கொற்றவை மின்னூல் வாங்க
கொற்றவை வாங்க
அன்புள்ள ஜெ
கொற்றவை நாவலை நான் இன்றுதான் வாசித்து முடித்தேன். 2017 ல் மதுரை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய நூல்.எட்டு ஆண்டுகள் என் கையில் இருந்திருக்கிறது. இரண்டு முறை இருபது பக்கம் வரை வந்திருக்கிறேன். பிறகு எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. இதை வாசிக்க எனக்கு இருக்கும் தடைதான் என்ன? அந்தக் கேள்விக்கு நான் கண்டடைந்த பதில் இதுதான். நான் வழக்கமான ஒரு கதையை எதிர்பார்க்கிறேன். கதைக்களம், கதைநாயகியும் நாயகனும், சம்பவங்கள் வழியாக கதையின் ஓட்டம் ஆகியவை. அதை எதிர்பார்த்து வாசிப்பதனால் அதை தேடிக்கொண்டே இருக்கிறேன். அது இல்லாததனால் ஏமாற்றம் அடைகிறேன். அது எரிச்சலாகவும் ஆகிறது. அத்துடன் சொல்லப்படும் நிகழ்வுகளில் இருந்து ஒரு சீரான கதையோட்டத்தை உண்டுப்பண்ணிக்கொள்ள முடியுமா என்றும் பார்க்கிறேன். அதனால்தான் அந்த ஏமாற்றம்.
இந்த ஏமாற்றம் எனக்கு ஆரம்பத்தில் உலகச் சினிமா பார்க்கும்போதும் வந்துள்ளது. கதாநாயக அறிமுகம் எங்கே என்று தேடிக்கொண்டே இருப்பேன். ஒருவரை கதநாயகன் என நினைத்து படம்பார்த்து ஏமாறுவேன். அதைக் கைவிட்டப் பிற்பாடுதான் என்னால் உருப்படியாகப் படம்பார்க்கவே முடிந்தது. அதைப்போல கொற்றவையை வாசிக்கவும் கதை என்ற எதிர்பார்ப்பைக் கைவிட்டேன். என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அதை மட்டுமே வாசிக்க ஆரம்பித்தேன். அதிலிருந்து என்ன கிடைக்கிறதோ அது போதும் என நினைத்தேன்.
அந்த வாசிப்பு பயனளித்தது. ஒருமாதக் காலத்தில் கொற்றவையை ஒருமுறை வாசித்து முடித்தேன். வாசித்ததும் அதன் அமைப்புப் பிடிகிடைத்தது. உடனே மீண்டும் ஆரம்பத்தில் இருந்து மீண்டும் கொற்றவையை வாசித்து இன்றைக்கு முடித்தேன். இது என் வாழ்க்கை முழுமைக்குமான அனுபவம். என் வாசிப்பில் இன்னொரு படைப்பு எனக்கு இந்த அளவுக்கு ஒரு நிறைவை அளித்ததில்லை. நான் நவீன இலக்கியம் வாசிக்க ஆரம்பித்து 9 ஆண்டுகள் ஆகின்றன. வாசித்துக்கொண்டே இருக்கிறேன். என் மனதுக்குப் பிடித்த ஏராளமான படைப்புகள் உள்ளன. ஆனால் எந்தப் படைப்பும் என் பார்வையை இந்த அளவுக்கு பாதித்ததில்லை. படித்ததிலேயே மூன்றுமாதக்காலமாக திளைக்க வைத்ததில்லை.
