வணக்கம். நலம்தானே?
நண்பர் இரா.முருகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியைப் படித்து மகிழ்ந்தேன். நம் சூழலில் தொடர்ந்து அர்ப்பணிப்புணர்வோடு எழுதிவரும் முக்கியமான எழுத்தாளர் அவர். புத்தாயிரத்தாண்டுக்குப் பிறகு அவருடைய கவனம் நாவல் பக்கம் திரும்பிவிட்டது. அடுத்தடுத்து பல நாவல்கள் வந்துவிட்டன. எல்லாமே இரண்டு அல்லது மூன்று பாகங்கள் கொண்ட நாவல்கள். அவருடைய உழைப்பு வணக்கத்துக்குரியது. நம் சூழலில் மிகச்சிறந்த ஒருவரையே தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். உங்களுக்கு என் பாராட்டுகள். இரா.முருகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அன்புடன்
பாவண்ணன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இரா முருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதுகள் வழியாகவே விஷ்ணுபுரம் உருவாக்கும் ஒரு படைப்பாளிகளின் வரிசை ஒரு modern tamil canon ஆக உள்ளது. அதன் வழியாக ஒரு tradition உருவாகிறது. வாசகர்களுக்கு அது முக்கியமான ஒன்று என நினைக்கிறேன்.
விஷ்ணுபுரம் விருது பெற்றவர்களில் எனக்கு மிகப்பிடித்தமானவர்கள் இரா முருகனும்,வண்ணதாசனும்தான். இரண்டுபேருக்கும் சம்பந்தமே இல்லை. இரா முருகனுக்கு எதன்மீதும் நெகிழ்வே இல்லை. பிரியம்கூட இல்லை என்ற எண்ணம் அவருடைய படைப்புக்களை வாசிக்கையிலே உருவாகாமலிருக்காது. அரசூர் வம்சம் நாவல்களை வாசித்தால் கதாபாத்ரங்கள் மேல் பரிவு இல்லாமல், கதாபாத்திரங்களிலே ஆத்மாம்சம் இல்லாமல் எழுதியிருக்கிறார் என்ற எண்ணம் உருவாகிறது. அப்படி எழுதிய முதல் தமிழ் எழுத்தாளர் இரா முருகன் மட்டும்தான். அவரை சுஜாதாவின் வழித்தோன்றல் என்று சொல்லுவதுண்டு. ஆனால் சுஜாதா நாவல்களில் சுஜாதாவின் ஆத்மாம்சம் எதாவது ஒரு கதாபாத்ரத்தில் இருக்கும். இரா.முருகன் முழுக்க முழுக்க வெளியே இருந்தே எழுதும் எழுத்தாளர்.அதுதான் அவருடைய சுவாரஸ்யம் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
பி.எஸ்.ஸ்ரீனிவாஸ்
இரா.முருகன், அசல் மாய யதார்த்தவாதம்