ஒடுக்குமுறை, பஞ்சம், அறம்- கடிதம்

அன்பிற்குரிய ஆசிரியருக்கு

ஓர்  இலக்கிய வாசகன் யதேச்சையாகவே இலக்கிய உலகிற்குள் நுழைகிறான். யாரோ ஒருவர் பரிந்துரைத்த நூல்களின் வாயிலாகவோ அல்லது கற்றலின் விருப்பத்தினாலோ மெல்ல மெல்ல தீவிர இலக்கியத்திற்குள் வருகிறான். அவ்வாறு ஒவ்வொரு படைப்புகளாக வாசிக்கும்போது சில படைப்புகள் நிலைகுலைய வைக்கும். அந்த வாசிப்பின் தொடர்ச்சியாக ஆழம் சென்று ஜெயகாந்தன் கூறுவதுபோல் ஒரு படைப்பை நான் எந்த உச்சத்திலிருந்து தருகிறேனோ அதே உச்சத்திலிருந்து நீங்களும் பெறவேண்டும் என்ற முயற்சியில் வாசகனும் எழுத்தாளருடனே செல்வ முயல்வான். 

பின் அடுத்தடுத்த வாசல்கள் திறந்து கொண்டே இருக்கும். மெல்ல மெல்ல கற்றலின் பேரின்பத்தையும் அதிலிருந்து பெரும் தரிசனத்தின் வாயிலாக அன்றாட செயல்களிலிருந்து தனக்கான ஒரு சிறிய இடத்தை தக்கவைத்து அதிலிருந்து இந்த உலகம் என்றால் என்ன?இந்த முடிவில்லா பிரபஞ்சத்தில் தன் பங்கு என்ன?என்பதனை உணர செய்யும் மாபெரும் கருவியான கல்வியின் தரிசனத்தை கண்டடைகிறான். இதுவே கற்றலின் பேரின்பம் என்பேன். இதுவே ஒருவரின் வாழ்வின் நல்லூழ் என்பேன்

என்னுடைய தமிழாசிரியர் உங்களின் மிகத்தீவிர வாசகர் என்பதால் கல்லூரி பருவத்திலேயே இலக்கிய உலகிற்குள் நுழைந்து விட்டேன். அவர் பரிந்துரைத்த நூல்களின் வாயிலாவே வாசிக்க தொடங்கினேன். உங்களின் புறப்பாடு, இரவு, அனல் காற்று, ஏழாம் உலகம், அறம் போன்ற முதற்கட்ட வாசிப்பை முடித்த பிறகு ஜெயமோகனின் அடுத்தடுத்த புனைவுலகிற்குள் செல்லலாம் என்றார். பின் கி. ரா, எஸ். ரா, தி. ஜா போன்ற மற்ற படைப்புகளையும் பரிந்துரைத்தார். இவ்வாறு நம் இலக்கிய முன்னோடிகள் ஒவ்வொருராக தொட்டு தொட்டு வரும் போது என்னை நிலைகுலைய செய்தவர் ஜெயகாந்தன். அவரின் படைப்புகளில் யாருக்காக அழுதானில்  வரும் சோசப்பு, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் வரும் ஹென்றி போன்றவர்கள் என்னை தடுமாறவும் மேலும் சிந்திக்கவும் வைத்தனர். 

அதன் தொடர்ச்சியாகத்தான் உங்கள் படைப்புகளில் வரும் இலட்சியவாத காதாப்பாதிரங்காளான யானை டாக்டர், ஏய்டன், காத்தவராயன் போன்றவர்கள் என்னை இன்னொரு கோணத்தில் நிலைகுலைய வைத்தனர். இது புனைவின் மூலம் ஜெயகாந்தன் வாயிலாக உங்களிடம் நான் வந்தேன். அடுத்ததாக நீங்கள் நடத்திவரும் முழுமையறிவில் பங்கெடுத்தது. அது என் வாழ்வின் நல்லூழ் என்றே கூறுவேன். சிந்தனை என்ற ஒரு விடயமே நம் சூழலில் மங்கி போகும் நிலையில் அதற்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தி முழுவீச்சில் நீங்களும் நண்பர்களும் ஏற்ப்படுத்தி வரும் தாக்கம் எனனை மேலும் ஈர்க்க செய்தது. 