கொற்றவை நாவலை வாங்கியபோது என்னுடன் வந்த நண்பர் என்னை அந்த விலைகொடுத்து அதை வாங்கியதற்காகக் கேலி செய்தார். நான் அதை வாசிக்கக் கஷ்டப்படுவதைக் கண்டும் சிரித்தார். அவர் ஓர் இடதுசாரித் தோழர், உங்களுக்கும் அவருக்கும் அறிமுகம் உண்டு. ஆனால் இன்றைக்கு யோசித்துப்பார்க்கிறேன். நல்ல திரையரங்கிலே சென்று ஒரு சினிமா பார்க்கும் செலவுதான் இந்தப் புத்தகத்தின் விலை. ஒரு நல்ல அசைவச்சாப்பாட்டுக்கே மதுரையில் இந்த பில் வரும். ஆனால் பொழுதுபோக்கு என்று பார்த்தாலே இது மூன்றுமாதம் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. நூறு சினிமாவுக்குச் சமம். என் வாழ்க்கைப்பார்வையையே மாற்றியிருக்கிறது. ஆனால் இதை வெளியே உள்ள ஒருவரிடம் சொல்ல முடியாது
இந்த நாவலைப் பற்றி ஒரு கேள்வி உள்ளது. இதில் தமிழகத்தின் பல்லாயிரக் கணக்கான ஆண்டுக்காலத்து வரலாறு உள்ளது. (ஆச்சரியமான ஒரு விஷயமுண்டு. இந்நாவலை வைத்துக் கீழடியைப் புரிந்துகொள்ள முடியும். மதுரை இப்போதிருக்கும் இடத்தில் இருக்கவில்லை என்று கொற்றவை நாவல் சொல்கிறது. அது இன்னொரு இடத்தில் இருந்து கண்ணகியால் எரியூட்டப்பட்டபின் இப்போதிருக்கும் இடத்துக்கு மாற்றப்பட்டது. அதற்கு முன்பும் மதுரை இடம் மாறியதெல்லாம் நாவலிலே உள்ளது. வைகை திசைமாறியதும் உள்ளது. கீழடிதான் பழைய மதுரை என்று நினைத்துக்கொண்டேன்) கற்காலம் முதல் தொடங்கி தமிழும், தமிழர்த்தெய்வங்களும் உருவாகி வந்த கதை சமகாலம் வரை அற்புதமாகச் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் இது ஒரு பெரும் கனவு போலவும் உள்ளது. நான் மூன்றுமாதம் கனவிலேயே வாழ்ந்தேன் என்று சொல்லலாம். இன்றைக்கு நமக்குத்தேவையானது objective ஆன வரலாறு. அதுதான் நம் கதையை உலகுக்குச் சொல்லும். கீழடி வந்தபிறகுதான் சங்ககாலம் என்பது வெறும் கற்பனை அல்ல, அது வாழ்ந்த நாகரீகம் என்பது ஆணித்தரமாக நிறுவப்பட்டது. இந்தவகையான கற்பனைகளினால் நாம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம் என்று ஒருவர் சொன்னால் எப்படி மறுக்கமுடியும்?
சோம. நாச்சியப்பன்
அன்புள்ள நாச்சியப்பன்,
கொற்றவையை ஒரு நவீன நாவலாக வாசிக்கலாம், அல்லது நம் காப்பியங்களில் ஒன்றாக வாசிக்கலாம். வழக்கமான நாவலாக வாசிக்கமுடியாது. ஆகவேதான் அதைப் புதுக்காப்பியம் என்று சொல்லி வெளியிட்டோம். அதன் நடைகூட உரைநடை அல்ல. ஒருவகை கவிதைதான். பல இடங்களில் புதுக்கவிதை. சில இடங்களில் மரபுக்கவிதையே உரைநடைவடிவில் இருக்கும். அந்த புரிதல் கொண்ட வாசகர்கள் வருவார்கள் என்னும் நம்பிக்கையில் எழுதினேன். 2003ல் வெளிவந்த நாவல் அது. இப்போது 22 ஆண்டுகள் ஆகின்றன. இன்று வாசிப்பவர்கள் அந்நாவல் வெளிவந்தபோது ஆரம்பப்பள்ளிகளில் இருந்தவர்கள்.
கொற்றவை நாவல் ஒரு கனவுதான். மிக இளமைக்காலம் முதல் எனக்கு வந்துகொண்டிருந்த ஒரு கனவு அது. நான் சிறுவனாக இருந்தபோது, ஒரு கடுமையான காய்ச்சலில் என் நனவுள்ளம் கரைந்துவிட்டிருந்தபோது, அக்கனவு மெய்யெனவும் மெய்யை மீறிய மெய்யெனவும்ம் வந்து நிலைத்தது. இன்றும் எந்த மெய்நிகழ்வைவிடவும் துல்லியமாக அந்தக் கனவு நினைவில் நிற்கிறது. நீரில் மூழ்கிக்கிடக்கும் ஒரு மாபெரும் சிலையைப் பார்த்தபடி நான் நீந்திச்செல்கிறேன். மிகப்பெரிய சிலை, அதன் மூக்கின் நீளத்துக்கே நான் நீந்தவேண்டியிருந்தது. அக்கனவு என்னை பெரும் உளக்கிளர்ச்சியுடன் கன்யாகுமரிக்கு மீண்டும் மீண்டும் செல்லவைத்தது. குமரிக்கடலுக்குள் பலமுறை உழலச் செய்தது. குமரிக்கடலில் உள்ள ஆழமில்லாத பகுதிகளுக்கெல்லாம் கூடச் சென்றுள்ளே.
நீருள் மூழ்கிக் காத்துக்கிடக்கும் பேரன்னை. குமரி. அவளை நான் என் தெய்வமென எனக்குள் வைத்திருந்தேன். அந்தக் கனவைத்தேடித்தான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் வாசித்தேன். 2000 வாக்கில் எனக்கு அறிமுகமான நண்பர் குமரிமைந்தன் குமரிநிலம் பற்றிய கனவிலேயே வாழ்ந்தவர். அவரிடமிருந்து அக்கனவை நான் பெற்றுக்கொண்டேன். ஆ
னால் அவரைப்போல அதை நேரடியான வரலாறு என நான் எண்ணவில்லை. வரலாற்றையும் தொன்மத்தையும் எப்போதும் பிரித்தே வைத்திருந்தேன். வரலாற்றாய்வில் எப்போதும் என்னுடையது கறாரான புறவயத்தன்மையை, நிரூபணத்தன்மையை, உலகளாவிய நெறிகளைச் சார்ந்ததே. ஆனால் என் கனவு கட்டற்றது. ஆகவே வரலாற்றின் கட்டுப்பாடுகள் ஏதுமில்லாமல் நான் என் கனவுகளுக்குள் சென்றேன், அதுவே கொற்றவை என்னும் படைப்பாக ஆகியது.
