மழைப்பயணம் என்ற பேரை எப்போது சூட்டினோம் என்று தெரியவில்லை, அது சரியாகவே பொருந்திக்கொண்டுவிட்டது. 2008 வாக்கில் கிருஷ்ணன் சொன்னார், அவர்கள் ஒருமுறை பீர்மேடு சென்று அங்கே கோயிலுக்குச் சொந்தமான ஒரு விடுதியில் குறைவான கட்டணத்தில் தங்கியதைப் பற்றி. அவ்வாண்டு நானும் கிளம்பினேன். பெயர் போடப்பட்டது. அதன்பின் மழைக்காலம் என்றாலே மழைப்பயணம் தேவை என ஆகிவிட்டது.
இவ்வாண்டு கடும் நேர நெருக்கடி. இப்போது எங்கள் விழாக்கள் பெருகிவிட்டன. மூன்று விருதுவிழாக்க- குமரகுருபரன் விருது, தூரன் விருது, விஷ்ணுபுரம் விருது. இந்தியாவில் இரண்டு கருத்தரங்குகள்- குரு நித்யா காவிய அரங்கு மற்றும் குருபூர்ணிமா அரங்கு. அமெரிக்காவில் ஒரு கருத்தரங்கு- பூன் குன்றில் எமர்சன் நினைவுக் கருத்தரங்கு. இதைத்தவிர எப்படியும் மாதம் ஒரு வகுப்பை நான் நடத்துகிறேன். நடுவே சினிமாத்தொழிலும் செய்கிறேன்.
ஆனாலும் பயணத்தை விட்டுவிட முடியாது. மழை என்னிடம் பயணம் பயணம் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் ஜூன் முதலே நாகர்கோயிலில் மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இதை எழுதுகையிலும் மழைப்பெருக்கு வெளியே. ஆனாலும் மழைப்பயணம் என்னும் சொல் வசீகரமானது, தவிர்க்கமுடியாதது. ஆகவே கிளம்ப முடிவெடுத்தோம்.
ஆகஸ்ட் 25 அன்று காலையில் சிவகுருவின் நூற்பு பயிலகம் திறப்புவிழா முடிந்து அங்கிருந்தே நண்பர்களுடன் பண்ணாரி சென்றேன். கோவை மணிகண்டன் என்னும் நண்பரின் மாமனார் வீடு அங்கே. அவர் அங்கிருந்து எங்களுடன் சேர்ந்துகொள்வதாக ஏற்பாடு. நான், வழக்கறிஞர்கள் கிருஷ்ணன், சாமிநாதன், ஈஸ்வர மூர்த்தி மற்றும் இளம்நண்பர் சிபி ஆகியோர் சென்றடைந்தோம்.
திருப்பூரில் இருந்து ஆனந்த்குமார், இளம்நண்பர் சபரீஷ்குமார், சுந்தரபாண்டியன் ஆகியோர் அங்கே வந்திருந்தார்கள். ஒரு சிறு சிற்றுண்டி. அங்கே எங்கள் வண்டியை விட்டுவிட்டு இன்னொரு வண்டியில் மைசூர் சென்றோம். இரவில் மைசூரில் ஒரு வாடகை இல்லத்தில் தங்கினோம். பெங்களூரில் இருந்து மேஜர் கோகுல், நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் வந்திருந்தார்கள். அனைவரும் சென்று ஓர் உணவகத்தில் சாப்பிட்டார்கள். நான் பழங்கள்தான், வழக்கம்போல்.
