ஐயா, வணக்கம்.
விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2024க்கு மிகவும் தகுதி படைத்தோர்க்கு வழங்கவிருப்பது கண்டு மனம் நெகிழ்ந்து மகிழ்கின்றேன். ஓரங்கட்டப்பெற்ற படைப்பாளுடைகளைக் கண்டெத்து அவர்களுக்கு உரிய மரியாதை செய்வதில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் புதிய தடத்தைப் பதித்துக் கொண்டு இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. படைப்புலகில் இரா. முருகனின் பங்களிப்பு குறித்து மிகவே அறிவேன். அவருக்கு இந்த விருது அவரை இன்னும் இன்னும் மிளிரச் செய்யும் என்பதே என் நம்பிக்கை. நன்றி,
இவண்
மோ.கோ. கோவைமணி
அன்புள்ள ஜெயமோகன்
இரா.முருகனுக்கு விருது வழங்கும் செய்தி அறிந்தேன், நிறைவு.
இரா.முருகன் தன்னை எப்போதும் சுஜாதாவுடன் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்தக் காரணத்தாலேயே அவரை இலக்கியவாதிகளும் இன்னொரு சுஜாதா என்று எளிமையாக அடையாளம் பண்ணி கடந்துசென்றுவிட்டார்கள். அவரும் அதை ஒரு பெருமையாக எடுத்துக்கொண்டார் என்று நினைக்கிறேன்.
ஆனால் இரா.முருகனில் சுஜாதா அம்சம் மிகக்குறைவு. புதுமைப்பித்தனின் ஓர் அம்சம் அவரிடமுண்டு. அது தாவிச்செல்லும் நடை. பல கதைகளில் புதுமைப்பித்தன்போலவே அவருடைய நடையில் வெவ்வேறு குறிப்புகள் கலந்துகலந்து வருவதைக் காணலாம். ஆசிரியர் இடையிட்டு கதைசொல்வதும் புதுமைப்பித்தன் பாணிதான். சுஜாதாவின் எழுத்திலுள்ள பொதுரசனை அம்சம் அறவே இவரிடம் இல்லை. ஆகவே சுஜாதா வாரிசு என்று சொல்லப்பட்டவர்களில் இவர் மட்டுமே பொதுவாசகர்களால் வாசிக்கப்படவில்லை. ஆகவே எவராலும் வாசிக்கப்படாதவராகவே இருந்துவிட்டார்.
இரா.முருகனிடம் இருந்துகொண்டிருப்பது ஒரு சரித்திரப்பிரக்ஞை. அவருடைய நாவல்கள் எல்லாம் வெவ்வேறு சரித்திரக் காலகட்டங்களுக்குக் கூடுபாய்ந்துகொண்டே இருப்பவை. ஒரே நாவலிலேயே பல சரித்திரக்காலகட்டங்களுக்குச் செல்வதை ராமோஜியம், மிளகு போன்ற நாவல்களில் காணமுடியும். இந்தச் சரித்திரப்பிரக்ஞை சுஜாதாவிடம் இல்லை. அவர் எழுதிய ஒரே சரித்திர நாவல் ரத்தம் ஒரே நிறம். அந்நாவலிலேயெகூட சரித்திரத்தைச் சமகாலம் நோக்கிக் கொண்டுவந்திருப்பார். அவரால் சமகாலத்தைவிட்டு மேலே செல்லமுடிவதில்லை.
சுஜாதாவை இரா முருகனின் முன்னோடி என்று சொல்வது என்பது அவரை வாசிப்பதற்கு பெரிய தடையாக அமையும். சுஜாதாவுக்கும் இரா.முருகனுக்கும் உள்ளடக்கம், நடை எதிலுமே சம்பந்தமில்லை. புதுமைப்பித்தனை மட்டும்தான் முன்னோடியாகச் சொல்லமுடியும். புதுமைப்பித்தன் எழுதிய தவளைத்தாவல் நடையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுவந்தவர் இரா.முருகன்
பிரவீன்குமார்