கொற்றவையில் உள்ள அந்தக் கனவு ‘பஃறுளி ஆற்றொடு பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும்’ திகழ்ந்த அந்நிலம் பற்றியது. அது என்றும் தமிழுள்ளத்தில் இருந்தது, அதை விரிவாக்கம் செய்ததே என் பணி. அது இளங்கோவடிகளில், பானம்பாரனாரில் இருந்து புதுமைப்பித்தனின் கபாடபுரம் வரை அறுபடாமல் நீடித்த ஒன்று. அக்கனவுக்கு நேரடியான வரலாற்று அடித்தளம் இருக்கவேண்டியதில்லை. அப்படி ஒரு கனவை ஒரு சமூகம் காலந்தோறும் மீட்டிக்கொண்டே இருக்கிறதென்பதே மிகப்பெரிய ஒரு பண்பாட்டுநிகழ்வுதான்.
ஒரு சமூகம் வரலாற்றை இரண்டு வடிவில் தன்னுள் கொண்டிருக்கவேண்டும். வரலாற்றுப்பிரக்ஞை என்பதையே நான் இரண்டு அடுக்காகத்தான் பார்க்கிறேன். ஒன்று, புறவயமான நிரூபிக்கத்தக்க வரலாறு. இன்னொன்று, அகவயமான வரலாற்றுக் கனவு. இரண்டும் வேறுவேறு. வரலாற்றுக் கனவு தனக்கு தேவையான அளவில் வரலாற்றுச் செய்திகளை எடுத்துக்கொள்ளலாம். வரலாற்றுச் செய்திகள் வரலாற்றுக் கனவில் படிமங்களாக மாறிவிடுகின்றன. படிமங்கள் என்பவை நம்முள் உறையும் ஆழ்படிமங்களை நோக்கி நாம் செல்வதற்கான ரகசிய வழிகள். நம்முள் நம்மை அழைத்துச்செல்லும் ஒளிமிக்க தேவதைகள்.
உண்மையில் வரலாற்றுச் செய்திகள் எல்லாமே துகள்கள்தான். அவை தன்னளவில் முழுமையோ பொருளோ கொண்டவை அல்ல. நாம் அவற்றை தர்க்கபூர்வமாக இணைத்துக்கொண்டு நாம் வரலாறு என்று சொல்லும் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறோம். அதைப்போல அவற்றை படிமங்களாக்கி, கனவால் இணைத்துக்கொண்டு, நம்முள் உறையும் ஆழ்படிமங்களை சித்திரப்படுத்திக் கொள்ளலாம். அதையே கொற்றவையில் செய்திருக்கிறேன்.
வரலாற்றுச்சித்திரம் உலகியல் சார்ந்தது, அரசியலுக்கும் இன்னும் பல அறிவுத்துறைகளுக்கும் உரியது. வரலாற்றுக் கனவு நாம் நம் முன்னோரை, நம் பண்பாட்டின் ஒட்டுமொத்தத்தை, நம் மொழியின் அர்த்தம் குடிகொள்ளும் ஆழப்பெருவிரிவை, கடவுள்கள் உறையும் வெளியைச் சென்றடைவதற்குரியது. கொற்றவை அதற்குரிய நூல். அறிவுப்பயிற்சியாகவோ, மனமகிழ்வாகவோ வாசிப்பதற்குரியதல்ல. அது ஓர் ஆழ்நிலை அனுபவம்.
இதை எந்த வாசகருக்கும் நான் உறுதிபடச் சொல்வேன், ஆன்மிகம் மற்றும் மெய்யியல் சார்ந்த அகப்பயணம் ஒன்றை நிகழ்த்திக்கொள்ளும் எவருக்கும் கொற்றவை மிகமுக்கியமான வழிகாட்டி நூல். தமிழில் கிடைக்கும் எந்த மெய்யியல்நூல்களுக்கும், ஞானநூல்களுக்கும் சற்றும் குறைந்தது அல்ல. அதை வாசிக்கலாம், அதற்கப்பால் ஊழ்கம் (தியானம்) வழியாகவும் முன்செல்லலாம். ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு சேரநாட்டான் எழுதிய சிலம்புக்கு இன்னொரு சேரநாட்டான் எழுதிய வழிநூல் அது
ஜெ