நான் முந்தையநாள் ரயிலில் சரியாகத் தூங்கவில்லை. நாகர்கோயில் ஈரோட்டுப் பயணம் என்றாலே அப்படித்தான். அதிகாலையில் ஈரோட்டில் இறங்கவேண்டும் என்பதனாலேயே சரியாகத் தூங்குவதில்லை. ஆகவே முன்னரே படுத்து தூங்கிவிட்டேன். அதிகாலையில் கிளம்பி கூர்க் பயணம் தொடங்குவதென்று திட்டம்.செல்வேந்திரன் விமானத்தில் மைசூர் வந்து அறைக்கு பின்னிரவில் வந்து சேர்ந்தார். அவரை அரைமணிநேரத் தூக்கத்துக்குப் பின் கிருஷ்ணன் எழுப்பி விட்டுவிட்டார்.
ஆகஸ்ட் 26 அன்று காலையில் மைசூரில் இருந்து மழைமூட்டமும் குளிரும் கொண்ட சூழலில், மங்கிய அழகொளியில் பயணம் செய்தோம். செல்லும் வழியிலேயே காலையுணவு. பன்னிரண்டு மணிக்கு கவிபேட்டா என்னும் இடத்தில் ஒரு டிரக் பயணம். அது மேற்குத்தொடர்ச்சி மலையின் மலைவெட்டு (escarpment ) என நிலவியலாளர்களால் வகுக்கப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையின் உச்சிப்பகுதி அது. அங்கே வந்தறையும் காற்றும் மழையும் அந்த மலையுச்சியை அரித்து செங்குத்தான சரிவாக ஆக்கியுள்ளன. தக்காணப் பீடபூமியின் விளிம்பு மடிந்து எழுந்த மலையுச்சி.
நம்பமுடியாத சாலை. சாலையே அல்ல, மழைநீர் வழிந்து வரும் பாதை. அதில் மாருதி ஜிப்ஸி டிரக்குகளில் ஏறி துள்ளிக்குதித்து நடனமாடி எம்பி காற்றில் பறந்து விழுந்தெழுந்து மேலே சென்றோம். அகன்ற டயர்கள் கொண்டவை அவ்வண்டிகள். அவை மட்டுமே அங்கே செல்லமுடியும், அந்த ஓட்டுநர்கள் மட்டுமே ஓட்டவும் முடியும்.
இந்த எல்லா பயணங்களிலும் விசுவாசமான நாய்கள் கூடவே ஓடி வந்து முழுக்க உடனிருந்து திரும்பி வந்தன. எந்த நோக்கமும் இல்லை, எந்த எதிர்பார்ப்பும் தெரியவில்லை. நாய் ஆனதனாலேயே அக்கடமையைச் செய்தன.எங்களுடன் வந்த சிவப்பன் இளைஞன், உற்சாகமானவன். அவனுக்கான தனி மோப்பங்கள், தடங்கள் அங்கே இருந்தன. மழையில் நனைந்து சிலிர்த்திருந்தான்.
மலையுச்சியில் முகில்கள் சூழ்ந்த பசுமையின் அமைதி. குளிர்காற்றின் வீச்சு. மலைவிளிம்பில் நின்று கீழே மிக ஆழத்தில் தெரிந்த பசுமையான சமவெளியைப் பார்த்துக்கொண்டு நின்றோம். சுற்றிலுமிருந்த புல்வெளி காற்றில் அலைக்கொந்தளித்தது. மரங்கள் இலைகளை உதிர்த்து நின்று காற்றுக்கு ஊளையிட்டன. முகில்கள் நிறைந்த வானில் இருந்து குளிர் இறங்கிக்கொண்டே இருந்தது.
அத்தகைய இடங்களின் கவற்சி என்பது அங்கே நாம் ‘சாதாரணமாக’ வரும் வாய்ப்பில்லை, அங்கே நாம் வாழமுடியாது என்பதே. ஆகவே அங்கே சாதாரண எண்ணங்கள் வருவதில்லை. இயற்கை சாதாரணம் என்னும் மாயத்தால் நம்மிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்கிறது. அந்தத் திரைவிலகி அதன் பிரம்மாண்டத்தை நம் அகத்தால் நாம் உணரும் தருணம் அது.
