மதுரைக்காரனாக நான் வாசித்து மெய்சிலிர்த்த நாவல் குமரித்துறைவி. மதுரை மீனாட்சிக்குக் குமரித்துறைவி என்ற பெயரும் உண்டு என்று நான் இப்போதுதான் அறிந்துகொண்டேன். மிகச்சிறிய நாவல், ஆனால் நினைவில் வளர்ந்துகொண்டே இருக்கிறது.
நான் மதுரையை விட்டு .
வந்து 29 ஆண்டுகள் ஆகிறது . மதுரை நினைவுகளும் மங்கலாகிவிட்டன. சித்திரைத்திருவிழா, மீனாட்சிக்கல்யாணம் எல்லாம் நான் போனதே இல்லை. வாசலில் நின்று பார்த்ததுடன் சரி. என் அப்பா திராவிட இயக்கக்காரர். பின்னாளில் இடதுசாரியாக மாறினார். அவருக்கு இதெல்லாம் collective hysteria என்ற எண்ணம்தான் இருந்தது.
(ஆனால் அறிஞர் அண்ணா இறந்தபோது அவர் கண்ணீருடன் சென்னைக்கு ஓடியதும், அங்கே கூடிய பெருங்கூட்டமும் எல்லாம் அவர் பேச்சில் வந்துகொண்டே இருக்கும். அதுவும் அப்படித்தானே என்று நான் நினைப்பதுண்டு)
இந்த நாவலையும் collective hysteria என்று சொல்லலாம். நான் அந்த மனநிலையில்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நானும் இடதுசாரிதான். திமுக ஆதரவாளனும்கூட. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தேன். என் தங்கை திருமணம், என் மகள் திருமணம் எல்லாம் நினைவில் வர ஆரம்பித்தன. கண்கலங்கிவிட்டேன்.
இந்த மனநிலையை வெளியே நின்றுகொண்டு sentiment என்று சொல்லிவிடலாம். ஆனால் இந்தவகையான உணர்ச்சிகள்தான் வாழ்க்கையே. இது இல்லாத வாழ்க்கை வரண்டது. அப்படி வாழ்பவர்கள் உண்மையில் எவருமே இருக்கமுடியாது.
இந்த நாவலுக்காக மனமார்ந்த நன்றி
டாக்டர் சிவராமகிருஷ்ணன்
குமரித்துறைவி வாங்க
அன்புள்ள சிவராமகிருஷ்ணன்,
மெல்லுணர்வுகள் ( sentimens), மிகையுணர்வுகள் (melodrama), உணர்வுநிலைகள் (emotions) ஆகியவற்றை வேறுபடுத்திப்பார்க்க பொதுவாக நுண்ணுணர்வற்றவர்களால் இயலாது. அவர்களைப் பொறுத்தவரை தங்கள் உணர்வுகள் எல்லாம் உணர்வுநிலைகள், பிறருடையவை மெல்லுணர்வோ மிகையுணர்வோ. இந்த மொண்ணைத்தனம் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே உண்டு.
மெல்லுணர்வுகள் என்பவை அன்றாட வாழ்க்கை சார்ந்தவை, உடனடித்தன்மை கொண்டவை, பயன்பாடு சார்ந்தவையும்கூட. அவற்றுக்கு வரலாற்று ஆழமோ பண்பாட்டு ஆழமோ இருக்காது. மிகையுணர்வுகள் என்பவை மெல்லுணர்வுகளை திட்டமிட்டு பெருக்கிக்கொள்பவை.
உணர்வுநிலைகள் என்பவை மனிதனை இங்குள்ள வாழ்க்கையுடன் இணைப்பவை. தலைமுறைகளாகக் கைமாறப்பட்டு நிலைகொள்பவை. பெரும்பாலும் ஆழுளம் சார்ந்தவை, ஆகவே தனிமனிதர்களின் சிந்தனை, தர்க்கம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை. வரலாற்றிலும் பண்பாட்டிலும் நாமறிய முடியாத ஆழம் முதல் இருந்துகொண்டிருப்பவை.
அந்த உணர்வுநிலைகளைச் சார்ந்தே எல்லா விழுமியங்களும் நிலைகொள்கின்றன. அறம், அன்பு, கருணை, நீதி என நாம் சொல்லும் அனைத்துமே உணர்வுநிலைகள் சார்ந்தவையே. இலக்கியங்கள் எவையானாலும் அந்த உணர்வுநிலைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ உருவாக்கும்தன்மை கொண்டவை. அந்த உணர்வுநிலைகளை இழக்குந்தோறும் நாம் விழுமியங்கள் அற்றவர்களாக, தன்னலம் மிக்கவர்களாக ஆகிறோம்.
