும்பத் திரும்ப எளிய வணிக எழுத்தை மட்டுமே படிக்கமுடியும்.
வணிக எழுத்து, வணிக சினிமாவின் நெறியே தெரிந்ததையே ரசிகனிடம் சொல் என்பதுதான். இந்த எளிய அடிப்படையைக்கூட நாம் இன்றைய சூழலில் ஒரு வாசகனுக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. ஓர் இலக்கியப்படைப்புக்கு நீ உன்னை அளிக்காவிட்டால் அது உனக்கு எதையும் அளிக்காது, அதன் இழப்பு உனக்கே என கற்பிக்கவேண்டியுள்ளது. நீ நுகர்வோன் அல்ல, இலக்கிய ஆக்கம் நுகர்வுப்பண்டமும் அல்ல, உன் ரசனைக்காக அது உருவாக்கப்படவில்லை, அது ஒரு புதிய அறிவுக்களம், நீ உன் அறிதல்தளத்தைக் கடந்து அதற்குள் நுழைந்து அதைக் கற்கவேண்டும் என்று புரியவைக்கவேண்டியுள்ளது.
இலக்கியவிமர்சனம் என்பது முதலில் இலக்கியத்தை நம் வாழ்வுடன், நம் ஆழுள்ளத்துடன் இணைத்துக் கொள்வதில்தான் உள்ளது. அந்தத் தொடர்பின் வழியாகவே ஓர் இலக்கிய ஆக்கம் உண்மையில் மதிப்புள்ளதா, இல்லையா என்பதை நாம் முடிவுசெய்கிறோம். நுணுக்கமான விவாதமெல்லாம் அதற்குப் பிறகுதான். நமக்கே தெரியும் நாம் வாசிப்பவற்றில் மிகச்சில படைப்புகளுக்கே அந்தத் தகுதி உண்டு.
அதற்கப்பால்தான் அந்நாவலை நாம் சமூகவியல், அரசியல், உளவியல் என பல்வேறு கோணங்களில் விரிவாக ஆராயவேண்டும். அந்த முதல்நிலை தெரிவு என்பது நம் அனுபவத்துடன் அது உரையாடுகிறதா என்பதே. அந்த உரையாடல் நிகழவேண்டும் என்றால் அந்த இலக்கியப்படைப்பின் அழகியலை நாம் அறிந்திருக்கவேண்டும். அழகியல் என்பது வடிவம், மொழிநடை, வரலாற்றுப்பின்னணி, வாழ்க்கைநோக்கு, நுட்பங்களை அமைக்கும் பாங்கு என பலவற்றின் தொகுப்பு. அதற்கு நம்மிடம் பயிற்சி இருக்கவேண்டும்.
அப்பயிற்சியைப் பெற ஒரே வழி செவ்விலக்கியங்களை, முந்தைய படைப்புகளைக் கூர்ந்து வாசிப்பதே. அவ்வாறான கூர்வாசிப்புக்கான பயிற்சி என்றுதான் அழகியல்விமர்சனத்தை வரையறை செய்யமுடியும். அழகியல் விமர்சனம் பேரிலக்கியங்களின் வாசிப்பினூடாக அழகியல்நெறிகள் சிலவற்றை அடையாளம் காட்டுகிறது. அழகியல் நுட்பங்களை தொட்டறிவதை பயிற்றுவிக்கிறது. அதன் வழியாக புதியபடைப்புகளை எதிர்கொள்ளும் நுண்ணுணர்வுத் தகுதியை நமக்கு அளிக்கிறது
ஜெ