விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
மிளகு பெருநாவல் தமிழில் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே போயிற்று. நம்மூரில் இரண்டுவகை நாவல்களுக்கே கவனம் அமைகிறது. ஒன்று, எளிய உணர்ச்சிகரமாஅ வாசிப்பும் அதற்கு அடியில் இலக்கியநுட்பங்களும் கொண்ட நாவல்கள். இந்தவகை நாவல்களை பொதுவான வாசகர்களும் வாசிப்பார்கள். தங்கள் வாழ்க்கையைக்கொண்டு அவற்றை நுணுக்கமாக உணர்ந்துகொள்பவர்களும் அவர்களிலுண்டு
இரண்டம் வகை, பூச்சு நாவல்கள். பூச்சு என்றால் எங்கேயாவது எதையாவது வாசித்துவிட்டு அதன் பூச்சை மட்டுமே கொண்டுவந்து இங்கே எழுதிப்பார்க்கும் நாவல்கள். ரெண்டாம் வகை நாவல்களை எவரும் வாசிக்க மாட்டார்கள். ஆனால் வாசித்ததாகச் சொல்லிக்கொள்வார்கள். அந்நாவல்களின் சிக்கலான மொழிநடையை வாசிப்பவர் என்றல் ஒரு பெருமை. ஆனால் என்ன வாசித்தேன் என்று சொல்லமுடியாது
மிளகு நாவல் ரெண்டுவகையிலும் அடங்காது. இது நேரான, எளிய நாவல் இல்லை. சுற்றிச்சுற்றி ஒரு சிக்கலான நூல்கண்டு போல இந்நாவல் உள்ளது. ஆனால் இது பூச்சு இல்லை. ஆகவே இதை வாசித்தேன் என்று சொன்னால் என்னென்ன ரசித்தோம் என்று சொல்லவேண்டும். அப்படிச் சொல்லவேண்டும் என்றால் பண்பாடு, கலை, சமையல், சங்கீதம் என்று இந்நாவல் கொடுக்கும் எல்லா குறிப்புகளையும் அறிந்திருக்கவேண்டும். அது இங்கே நவீன வாசகர்கள், எழுத்தாளர்கள் பலருக்குக் கிடையாது.
இந்நாவலின் மொழிநடை ஒரு அக்கப்போர்க்காரர் வேகமாகச் சொல்லிச்செல்வதுபோல் உள்ளது. அவருக்குத் தெரிந்த எல்லாமே நமக்கும் தெரியும் என்று அவர் நினைப்பதுபோல் இருக்கிறது. உள்வட்ட அரட்டை மாதிரி. ஆனால் இந்த நடை அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மாறும். இது மிளகு நாவலில் சமையற்காரரின் பார்வை.:
இன்றைக்கு காலை பத்து மணிக்கே ஒரு பெரிய கூட்டமாக பட்டாளத்துக்காரர்கள் வருகிறார்களாம்.சாயந்திரம் சூரத்துக்கும், அங்கிருந்து லிஸ்பனுக்கும் கப்பல் பயணம் போகிறவர்கள் என்பதால் காலைச் சாப்பாடாகவும் இல்லாமல், பகல் உணவாகவும் இல்லாமல், ரெண்டுங்கெட்டான் நேரத்தில் உண்டுவிட்டுக் கப்பலேறுவார்கள்.
இவர்கள் அவசரத்துக்குக் கோழிகள் தாமே ஓடிவந்து கழுத்தறுத்துக்கொண்டு, மிளகு விழுதில் விழுந்து புரண்டு, மேலெல்லாம் மிளகுக் காப்பு புரட்டிக்கொண்டு, சுட வைத்த எண்ணெயில் விழுந்து, பொரிந்து கொள்ளவேண்டும். அல்லது மீன்கள் செதில் உதிரக் கல்லில் உரசி உரசித் தேய்த்துக் கொண்டு, கொதிக்கும் குழம்பில் விழுந்து நீந்தி, அந்திம நித்திரை போகவேண்டும். கோழி முட்டைகள், இரும்பு வாணலியில் ஒன்றை ஒன்று, அடித்து உடைத்துக் கிண்டிக்கொண்டு, மிளகாயும் வெங்காயமும் சேர முட்டைக்கறி ஆக வேண்டும்.
இந்த நடை நமக்கு ஒரு தடையையும் அளிக்கிறது என்ன நடக்கிறது, என்ன உணர்ச்சி என்று மட்டும் தெரிந்துகொண்டு வேகமாக வாசித்துச்செல்ல முடியாது. பலவகையான நுணுக்கமான சின்னச்சின்ன செய்திகள் செறிந்தநடை. அவற்றைக் கவனித்தால்தான் நாவலை வாசிக்கமுடியும்.
தாளம் அவர் குரலில் விடாமல் ஒலிக்க வண்டியின் அச்சு திரும்பும் ஒலியோடு அந்த சொல்கட்டு இசைந்து வர, தேர்த் தட்டில் இருந்து அருகன் குரல் உயர்த்திப் பாடும் சத்தம். துங்கபத்ரா ஆற்றில் படகு செலுத்திப் போகிற படகோட்டிகளின், ஓங்கி உயர்ந்து சகலமானதிலுமிருந்தும் அகன்று பரவும் குரல் அது.அதே நிஜம் அதே நிஜம் என்று ஒவ்வொரு சரணத்திலும் கூட்டுக் குரலாக பரமனும் மஞ்சுநாத்தும் சிரித்தபடி முடித்து வைக்கிற சந்தோஷம்.
என்னும் வகையான நடையை கூர்ந்துதான் வாசிக்கமுடியும். இந்த நடை நவீனநடை என்றபேரில் புள்ளி வைக்காமல், பக்கம் முழுக்க சொற்றொடரை நீட்டி, செயற்கையாக எழுதப்படுவது அல்ல. இதற்கொரு நோக்கம் இருக்கிறது. ஒரேவரியில் ஓசைகளின் நயத்தையும், மனநிலையையும்,நினைவுகளையும் சொல்லவேண்டியிருக்கையில் உருவாகும் நடை இது.
இந்நாவலுக்காக முருகன் என்றும் பேசப்படுவார்
ஸ்ரீனிவாஸ்