அங்கே விந்தை என்பவை பல்லாயிரமாண்டுகளாக வீசும் காற்றால் அரிக்கப்பட்டு விதவிதமாக உருக்கொண்டிருந்த பாறைகள். தொங்கும் பாறை என அழைக்கப்படும் ஒன்று அந்தரத்தில் நின்றுகொண்டிருக்கிறது – மிகச்சிறிய பொருத்தில் கீழிருக்கும் பாறையுடன் இணைந்துள்ளது. விரவிலேயே- அதாவது நூறாண்டுகளில் – அது விழுந்துவிடலாம். அப்படி விழுந்த பல பாறைகள் கீழே சரிவுகளில் உருண்டு கிடந்தன. இப்போது அது வானில் முக்கால், மண்ணில் கால் என நின்றிருக்கிறது.
முல்லூர் சமணக்கோயில் நாங்கள் செல்லும் வழியில் இருப்பதாக அறிந்து அதைத்தேடிச்சென்றோம். முன்னரே இருமுறை திட்டமிட்டும்கூட அக்கோயிலைச் சென்றடைய முடியவில்லை. கூகிள் வழிகாட்டி தவறான திசைகளை நோக்கிச் செலுத்திக்கொண்டிருந்தது. வழியில் ஒரு பெண்மணியிடம் விசாரித்தோம். நாங்கள் கடந்துவந்துவிட்டதாகச் சொன்னார். “அங்கே ஏதாவது பிரார்த்தனையா? இங்கேயே இருக்கும் இடம், நாங்கள் போவதே இல்லை” என்றார்
பொ.யு 10 ஆம் நூற்றாண்டில் கொங்கால்வா சிற்றரசர்களின் தலைநகராக மூலூர் இருந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் இவர்கள் வெல்லப்பட்டனர். பார்ஸ்வநாதர், சாந்திநாதர், சந்திரப்பிரபாநாதர், வர்த்தமான மகாவீரர் ஆகியோருக்குக் கட்டப்பட்ட சிறிய கற்கோயில்கள். பொயு 11 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் கொங்கால்வா என்னும் ஆட்சியாளரின் அரசி பொச்சாபி இதை கட்டியிருக்கிறார். தனிக் கற்களில் கன்னட மொழியிலான கல்வெட்டுகளில் அக்காலத்தில் இங்கே சமணசமயம் வேரூன்றியிருந்தமைக்கான சான்றுகள் உள்ளன. Ancient Digamber Jain Temple, Mullur, Nidtha, District – Kodagu (Karnataka)
மழையில் ஆலயங்களைச் சுற்றியிருந்த புல்வெளி பசுமையொளி கொண்டிருந்தது. கோயில்களின் கற்சுவர்கள் குளிர்ந்திருந்தன. குளிருக்கு அமைதியும் உண்டு என நினைக்கிறேன். வெப்பம் என்பது ஓர் ஓசை. இருண்ட கருவறைக்குள் தீர்த்தங்காரர்கள் கருக்குழவியின் தியானத்தில் இருந்தனர். செல்பேசி வெளிச்சத்தில் அவர்களைப் பார்த்தபோது கருக்குழவியை கேளாவொலி முறைப்படி படமெடுத்துப் பார்ப்பதுபோல் இருந்தது.
மாலையில் காகினகெரே என்னும் ஊரில் ஒரு விடுதியைச் சென்றடையவேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால் வழியில் ஒரு வண்டி வழியோரத்துச் சாக்கடைக்குள் இறங்கிவிட்டது. அங்கே அப்படி வண்டிகள் இறங்குவது வழக்கமாம். புதிய சாலை. அதை அமைத்த பொறியாளர் அப்படி திறமையாக வடிவமைத்திருக்கிறார். மழை பெய்துகொண்டே இருக்க, மழைக்கோட்டுகளுடன் வண்டியை தள்ளினோம். ஊர்க்காரர்களின் உதவியுடன் வண்டியை மீட்டு எடுக்க ஒருமணிநேரம் ஆகியது.