உணர்வுநிலைகளின் அடிப்படை என்பது நம்முள் வழிவழியாக வரும் ஆழ்படிமங்கள். அவை தொன்மங்களாகவும் புராணங்களாகவும் மாறி மதங்களுக்குள் நிலைகொள்கின்றன. நம் மகள் மேல், தங்கைமேல் நாம் கொள்ளும் உணர்வுநிலை என்பது மிகத்தொல்பழங்காலத்தில் உருவாகி ஆழ்படிமமாக நம்முள் உறைகிறது. அதுவே நம்முள் உணர்வுநிலையாக வெளிப்படுகிறது. இன்னொரு பக்கம் மததில் குமரி என்னும் தெய்வமாகவும் நிலைகொள்கிறது.
நாம் மதத்தை, வழிபாட்டுமுறைகளை நிராகரிக்கலாம். நமக்கு அதற்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அத்துடன் அந்த ஆழ்படிமங்களை நிராகரித்துவிட முடியாது. நிராகரித்தால் நாம் பல்லாயிரமாண்டுக்கால மரபை இழந்தவர்களாகிறோம். அந்த மரபு மதங்கள் முளைக்காத தொல்குடிக்காலம் முதல் இருந்து வருவது. மதம் அதற்குப்பின் வந்தது. மதம் அழிந்தாலும் அம்மரபு நிலைகொள்ளவேண்டும்.
அதற்கு அந்த தொன்மங்களை வெறும் ஆழ்படிமங்களாக மதத்துடன் தொடர்பில்லாமல் உள்வாங்கிக்கொள்வதுதான் வழி. கமல்ஹாசன் சொன்னார், ‘நான் நாத்திகன். ஆனால் ராதாவின் காதல் என்னை கண்கலங்க வைக்கிறது. அந்த உணர்வை இழந்துவிட்டால் நான் இந்தியக் கலைகளையே இழந்துவிடுவேன்’ அதுதான் நான் சொல்லும் மதம்கடந்த ஆழ்படிமம் என்பது.
அவ்வாறு ஒருவர் மீனாட்சியை உள்வாங்க முடியும். அந்த உருவகத்தை ஒருவர் கடவுள் என எண்ணவேண்டாம். வழிபடவேண்டாம். பக்திகொள்ள வேண்டாம். ஆனால் அதை ஓர் அழகிய கலைவடிவாகக் காணலாம். ஒரு படிமமாக எடுத்துக்கொள்ளலாம். அதனூடாக தன் ஆழுள்ளத்தில் வாழும் archetype நோக்கிச் செல்லலாம். குமரித்துறைவி அப்படிச் செல்லும் ஒருவருக்கான நாவலும்கூட.
நான் கொற்றவை என்னும் நாவலை எழுதினேன். நம் ஒவ்வொருவருடைய ஆழத்திலும் உறையும் பேரன்னை நோக்கிச் செல்லும் ஒரு பயணம் அது. மதம் சார்ந்தது அல்ல. மதம்கடந்த ஆன்மிகம் கொண்டது. தமிழ் நவீன இலக்கியத்தில் மதம்கடந்த ஆன்மிகத்திற்கான மூலநூல் என்றே கொற்றவையைச் சொல்லமுடியும். அந்நாவலின் நீட்சியே குமரித்துறைவி.
இன்றைய வாழ்க்கையில் மதம்கடந்த ஆன்மிகம் ஒன்றுக்கான தேவை உள்ளது. மதத்தின் சடங்குகள், ஆசாரங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் செல்பவர்களுக்கானது அது. அத்தகையோர் இன்று ஒருவகை அருவமான தியான- யோக முறைகளையே நாடுகிறார்கள். ஜே.கிருஷ்ணமூர்த்தி அல்லது ஓஷோ அல்லது நவீன குருமார்கள். அவர்களிடமிருக்கும் பெரும் குறைபாடு அந்த தியான- யோக முறைகளுக்கு நம் பண்பாட்டிலும் , நம் ஆழுள்ளத்திலும் ஊடுருவிச்செல்லும் படிமங்கள் இல்லை, குறியீடுகள் இல்லை என்பதுதான்.
அந்த வகைப் பயணத்தில் உள்ளவர்களுக்கு கொற்றவையும், குமரித்துறைவியும் அளிக்கும் ஆழ்ந்த படிமவுலகும் அதனூடாக வெளிப்படும் ஆழ்படிமங்களும் மிகப்பெரிய செல்வங்கள். இந்நாவல்கள் அத்தகைய ஒரு பயணத்தினூடாகக் கண்டடடைந்தவற்றை அத்தகைய பயணத்தில் இருப்பவர்களுக்காக முன்வைப்பவை. ஆகவே வெறும் நாவல்கள் அல்ல, மெய்யியல் – தியான நூல்களும்கூட.
ஜெ