கொட்டுக்காளி, கடிதங்கள்

கொட்டுக்காளி: அஜிதன்

அன்புள்ள ஜெ,

கொட்டுக்காளி பற்றிய அஜிதனின் விமர்சனத்தை வாசித்தேன். உங்கள் பக்கத்தில் சினிமா விமர்சனம் வருவதில்லை. கொட்டுக்காளி ஓர் அரிய நிகழ்வு என்பதனால் அந்த விமர்சனம் என நினைக்கிறேன்.

நானும் அந்த சினிமாவைப் பார்த்தபோது அது சாதிய ஒடுக்குமுறை, ஆணாதிக்கம் போன்ற வழக்கமான விஷயங்களைப் பேசும் வழக்கமான பிரச்சாரப் படம் அல்ல என்று தான் நினைத்தேன். அந்தக் கதைநாயகியின் ஆழமான அமைதிதான் உண்மையான கதை. அதன் வழியாக அப்பெண் முன்வைக்கும் எதிர்ப்பு. அது இங்கே சங்ககாலம் முதல் இருந்துகொண்டிருக்கிறது. அஜிதன் அதை ஆழமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஒன்று அதிகமாக வெளிப்படும் ஹிஸ்டீரியா அல்லது ஆழமான அமைதியாக வெளிப்படும் மெலன்கொலியா இரண்டும்தான் பெண்ணின் எதிர்ப்பாக உள்ளது. அதன் முன் எல்லாமே தோற்றுப்போய்விடுகிறது. சாமியாடி வழியாக வெளிப்படும் மரபும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. சாமிகளும் செயலற்றுவிடுகின்றன. இனி என்ன என்பதைச் சுட்டிக்காட்டி சினிமா முடிகிறது.

வலுவான கலைப்படைப்பு கொட்டுக்காளி. அதற்கு கலைப்பூர்வமான பார்வைதான் வேண்டும். அது உருவாகாமல் இங்கே கலைப்படம் உருவாகாது. உருவானாலும் அது ரசிக்கப்படாது. வழக்கமான சினிமாப்பார்வை கொட்டுக்காளியை ஒன்று மட்டம்தட்டி காலியாக்கிவிடும். அல்லது தப்பான அரசியல்காரணங்களுக்காக புகழ்ந்து காலியாக்கிவிடும். பொலிட்டிக்கல் கரெக்ட் ஆனல் வழக்கமான கருத்துக்களை கொட்டுக்காளி சொல்கிறது என்று புரிந்துகொண்டு புகழ்வதும் அதை ரசிப்பதற்கு எதிரான செயல்தான்.

கலையில் எது சொல்லப்படவில்லை என்பதே முக்கியமானது, அதை நோக்கிச் செல்வதே ரசிகன் செய்யவேண்டியது. இதையெல்லாம் இயக்குநர் உத்தேசித்தாரா என்பது போன்ற அசட்டுக்கேள்விகள்தான் இங்கே உருவாகின்றன. இயக்குநர் உத்தேசிக்கலாம், இல்லாமலிருக்கலாம், அது பிரச்சினை அல்ல. அதில் என்ன இருக்கிறது, நமக்குள் அது என்ன செய்கிறது என்பதுதான் உண்மையான ரசிகனின் பார்வையாக இருக்கமுடியும். உண்மையில் சிலசமயம் இயக்குநர் உத்தேசிக்காமலேயே ஆழம் உருவாகிவிடும். அது சினிமா என்ற கலையின் ஆழம். அது விசுவல்களை முன்வைக்கிறது. அந்த விசுவல்கள் அளிக்கும் அர்த்தம் என்ன என்பது இயக்குநரின் கையில் இல்லாத ஒன்று.

கொட்டுக்காளி திரைப்படவிமர்சனத்துக்காக வாழ்த்துக்கள்

கே.ஆர்.நாகராஜன்

அன்புள்ள ஜெ

கொட்டுக்காளி விமர்சனத்தை அஜிதன் எக்ஸ் தளத்தில் போட்டிருந்தார். அதை வாசித்த பலபேர் அப்போதுதான் அஜிதன் யார் என விசாரித்து தெரிந்துகொண்டு எதிர்வினை செய்திருந்தார்கள். எல்லாம் வழக்கமான அரட்டையும் வசையும்தான். ஆனால் அவர்கள் இந்த சினிமாவிமர்சனம் வருவது வரை அவரை தெரிந்திருக்கவில்லை. அதேசமயம் முகநூலில் எவருக்குமே இப்படி ஒரு விமர்சனம் வந்தது தெரியவில்லை. ஆகவே எதிர்வினைகள் இல்லை. இந்த எக்ஸ் தளம், ஃபேஸ்புக் எல்லாமே தனித்தனி உலகங்கள். ஒன்றில் இருப்பவர் இன்னொன்றை வாசிப்பதில்லை. எவரும் வெளியே போய் எதையுமே தெரிந்துகொள்வதில்லை. இதை கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது.

நாதன்

முந்தைய கட்டுரையோகம் – அறிமுகப்பயிற்சி
அடுத்த கட்டுரைதனிமையின் நூறு ஆண்டுகள் –ரோட்ரிக்ஸ்