அன்புள்ள ஜெ,
தொண்ணூறுகள் வரைக்கும்கூட இலக்கியத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது. அதாவது, ஓர் எழுத்தாளர் தன் வாழ்க்கையை அப்படியே எழுதியிருந்தால் அது அபாரமான படைப்பு என்று பரவலாக நம்பப்பட்டது. இது ஆசிரியரின் உண்மைக்கதை என்றெல்லாம் அட்டையில் போடும் வழக்கம் இருந்தது. To kill a Mocking Bird நாவலின் அட்டையில் அப்படி போட்டிருந்ததாக நினைவு.
அது modernist காலகட்டத்தின் நம்பிக்கை. ஒரு படைப்பை வாசித்தால் அது நேரடியாக ஆசிரியரை நோக்கிக் கொண்டுசெல்லவேண்டும் என்று நம்பினார்கள். ஆசிரியர் ‘நேர்மையாக’ எழுதியிருக்கிறாரா என்று அந்த படைப்பையும் ஆசிரியரின் வாழ்க்கையையும் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்தார்கள். ஆசிரியர் கடுமையான துயர்களை அனுபவித்தவராக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவானது. ஆகவே ஆசிரியரை ஒரு நாடோடியாகவோ அல்லது கலகக்காரர் ஆகவோ காட்டினார்கள். சார்ல்ஸ் புகோவ்ஸ்கி எல்லாம் அப்படித்தான் பிம்பக்கட்டமைப்பு செய்யப்பட்டார்கள்.
இன்றைக்கு அந்தக் காலம் இல்லை. இன்று இலக்கியம் என்பது ‘பரோக்ஷம்’ ஆகத்தான் சொல்லமுடியும் என்று கருதப்படுகிறது. சொந்த அனுபவத்துக்கு நெருக்கமான படைப்பு என்பது ஒரு வகையில் tilted ஆன வாழ்க்கைதான். அதன் உணர்வுகள்கூட கொஞ்சம் பொய்யானவைதான். எந்த அளவுக்கு ஆசிரியரிடமிருந்து அந்தப்படைப்பு விலகி நிற்கிறதோ அந்த அளவுக்கே மதிப்பு. இது ஓர் ஆசிரியர் அவருடைய சொந்த ஆழத்தை வெளிப்படுத்துபவன் அல்ல, பண்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்துபவன் என்னும் பார்த்தின் கருத்தை ஒட்டி உருவான தரப்பு. Author as an individual is dead என்பதுதான் பார்த் சொன்னதன் அர்த்தம்.
படைப்பு என்பது ஏதோ ஒருவகையில் oblique ஆகவேண்டும். ஆசிரியர் தன் அனுபவத்துக்கு அப்பால் செல்லவேண்டும். அதற்குரிய வழியாக சொல்லப்படுவது ஓர் உலகை ஆராய்ச்சி பண்ணி அதை எழுதுவது. அப்படி எழுதும்போது இயல்பாகவே ஒரு தூரம் உருவாகிறது. அந்த தூரம் வழியாக உடனடியான உணர்ச்சிகள் அகல்கின்றன. அடிப்படையான vision and emotions மட்டும் அந்தப்படைப்பில் நீடிக்கின்றன. அதுதான் இன்றைய எழுத்து. ஆராய்ச்சி செய்து எழுதப்பட்ட முழுமையான ஓர் உலகத்தை முன்வைக்கும் நாவல்களையே இன்று விரும்பிப்படிக்க முடிகிறது. அந்நாவலில் ஆசிரியன் விலகி, ஓர் objectivity உருவாகிறது. அதில் ஆசிரியன் தவிர்க்கமுடியாதபடி இருந்துகொண்டிருக்கிறான். அவனுடைய அடிப்படையான பார்வை மட்டும் அதில் உள்ளது.
தமிழில் வாசிப்பது விட்டு விட்டு நடைபெறுகிறது. இத்தகைய நாவல்களாக தமிழில் என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்று சொல்லமுடியுமா?
ஶ்ரீனிவாஸ்
அன்புள்ள ஶ்ரீ,
நீங்கள் சொல்லும் இந்த அம்சம் எப்போதுமே இலக்கியத்தில் உள்ளதுதான். செவ்வியல் நாவல்கள் எப்போதுமே ஆசிரியனிடமிருந்து ஒரு விலக்கத்தைக் கொண்டிருக்கின்றன. அந்த விலக்கத்தால்தான் அவை செவ்வியல்தன்மை கொள்கின்றன. செவ்வியல் நாவல்கள் கதைக்களத்தையும் கதையோட்டத்தையும் கதை மாந்தரையும் முழுமையாக, முற்றிலும் புறவயமானதாக உருவாக்கிக்கொள்வதே கதையாசிரியனிடமிருந்து விலக்கம் கொள்வதற்காகத்தான்.