இவ்வாறு இருக்கஒரு இளம் வாசகனாகிய நான் என் அன்பிற்குரிய ஆசிரியருக்கு வெகுமதியாய் எதை செய்யலாம் என்று சிந்தித்த போது இரண்டு விடயங்கள் தென்பட்டன. முதல் விடயம் வெள்ளிமலையில் நிகழ்ந்து வரும் வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்வது. அதை செய்த வண்ணம் உள்ளேன். புதிய வாசகர் சந்திப்பிலிருந்து தொடங்கி ஆலய வகுப்பு, நவீன மருத்துவ முகாம், அபுனைவு பயிற்சி, ஆயுர்வேத வகுப்புகள், தத்துவ வகுப்புகள் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன். 

இரண்டாவது விடயம் உங்களின் அடுத்த புனைவுலகிற்குள் முட்டி மோதி அதன் ஆழத்திற்குள் செல்வது. இந்நிலையில் சமீபத்தில் விஷ்ணுபுர பதிப்பகத்திலிருந்து உங்களின் இரண்டாம் கட்ட படைப்புகளான வெள்ளையானை, விஷ்ணுபுரம், கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை வாங்கினேன்.விஷ்ணுபுர பதிப்பகத்திலிருந்து வரும் நூல்களனைத்திலும் அட்டை வடிவம் மிகவும் நேர்த்தியாக இருக்கின்றன. எவ்வளவு முறை வாசித்த போதிலும் புத்தகம் புதிதுபோலவே தென்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. 

முதலில் வெள்ளையானையில் தொடங்கினேன். உலக வரலாற்றின் மாபெரும் பஞ்சங்களில் ஒன்றால் இந்தியாவின் கால்வாசிப்பேர் செத்தொழிந்த காலத்தையும், அந்த மனநிலைகளையும், அக்கால அரசியலையும், சுரண்டலையும் புனைவின் வாயிலாக தொட்ட நாவல் வெள்ளையானை. வெள்ளையர்கள் ஏற்படுத்திய செயற்கையான பஞ்சத்தின் வாயிலாகவும், அப்போது அங்கு நிகழந்த சாதி வேற்றுமையை அவர்கள் சாமர்த்தியமாக கையாண்ட முறை ஒருபக்கமிருக்க இன்னொரு பக்கம் அவர்கள் நமக்களித்த கல்வியின் கொடையையும் மிகவும் நேர்த்தியாக இந்நாவல் பேசுகிறது

அயர்லாந்திலிருந்து வரும் ஏய்டனின் வாயிலாக கதை நகர்கிறது. ஏய்டன்உற்சாகமான மனிதன், கல்வியில் ஆர்வம் கொண்டவன். ஷெல்லியின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவன். ஏய்டன் அயர்லாந்திலிருந்து வரும்போதே தன் பெற்றோர்களால் கையறு நிலையை அடைகிறான். நாவலின் ஆரம்பத்திலேயே ஏய்டன் நீலமேகம் வாயிலாக அங்கு வலுவாக நிகழும் சாதி வேற்றுமையை நன்றாக உணர்கிறான். பின் அடுத்தடுத்தாக சந்தித்திக்கும் அனைவரிடமும் நிலைகுலைவை அடைகிறான். அடுத்தாக காத்தவராயனை சந்திக்கிறான். ஏய்டன், காத்தவராயன் இவ்விருவர் மட்டுமே என்னை நாவல் முழுக்க நிலைகுலைய வைத்தனர். ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் சமூகத்தில் கல்வி பெற்ற ஒரே ஒரு பிரதிநிதியாக வரும் காத்தவராயனின் தர்க்க பூர்வமான பேச்சின் முன் ஏய்டன் தடுமாறுகிறான். 