ஆகவே விடுதிக்குச் செல்லும் பயணம் திகில்நிறைந்ததாக ஆகிவிட்டது. பயணங்களில் பெண்களை ஏன் தவிர்க்கிறோம் என்றால் இதனால்தான். செல்பேசி அலைவரிசை இல்லை. வழி சொல்ல எவரும் சாலையில் தென்படவில்லை. இருபக்கங்களிலும் காடு அல்லது தோட்டங்கள். எந்த வழி பிரிவது என்பது குழப்பம். ஊகித்து விசாரித்து ஐந்துபேர் பத்து கருத்து சொல்லி விவாதித்து ஒருவழியாக சென்று சேர்ந்தோம்.
இரவுணவுக்கு விடுதியிலேயே ஏற்பாடு செய்தனர்.சாம்பார், சாதம் மட்டுமே. மேஜர் காரில் சென்று முட்டை வாங்கி வந்தமையால் தொட்டுக்கொள்ள முட்டைப்பொரியல். எனக்கு ஆப்பிள்கள் இருந்தன. மழை கூரைமேல் ஓங்கி அறைந்துகொண்டிருந்தது. கூர்க்கின் குளிர் தொடங்கிவிட்டது. நல்ல களைப்பு, மலைமேல் டிரக்கில் சென்றதே கடும் உடற்பயிற்சி. ஆனாலும் பதினொரு மணி வரை டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.
மறுநாள் காலை ஆறுமணிக்கு எழுந்து டீ குடித்துவிட்டு காகினகெரே கோட்டையைக் காணச் சென்றோம். காரிலேயே மலைச்சரிவில் சென்று மலைவிளிம்பை அடைந்தோம். அங்கே இது சீசன் அல்ல. ஆகவே அனேகமாக எந்த மானுடப்பிறவியும் இல்லை. மழைமூட்டம், சட்டென்று முகில்திரை, சிறுசாரல், ஊளையிட்டுச் சூழ்ந்து அலைபாயும் கூதல் காற்று. சாலைகள் புல்வெளி நடுவே சிவந்த கோடுகளாக வளைந்து கிடந்தன. எங்கோ எவரோ வான்நோக்கிச் செல்வதற்காக அமைக்கப்பட்டவை போல. காத்திருப்பவைபோல.
காகினகெரெ கோட்டையைக் காண அங்கே மலையலைகள் நடுவே அலைந்தோம். புல்செறிந்த சரிவுகள், புல்லால் ஆன குவைமேடுகள். கோட்டைக்கான தடமே இல்லை. வழி கண்டடைய எந்த வாய்ப்பும் அங்கில்லை. சரி, திரும்பி விடலாம் என்று முடிவு செய்தோம். கிருஷ்ணன் அருகிருந்த ஒரு சிறிய குன்றில் ஏறிப்பார்க்கலாம் என்றார். அதன்மேல் ஏறி நின்றோம். வலுவான ஒரு காற்றில் முகில்சுழல் இழுத்துச்செல்லப்பட்டு சூழல் தெளிவடைந்தது. அருகே மலையுச்சியில் கோட்டை எழுந்து நின்றது.
உண்மையில் அது கோட்டையே அல்ல, ஒரு காவல்மாடம்தான். அரைஏக்கர் பரப்பு இருக்கும். மலைக்கற்களை வைத்து இரண்டு ஆள் உயரத்துக்குக் கட்டியிருந்தனர். சுற்றிலும் அகழி இருந்திருக்கிறது. உள்ளே ஒரே ஒரு கட்டிடம் இருந்தமைக்கான அஸ்திவாரம் தெரிந்தது. அங்கே இருபது முப்பதுபேர் தங்கியிருக்கலாம். வானம் தெளிந்திருக்கையில் அங்கிருந்துகொண்டு அப்பகுதி முழுக்கவே பார்க்கமுடியும். அங்கே ஒரு படைவீரனாக நான் தங்கியிருப்பதை கற்பனை செய்தேன். ஒரு நல்ல கதைக்கான களம்.