வற்றில் ஆசிரியன் வெவ்வேறு கதைமாந்தர்களுக்குள் கூடுபாய்பவனாக, அல்லது அனைத்தறிந்து சொல்லும் பின்னணிக்குரலாக தன்னை முன்வைக்கிறான். அது அவன் அல்ல, அவனுடைய புனைவுருவம்தான். அவன் ஆய்வுசெய்து உருவாக்கும் ஓர் உலகில் அதற்கேற்ப தன்னை அவன் புனைந்துகொள்கிறான். அந்த உருமாற்றம் வழியாக தன்னுடைய எளிய இயல்புகளை எல்லாம் களைந்துகொள்கிறான். தன்னுடைய ஆழம் மட்டுமே தன்னியல்பாக அங்கே வெளிப்பாடு கொள்ளச் செய்கிறான்.
செவ்வியல் படைப்பாளிகள் வரலாற்றை புனைவுக்களமாக கொண்டது இந்தத் தேவைக்காகவே. தல்ஸ்தோய் போரும் அமைதியும் நாவலில் நெப்போலியன் யுகத்துக்குச் சென்றதும் சரி, தாமஸ் மன் புடன்புரூக்ஸ் நாவலில் அவருக்கு அயலான ஓர் பெருவணிகக்குடும்பத்துக்குள் சென்றதும் சரி இந்த தேவைக்காகவே.
தன் இயல்பான மொழியை விட்டு இன்னொரு மொழியுலகை உருவாக்கிக்கொண்டவர்களும் உண்டு- யுலிஸஸ் நாவலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் அதைச் செய்கிறார். அதுவும் ஒருவகை விலக்கமே. ஆசிரியன் ஒவ்வொரு ஆக்கத்திலும் முற்றிலும் புதிய ஒரு மொழிச்சூழலுக்குள் செல்வதும் இதனால்தான். வரலாற்றுச்சூழல், அறிவியல்சூழல் போன்றவை புனைவுக்குத் தேவைப்படுவதும் இதனால்தான். அதாவது படைப்புடனான ஆசிரியனின் அணுக்கம் அல்ல, விலக்கமே செவ்வியல்தன்மையை உருவாக்குகிறது. அணுக்கம் வழியாக உருவாகும் ஒற்றைப்படைத்தன்மையை அவ்வாறுதான் அவன் கடக்கமுடியும்.
இந்தக் காரணத்தால்தான் எழுத்தாளர்கள் விந்தையான தகவல்களுக்கான தேடல் கொண்டிருக்கிறார்கள். முற்றிலும் அன்னியமான ஓர் உலகை அவர்கள் தேடி ,அதை தரவுகள் வழியாக அறிந்துகொண்டு ,அந்த தரவுகளைக்கொண்டு அவ்வுலகை மீட்டுருவாக்கம் செய்துகொள்கிறார்கள்.அல்லது அதையொட்டி புதிய ஓர் உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
அவ்வாறு ஒரு புதியகளத்தில் அவர்கள் தங்களை, தங்கள் அகத்தை நிகழ்த்திக்கொள்ளும்போது அதிலுள்ள தூலங்கள் எல்லாம் பொருளிழந்துவிடுகின்றன. நுண்மைகளுக்கு மட்டுமே அங்கே இடமிருக்கிறது. சொல்லப்போனால் நுண்மைகள் அங்கே தவிர்க்கமுடியாதபடி, அவர்களை மீறி வெளிப்பாடு கொள்கின்றன. பலசமயம் அவர்களுக்கே அவர்களின் அக ஆழம் அப்புனைவுக்களத்தில் உருமாறி வெளிப்பட்டிருப்பது சற்றுப் பிந்தித்தான் தெரியவரும். அந்தப்படைப்பை அவர்களே ஒரு வாசகராக விலகி நின்று வாசிக்கும்போது. அவ்வாறு தன்னியல்பாக வெளிப்படும் அகம் என்பது புனைவில் மிகுந்த மதிப்பு கொண்டது.
