விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
இரா.முருகனின் 1975 எமர்ஜென்ஸி பற்றிய நாவல். அபாரமான நக்கல்களும் சொல்விளையாட்டும் கொண்டது. தமிழில் தேவிபாரதி அவசரநிலை காலகட்டம் பற்றிய குறிப்புகளை எழுதியிருக்கிறார். அசோகமித்திரன் சில கதைகளும் இன்று என்ற நாவலும் எழுதியிருக்கிறார். ஆனால் இந்நாவலில்தான் அக்காலகட்டத்தின் முழு அபத்தமும் பதிவாகியிருக்கிறது என்று எனக்குப் படுகிறது.
உதாரணம் ஓர் இடம். ’மாஜி தொழிற்சங்க, எமர்ஜென்சி ஆதரவு பத்திரிகை ஆசிரியர் கண்ணிலும் கருத்திலும் படாதவாறு, ’25.6.1975 புதன்கிழமை திரு ஜனகராஜன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்” என்று எமர்ஜென்சி எதிர்ப்பை மறைவாகத் தெரிவிக்கும் ‘விளம்பரம்’ ஒன்றைப் பத்திரிகையின் கடைசிக்கு முந்தைய பக்கத்தில் வைத்திருந்தார்களாம்’ என்ற வரி. ஒரு வரியில் அந்தக்காலத்தின் பயம், அவர்கள் செய்த நோகாத ஜனநாயக போராட்டம் எல்லாம் வந்துசெல்கிறது.
அற்புதமான நாவல். தமிழில் எமஜென்ஸி பற்றி எழுதப்பட்ட சிறந்த நாவல் இதுதான்.
ராஜ்குமார்
அன்புள்ள ஜெ
இரா.முருகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படவுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். பதினைந்தாண்டுகளாக சீராக வழங்கப்பட்டுவரும் விஷ்ணுபுரம் விருதுகளால் நல்ல படைப்பாளிகள் வரிசையாக அடையாளம் காட்டப்பட்டு வருகிறார்கள். அவர்களை உரியமுறையில் முன்னிறுத்தி வருகிறீர்கள். இந்த தமிழ்ப்பணிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்
ஆ.வேம்பு