மேலும் தீவிரமாக நாவல் என்னை உள்ளிழுத்தது. ஒட்டுமொத்தத்தில் ஒரே ஒருவன் பெரும் கல்வியின் ஆற்றல் எவ்வளவு வலிமைமிக்கது என்றுணரந்தேன். காத்தவராயன் உண்மையில் அங்கு பஞ்சத்தில் செத்தொழிந்தவர்கள் குறித்து கவலைக் கொள்ளவில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் அங்கிருந்து மீண்டெழும் ஒரு கைவிரல்களால் எண்ணக்கூடிய வர்கள் மட்டுமே. அதிலிருந்து ஒரு புது யுகம் எழுந்து வரும் என்று மகத்தான நம்பிக்கை கொண்டுள்ளான். நான் பெற்ற கல்வியின் தரிசனத்துக்காக ஏய்டனிடம் உங்களுடைய கல்வியில் ஒரு துளியை கொடுத்தீர்கள். உங்களுடைய மொழியில் ஒரு வாசலை திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள் என்று தலை வணங்குகிறான்

அயர்லாந்திலிருந்து வேலையின் பொருட்டு மட்டுமே வரும் ஏய்டன் மேல் வலுவான கதாப்பாத்திரங்களை கொண்டு ஏய்டன் என்ற பலூனை மேலும் ஊதி ஊதி இறுதியில் அதை உடைக்க நேரிடும்போது ஏனோ அனுதாபம் கலந்த மெல்லிய புன்முறுவல் ஏற்பட்டது.’பாவம் ஏய்டன்‘.

இந்நாவல் பஞ்சங்களின் உச்சத்தருணங்களையும், வெள்ளையர்களின் சுரண்டல்களையும், ஏய்டன் சந்திக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் மூலம் அடையும் நிலைகுலைவையும்….தன்னுடன் வண்டியில் வந்த ஆண்ட்ரூவை இறக்கும்போது தன் பிரியத்திற்குரிய இயேசுவை கைவிட்ட நிலையையும் தனக்கும் ஷெல்லிக்குமான உறவுஅனைத்திற்கும் மேலாக தானும் வெள்ளையர்களால் பயன்படுத்த பட்டஒரு கருவியே என்ற உணர்வுபோன்ற வெவ்வேறு நிகழ்வுகள் ஒவ்வொரு வாசகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கங்களை தாண்டிஇதற்கும் மேல் இந்நாவலின் மையதரிசனம் என்று நான் உணர்ந்த இடம்  காத்தவராயனும் ஏய்டனும் அந்த ஒடுக்கப்பட்டவர்களின் சேரிக்குள் செல்லும்போது, அங்கே ஒரு கிழவி ஏய்டனுக்கு நுங்கு தரும் நிகழ்வு தான். 

அப்போது அந்நிகழ்வை முழுமையாக உணர்ந்திராத ஏய்டன், நாவலின் இறுதியில் காத்தவராயன் தான் வைணவன் எனும் சின்னத்தை அழித்து எது தர்மம்?என்பதை அந்த கிழவியின் வாயிலாக உணரும்போது ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டேன். அந்த சில நிமிடம் இலட்சியவாத மனிதர்களான ஏய்டனிடமும் காத்தவராயனிடமும் நான் உணர்ந்தவையே இந்நாவல் எனக்களித்த ஆகச்சிறந்த தரிசனம் என்பேன். அதன் பின் இந்நாவலில் இருந்த அனைத்து அவல நிலைகளும், அதிகாரத்தின் சுரண்டல்களும் தவுடுபொடிகளாகிஎது தர்மம்? ‘என்ற மகத்தான சத்தியத்தை நோக்கி ஊடுறவி அதன் கண்களாக நின்ற ஏய்டனும் காத்தவராயனும் மட்டுமே என்னிடம் எஞ்சி நின்றனர்.

ஒருபோதும் வார்த்தைகளால் நிரப்ப இயலாத அந்த உணர்வையே வெள்ளையானை எனக்களித்த கொடை. இதுவே கலையின் தரிசனம் என்ற முழுமையோடு ஒருமுறை நூலை இறுகத்தழுவி என் புத்தக அலமாரியில் வைத்தேன். ஏய்டனை கண்டடைந்தேன்

அன்புடன்

அசோக்

ஊட்டி

முந்தைய கட்டுரைஇரா.முருகன், ப.சிங்காரம் – கடிதம்
அடுத்த கட்டுரைமித்ரா அழகுவேல்