விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
எண்பதுகளின் இறுதியில் சுஜாதாவின் புகழ்பெற்ற கணையாழியின் கடைசிப்பக்கம் என்னும் பத்தியில் இரா.முருகனின் ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் என்னும் கவிதையை குறிப்பிட்டிருந்தார். அந்தக் கவிதை மைக்ரோ நெரேஷன் என்னும் வகையில் புதியகவிதையை உருவாக்க முயற்சி செய்துள்ளது என்று அன்றைக்கு இலக்கியவாசகர்கள் பேசிக்கொண்டார்கள். இரா.முருகன் அப்படித்தான் கவனத்துக்கு வந்தார். அவருடைய அந்தக் கவிதை பெயரிலேயே அவர் ஒரு தொகுப்பும் போட்டிருக்கிறார்.
இரா.முருகன் விஷ்ணுபுரம் விருது பெறும் இந்நாளில் மொத்தமாக எல்லாவற்றையும் நினைத்துக் கொள்கிறேன். அவரை அடையாளம்காட்டிய சுஜாதாவையும் வணங்குகிறேன்
ஆர்.ஹரி
ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம்
மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.
பின்னிரவுப் பனியும்
பீடிப் புகையுமாய்
வாசலிலே நின்று
வானம் வெறித்திருக்க,
வெள்ளம் அழித்த அறுவடையை,
வீட்டுச் சுவர்கள் விழுந்ததை,
நீல மூக்குத்தி கடன்
நிலுவையில் மூழ்கியதை,
பால் மரத்த பசுமாட்டை,
பஸ் அடித்த வெள்ளாட்டை,
ஆயிக்குத் திவசம் தர
அய்யருக்கு அலைந்ததை,
காளிக்குத் தரவேண்டிய
கழுத்தறுத்த சேவல்களை,
ஆசையாய் நீ கேட்டு,
வாங்காதுபோன வட்டுக் கருப்பட்டியைச்
சுற்றும் நினைவுகள்
சூழ்ந்து குழம்ப,
நேரம் மறந்து நின்றபோது
ஆரோ வந்து சொன்னார்
அழகான குழந்தையென்று. *
ஆற்றுச் சலசலப்பில்
காலை விடிந்தபோது
உலகம் புதுசாச்சு
உள்ளமும் நேராச்சு.