சரவணன் சந்திரன்
அந்த மரபு நவீனத்துவக் காலகட்டத்திலேயே இல்லாமலாகியது. ஆசிரியனின் அந்தரங்கம் வெளிப்படும் ஒருவகை மொழிப்பகுதிகளாக புனைவுகள் உருவகிக்கப்பட்டன. அந்தரங்கத்தன்மை மட்டுமே முதன்மை அளவுகோலாகக் கொள்ளப்பட்டது. ஆனால் ஓர் புனைவெழுத்தாளன் எழுதும் எல்லாமே புனைவுதான். தன் நாட்குறிப்பிலேயேகூட அவன் தன்னை புனைந்து முன்வைக்கத் தொடங்கிவிட்டிருப்பான். அதை ‘உண்மை’ என எடுத்துக்கொள்ளும் வாசகன் புனைவின் சாத்தியங்களைத் தவறவிடுகிறான். அந்த மனநிலை ஓங்கியிருந்த நவீனத்துவக் காலகட்டம் நவீன மொழியியல் சார்ந்த கோட்பாட்டாளர்களால் மட்டுமல்ல ஹெரால்ட் புளூம் போன்ற சக்திவாய்ந்த செவ்வியல் விமர்சகர்களாலும்தான் தகர்க்கப்பட்டது.
‘அயல் உலகம் ஒன்றை முழுமையாகச் சித்தரிப்பது’ என்பதையே மூன்றாகப் பிரிக்கலாம். தனக்கு முற்றிலும் அயலான உலகை உரிய ஆய்வுப்பின்புலத்துடன் எழுதி உருவாக்குவது முதல்வகை. தனக்கு தெரிந்த, அல்லது தான் வாழும் புறவுலகையே மேலதிக ஆய்வுகளுடன் தன்னில் இருந்து விலகிச் சித்தரிப்பது இரண்டாம் வகை. உண்மையான தகவல்களை புனைவுச்சக்தியால் ‘திரித்து’ முற்றிலும் கற்பனையான ஓர் உலகை உருவாக்குவது மூன்றாம் வகை. வரலாற்றுக்காலத்தை கற்பனையாக உருவாக்குவது அல்லது அறிவியல்சார்ந்த உலகை உருவாக்குவது இந்த வகை எழுத்து. (நான் மூன்றுவகைகளிலுமே எழுதியுள்ளேன். விஷ்ணுபுரம் முதல்வகை. காடு இரண்டாம்வகை. கொற்றவை மூன்றாம் வகை).
முதல்வகையான நாவல் என்றால் யுவன் சந்திரசேகரின் கானல்நதி. இந்துஸ்தானி இசை அதன் பின்புலம். வங்காளம் அதன் களம். முதல்வகைக்கு இன்னொரு உதாரணம் கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘தரூக்‘. ஆஸ்திரேலியப் பண்பாட்டின் பின்னணியில் அமைந்த நாவல் அது. முத்துநாகுவின் சுளுந்தீ , எஸ்.செந்தில்குமாரின் கழுதைப்பாதை, சரவணன் சந்திரனின் அத்தாரோ, அஜிதனின் மைத்ரி, அல்கிஸா ஆகியவையும் இவ்வகைப்பட்டவை.
இரா.முருகனின் பெரும்பாலான நாவல்கள் இந்தவகையானவை. அவர் எழுதும் பாலக்காடு அல்லது பாண்டிச்சேரி களம் என்பது அவருக்கு நேரறிவு மிகக்குறைவான ஒன்று. அவர் பெரும்பாலும் ஆய்வுத்தரவுகள் வழியாகவே அவற்றை உருவாக்குகிறார்.
இரண்டாம் வகை நாவல்களாக சுனீல் கிருஷ்ணனின் நீலகண்டம், கார்த்திக் பாலசுப்ரமணியனின் நட்சத்திரவாசிகள், தமிழ்மகனின் வெட்டுப்புலி போன்றவற்றைச் சொல்லலாம். நீலகண்டம் ஆயுர்வேதம் பின்னணி கொண்டது. நட்சத்திரவாசிகள் கணினியுலகைச் சொல்வது.
மூன்றாம் வகை நாவலுக்கு யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம் ஒரு நல்ல உதாரணம். சோமிட்சு என்னும் கற்பனை நாட்டில் நிகழும் கதை அது. இரா.முருகனின் மிளகு கூட அத்தகைய ஒன்றுதான். மிளகுராணி வரலாற்றுக் கதாபாத்திரம். அந்நிலமும் வரலாற்றில் இருந்ததே. ஆனால் இரா முருகன் அதில் உருவாக்கும் புனைவுக்களம் மாய யதார்த்தத் தன்மை கொண்டது.
இந்தவகையில் ஒரு விரிவான பட்டியலை என்னைவிட விரிவான சமகால வாசிப்புள்ள ஒரு புதிய விமர்சகர் போடமுடியும் என நினைக்கிறேன். நான் மாதிரிக்காகவே சில நூல்களைச் சுட்டியிருக்கிறேன்.
ஜெ