திரும்பி வந்து காலையுணவு. அரிசியுருண்டை சுவையாக இருந்தது. குடகில் காபி எப்போதுமே நன்றாக இருக்கும். மழை விட்டிருந்தது. காரில் கிளம்பி முக்கனமெனெ அருவியைப் பார்க்கச் சென்றோம். இந்த அருவி உயரமற்றது. ஆனால் மழையில் நீர் சீறிப்பெருகிக்கொண்டிருந்தது. மேலிருந்து கீழே சென்று அருவியைப் பார்க்க வழியில்லை. நீர் அரித்து இறங்கிய தடமே வழிபோல் தெரிந்தது. அதன் வழியாக தொற்றி இறங்கிச் சென்றோம்.
மழைநீர் பெருகிக்கொட்டுகையில் செந்நிறம் வெண்நுரையாக மாறிவிட்டிருந்தது. தனித்தனிப் பொழிவுகளாக எழுந்து விழுந்துகொண்டிருந்த மழைக்கால அருவியை அணுக முடியாது. அங்கே கோடையில் எவராவது குளிக்கிறார்களா என தெரியவில்லை. அணுகுவதற்கான படிகள், கம்பிகள் ஏதுமில்லை. அப்போது அப்பகுதியிலேயே எங்களைத் தவிர எவரும் கண்ணுக்குப்படவில்லை. அருகே ஓர் இல்லம் இருந்தது, அதுவும் பூட்டியிருந்தது.
தன்னந்தனியாக அருவியைப் பார்ப்பதென்பது ஒரு சிறப்பான அனுபவம். கூட்டம், குறிப்பாகச் சுற்றுலாப்பயணிகள் அருவியை இன்னொன்றாக ஆக்கிவிடுகின்றனர்.அ அந்த அருவிகளுக்கு ஒரே அர்த்தம்தான், கொண்டாட்டம். ஆளில்லா இடங்களில் ஒவ்வொரு அருவியும் ஒவ்வொன்றைச் சொல்கின்றன. கூச்சலிடுகின்றன, முழங்குகின்றன, ஓசையின்றி நிகழ்ந்துகொண்டிருப்பவையும் உண்டு. அவற்றின் முன் நிற்கையில் ஓர் உக்கிரமான தெய்வத்தை அருகே கண்ட அனுபவம் அமைகிறது.
மன்கனஹள்ளி என்னும் இடத்தில் மிகச்சரியாக மேற்குமலைத்தொடர் இருபக்கமாகப் பிரிகிறது என்பது நிலவியலாளரின் கணக்கு. அந்தப்புள்ளியில் வலப்பக்கம் செல்லும் நீர் குமாரதாரா ஆற்றில் கலந்து, நேத்ராவதியில் இணைந்து அரபிக்கடலை அடைகிறது, இடப்பக்கம் செல்லும் நீர் ஹேமாவதி ஆறுவழியாக காவேரியாகி வங்காள விரிகுடாவுக்குச் செல்கிறது. அங்கே ஒரு அடையாளம் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரவுத் தங்கலுக்கு மடிகேரி (மெர்காரா) சென்றோம். இரவு கவிந்ததுமே சென்றுவிட்டோம். சற்றுப்பெரிய விடுதி, ஆனால் அங்கே அப்போது நாங்கள் மட்டுமே விருந்தினர். (நள்ளிரவில் ஒரு குடும்பம் வந்து சலம்பிக்கொண்டிருந்த ஓசை கேட்டது) ஓய்வுக்குப் பின் உணவுக்குச் சென்றோம். மொத்தே எனப்படும் கேழ்வரகுக் களி இங்கே பிரசித்தம். கூர்க்கர்களின் முதன்மையுணவு மொத்தேயும் பன்றிக்கறியும். நான் செவ்விறைச்சியை இப்போது தவிர்ப்பதனால் சிக்கன் கறியுடன் மொத்தே சாப்பிட்டேன். மொத்தே சுவையாக இருந்தது, அச்சுவை நாம் சமைத்தால் ஏன் வருவதில்லை என்று தெரியவில்லை.
