தூக்கு -கடிதங்கள்

ஜெ ,

மூன்று நபர்களின் தூக்கை நியாயப்படுத்தும் மனிதர்கள் ஏன்  நம் நாட்டில்  நடக்கும் ‘ விவசாயிகளின் உயிர்பலியை ‘ கண்டுகொள்ளவில்லை . ஒரு வருடம் நடந்தால் ‘உயிர்பலிக்கு’ சம்பந்தப் பட்டவர்களை மன்னிக்கலாம் ஆனால் வருடா வருடம் நமது நாட்டின் விவசாயிகள் வேறு வழி இல்லாமல் எலிக்கறியை  சாப்பிட்டு , தற்கொலை செய்துகொள்கிறார்கள் . இதற்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் கொள்ளை லாபம் அள்ளித்தரும் ‘விளையாட்டில் ‘ அதிக கவனம் செலுத்துகிறார் ….வருடா வருடம் நடக்கும் விவசாயிகளின் தற்கொலையில் சம்பந்தப்பட்ட வேடிக்கை பார்த்த   அனைவரும் கொலையாளிகள் தானே !!

இந்த மூன்று பெயர் என்றால் ஒரு நியாயம் , பண வல்லமை படைத்தவர்கள்  என்றால் இன்னொரு நியாயமா !!! அண்ணா ஹாசரே போராட்டம் மூலம்  இந்த மாதிரியான ‘கொடுமையான உயிர்பலிகள் ‘ குறைந்தால் எனக்கு நிம்மதி தரும் .

உதயசூரியன்

அன்புள்ள ஜெயமோகன்,

நீங்கள் இந்த விசயத்தை முடித்துக் கொண்ட பிறகும் இதை எழுதுகிறேன்.மூவரின் தூக்கு தொடர்பாக நீங்கள் எழுதிய பதிவிற்கு உங்களைக் குறை கூறி வந்த மடல்கள் என் மனதை மிகவும் புண்ணாக்கியதால் இதை எழுதுகிறேன்.கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் ஒரு பதிவைக் கூட விடாமல் படித்துவருகிறேன்.உங்களுக்கு இந்தப் பதிவு தொடர்பாக வந்த பெரும்பாலான மடல்கள் உங்களை ஒரு நீதிபதியாக நினைத்து எழுதப்பட்டது என்றே நான் நினைக்கிறேன்.

ஆனால் நான் என்றும் உங்களை ஒரு எழுத்தாளனாகவே பார்க்கிறேன்.எனவே நீங்கள் அடிக்கடி கூறுவதைப்போன்று ஒரு எழுத்தாளன் சொந்த வாழ்க்கை அனுபவம் சார்ந்தே பேச முனையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.தூக்குக் கயிறையும் அதன் வலியையும் நீங்கள் நன்றாக அறிவீர்கள்.நீங்கள் எழுதிய அந்தப் பதிவு என்னை இந்தப் பிரச்சனையைத் தாண்டி உங்கள் சொந்த வாழ்க்கையை நோக்கி மீண்டும் ஒருமுறை பார்க்கவைத்தது.”தோன்றாத்துணை” பதிவைப் படித்துவிட்டு மனம் ஒடிந்து போய்க் கிடந்த தருணத்தை இப்பொழுது நினைவு கூர்கிறேன். ஒரு சாதாரண மனிதனாக அந்த மூவரின் தூக்கு ரத்து செய்யப்படவேண்டும் என்றே சொல்வேன்.

கோ ஜெயன்

நாகர்கோயில்

அன்பு ஜெயமோஹன்,

வணக்கம். தூக்கு தண்டனை பற்றிய தங்களின் பதிவைக் கண்டேன். ஒரு இளம் பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் தற்போது இது அரசியல் ரீதியாகவே அணுகப் பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சான்றோர் அமைப்பு என்ற இயக்கத்தில் அமரரான சுந்தரராமசாமியும் தூக்கு தண்டனையை எதிர்த்து வந்தார். சமூகமே சேர்ந்து ஒருவரைக் கொல்வது என்பது கண்டிப்பாக ஏற்க முடியாததே. பெரியவர் ஜெயகாந்தனும் இதே சிந்தனை கொண்டவரே.

ஆனால் நமது சிந்தனையாளர் தமது அரசியல் பின்னணியைத் தாண்டி தண்டனை சட்டத்தின் எல்லா அம்சங்களையும் விவாதித்து எவை எவை எந்த எந்த காரணத்தினால் ஏற்புடையவை ஆகா என்று அடையாளம் காண வேண்டும். பாலியல் ரீதியான குற்றங்கள், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள், திட்டமிட்ட வன்முறைக் குற்றங்கள் இவற்றிலிருந்து சமூகம் காக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. சிறைச் சாலைகள் ஒருவர் மேம்பட்ட ஆரோக்கியமான மனநிலையுடன் வெளிவருவதற்கான எந்த ஏற்பாடும் இன்றி இருப்பது மட்டுமல்ல பல கைதிகள் இன்னும் மோசமான மன வக்கிரங்களுடன் வெளிவருவது கண்கூடு. தேர்ந்தெடுத்து தமது மனித நேய நிலைப்பாட்டை வெளிப்படுத்த மட்டுமே தூக்கு தண்டனை பற்றிய அரசியல் நடவடிக்கைகள் பயன்படுகின்றன.

பலவேறு காரணங்களினால் குறிப்பாக சமூகத்தின் குரூரத்தினாலும் நிராகரிப்பாலும் தற்கொலைக்குத் தள்ளப் படுவோர் பற்றியோ அல்லது குறைந்த பட்ச சுகாதார மற்றும் கௌரவ சாத்தியமற்ற நிலையில் வாழும் நலிந்தோர் – தலித்துகள் நிலையும், குழந்தைத் தொழிலாளிகளை உறிஞ்சி நாம் வாழ்வதும் தூக்கு தண்டனைக்கு நிகரான கொடூரங்களே. கருத்துச் சுதந்திரமே கேள்வியாயிருக்கும் நம் சூழலில் வெளிவரும் கருத்துக்களில் சுதந்திரமான- சமூகத்தின் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய- சிந்தனை இல்லை. உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டே அரசியல் முகவரியைத் தக்க வைத்துக் கொள்வோர் தமிழ்ச் சூழலின் மையமாகி வருவது சோகம்.

அன்பு

சத்யானந்தன்.

தூக்கிலிருந்து மன்னிப்பு

தூக்கு-கடிதங்கள்

முந்தைய கட்டுரைசித்பவானந்தர்-ஒருகடிதம்
அடுத்த கட்டுரைகடிதங்கள்