மெர்க்காராவில் விடுதியறையில் மழைப்பயணத்தின் வழக்கம்போல ஒரு கேள்விபதில் அரங்கு. என்னிடம் கேள்விகள் கேட்க விரும்பும் நண்பர்கள் கேட்கலாம். உரையாடல் நீண்டு சென்றது, ஆனால் நண்பர்களில் காரோட்டியவர்கள் தூங்கி வழிய ஆரம்பித்தனர். பதினொரு மணிக்கு அறைக்குச் சென்று தூங்கிவிட்டோம். நல்ல குளிர். கதவுகளை காற்று அறைந்துகொண்டே இருந்தது. கதவுகள் நடுவே என் பற்தூரிகையை செருகி அவற்றை அமைதிப்படுத்தவேண்டியிருந்தது.
காலையில் எழுந்து திரும்பும்பயணம். வழியில் கோமதகிரி என்னும் சமண ஆலயத்தைப் பார்த்தோம். நாங்கள் சமணப்பயணம் (அருகர்களின் பாதை என்னும் நூலாக வாசிக்கலாம்) சென்றபோது வந்த இடம்தான். மீண்டும் இப்போது வரவேண்டும் என இருக்கிறது. ஓங்கிய தனிக்குன்றின்மேல் அமைந்த கோயில். கல்லில் வெட்டப்பட்ட படிகள்.
கோயிலுக்கு மேலே தலைதூக்கி நின்றிருக்கும் பாகுபலி சிலை சிரவணபெளகொளா சிலைபோன்றது, 20 அடி உயரமானது. அங்கே ஒரே ஒரு பூசகர் மட்டுமே இருந்தார். அமைதியான ஓங்குதல் கொண்டவை சமணச்சிற்பங்கள். இப்போது நான் கற்காலத்து பாறைக்குடைவுச் சித்திரங்களில் உள்ள பேருடலர்களான மானுடரை எண்ணாமல் இவற்றைப் பார்க்க முடியவில்லை. பெருமாள்கள், பெருந்தந்தைகள், இப்புவிமேல் எழுந்த பெருமானுடர்கள்.
இரவு எட்டரை மணிக்கு எனக்கு ஈரோட்டில் இருந்து நாகர்கோயிலுக்கு ரயில். மைசூரில் இருந்து சத்தியமங்கலம் சாலையைப் பற்றுகையிலேயே அந்தியில் யானைகளைப் பார்க்கமுடியுமா என்ற ஆர்வமிருந்தது. மாலைவெளிச்சம் இருக்கையிலேயே தாளவாடிக்கு முன் யானைமந்தை ஒன்றைப் பார்த்தோம். இரு அன்னையர், இரு குட்டிகள். ஒரு குட்டிக்கு இரண்டு மாதம் அகவை இருக்கலாம். இன்னொன்று ஓராண்டுக்குள்.
அன்னையர் கவனமாக இருந்தாலும் மனிதரை பொருட்டாக நினைக்கவில்லை. சாலைக்கு வந்து கார்களுக்கு சமானமாகவே சாலையின் ஓரத்தில் நடந்தனர். யானைக்குழவி கால்களுக்கு கீழே குட்டித்தும்பிக்கையை சுழற்றியபடி மிக ஆர்வமாக அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு சென்றது. அன்னையொருத்தி திரும்பி என்னைப் பார்த்தாள். என் கண்கள் முதல்முறையாக ஒரு காட்டுயானையின் கண்களைச் சந்தித்தன. மேற்குமலைத்தொடர்களின் பார்வை!